அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 10

1
414

அத்தியாயம் 10

ஆவிகளைப் பற்றி:

டீமனிக் :

இது ஒரு தீய ஆவி. இவற்றால் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவ முடியும். அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். மனிதர்களின்  உடலில் வசிப்பதால், இந்த பேய்கள் மற்றவர்களை விட அதிக வலிமையைக் கொண்டுள்ளன. இந்த ஆவிகளால்  பொருட்களை நகர்த்த முடியும். மக்களை காயப்படுத்தலாம். இந்த வகைப்  பேய்கள் ஆபத்தானவை.ஒருவழியாக ராஜா, சந்திரனை  சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே சந்திரனின் தந்தையின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக தான் இருந்தது. அனுவின் பெற்றோர்களை மருத்துவமனையில் இருக்க சொல்லிவிட்டு சிறியவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களுக்கு தனியாக கலந்து பேசுவதற்கும் ,சிந்திப்பதற்கும் ஒரு இடம் தேவைப்பட்டது. வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் அவர்களால் இந்த அமானுஷ்யத்தை குறித்து எந்த தகவலையும் கண்களால் கூட பரிமாறிக் கொள்ள முடியவில்லை. எனவே மூவரும் ஆளாளுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி அனுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 வீட்டிற்குள் நுழைந்ததுமே ராஜா காரில் வரும் போது அனு நடந்து கொண்ட விதத்தையும் அதிலிருந்து தாங்கள் இருவரும் தப்பி மீண்டு வந்த விதத்தையும் சொல்லிவிட்டான். தவறு செய்தவளைப்  போல குனிந்த தலையோடு வருத்தத்துடன் அமர்ந்திருந்தாள் அனு.

தான் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. சந்திரன் அனுவிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று புரியாமல் பயத்தினாலேயே அவள் அவ்வாறு நடந்து கொண்டாள்.

ஏற்கனவே சந்திரன் அளவிற்கு தான்  அழகு இல்லை என்ற தாழ்வுணர்ச்சி அவளுக்கு அதிகம்.. தன்மேல் அவனுக்கு அத்தனை பிடித்தமில்லை  என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். இப்பொழுது பேய் பிடித்த மனைவி என்று நினைத்து தன்னை முற்றிலுமாக ஒதுக்கி  விடுவானோ என்ற பயம் அவளை ஆட்டி வைத்தது.

மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்ட சந்திரன் அவளின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டான்.

“இந்த விஷயத்தில நம்ம என்னென்னவோ முயற்சி எல்லாம் செஞ்சுட்டு இருக்கோம். ஆனா விளைவுகள்  எதிர்மறையாக தான் இருக்கு. அந்த பொண்ணோட வீட்டுக்குப் போயி விசாரிச்சு பார்த்தாச்சு… அவங்க அம்மா கொடுத்த நம்பருக்கு போன் பண்ணி பேசி பாத்துட்டேன்.

அனு கூட சேர்ந்து பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் பூஜைக்கு ஏற்பாடு செய்ய ஒத்துக்கிட்டேன். ஆனா எல்லா விதத்திலயும் நமக்கு பிரச்சனை தான் வந்துட்டு இருக்கு. ஏதாவது ஒரு இடத்தில் நமக்கு ஒரு பாசிட்டிவான முன்னேற்றம் இருந்தா  தான் நமக்கு ஒரு சந்தோஷம் இருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் பிரச்சனையா இருக்கு. இப்ப நம்ம போற வழியில கூட ஏதாவது பிரச்சினை வருமோனு எனக்கு பயமா இருக்கு” என்று நண்பனிடம் கூறினான் சந்திரன்.

“இல்ல சந்திரா எனக்கு அப்படி தோணலை.. நாம சரியான பாதையில் தான் போயிட்டு இருக்கோம். அதனால தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  அந்த ஆவி அதாவது நீ சொல்ற அந்த மோகினியோட ஆவி நமக்கு தொல்லை கொடுக்கிறது . என்னால இப்போ கூட நான் போன்ல பேசின அந்த பொண்ணு ஒரு ஆவி தான்னு நம்ப முடியல.

ஏன்னா என்கிட்ட அவ்வளவு சாந்தமா பேசினா அந்த  பொண்ணு. நம்ம எங்கேயோ, எதையோ மிஸ் பண்றோம்டா. அது என்னனு தான் தெரியல. அதை கண்டு பிடிச்சிட்டா  இந்த குழப்பம் எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.

அதுக்கு என்னதான் வழி? இப்படியே போனால் அந்த ஆவி நம்ம எல்லாரையும் கொன்னுடும் போல இருக்கு. ஏதாவது ஒரு வழி கண்டுபிடிச்சே ஆகணும்” என்று தீவிரமாக ராஜா கூறினான்.

சந்திரனும், அனுவும் ராஜாவின் கூற்றை ஆமோதித்தனர். அனுவின் பெற்றோர்களை மருத்துவமனையிலேயே தங்க வைத்தனர். சந்திரனின் தந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்கு வேண்டிய வசதிகளையும் வீட்டு வேலையாட்களையும் அங்கேயே அவர்களுக்கு உதவியாக இருக்க வைத்தனர். அவர்கள் வீட்டுப் பக்கம் வராமல் செய்துவிட்டு அவர்களின் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகளை வெகு கவனத்துடன் செய்ய தொடங்கினர்.

