அ(இ)வளுக்கென – 3

0
15

அ(இ)வளுக்கென 3
நிறைமதியும் சந்தனும் சிரித்து கொண்டிருந்த சத்தம், கண்ணயர்ந்து தூங்கி கொண்டிருந்த மென்மொழியின் தூக்கத்தை கலைத்தது. கண்ணை கசக்கி கொண்டே வெளியே வந்தவளை, பார்க்க இருவரும் அமைதியாக இருந்தனர். “என்ன ரெண்டு பேரும், இவ்ளோ நேரம் சத்தமா பேசிட்டு இப்ப நான் வந்தவுடனே ஜெர்க்கடிச்சு சைலண்ட் ஆகுறீங்க, சரியில்லையே. ஏய் நிறை நீ ரூம்க்கு வா, டேய் தம்பி நீ போய் அக்காங்களுக்கு, பக்கத்து கடையில ரெண்டு ரோஸ்மில்க் வாங்கிட்டு வா” என்று கூறி நிறைமதியை தரதரவென்று இழுத்து கொண்டு, அவள் அறைக்கு சென்றாள்.

“ஏய் அக்காதாண்டி தம்பிக்கு ரோஸ்மில்க் வாங்கித்தரணும்‌!” என புலம்பி கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் சந்தன்.

மென்மொழியின் அறைக்கு வந்த நிறை வாயடைத்து போய் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் நிறை லூசு ஏன் அப்படி பாக்குற?”

“இல்ல மினுக்ஸ் இந்த மாதிரி உன்ன பாத்து ஒரு பத்து வருஷம் இருக்குமா? இத்தனை நாள் இந்த குறும்புத்தனத்தை எல்லாம் எங்க ஒளிச்சு வெச்சிருந்த?”

பட்டென்று இவள் கேட்டுவிட, சட்டென்று மென்மொழியின் முகம் சுணங்கியது.

“மறுபடியும் உம்முன்னு ஆயிட்டியா? அப்படி என்ன தான் டி உன் பிரச்சனை? கலகலப்பா தானே முதலில் இருந்த, என்னன்னு கேட்டா சொல்லாம உம்முன்னு முகத்தை தூக்கி வெச்சுகிட்டா ஆச்சா. நீ முகத்தை தூக்கி வைக்கும் போது நல்லா செங்கொரங்கு மாதிரி இருக்க!” என நிறை சொல்ல, அதுவரை முகத்தை தூக்கி வைத்திருந்தவள் செங்கொரங்கு என்ற வார்த்தையை கேட்டதும், நிறையின் மேல் தலையணையை எடுத்து வீசினாள்.

“சீ போ நான் இன்னிக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? அத சொல்லலாம்னு உன்ன கூப்பிட்டா, நீ ரொம்ப கேலி பண்ற!” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டாள்

“சரி சரி நீ குரங்கு மாதிரி இல்ல, குட்டி பாப்பா மாதிரி தான் இருக்க, இப்ப சொல்லு நீ ஏன் இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருந்த?”

“ம்ம், ஏன்னா நான் எங்க கரெஸ்பாண்டன்ட்கிட்ட திட்டு வாங்கினேனே!” என என்னமோ நல்லாசிரியர் விருது வாங்கியதை போல் மென்மொழி கூற, நிறைமதி ஆச்சரியமடைந்தாள்.

“அட யாராவது திட்டு வாங்கினதுக்கு சிரிச்சு சந்தோஷபடுவாங்களா?” என எதுவும் தெரியாதது போல் கேட்க, மறுபடியும் மென்மொழி வாயால் அனைத்து கதையையும் கேட்டாள்.

“முதல் விஷயம் அந்த கரெஸ்பாண்டென்ட் வழிசல் கேஸ் இல்ல, அப்புறம் அவரு ஆண், பெண் பேதம் பாக்காம, ஒரு ஆண் ஆசிரியரை திட்ற மாதிரி என்ன திட்டியது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்புறம் அவரோட கொள்கை, அதாவது ஸ்கூல் ஃபீஸ் வாங்காமல் இருக்கிறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் மென்மொழி.

சரி தான், அப்ப பட்சி சீக்கிரம் சிக்க போகுது என மனதிற்குள் குறித்து கொண்ட நிறைமதி, “ஆமாம் அப்புறம் ஏன் அந்த பச்ச புள்ளகிட்ட நீ ரொம்ப அப்சட்டா இருக்கிறா மாதிரி சொன்ன?” என சந்தனிடம் மென்மொழி நடந்து கொண்டதை பற்றி கேட்டாள்.

