அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 13

1
504

அத்தியாயம் 13

ஆவிகளைப் பற்றி: புகைப்படம் எடுப்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் நீங்கள் புகைப்படம் எடுத்து அதனை சோதித்து பார்த்தால் அதில் சில புள்ளிகள் உங்கள் முகத்தை தெளிவில்லமால் காட்டும். அவ்வாறு இருந்தால் உங்களை சுற்றி பேய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

சந்திரனின் தந்தை ராமனை சேர்த்து இருந்த மருத்துவமனையில் பேசி ஆம்புலன்ஸ் மூலம் ராமனை திருச்சிக்கு அழைத்துக்கொண்டு சென்றார்கள். அனுவின் பெற்றோர்களிடம் வேறுவழியின்றி உண்மையை விளக்கி கூறினார்கள். முதலில் பயந்தவர்கள் இப்போது திருச்சிக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்ததால், எல்லோரும் ஒன்றாக திருச்சிக்கு புறப்பட்டார்கள்.

அனுவின் பெற்றோர்கள் ராமனுடன் செல்லும் அனுவிற்காக இன்னும் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அதில் சந்திரன், ராஜா, முனியன் உள்ளிட்டோரும் தனித்தனியாக  2 ஆம்புலன்சில்  திருச்சி நோக்கி புறப்பட்டனர். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அனுவிற்கு தூங்குவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் முனியனும் சில மந்திரங்களை அனுவின் மீது பயன்படுத்தியிருந்தார்.

அனுவை படுக்க வைத்திருந்த ஸ்டரக்சரில் அவளது கைகளோடு சேர்த்து சில மந்திர கயிறுகளை கட்டி இருந்தார். அவளுக்கு நினைவு திரும்பாதது அவர்களுக்கு வசதியாகப் போனது. சில மணி நேர பயணத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் திருச்சியை நோக்கி வந்தடைந்தது சந்திரனின் தந்தை ராமனை திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அனுவின் பெற்றோர்களை அவருக்கு துணையாக இருக்கும்படி ஏற்பாடு செய்தனர்.

அனுவை சந்திரனின் வீட்டில் முனியன் பாதுகாப்பில் வைத்துவிட்டு ராஜாவும், சந்திரனும் மோகினியின் இல்லத்தை நோக்கி புறப்பட்டார்கள். மோகினியின் வீட்டை நோக்கி புறப்பட்ட பின்னரும் சரி ராஜாவும் சரி அவரவர் கருத்துக்களில் தெளிவாக இருந்தார்கள்.

சந்திரன் அங்கிருப்பது மோகினி இல்லை என்று கருத்திலும், ராஜா அங்கு இருப்பது மோகினி என்ற கருத்திலும் தெளிவாக இருந்தார்கள். வழியில் மேற்கொண்டு வேறு எந்த விவாதங்களும் புரியாமல் அவர்களது பயணம் அமைதியாகவே கழிந்தது. சந்திரன் திருமணம் ஆவதற்கு முன்னர் வசித்த வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் மோகினியின் வீடு அமைந்திருந்தது.

இப்போதும் மோகினி வீட்டிற்கு போன பின் சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்துகொண்ட பயத்தில் சந்திரன், ராஜா இருவருமே பதட்டமாகவே காணப்பட்டார்கள். அந்த இருவரின் இதயத்துடிப்பை எகிற வைத்த பின் அந்த வீட்டின் கதவு திறந்து கொண்டது. ராஜா அன்று பேசிய அதே  பெண்மணி அன்றைய தினத்தைப் போலவே கவலை படிந்த முகத்துடன் கதவைத் திறந்தார். லேசாக புருவம் சுருக்கி யோசித்தவர் சந்திரனையும், ராஜாவையும்  அடையாளம் கண்டுகொண்டார்.

