அது மட்டும் இரகசியம் – 12

0
190

வீரர்கள் அந்த இடத்திலிருந்து சென்றதும் மறைவிலிருந்து வெளிவந்த விஷ்ணுவர்மன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக சிந்திக்கலானான் .

விஷ்ணுவர்மனின் கவனம் முழுவதும் அந்த மரகதலிங்கம் எங்கே உள்ளது என்பதையும் தன் மீது சுமத்தப்பட்ட பழியை எவ்விதம் போக்குவது என்பதை சிந்தித்தவண்ணம் இருந்தான் . தன்னை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண்டிருப்பதால் முதலில் ஒரு பாதுகாப்பான அடைக்கலத்தினை தேடவேண்டும் என அவன் எண்ணினான் .

தான் அடைக்கலம் புக தக்க இடம் அருகில் இருக்கும் அடர்ந்த காடுதான் என்பதை உணர்ந்த விஷ்ணுவர்மன் அந்த கானகத்தை நோக்கி தன் பிராயாணத்தைத் துவங்கினான் . அக்காட்டில் பொதுவாகவே ஜனநடமாட்டம் என்பது கிடையாதாகையால் அங்கு இருப்பதே உசிதம் என முடிவெடுத்தான் .

மேலும் வீரர்களும் அந்தப்பக்கமாக தனது தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டதால் இனி அந்தப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் நினைத்தான் .

அந்தக் கானகத்தில் அவன் தனது பிராயானத்தை துவக்கிய சிறிது நேரத்திலேயே அந்தக்காட்டின் இயல்பினை அறிந்துக்கொண்டான் . வானளாவி இருந்த மரங்களும் அந்த மரங்களின் அடர்ந்தகிளைகளும் சூரிய வெளிச்சத்தின் பரிட்சையத்தையே அந்த கானகத்திற்க்கு கிட்டக்கூடாது என்று சங்கல்பம் எடுத்தாற்போன்று வளர்ந்திருந்தன .

அவ்வப்போது செவிப்பறையில் வந்து விழுந்த இனம்தெரியாத பட்சிகளின் ஓசையும் பூச்சிகளின் ஓசையும் சற்று அச்சுறுத்தும்படியாக இருந்தது .

அந்த கானகத்தில் தனக்கான ஒரு இடத்தினை தெரிவுசெய்து அமர்ந்து ஆழ்ந்த பெருமூச்சைவிட்டான் . தலையை நன்றாக அருகில் இருந்த மரத்தின் மீது சாய்த்துக்கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான் . பிறகு எங்கிருந்து தனது துப்பறியும் வேலையை ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் . முதலில் தனக்கு எதிராக சாட்சியளித்த கோவில் காவலனைப்பார்த்து அவனிடம் இருந்துதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தவன் இருள் கவிழும் நேரம் ஊருக்குள் செல்லலாம் என யோசித்தான் .

இரவு முழுக்க தூங்காமல் அலைந்ததும்ம் மனத்தினை அழுத்தமாக்கிய பாரமும் ஒன்று சேர்ந்து அவனை உடலளவிலும் மனதளவிலும் சற்று பலவீனமாக்கியதால் உறக்கம் அவனையும் மீறி வந்தது . பொழுது சாய இன்னும் சற்று நேரம் இருந்தபடியால் அவனும் அந்த உறக்கத்தினை கட்டுப்படுத்த எத்தனிக்கவில்லை .

அந்தி சாயும் வரை உறங்கியவன் பகல் வேளைமுழுவதும் இரை தேடிவிட்டு மாலையில் தங்களது கூட்டிற்க்கு திரும்பும் பட்ஷிகள் எழுப்பிய ஒலியினால் தன் உறக்கம் களைந்து எழுந்தான் விஷ்ணுவர்மன் .

உறக்கத்திலிருந்து விழித்தவன் இப்பொழுது இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருட்டிவிடும் . காவல் வீரர்களின் கண்களிலிருந்தும் கூடுமானவரை தப்பித்துவிடலாம் என திட்டமிட்டான் . அதன்படியே அங்கிருந்து ஊருக்குள்ளான தனது பயணத்தை ஆரம்பித்தான் அவன் .

அங்கிருந்து பயணப்பட்டு சரியாக இரண்டு மணிநேரம் ஆன தருவாயில்தான் அவன் ஒரு உருவம் தனக்கு பக்கவாட்டில் சென்றுகொண்டிருப்பதைக்கண்டான் .