“ம்ம் இல்லன்னா அக்காவை மடியில சாய்ச்சு தலை கோதி தூங்க வெச்சிருப்பானா! இல்ல ரோஸ் மில்க் வாங்கத்தான் இப்படி குடுகுடுன்னு ஓடுவானா! கொஞ்சம் அப்செட்டா இருந்தது உண்மை தான், ஆனா பொறுமையா யோசிச்சு பாத்தப்ப, எல்லாம் நல்லதுக்குன்னு தான் பட்டுச்சு, இப்ப தெளிவாயிட்டேன்” என முகமும், அகமும் மலர்ந்தாள் மென்மொழி.

அதை கேட்டு வாயடைத்து போனாள் நிறைமதி.

நிறைமதி ஒரு கார் ரேஸர், பெண்கள் தேர்ந்தெடுக்கும் மிக மிக அபூர்வமான பிரிவு ரேஸிங்‌. அதில் தென்னிந்தியாவில் முதல் இடத்தை கடந்த மூன்று வருடங்களாக தக்க வைத்து கொண்டிருப்பவள். குதிரைவாலிட்ட முடி, கண்ணிற்கே தெரியாத அளவு சிறிய வெள்ளை கல் வைத்த கம்மல் இவ்வளவு தான் அவளின் அலங்காரம். எப்போதும் முழுக்கை டீ சர்ட் மற்றும் தளர்வான பேண்ட் அதிலும் முக்கால்வாசி நாள் கருப்பு உடையில் தான் இருப்பாள், அப்ப தான் அழுக்கு தெரியாதாம். நிறையும், மென்மொழியும் பள்ளி கால தோழிகள். மென்மொழியின் கண்கள், பளபளவென மினுக் மினுக் என்று இருப்பதால் அவளை மினுக்ஸ் என்றே நிறை அழைப்பாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நிறையின் அலைபேசி அடித்தது. அதை எடுத்து காதில் பொறுத்தி, “ஹாங் அங்க தான் இருக்கேன், இன்னும் டென் மினிட்ஸ்ல வீட்டுக்கு போய்டுவேன், அங்க வந்துடுங்க!” என்று கூறி இணைப்பை துண்டித்தாள்.

“யாருடி உன் ஆளா?” என்று கிண்டலுடன் மென்மொழி வினவ, “ஆமாம் டி அவர் தான் அடுத்த வாரம் ஒரு ரேஸிங் சாம்பியன்ஷிப் இருக்கு, அதுக்காக டெல்லி போகணும். அதான் தேவையான திங்க்ஸ்லாம் வாங்கணும்னு, அவரை வரச் சொல்லி இருக்கேன்” என வெட்கத்துடன் சொன்னாள் நிறைமதி.

“பாருடா ஜான்சி ராணிக்கு வெட்கத்தை, டாக்டர் சாருக்கும், இப்ப உன்னோடு சேர்ந்து ரேஸிங்ல இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு போல, சரி சரி கிளம்பு!” என அவளை துரத்தினாள் மென்மொழி.

மனதிற்குள் தன் தோழி நிறைமதியையும், டாக்டர். நிமலனையும் மணக்கோலத்தில் நிறுத்தி அழகு பார்த்தாள் மென்மொழி. அத்தனை மகிழ்ச்சியிலும், தன் மனதிற்குள்ளே ஒரு மெல்லிய கசப்புணர்வு எழுந்ததை அவள் கவனிக்க தவறவில்லை. தன் ஆசை தம்பி, இரு கைகளிலும் ரோஸ் மில்க் கை கொண்டு வருவதை பார்த்து பொங்கி வரும் கண்ணீரை கண்ணிற்கு உள்ளேயே அணை கட்டி நிறுத்தினாள்.

அடுத்த நாள், தன்னையும் அறியாமல் உற்சாகத்தோடு கிளம்பினாள் மென்மொழி. வெகு நாட்களுக்கு பிறகு அவள் கண்களில் தொலைந்திருந்த அந்த மினுக் வந்து ஒட்டிக் கொண்டது.