“ என்ன தம்பி உங்க தங்கச்சிக்கு கல்யாணம் முடிவாகிடுச்சா? பத்திரிக்கை வைக்க வந்தீங்களா?” என்று ராஜாவையும்…

“என்ன சந்திரா ஆளையே காணோம் கல்யாணதுக்கு அப்பறம் இந்த ஊரையே  மறந்திட்டியா?” என்று சந்திரனைப் பார்த்துக் கேட்டவர் இருவரையும் உள்ளே வருமாறு தலையசைத்து அழைக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி வீட்டிற்குள் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

எங்கிருந்து பேச்சைத் தொடங்குவது எப்படி பேசுவது என்று புரியாமல் இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். அந்த மௌனத்தை ராஜா உடைத்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க… அன்னைக்கு உங்க வீட்டுக்கு நான் வந்தபோது என் தங்கச்சிக்கு கல்யாணம் அப்படின்னு சொன்னதும் என் தங்கச்சி உங்க பொண்ணோட ஃப்ரண்ட் அப்படினு நான் சொன்னது எல்லாமே பொய். அது எதுவுமே உண்மை இல்லை. உங்க பொண்ணோட போன் நம்பர் வாங்குவதற்காக தான் வந்தேன். தப்புதான். ஆனா அன்னிக்கு இருந்த சூழ்நிலையில எங்களுக்கு வேற வழி தெரியல எங்கள் மன்னிச்சிடுங்க” என்று ராஜா சொல்ல அவரின் முகம் குழப்பமானது.

“ என்ன சொல்றீங்க தம்பி… எனக்கு எதுவுமே புரியலையே? எதுக்காக என் பொண்ணோட போன் நம்பர் வாங்குனீங்க?” என்று கேட்க ராஜா தொடர்ந்து பேசினான்.

“அம்மா உங்களுக்கு சந்திரன் தெரியும் தானே?”

“ தெரியும்”

“சந்திரனுக்கு சில நாட்களாக அவனை சுற்றி ஏதோ அமானுஷ்யம் நடக்குது. அவ அதுக்கு காரணம் உங்க பொண்ணுன்னு சொல்றான். அந்த சந்தேகத்தை தீர்த்துக்கிறதுக்காகத் தான் உங்க பொண்ணோட போன் நம்பர் வாங்கிட்டு போனேன்” என்று சொல்ல அவரின் முகத்தில் இருந்த குழப்பம் மறைந்து லேசான அதிர்ச்சி தோன்றியது.

“கேட்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க… உங்க பொண்ணு மோகினி நிஜமாவே உயிரோட தான் இருக்காங்களா?” என்று கேட்க,  அவர் கதறி அழத் தொடங்கினார். அதே நேரம் வாசலில் ஏதோ அரவம் கேட்க திரும்பி பார்த்த இருவருமே அரண்டு போனார்கள்.

வாசலில் அவள் நின்றாள்…

மோகினி…

கண்ணாடியில் பார்த்த அதே உருவத்துக்கு சொந்தக்காரி. ஆனால் கண்கள் மட்டும் சிவந்த நிறத்தில் இல்லாமல் சாதாரணமாக இருந்தது. வீட்டின் உள்ளே அமைந்த அமர்ந்திருந்த இருவரையும் அவள் கேள்வியாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“அம்மா இவங்க யாரு?” என்று சந்திரன் கேட்க…

“என் பொண்ணு மோகினி” என்று அழுகையின் இடையே  பதிலளித்தார் சந்திரனின்  கண்கள் பதட்டத்துடன் அந்த பெண்ணை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது. அந்தப் பெண்ணின் கழுத்தில் அதே செயினையும், டாலரையும்  பார்த்த சந்திரனுக்கு அந்த நொடி ஏற்பட்டது கோபமா, ஆற்றாமையா, அளவுக்கு மீறி அதிர்ச்சியா… என்பதை பிரித்தறிய முடியவில்லை.

“இது மோகினி கிடையவே கிடையாது. அவ அங்கே வந்து என் பொண்டாட்டி கூட நான்  வாழ விடாமல் செஞ்சிட்டு இருக்கா… அப்படி இருக்கும்போது இந்த பொண்ணு எப்படி மோகினியா  இருக்க முடியும்? கிடையவே கிடையாது. நீங்க எங்களை ஏமாத்தப் பார்க்கறீங்க” என்று அடித்து பேசிவிட்டு ஆத்திரமாக எழுந்தவன் மோகினியின் தோள்களை  அழுத்தமாக பற்றி உலுக்கத் தொடங்கினான்.

