அ(இ)வளுக்கென – 1

0
19

அ(இ)வளுக்கென – 1

சூரியனின் செங்கதிர்கள், தன் வெப்பமான கரங்களால் காலை பனியை தொட்டு தழுவ, மார்கழி மாதத்து பனியோ, ஆதவனின் அணைப்பில் வெட்கி உருக, அழகாக புலர்ந்திருந்தது காலைப் பொழுது.

‘இது நம்ம ஸ்கூல்’ பள்ளி வளாகத்தில் சின்னஞ்சிறு சிட்டுக்களாய், சீர்மிகு சீருடையில், குட்டி குட்டி வாண்டுகளும், குறும்புமிக்க சிறார்களும், பாய்ந்தோடும் மாணவர்களும், பதவிசாய் மாணவிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

காலை வழிபாடு முடிந்தவுடன், வழக்கம் போல் பொது அறிவு மற்றும் அன்றைய செய்திகளை பற்றி மாணவன் ஒருவன் அனைவருக்கும் எடுத்துரைத்தான். அதற்கு பிறகு பள்ளி முதல்வர் வந்து உரையாற்றினார்.

“வணக்கம் குழந்தைகளே! இந்த புத்தாண்டில் நம்முடன் இணைந்து பணியாற்ற புதிதாக ஒரு ஆசிரியை வந்திருக்கிறார். அவர் பெயர் டாக்டர். மென்மொழி, பெற்றோரின் ஆசைக்காக மருத்துவம் படித்த இவர், அவருடைய ஆசைக்காக ஆசிரியையாக சிறிது காலம் பணியாற்ற நம் பள்ளிக்கு வந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை ஆசிரியையாகவும், மாலை முதல் இரவு வரை மருத்துவராகவும் வேலை செய்கிறார்” என்று கூறி மென்மொழியை அறிமுகப்படுத்தினார். அவளும் அதற்கு இதழ் பிரியாமல் சிரித்து, அனைவருக்கும் பொதுவான ஒரு வணக்கம் வைத்தாள்.

மென்மொழி நம் கதாநாயகி, அவளை பற்றி நாம் அவளுடனேயே நடந்து சென்று பார்ப்போம்‌. நேராக முதல்வர் அறைக்கு சென்று, தன் அடுத்த கட்டளைக்காக காத்திருந்தாள்.

“டாக்டர்! உங்களை யூ.கே.ஜிக்கு அலாட் பண்ணி இருக்கோம். ஏற்கனவே யூ.கே.ஜி பாத்துக்கிட்ட மிஸ், இப்ப டெலிவரிக்காக போயிருக்காங்க, ஆறு மாசம் கழிச்சு வந்துடுவாங்க, நீங்களும் எனிவே ஆறு மாசம் தானே வொர்க் பண்ண போறீங்க, சோ நோ ப்ராப்ளம். அதோட ஆர்கானிக் ஃபார்மிங் டிபார்ட்மெண்ட்டும், உங்களுக்கு அலார்ட் பண்ணியிருக்கோம். ஆல் த பெஸ்ட்!” என்று கூறி அனுப்பி வைத்தார்.

“ஓகே மேடம், என்னை மென்மொழின்னே கூப்பிடலாம், டாக்டர்லாம் வேண்டாம்”.

“சரிம்மா, இரு என்னோட பி.ஏ உங்களை, உங்க க்ளால்ல கொண்டு போய் விடுவாங்க” என்று கூறி அவருடைய பி.ஏவான ராதாவை துணைக்கு அனுப்பி வைத்தார்.

“வாங்க மேடம், உங்களுக்கு யூ.கே.ஜி பி செக்ஷன் அலாட் பண்ணியிருக்கோம். கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க மேடம், அந்த க்ளாஸ்ல தான் கரஸ்பாண்டன்டோட அக்கா பையன் ‘மயூரன்’ படிக்கிறான், மகா குறும்பன், மத்தபடி எல்லா குழந்தைகளும் வாலு தான். அப்புறம் இது தான் ஆர்கானிக் கார்டனோட சாவி, நான் உங்கள லஞ்ச் டைம்ல அங்க கூட்டீட்டு போறேன்” என்று கூறிவிட்டு மென்மொழியை அவள் வகுப்பின் வாசலில் விட்டு சென்றாள் ராதா.