பேய் ஓட்டுவதற்காக அனுவும் ராஜாவுக்கு ஏற்பாடு செய்திருந்த முனியன் பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார். அவருக்கு இந்த வேலையில் பல வருடங்கள் அனுபவம் இருந்ததால் உள்ளூர் மக்கள் அவரைப் பற்றி நல்ல விதமாகவும் நம்பிக்கையூட்டும் விதமாக கூறியதாலும் அவரிடமே இவர்கள் இந்த பூஜைக்கான பொறுப்புகளை ஒப்படைத்து இருந்தனர். அடுத்த நாள் வீட்டில் அவர்கள் மூவரும் தயாராக காத்திருந்தனர். முனியன் பூஜை செய்வதற்காக வீட்டுக்குள் நுழைந்தார்.

அன்று காலை முதலே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து பூஜைக்குத் தயாராக வைத்திருந்தார்கள். வீட்டு வேலையாட்கள் உட்பட யாருமே அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. நல்ல நேரம் பார்த்து வீட்டில் பூஜையை தொடங்கி செய்ய ஆரம்பித்தார் முனியன். ஆரம்பத்திலேயே அவர் பூஜை குறித்து எச்சரிக்கை செய்திருந்ததால் மூவரும் லேசான பயத்துடனே அந்த நேரத்தை எதிர் கொண்டார்கள் என்பதே நிஜம். ஆரம்பத்தில் சாதாரண பூஜை போல தொடங்கிய அந்த பூஜை நேரம் கடக்க கடக்க ஆக்ரோஷமாக  மாறியது.

அவரின் மந்திர உச்சாடனங்கள் பூஜையில் அவர் பயன்படுத்திய மண்டையோடு உள்ளிட்ட பொருட்களும் அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஒரு பயத்தை விதைத்தது.

முனியன் பூஜையை மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் வீட்டின் உள்ளே இருந்து  சில பல வினோத சத்தங்களை மூவரும் கேட்டனர்.

பாத்திரங்கள் தரையில் விழுந்து உருண்டன. எரிந்துகொண்டிருந்த தீபங்கள் அணையப் போவதைப் போல காற்று வேகமாக சுழன்று வீசியது. பூஜைக்காக அவர் ஒரு மண் கலயத்தில் கோழியின் ரத்தத்தை எடுத்து வைத்திருந்தார். அந்த பாத்திரம் தானாகவே அதிரத் தொடங்கியது.

பயத்தில் சந்திரனின் தோளில் சாய்ந்து அவனது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள் அனு. சந்திரன் தன்னுடைய மறுகரத்தால் ராஜாவின்   கைகளை இறுக்க கோர்த்துக்கொண்டு பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான்

திடீரென்று முனியனின் தலைமுடி அவருக்கு பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தியால் பலமாக இழுக்கப்பட்டது. அவருடைய கையில் இருந்த எலுமிச்சையை குங்குமத்தில் நனைத்து நான்காகப் பிரித்து திசைக்கு ஒரு பக்கமாக அவர் போட, சற்று நேரம் அந்த வீடு அமைதியில் மூழ்கியது.

சில நொடிகள் பொறுத்து பார்த்த முனியன் மீண்டும் மந்திரங்களை உச்சரிக்க தொடங்க அவரை தொடர்ந்து பூஜை செய்ய விடாதபடி ஏதோ ஒன்று அவரை தொல்லை படுத்தியதை அங்கிருந்த மூவருமே உணர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் முனியன் மந்திரங்களை உச்சரிப்பது நிறுத்திவிட்டார். பயத்தில் வியர்த்து வடிந்தது போல் இருந்தது அந்த மூவரையும் பார்த்து அவர் பேசத் தொடங்கினார்.

“இதோ பாருங்க… இப்போ இந்த பூஜையை என்னால ரெண்டு விதமா முடித்து வைக்க முடியும். நீங்க எந்த மாதிரி முடித்து வைக்க விரும்புறீங்கன்னு சொல்லுங்க. அதுக்கு ஏற்ற மாதிரி நான் பூஜையை தொடருறேன்.

உங்களுக்கு இந்த வீட்ல இருக்குற அந்த ஆத்மாவை வெளியே அனுப்பனுமா? இல்ல அது எதுக்காக இங்க வந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சாந்திக்கு அனுப்பனுமா?… இதுல எது உங்களுக்கு தேவைன்னு நீங்க சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி நான் செய்வேன்.” என்று கூறி அவர்களின் முகங்களையும் கேள்வியாக பார்த்தார். சந்திரன் மற்ற இருவரையும் முந்திக்கொண்டு பேசத் தொடங்கினான்.