இவள் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னாதாகவே சென்று, வருகை பதிவேட்டில் தன் கையொப்பம் இட்டு விட்டு, ஆர்கானிக் கார்டன் நோக்கி நடந்தாள். அங்கே இவளுக்கு முன்பே, யாரோ உள்ளே இருந்ததற்கு அடையாளமாய் கதவு திறந்திருக்க, அய்யோ சாவி எங்கிட்ட இருக்கும் போது யாரு கதவை திறந்து போட்டிருப்பா? போச்சு இன்னிக்கு என்னல்லாம் செடியை ஆடு சாப்படுச்சோ என பதறி அடித்து உள்ளே செல்ல, அங்கே இரு தோட்டகாரர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

“ஐயா நீங்க எப்படி உள்ள வந்தீங்க? உங்களுக்கு யாரு கதவை திறந்துவிட்டது?” என வயதில் மூத்தவரை பார்த்து இவள் கேட்க, “நம்ம ஐயா தாம்மா தொறந்துவிட்டாங்க, நாங்க இங்க மாசத்துக்கு ஒரு தடவை வந்து தோட்டத்தை சரி பார்ப்போம். நேத்து யாரோ கதவை திறந்து போட்டதால, பாதி செடியை ஆடு மேஞ்சிடுச்சாமே, அத பார்த்தா பசங்க மனசு வருத்தப்படும்னு, ஐயா தான் உடனே புது செடிங்களை நட சொன்னார். காலைல நாலு மணிக்கு வெள்ளென வந்து வேலையை ஆர்மபிச்சுட்டோம், இன்னும் பத்து நிமிஷத்தில முடிச்சிடுவோம். இவ்வளவு நேரம் எங்க கூட தான் அவரும் இருந்தார்” என இவள் ஒரு கேள்வி கேட்க அவர் மொத்த கதையையும் வெள்ளந்தியாய் சொல்லி முடித்தார்.

இவளின் இருபுருவங்கள், அவளை அறியாமல் ஆச்சர்யத்தில் மேலே எழும்பியது‌. “சரிங்க ஐயா, நீங்க வேலையை பாருங்க, முடிச்சிட்டு போகும் போது, மறக்காம கதவை பூட்டி சாவியை எங்கிட்ட கொடுத்துடுங்க, அப்புறம் ஆயாம்மாகிட்ட இட்லி கொடுத்து விடறேன் சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றாள்.

அவள் சென்ற பத்து நிமிடங்களில், தோட்டக்காரர்கள் வேலையை முடிக்கவும், அவர்கள் கையில் இரு தட்டுகளில் மல்லிப்பூ போன்ற இட்லியும், மணக்க மணக்க தேங்காய் சட்னியையும் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்தார் ஆயாம்மா. முதல் வாயை ஆண்டவனுக்கும், இரண்டாம் வாயை உணவை வாங்கி தந்த மென்மொழிக்கும் சமர்பித்து விட்டு உண்ணத் தொடங்கினர். இதையெல்லாம் தோட்டத்தின் மறுபுறம் நின்று கொண்டிருந்த தூயவன் கவனிக்கவே செய்தான்.

“பரவாயில்லையே! நேத்து திட்டு வாங்கின அப்புறம் பொறுப்பா மாறிட்டாளே இந்த பொண்ணு!” என அவன் நினைக்கையில் அவன் உள்மனம், நேற்று அவள் மேல் தவறேதும் இல்லை என தெரிந்தும், இன்னமும் கோபமாய் இருந்த காரணத்திற்காக மண்டையில் நச்சென்று குட்டு வைத்தது. அதை வழக்கம் போல் சட்டை செய்யாது தன் அன்றாட கடமைகளில் ஈடுபட்டான் தூயவன்.

மென்மொழி தோட்டம் சீர்படுத்தப்பட்டதை எண்ணி, மகிழ்ச்சியுடன் தன் வகுப்பறைக்கு சென்றாள். இவள் வகுப்பை நெருங்கும் வரை அங்கு மாணவர்கள் இருப்பதற்கான அடையாளம் ஏதும் தெரியவில்லை. என்னடா இது, என நினைத்து கொண்டு தன் வகுப்பிற்கு செல்ல, அங்கு மாணவர் அனைவரும் அமைதியுடன் கைகட்டி அமர்ந்திருந்தனர்.

“என்ன செல்லங்களா? நேத்து பயங்கர க்ளாஸ் சத்தமா இருந்துச்சு, இன்னிக்கு என்ன பின் ட்ராப் சைலன்ஸ்ஸா இருக்கு?”

“இல்ல மித், நாங்க பேசாம அமைதியா இருந்தா நீங்க சாக்கேட் (சாக்லேட்) குடுப்பீங்கன்னு மயூ தான் சொன்னான்” என இரட்டை வால் குடுமி சொல்ல, “ஆமாம் மிஸ் நான் தான் இவங்களை எல்லாம் அமைதியாக்க, அப்படி பொய் சொன்னேன்” என மயூரன் பீற்றி கொள்ள, அவனை சுற்றி இருந்த வாண்டுகள் அனைவரும் திருதிருவென முழித்தனர்.