மென்மொழி உள்ளே நுழைந்தவுடன், அதுவரை அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள், இவளை பார்த்ததும் கப் சிப்பென்று அமைதியாகி, “குட் மார்ர்ர்ர்னிங் மிஸ், வணக்க்க்கம் அம்மா!” என்று இரு மொழிகளில் வணக்கம் சொன்னார்கள்.

“வணக்கம் குட்டீஸ்! நான் தான் உங்க புது மிஸ். மென்மொழி. நம்ம இப்ப என்ன பண்ணலாம், படிக்கலாமா? இல்ல பாடலாமா?”

அதற்குள்ளாக ஒரு சிறுவன் அழ ஆரம்பிக்க ஒன்றும் புரியாமல் மென்மொழி முழிக்க, “மித் நீங்க டாக்டல் தானே, அதான் நீங்க ஊதி போட்ருவீங்கன்னு பயந்துட்டு அலறான் மித்” என்று மற்றொரு சிறுமி, மழலை குரலில் பதிலளித்தாள்.

“ம்ம் நான் யாருக்கும் ஊசில்லாம் போட மாட்டேன். ஆமாம் எறும்பு கடிச்சா யாருக்கெல்லாம் பயம் சொல்லுங்க?”

“ம்ம் இந்த ஜூஜூபி எறும்புக்கெல்லாம் யாராவது பயப்படுவாங்களா? இரண்டு விரலால நசுக்கி தூக்கி போட்டுடுவேன் மிஸ்” என்று காலரை தூக்கி விட்டு கொண்டு ஒரு குட்டி பதில் சொன்னது, “ஓ நீங்க தான் மயூரனா” என அவன் துடுக்குதனத்தை பார்த்து மென்மொழி கேட்க, “ஆமாம் மிஸ் மெமொ” என்றான்.

“மெமொவா?”

“ஆமாம் மென்மொழின்ற பேரு ரொம்ப பெரிசா இருக்கு மிஸ். அதான் குட்டியா மெமொன்னு கூப்பிட்டேன் மிஸ்”

அவன் சொன்னதை மனதுக்குள் குறித்து வைத்து கொண்டு, “ஊசியும் எறும்பு கடி மாதிரி தான், லைட்டா தான் வலிக்கும். ஊசி நல்லதுக்கு தானே போடறாங்க. இனிமே ஊசியை பார்த்து யாரும் பயப்படக்கூடாது சரியா. நான் இங்க உங்களுக்கு மிஸ் தான், டாக்டர் கிடையாது. சரி வாங்க நம்ம இப்ப ஒரு ரைம்ஸ் பாடலாம்” என இவள் ‘சப்பி சீக்ஸ், டிம்பிள் சின்’ என்ற பாடல் பாட, அந்த பாட்டு அவளுக்கென்றே உருவாக்கப்பட்டது போல இருந்தது.

மென்மொழி பெயருக்கு ஏற்றவாறு மென்மையான சரீரமும், சாரீரமும் பெற்றவள். அந்த பாடலில் வருவது போல் பூசிய கன்னமும், குழி விழும் தாடையும், வெண்ணெய் கட்டியை செதுக்கி எடுத்தது போன்ற நிறமும், அதற்கேற்ப ஒளி வீசும் கண்களும், புதர் போல் வளர்ந்திருந்த சுருட்டை முடியை இழுத்து கட்டிய இடையை தாண்டிய கூந்தலும் பார்க்க, விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்த நடமாடும் தேவதை போல் இருந்தாள். அனைவரும் அவளை ஆவென்று பார்க்க, இவள் மட்டும் இவளது முகத்தை, சீ என்ற முகச்சுளிப்போடு தான் கண்ணாடியில் பார்ப்பாள். பெரும்பாலும் கண்ணாடியை பார்க்கும் தருணங்களை தவிர்ப்பாள். தினமும் ஒரு நொடிக்கும் குறைவான நேரமே, அதுவும் நெற்றிப்பொட்டை சரியாய் வைக்க மட்டுமே கண்ணாடி பார்ப்பாள்‌‌.