“எங்களுக்கு மொதல்ல அந்த ஆவி எதுக்கு எங்களை தொந்தரவு செய்யுதுன்னு தெரியணும்… எங்க யாருக்குமே காரணமே தெரியல… எங்களுக்கு அந்த கேள்விக்கு பதில் வேணும். அந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா தான் அடுத்ததா என்ன செய்யணும்னு தெரியவரும். அதனால இந்த வீட்டை விட்டு அனுப்புறதோ  இல்ல சொர்க்கத்துக்கு அனுப்பி சாந்தி கிடைக்கிறதுக்கு ஏற்பாடு செய்றதோ எல்லாத்தையும் அதுக்கப்புறம் தான் யோசிக்கணும். முதல்ல அது எங்களை ஏன் தொடர்ந்து வருதுன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு  சொல்லுங்க… உங்க சக்தி வச்சு அதை தெரிஞ்சுக்க முடியுமா?” என்று கேட்டான்.

மற்ற இருவரும் அமைதியாக இருக்கவே சந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் ஆவியை அங்கே வரவழைத்து அதனுடன் பேச முடிவு செய்தார். அதற்கு முன் சந்திரன் ,அனு, ராஜா மூவருக்கும் பூஜையில் வைத்திருந்த ஒரு கயிறை எடுத்து அவர்களது கரங்களில் கட்டி விட்டார்.

“பாருங்க… இப்போ நான் பூஜை செய்து அந்த ஆத்மாவை இங்கே கூப்பிட போறேன். வர்ற ஆத்மா எந்த மாதிரியானதாகவும் , எப்படிப்பட்டதாகவும் வேணும்னாலும் இருக்குலாம். அதை  என்னால உறுதியா சொல்ல முடியாது. ஒருவேளை அந்த ஆத்மா நல்ல ஆத்மாவாக இருந்து, உங்களுக்கு ஏதாவது உதவி செய்வதற்காக வந்திருந்தா எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா அது உங்க மேல கோபத்தில் இருக்கும் ஆத்மாவா இருந்தா, வந்துட்டு சும்மா போகாது. உங்களுக்கு ஏதாவது ஆபத்து உருவாக்க முயற்சி பண்ணும். அதனால நான் சொல்ற வரைக்கும் இந்த கயிறை கழட்டக்கூடாது. பூஜை முடியற வரைக்கும் எக்காரணத்தை கொண்டும்” என்று அழுத்தமாக  எச்சரித்துவிட்டு அவர்கள் கைகளில் அந்த கயிற்றை கட்டி விட்டார்.

கயிற்றைக் கட்டி முடிந்தவுடன் முன்னிலும் அதிக வேகத்துடன் மந்திரங்களை உச்சாடனம் செய்தார். அவருடன் துணைக்கு வந்திருந்த அவரது உதவியாட்கள் ஏற்கனவே முனியன் சொல்லியிருந்தபடி அனுவும், ராஜாவும் வாங்கி வைத்திருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியை முனியனுக்கு எதிராக வைத்தார்கள்.

பூஜை ஆரம்பித்த பொழுது வீட்டில் எந்த அளவுக்கு பொருட்கள் விழுந்ததோ அதை காட்டிலும் அதிக சேதாரம் நடந்தது. எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த கத்தி ஒன்று சந்திரனின் கழுத்தை குறிவைக்க, கணவனின் உயிரை காப்பாற்றும் பொருட்டு அவனை தள்ளிவிட்டாள் அனு.

அந்த கத்தி சந்திரனின் பின்னால் இருந்த சுவற்றில் வேகமாக போய் சொருகி நின்றது. எல்லோருக்கும் பயம் உச்சத்தை அடைந்தது. சந்திரனின் உடல் நடக்க இருந்த விபரீதத்தை எண்ணி நடுங்கத் தொடங்கியது. அடுத்ததாக காற்றில் மெதுமெதுவாக துர்நாற்றம் பரவத் தொடங்கியது.

ரத்த வாடை…

சந்திரன் முதன் முதலில் மோகினியை சந்தித்த போதும் சரி அதன் பின்னால் அவளை அவன் உணர்ந்தபோதும் அவன் உணர்ந்த அதே துர்நாற்றம்… குடலைப் புரட்டி வாந்தி வருவது போல இருந்தது மூவருக்கும். முனியனின் உத்தரவுப்படி அந்த இடத்தை விட்டு அசையாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

பூஜையில் வைத்திருந்த ரத்தம் நிறைந்த அந்த மண்  கலையம் மீண்டும்  அதிரத் தொடங்கியது. முனியன் பூஜைக்கு நடுவில் போட்டிருந்த கோலத்தின்  மீது இருந்த எலுமிச்சை பழங்கள் தானாகவே திசைக்கொன்றாக நகரத் தொடங்கியது. சந்திரன், அனு, ராஜா மூவரின் கண்களிலும் பீதி நிறைந்து காணப்பட்டது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் கருப்பாக ஒரு புகை வடிவம் தோன்றியது.

மோகினி வருவாள்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 1]

1 COMMENT

  1. ஆத்தி என்னடா இது ஒரே வைலண்டா போயிட்டு இருக்கு அம்மா மோகினி ரொம்ப மிரட்டாத தாயி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here