உடல் முழுவதும் போர்வையை போர்த்தியிருந்ததால் அந்த உருவத்தை அவனால் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை . ” இந்த அர்த்த ராத்திரியில் இந்த அடர்ந்த காட்டின் வழியே யார் செல்வது ? ராஜ்ஜியத்தின் சாதாரண குடியாக இருந்தால் அனைவரும் உபயோகிக்கும் பொதுவழியையே உபயோகப்படுத்தி இருந்திருக்கலாமே ? இப்படி ஜனசஞ்சாரமற்ற வனாந்திரத்தில் செல்வானேன் ? ஒருவேளை ஒற்றனாக இருக்குமோ ? அப்படி இருந்துவிடக்கூடாது . ” என நினைத்தான் விஷ்ணுவர்மன் .

அந்த உருவத்தின் மேலே சந்தேகம் வலுப்பட்டதன் காரணமாக அந்த உருவத்தை பின்தொடரவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவர்மனுக்கு உண்டானது .

எனவே அந்த உருவம் தன்னைக் கவனிக்காத வண்ணம் கணிசமான இடைவெளியில் அந்த உருவத்தைப் பின்தொடர ஆரம்பித்தான் விஷ்ணுவர்மன் .

அரைமணி நேரம் கழிந்த பிறகு ஒரிடத்தில் நின்ற அந்த உருவம் திடீரென்று ஏதோ ஒரு சங்கேத ஒலியை எழுப்பியது . அந்த ஒலி எழுந்த மறுநொடியே இதற்க்கென்றே காத்திருந்தார்போல் ஒருவன் அருகில் இருந்த அந்த அகலமான குன்றின் அடிப்பரப்பின் மறைவிலிருந்து வெளிவந்தான் .

அவன் முகத்தினை மறைத்தவாறு ஒரு துணியைக்கட்டியிருந்தான் . அவன் அந்த உருவத்தின் முன்னர் தமது வணக்கத்தினை தெரிவித்து தலைவணங்கினான் .

அவனின் வணக்கத்தினை ஏற்றுக்கொண்ட அந்த உருவம் தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கியது . அந்த போர்வையை விலக்கியதும் தெரிந்தது சாட்ஷாத் வளவனின் முகமே! இதனைக்கண்டதும் விஷ்ணுவர்மனிற்க்கு ஐயம் மேலிட்டது . ” ஏன் இந்த அர்த்த ராத்திரியில் வளவன் இங்கே வந்திருக்கிறான் ? . இந்த புதியவன் யார் ? ” என்ற கேள்வி எழ அமைதியாக அவர்களின் சம்பாஷனையை கவனிக்கத்தொடங்கினான் விஷ்ணுவர்மன் .

” காளிங்கா …. நான் உனக்கு காலையில் கூறிய அனைத்தும் தெளிவாக விளங்கியதல்லவா ? அதன்படிதானே செய்திருக்கிறாய் ? நான் கொண்டுவந்து கொடுத்த அந்த மரகதலிங்கத்தினை பத்திரமாக பாதுகாத்தாய் அல்லவா ? விஷ்ணுவர்மன்வேறு சிறையிலிருந்து தப்பித்துவிட்டான் . கண்டிப்பாக அவன் இந்த லிங்கத்தைத் தேட ஆரம்பித்திருப்பான் . எனவே மிகவும் ஜாக்கிரதையாக நம் அடுத்தகட்ட செயல்களை செய்யவேண்டும் . நம் இருவருக்கு மட்டும்தான் அந்த லிங்கம் இருக்கும் இடம் தெரியும் . இப்போது அந்த லிங்கம் நான் வைத்திருக்கும் அந்த ரகசிய அறையில்தானே இருக்கிறது ? ” என வினவினான் வளவன் .

இதைக்கேட்ட மறுகனமே விஷ்ணுவர்மனிற்க்கு தூக்கிவாரிப்போட்டதுபோல் ஆனது . இவன் ஏன் இந்த இழிசெயலை செய்து என்மீது பழியைப்போடவேண்டும் ? இவனின் நோக்கம்தான் என்ன ? உடனடியாக இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என எண்ணியவன் சற்றும் தாமதியாமல் தான் கையோடு அந்த சிறையிலிருந்து கொண்டுவந்த வாளை உருவிக்கொண்டு அவர்களிடையே பாய்ந்தான் அவன் .