இவளுடன் சேர்ந்து குழந்தைகளும் ரைம்ஸ் பாட, அங்கே களுக்கென்ற சிரிப்பு சத்தம் கேட்டது.

“ஏய் வாண்டுகளா? எதுக்காக சிரிக்கிறீங்க? யார் சிரிச்சது? ஒழுங்கா சொல்லுங்க!”

“மிஸ் நான் தான் க்ளாஸ் லீடர், அதனால் நான் தான் யார் சிரிச்சான்னு சொல்வேன்” என குட்டி ரெட்டை வால் பின்னல் எழுந்து நின்றது.

“ம்ம் சரி சொல்லுங்க! யாரு சிரிச்சா?”

“இதோ இந்த மயூ தான் சிரிச்சான். இவன் எப்போதும் இப்படித்தான் மிஸ்”

“மயூ எதுக்கு சிரிச்ச?”

“இல்ல மிஸ், நீங்க இந்த பாட்டுல வர லைன் மாதிரியே இருக்கீங்க அதான்” என்றான் தலை குனிந்து கொண்டே, “அடப்பாவி இத்துனூண்டு இருந்துகிட்டு ஏண்டா இப்படியெல்லாம் பேசற? இரு சீக்கிரமே உனக்கு மாட்டு ஊசியா ஒண்ணு போடறேன்”.

“மிஸ் எங்க பழைய மிஸ், எப்போதும் இங்கிலீஷ் பாட்ட தமிழில் சொல்லி தருவாங்க. அவங்க சொல்லி தந்த மாதிரியே நீங்க இருந்தீங்க அதான் சிரிச்சேன். மாட்டு ஊசி வேண்டாம், ஜுரம் வரும் போது குடுப்பாங்களே அந்த மிட்டாய் மருந்து மட்டும் போதும் மிஸ்” என்று மயூரன் குறும்பாய் சொல்ல, முதல்முறையாக தன்னை வர்ணித்த குழந்தையின் உள்ளத்தை ரசித்தாள் மென்மொழி.

சரி அடுத்ததா, நம்ம வேற பாட்டு பாடலாம் என முதல் பீரியட் முழுவதும் பாட்டிலேயே கரைந்ததற்கான மணி ஒலித்தது.

“ஓகே குட்டீஸ் இந்த மிஸ்ஸ எத்தனை பேருக்கு பிடிச்சிருக்கு, கை தூக்குங்க பாப்போம்!”

“எனக்கு, எனக்கு” என அனைவரும் கை தூக்க, மயூரன் மட்டும் கை தூக்காமலேயே, மொழியை பார்த்து கொண்டிருந்தான். மென்மொழியும் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியோடு அவனை பார்க்க, சட்டென்று இரு கைகளையும் தூக்கி, அவளுக்கு இன்ப அதிர்ச்சி ஊட்டினான்.

மென்மொழியின் இதயம் அச்சிட்டுக்களின் கலப்படம் இல்லாத அன்பால் நெகிழ்ந்தது. அதுவரை பாறையாய் இறுகி இருந்த இதயம், பாகாய் கரைந்தோடுவதை அவளால் உணர முடிந்தது. தான் ஆசிரியை தொழிலை தேர்ந்தெடுத்தது சரியே என அவள் உள்மனம் அவளுக்கு கூறியது.

மென்மொழி, “சரி செல்லம்ஸ் அடுத்த பீரியட் என்ன?”

“ஜீரோ பீரியட் மேம்” என்று ஒரு சேர கத்தினர்.

“ஜீரோ பீரியட்டா அப்படின்னா என்ன? அந்த பீரியடில் என்ன பண்ணுவீங்க?”

