அம்மா வீடு

0
6

உள்ளத்தினுள்ளே மத்தாப்பு வெடிக்கிறது….
அது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே!!

சின்னஞ்சிறு மாற்றங்களும் தப்புவதில்லை…
நேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு!!

எதிர்படும் அனைத்து முகங்களும்
அன்பையே தருகின்றன ….
அதனாலேயே அவ்விடத்தின் மீதான
அதீத காதல் குறைவதில்லை!!

இரவின் அலுப்பும் அதிகாலை பரபரப்பும் ஓடி ஒளிகின்றன…
எட்டி நின்ற நித்திரை சுகமாய் தழுவி தன் ஏக்கம் தீர்த்துக் கொள்கிறது!!

அடுப்படி சலசலப்பும் அலுவலக கசகசப்பும் பிள்ளைகளின் நசநசப்பும்…
காதுகளை எட்டாமல் கரைந்து போகின்றன!!

பொறுப்புகளும் கவலைகளும் தணலில் வெந்து தணிகின்றன…
பட்டாம்பூச்சியாய் சிறகு விரிந்து
பனியாய் உருகுது இதயம் ❤️!!

பேரண்டமாய் அச்சுறுத்தும் துன்பங்களும் …
ப்ரோட்டான்களாக மாறி
கண்மறைந்து போகின்றன!!

சில நாட்களிலே வருட
முழுதுக்குமான சக்தி பெருகிறாள்..
வாழ்வின் மகிழ்ச்சி காண்கிறாள்!!

மீண்டும் குழந்தையாகிறாள்…
தாய் மடி சாயும் சுகம் காண்கிறாள்…!!

அவள் வீடாய் / ஊராய் இருந்து…
அம்மா வீடாக / ஊராக மாறின
தலம் சேரும் போது!!

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here