திடீரென தங்கள் முன் வந்து நின்ற விஷ்ணுவர்மனைப்பார்த்து சற்று திடுக்கிட்டனர் அவர்கள் இருவரும். பின் சுதாரித்துக்கொண்டு காளிங்கனிடம் கண்ணைச்சிமிட்டி சமிக்ஞை செய்தான் வளவன் . அந்த சமிக்ஞையை இனம் கண்டுகொண்ட காளிங்கன் விஷ்ணுவர்மனின் மீது பாய தயாரானான் .அவன் தன்னைத்தாக்க வருவான் என்பதை முன்னரே ஊகித்த விஷ்ணுவர்மன் தான் நின்ற இடத்திலிருந்து விலகினான் . அங்கிருந்து நகர்ந்த மறுநொடியே அவனின் வாள் காளிங்கனின் கழுத்தை பதம் பார்த்தது . இவையனைத்தும் மின்னல் வேகத்தில் ஒரே நொடிப்பொழுதில் நடந்தேறிவிட்டது .

வளவனின் புறம் திரும்பிய விஷ்ணுவர்மன் கோபம் பீறிட ” வளவா … ஏன் இப்படி செய்தாய் உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா ? எதற்க்காக மரகதலிங்கத்தைத் திருடி என் மீது பழியைச் சுமத்தினாய்? உன்னுடைய நோக்கம்தான் என்ன ? ” என கறுவினான் .

அதைக்கேட்டதும் சிரித்த வளவன் பிறகு கண்களில் தோன்றிய வஞ்சத்துடன் ” நீதான் ! இவையனைத்திற்க்கும் காரணம் நீதான் ! உன்னால்தான் இவையனைத்தையும் நான் செய்தேன் ” . என்றான் .

வளவன் கூறிய பதிலினால் உண்டான ஆச்சரியத்தின் சுவடுகள் விஷ்ணுவர்மனின் முகத்தில் தடம் பதிக்க ஆரம்பித்தன . ” என்ன உளறுகிறாய் ? இவையனைத்திற்க்கும் நான் எப்படி காரணமாவேன் . புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா ? என்றவனின் கேள்வியில் ஆத்திரமடைந்தான் வளவன் .

” ஆம் . எனக்கு புத்தி பேதலித்துவிட்டது . எப்போது நீ இந்த அரண்மனைக்கு வந்தாயோ அப்பொழுதே நான் என் மனநிம்மதியை இழந்துவிட்டேன் . அரண்மனையிலும் சரி , மக்கள் மத்தியிலும் சரி உனக்கு பிறகுதான் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது . என்னைவிட உனக்குத்தான் செல்வாக்கும் அதிகமாகியது . அப்போதிலிருந்தே நான் உன்னையும் உனக்கு இவ்வளவு புகழ்வரக்காரணமாக இருந்த என் தமையனையும் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் . அப்போதுதான் எனக்கு உங்கள் இருவரையும் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமும் , ராஜ்ஜியத்தின் சிங்காதனத்தின் மீது ஆசையும் வந்தது ” என்று கூறிக்கொண்டே சென்றவனனின் வார்த்தைகளில் பேச்சற்றுப்போய் நின்றான் விஷ்ணுவர்மன் .

மேலும் தொடர்ந்த வளவன் ” முதலில் என் தமையனின் கதையைமுடித்துவிட்டு பிறகு உன்கதையை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து நீங்கள் வேட்டையாட கானகத்திற்க்கு வரும்பொழுதே அவனைக்கொன்றுவிட முடிவெடுத்து அவன் மீது அம்பை எய்தினேன் . ஆனால் நீயோ அதனைக் கெடுத்துவிட்டாய் . நீ அவனுடன் இருக்கும் வரை அவனின் நிழல் போலவே இருந்துவந்தாய் அதனால் அவனை என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை . எனவே உன்னை முதலில் அவனுக்கு எதிரியாக்கி உன்னை அவனிடமிருந்து பிரிக்க திட்டமிட்டேன் . என் எண்ணப்படியே அனைத்தும் கச்சிதமாக நிறைவேறியது . உனக்கு எப்படியும் மரண தண்டனையே கொடுக்கப்படும் என்று நினைத்தேன் . ஆனால் நீ அங்கிருந்து தப்பித்தது நான் எதிர்பாராத ஒன்று . இருப்பினும் இதையே எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வழிமுறையும் எனக்கு நன்றாகவே தெரியும் ” என உணர்ச்சிவசபபட்டு அனைத்தையும்கூறி அட்டகாசமாகச் சிரித்தான் .

அந்த பயங்கர சிரிப்புச்சத்தம் இதுவரையில் அவன் கூறியதைக்கேட்டு சிலையென சமைந்திருந்த விஷ்ணுவர்மனை சுயநினைவிற்க்கு கொண்டுவந்தது .