“நாங்க ஜாலியா செடிக்கு தண்ணி ஊத்துவோம், செடியில் இருக்கிற தக்காளி வெண்டைக்காய் எல்லாம் பறிப்போம், கூடை பின்ன ஹெல்ப் பண்ணுவோம், அப்புறம் பெரிய அக்கா, அண்ணாக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணுவோம்” என்றது ஒரு வாண்டு. இவளுக்கு எதுவும் புரியாத வேளையில், சரியாக பள்ளி முதவ்வரின் பிஏ ராதா வந்தார்.

“அப்பாடா! இப்பத்தான் உங்களை பத்தி நெனச்சேன் கரெக்டா வந்துட்டீங்க. ஜீரோ பீரியட்னா என்ன மேம்?”

“மேம்லாம் வேண்டாம், அக்கான்னே கூப்பிடுங்க. நானும்

அதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தான் வந்து இருக்கேன் மிஸ். ஜீரோ பீரியட்னா, அந்த பீரியட்ல கிண்டர் கார்டன்லேர்ந்து, ஹையர் செகண்டரி வரை உள்ள பசங்க யாருக்கும் எந்த வகுப்பும் நடக்காது, அதற்கு பதில் அவரவர், அவரவர் வயதிற்கு தகுந்த வேலைகள் செய்வாங்க. சின்ன குழந்தைங்க செடிக்கு தண்ணி ஊற்றுவது காய்கறிகளை பறிப்பது, பெரிய குழந்தைகளுக்கு உதவி செய்வது இப்படி செய்வாங்க. பெரிய பசங்க துணி தைக்கிறது மேட் பின்றது மசாலா பாக்கெட் போடுவது இப்படி ஏதாவது வேலை செய்வாங்க”.

“இவங்க ஏன் இந்த வேலை எல்லாம் செய்யணும்?”

“என்ன மேம் இப்படி கேட்டுட்டீங்க? இவங்க செய்யற விஷயங்களை எல்லாம், சந்தைக்குச் சென்றடையும். அதை வித்து, வர காசு தான் இவங்களோட படிப்பு செலவுக்கு யூஸ் பண்றோம். அதைத்தவிர ஸ்கூல் பீஸ்னு வேறு எந்த காசும் கட்ட வேண்டாம். இவங்க செய்ற ஐட்டங்கள்ல வர காசுதான், டீச்சருங்களுக்கும் சம்பளம் கொடுக்க யூஸ் பண்றாங்க. இங்க சாதாரண ரிக்ஷாகாரங்க குழந்தையிலிருந்து, பெரிய இன்ஜினியரிங்களோட குழந்தைகள் வர படிக்கிறாங்க. நோ டொனேஷன், யாரோட வீடு பள்ளிக்கு அருகாமையில் இருக்கோ அவங்களுக்கு எல்லாம் முடிந்தளவு அட்மிஷன் தராங்க, அதுவும் இல்லாம அதில் எழுவது சதவீதம் பேர் கீழ்த்தட்டு மக்களுடைய பிள்ளைகளே. இதை தவிர முன்னாள் மாணவர்கள் பலரும், நிறைய டொனேஷன் தருவாங்க” என ராதா சொல்ல சொல்ல, மென்மொழிக்கு அந்த பள்ளியின் பெயருக்கான அர்த்தம் இப்போது தான் புரிந்தது.

“நினைச்சு பார்க்கவே முடியாத விஷயங்கள் ராதா அக்கா. இதெல்லாம் யாரோட ஐடியா?”

“எல்லாம் நம்ம கரெஸ்பாண்டென்ட் தூயவன் சார் மற்றும் அவங்க அப்பாவோட ஐடியா தான். இந்த ஸ்கூல் பத்து வருஷமா இருக்கு, அப்போலேர்ந்தே ஸ்கூல் பீஸ் கிடையாது, யாராவது தரும் டொனேஷன்லயே ஸ்கூல் ஓடும். ஆனா இப்ப மூணு வருஷமா புது கரெஸ் தூயவனுக்கு இதெல்லாம் பிடிப்பது இல்லை, யார் கையையும் எதிர்பார்க்காமல் நாமே அதை நல்ல வழியில் சம்பாதிக்கணும்னு நினைச்சுகிட்டு, மாணவர்களை வைத்தே காய்கறிகளையும் கலைப்பொருட்களையும் செய்து விற்க ஆரம்பித்து விட்டார்”.