“இல்ல மயூ நீ பொய் சொல்லல, உண்மையை தான் சொல்லி இருக்க, ஆனா சாக்லேட் கிடையாது, வேற ஏதாவது இனிப்பு பண்டம் வீட்டிலேயே செஞ்சுட்டு வந்து தரேன். ஆனா டெய்லி குடுக்கமாட்டேன். வாரா வாரம் அமைதியா இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் தருவேன். அமைதியா இருக்கணும்னு உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட பேசாம இருந்துடாதீங்க, கொஞ்சம் கொஞ்சம் மெதுவா பேசி அவங்க கூட ப்ரெண்ட்ஷிப்ப வளத்துக்கோங்க” என்றாள்.

அனைத்து குழந்தைகளும் உற்சாகமாக கைதட்ட, அன்று முழுவதும் உற்சாகமாகவே சென்றது. அன்று மாலை ஐந்து மணிக்கு ஆர்கானிக் ஃபார்மிங் பற்றி கூட்டம் இருப்பதாக, மதியம் மூன்று மணி போல் மென்மொழிக்கு சர்க்குலர் வந்தது. இவளும் தன் வேலைகளை எல்லாம் முடித்து கொண்டு வீட்டிற்கும் சொல்லிவிட்டு பள்ளியிலேயே காத்திருந்தாள்.

ஆர்கானிக் ஃபார்மிங்கில் சிறந்து விளங்கிய விவசாயி ஒருவர், தூயவன், மென்மொழி, மேலும் இரண்டு ஆண் ஆசிரியர்கள் மற்றும் தோட்டக்காரர்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுத்தார். வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்ப‌ இரவு மணி ஏழரை ஆனது.

“மிஸ். உங்க வீடு எங்க இருக்கு? தனியா போய்டுவீங்களா?” என ஆசிரியர் ஒருவர் கேட்க, “ம்ம் போயிடுவேன் சார், வீடு கிட்ட தான்” என சொல்லி புறப்பட தயாரானாள். இவள் நடந்து செல்கையில், பின்புறம் ஓடிவந்து இவள் கையை கட்டிக் கொண்டான் மயூரன்.

“ஹாய் மயூ என்ன நீ இன்னும் வீட்டுக்கு போகலியா?”

“வீட்டுல யாரும் இல்ல மிஸ். அம்மாவும் பாட்டியும், தங்கச்சி பாப்பாவை பார்க்க டாக்டர் கிட்ட போயிருக்காங்க, அப்பா ஆபிஸ் போயிட்டாங்க. அதான் நான் மாமா கூட இங்க இருக்கேன்”.

“தங்கச்சி பாப்பா எங்க இருக்கு?”

“ஹா ஹா என்ன மிஸ் நீங்க, தங்கச்சி பாப்பா அம்மாவோட வயித்துல தான் இருக்கு” என்று கூறி சிரித்தான் மயூரன். அவளும் அவன் வெகுளித்தனத்தில் மயங்கி சிரித்தாள்.

“ஹலோ டாக்டர், தனியா போய்டுவீங்களா? நான் வேணா என்னோட கார்ல கொண்டு போய் விடவா?” என உண்மையான அக்கறையுடன் கேட்டான் தூயவன்.

“இல்ல சார், எனக்கென்ன பயம்! நான் என்ன சின்ன குழந்தையா? எல்லாம் தானா போய்டுவேன்” என அதுவரை இருந்த சிரிப்பை தொலைத்து கோபத்தை மட்டும் கண்ணில் நிறுத்தி, அந்த கோபம் முழுவதையும் தன் ஸ்கூட்டியின் ஸ்டாண்டில் காட்டி, அசுர வேகத்தில் பைக்கை கிளப்பினாள்.

“இப்ப நம்ம என்ன கேட்டுட்டோம்னு இவ்ளோ சீன் போட்றா? போன போகுது, தனியா போறான்னு கேட்டா ரொம்ப பண்றா” என அவன் மூளை சொன்னாலும், அவள் பத்திரமாக வீடு போய் சேர்ந்தாளா என்பதை அறிய அவன் மனம் பேராவல் கொண்டது. அதனால் அவள் வீடு போய் சேரும் வரை, சத்தமில்லாமல் தன் வாகனத்தில் தொடர்ந்தான். இதையெல்லாம் ஒரு சுட்டி குட்டி வாண்டு பார்த்து, நாளை அவளிடம் வத்தி வைக்கும் என தெரியாமல் மகிழ்ச்சியாக தன் கடமையை ஆற்றினான்.

— தொடரும் —-

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here