” அடேய் மூடனே … எப்படியடா இவ்வளவு வஞ்சத்தினையும் மனத்தினில் இருத்திக்கொண்டே உன்னால் நல்லவனாக நடிக்கமுடிந்தது . கிராதகா … கபடவேடதாரி ….உன்னை என்ன செய்கிறேன் பார் ! ” என்ற விஷ்ணுவர்மன் அதுவரை அடக்கிவைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளும் ஒன்றுசேர தன் வாளினை எடுத்து அவனைத்தாக்குவதற்க்காக உயர்த்தினான் .

இதனை ஏற்க்கனவே எதிர்பார்த்திருந்த வளவனும் தன்னுடைய வாளினை எடுத்து எதிர்த்தாக்குதலுக்குத் தயாரானான் . இருவரின் வாள்களும் ஒன்றோடன்று உரசி உண்டான தீப்பொறிகள் அந்த இருளில் ஏதோ மின்மினிப்பூச்சிகள்தான் பறக்கின்றனவோ என்ற பிரமையை ஏற்படுத்தின .

இருவரும் ஒருவருக்கொருவர் வாள்வீச்சில் விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டிருந்தனர் . அரைமணிநேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தில் வளவனின் வாள் விஷ்ணுவர்மனின் வாளால் தட்டியெறியப்பட்டதுடன் அவனின் உடலிலும் சில கீறல்களை ஏற்படுத்தத் தவறவில்லை .

வளவனின் கழுத்தில் தன் வாளினைவைத்த விஷ்ணுவர்மன் ” திருடிச்சென்ற அந்த மரகதலிங்கத்தை எங்கேயடா ஒளித்துவைத்திருக்கிறாய் ? அந்த லிங்கத்தை ஆலயத்திலேயே வைத்து பாதுகாப்பேன் என்று அரசருக்கு நான் உறுதியளித்திருக்கிறேன் . என் வாக்கை காப்பாற்ற நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன் . மரியாதையாக சொல்லிவிடு இல்லையென்றால் இந்த வாளினாலேயே கழுத்தறுபட்டு இறப்பாய் ” என்று கர்ஜித்தான் .

கழுத்தில் வைத்த ஆயுதத்தின் அழுத்தம் கூடக்கூட ஏற்பட்ட வலியினால் ” முதலில் கழுத்தில் இருந்து கத்தியை எடு . அந்த லிங்கம் இருக்கும் இடத்தை நான் கூறிவிடுகிறேன் . நீ இப்படியே வைத்திருந்தால் என்னால் எதுவும் மேற்க்கொண்டு பேசமுடியாது ” என அலறினான் வளவன் .

விஷ்ணுவர்மனும் தன் பிடியைத் தளர்த்தி வளவனின் கழுத்திலிருந்து தன் வாளினை அகற்றினான் . ” ம்ம்ம் சொல் எங்கே வைத்திருக்கிறாய் ? ” மறுபடியும் வினவியவன் வாளினை முழுதும் அகற்றாமல் கட்டைவிரல் நீள இடைவெளியில் நிறுத்தினான் . வளவனும் மரகதலிங்கம் இருக்கும் இடத்தினைக்கூற ஆரம்பித்தான் .

அவன் கூறிமுடித்தவுடன் சிறிது அதிர்ச்சியடைந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்த விஷ்ணுவர்மனின் கையில் இருந்த ஆயுதத்தை தட்டிவிட்டு அவனின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான் வளவன் . இதை எதிர்பாராத விஷ்ணுவர்மனும் சிறிது நிலைகுலைந்துதான் போனான் .

ஹாஹா என்ற பேய்ச்சிரிப்பு சிரித்த வளவன் நீ இப்பொழுது அந்த லிங்கத்தை எடுத்தாலும் யாரிடம் போய் நீ நிரபராதி என நிரூபிப்பாய் ? . மன்னனிடமா ? அல்லது மக்களிடமா ? எனக்கேட்டு மறுபடியும் பைத்தியம்போல் சிரிக்க ஆரம்பித்தான் .

இவனின்செய்கை ஒன்றும் புரியாமல் வியப்பாக நோக்கிய விஷ்ணுவர்மன் ” இப்பொழுது ஏன் இப்படி கூறுகிறாய் ? உன்னுடைய சொல்லின் பொருள் என்ன? ” என முகத்தில் பலவித உணர்ச்சிகள் தோன்ற கேள்வி எழுப்பினான் .