மென்மொழிக்கு கண்ணால் கண்டிராத அந்த கரெஸ்பாண்டென்ட் தூயவன் மீது, மிகுந்த மரியாதை வந்தது. தூயவன் பெயரை போல் நல்லுள்ளத்திலும் தூயவனாய் இருக்கிறானே என யோசித்தாள்.

“சரி ராதா அக்கா, இப்ப நான் என்ன பண்ணனும்?”

“இப்ப கார்ட்ன்ல எதுவும் வேலை இல்ல, அதனால உங்க கிளாஸ் குழந்தைகளை, ஆடியோ விஷ்வல் ரூம்க்கு கூட்டீட்டு போய், செடியின் வேர் சேதமாகாமல், எப்படி பொறுமையா தண்ணி ஊத்தணும்னும் அப்புறம் காய்கறிகளை எப்படி பார்த்து, பொறுமையா பறிக்கணும்னு வீடியோ போட்டு காமிங்க. ஏற்கனவே அங்க வீடியோ இருக்கு, நீங்க அத ஓட விட்டு குட்டீஸ்க்கு புரியும் படி கூறினால் போதும்”.

“ஓ சரிங்க மிஸ், நான்‌ பாத்துக்கிறேன்!” என கூறி விடைபெற்று சென்று தன் வகுப்பிற்கு சென்றாள்.

“குட்டீஸ் நாம எல்லாம் இப்ப வீடியோ பாக்க போறோம். வரீங்களா போலாம்!” என அழைக்க, உடனே குட்டீஸ் அழகாக, உயரத்தின் படி குள்ளமாய் இருப்பவர்கள் முன்னும் உயரம் அதிகமாய் இருப்பவர் பின்னும் என ஒரு வரிசையில் நின்றார்கள், இறுதியில் அந்த வகுப்பு ஆயாவும் நின்று கொண்டார். அனைவரும் தங்கள் கைகள் இரண்டையும், பின்புறம் கட்டிக் கொண்டார்கள். மென்மொழி முன்னால் நடக்க அவளை அழகாக தொடர்ந்தது அந்த வரிசை.

பொதுவா குழந்தைங்க வரிசையில் நடக்கும் போது, ஒருவருக்கு ஒருவர் தங்கள் கைகளால், முட்டி தள்ளாமல் இருக்க, கையை பின்புறம் கட்டுவதே சிறந்தது என தெரிந்து வைத்திருந்த மொழி, இச்சிறுவர்களின் செய்கையை நினைத்து மகிழ்ந்தாள். ஆடியோ ரூமிற்கு சென்றதும், அனைவரும் அழகாக சம்மணமிட்டு அமர, அங்கே பெரிய திரையில் வீடியோ ஓடத் தொடங்கியது. இடை இடையே மொழியும், அவசியமான விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்! உங்களை தூயவன் சார் பார்க்கணும்னு சொல்றாரு” என பியூன் ஒருவர் வந்து அழைத்தார்.

“என்னையா பார்க்கணும்னு சொன்னார்?’ என மொழி சந்தேகத்துடன் கேட்க, “ஆமாம் மிஸ், நீங்க தானே ஆர்கானிக் கார்டனோட இன்சார்ஜ் உங்களைத் தான் கூப்பிடறார்” என ப்யூன் சொல்ல, “சில்ட்ரன் சத்தம் போடாம டிவி பாருங்க, மயூ எல்லாரையும் நீ தான் பாத்துக்கணும். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா யோசிச்சு வைங்க நான் வந்து சொல்லி தரேன்” என கூறி தூயவனை பார்க்க பதட்டத்துடன் சென்றாள்.

அவன் அறைக்கு சென்று எக்ஸ்க்யூஸ் மீ சார் என்க, சிவந்த கண்களோடு கோபக்கனலாய் நின்றிருந்தான் தூயவன்.

———— சுட்டெரிக்குமா? ———-

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here