விஷ்ணுவர்மனை ஏளனத்துடன் பார்த்த வளவன் ” இந்நேரம் உன் மன்னன் பரலோகத்திற்கக்கு பிராயாணம் செய்துகொண்டு இருப்பான் . அதற்க்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டுத்தான் இங்குவந்தேன் . ஆனால் நீதான் எதிரிநாட்டு மன்னனுடன் சேர்ந்து அவன் தரும் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு மன்னனை கொலைசெய்தாய் என்ற செய்தியினை என் ஆட்கள் இந்நேரம் பரப்பியிருப்பினர் . நீ வரகுணனின் ஆள்தான் என்று அனைவரும் நம்புவர் . கொலைப்பழியும் உன்மீதுதான் திருட்டுப்பழியும் உன்மீதுதான் . ” எனக்கூறினான் .

அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக அவன் இறக்கிய செய்தி விஷ்ணுவர்மனுக்கே சிறிது ஆட்டம் கண்டது . சிலைப்போல் நின்றிருந்தவனை அந்தக்குன்றின் மீது விசையுடன் தள்ளிவிட்டான் வளவன் . விழுந்த வேகத்தில் விஷ்ணுவர்மனின் தலையில் அடிபலமாகபட்டுவிட்டதால் அப்படியே குன்றின்மேலேயே சாய்ந்துவிட்டான் .

” வரகுணன் தரும் செல்வங்களுக்கு மதிமயங்கி அவனின் கூட்டாளியாகி அவன் பேச்சினைக்கேட்டு நீ என் அண்ணனைக்கொன்றுவிட்டதாகவும் , என் அண்ணனைக்கொன்று தப்பியோடிவந்த உன்னை விரட்டிச்சென்று கொன்றுவிட்டு நீ மறைத்துவைத்த சிவலிங்கத்தையும் கைப்பற்றிக்கொண்டுவந்துவிட்டேன் எனவும் மக்களிடம் சொல்லி அவர்களிடம் உன் மீதும் வரகுணணின் மீதும் பழியைச்சுமத்தி வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்குவேன் . பிறகு இந்த ராஜ்ஜியத்தின் சிங்காதனத்தின் அமரும் உரிமையையும் பெற்றுவிடுவேன் ” என தான் வெற்றிபெற்றுவிட்டோம் என நினைத்து ஆனந்தத்தில் கொக்கரித்துக்கொண்டிருந்தான் வளவன் .

அரைமயக்கத்தில் இருந்த விஷ்ணுவர்மனுக்கு இவன் நிச்சயமாக வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் வேறூன்றியது . இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவன் தன் இடையிலிருந்த குறுவாளை வளவன் கவனியா வண்ணம் உருவினான் . சரியாக அவன் நெஞ்சில் தன் கத்தியை பாய்ச்சியவன் ” உன்னைப்போன்ற ஈனப்பிறவி என் ஈசனைத்தொடுவதற்க்கு அருகதை அற்றவன் . உன் கையால் என் இறைவனை தொட அனுமதிப்பது நான் அந்த இறைவனுக்கும் எம்மன்னனுக்கும் செய்யும் துரோகமாகிவிடும் . ஈனப்பிறவியே செத்து ஒழி . ” என்று கர்ஜித்தான் .

எதிர்பாரத திடீர்செயலினால் உயிர்வலியில் துடித்த வளவன் , கத்தி குத்திய இடத்தில் கையை வைத்துக்கொண்டு விஷ்ணுவர்மனை மீண்டும் பலமாக அந்த குன்றின் பாறையின்மீது தள்ளிவிட்டு தானும் தரையில்விழுந்து துடிதுடித்தான் . இம்முறை மீண்டும் பலமாக பின்மண்டையில் அடிபடவே தான் இறக்கும் தருணம் வந்துவிட்டது என உணர்ந்த விஷ்ணுவர்மன் ” அரசே …. என்னை மன்னித்துவிடுங்கள் நான் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது . இப்பிறவியில்தான் என்னால் நான் செய்து கொடுத்து சத்தியத்தை காப்பாற்ற இயலவில்லை . புனர்ஜென்மம் என்பது உள்ளது என்றால் என்னுடைய அடுத்த பிறவியில் அந்த மரகதலிங்கத்தை கண்டுபிடித்து நம் ஆலயத்தில் அதைக்கொண்டு சேர்ப்பேன் . இது என் ஈசனின் மீது ஆணை ” . என்ற வார்த்தையுடன் அவன் மூச்சு நின்று போனது .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here