“ஏன் இப்படி பண்ற? உனக்கு என்ன வேணும்?… உனக்கு என்னதான் பிரச்சனை? ஏன் இப்படி எங்களை வாழ விடாமல்  தொல்லை செய்ற…” என்று ஆத்திரமாக கேட்டான். அப்படி ஒரு சூழ்நிலையில் சந்திரனின் கோபத்தை எதிர்பார்க்காத ராஜா உள்ளிட்ட அனைவருமே திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்கள்.

ராஜா வேகமாக எழுந்து போய் சந்திரனை சமாதானம் செய்து அவன் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். ராஜா நடந்த அத்தனையும் தனக்கு தெரிந்த வரை விலாவாரியாக அவர்களிடம் தெரிவித்தான். முதன்முதலாக அந்த உருவம் சந்திரனை இரவில் வந்து மிரட்டியதில்  தொடங்கி இப்போது அனுவின் உடலில்  புகுந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்வது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவர்கள் இருவரின் முகத்தில் வந்து போன உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். மோகினியின் தாயாரிடம் எந்த அசைவும் இல்லை. ராஜா சொன்ன விஷயங்களில் இருந்த உண்மையின் கனம் தாங்க முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுதான் அவரது இந்த முக மாற்றம் என்பதை அங்கிருந்த அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரது கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிய தொடங்கியது.

மேல் மூச்சு கீழ், மூச்சு வாங்க “குட்டிமா” என்று கத்தியபடியே மயங்கி கீழே விழுந்தார் மோகினியின் தாயார். பதட்டத்துடன் அவரது மகளும், ராஜாவும் சேர்ந்து அவளை தூக்கி கொண்டு போய் அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார்கள். ராஜா மருத்துவருக்கு அழைக்க முற்பட அவரை தடுத்து நிறுத்தினாள் அந்தப் பெண்.

“அம்மாவுக்கு இப்ப கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதுவும் மோகினி பத்தின விஷயம்ங்கிறதால  கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க. கொஞ்ச நேரத்துல அவங்க சரியாகிடுவாங்க. இந்த இன்ஜெக்ஷன் போடணும்” என்று சொன்னவள் வீட்டில் தயாராக வைத்திருந்த ஒரு மருந்தை இன்ஜெக்ஷன் வழியாக எடுத்து அவரது கரங்களில் செலுத்தினாள்.

“அவங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும்… நீங்க வெளியே வாங்க என்ன பேசிறதா இருந்தாலும்  இனிமே என் கிட்ட பேசுங்க… அவங்களால  தாங்க முடியாது” என்று சொன்னவள் அறைக்கதவை மறக்காமல் சாத்திவிட்டு வெளியே வந்ததும் அவர்கள் பேசத் தயார் ஆனார்கள்.

“என்னங்க சொல்றது? நாங்க சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சாச்சு… வீட்டுக்கு வந்து பயமுறுத்துறது எல்லாமே மோகினினு இவன் சொல்றான். ஆனா மோகினி நீங்க இங்க இருக்கீங்க…அவன் சொன்னப்போ கூட நான் நம்பலை..இதோ இப்போ உங்க கழுத்தில் இருக்கிற அதே செயினும், டாலரும் அந்த ஆவி எங்க வீட்டில் கொண்டு வந்து வச்சுருக்கு. இது என்ன குழப்பம் எனக்கு புரியல…”

“இது குழப்பம் இல்ல சார்… ஒரு சின்ன மிஸ்டேக் அவ்ளோதான்” என்றாள் அந்தப் பெண் மிகவும் தெளிவாக…

“எங்களுக்கு புரியல.. கொஞ்சம் புரியும்படியா சொல்றீங்களா” என்று கேட்க அவள் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக பேசினாள்.

“எங்க அம்மாவுக்கு நாங்க இரண்டு பெண் குழந்தைகள்..ட்வின்ஸ்” என்ற பதில் சந்திரனின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதற்கு போதுமானதாக இருந்தது.

“நான் ஜீவமோகினி… எங்கக்கா ரூபமோகினி” என்று மிச்சம் மீதி இருந்த அவனது சந்தேகத்தையும் அவள் தீர்த்து வைத்தாள். ஆக இந்த பெண் அவ இல்லை… ராஜா ஏற்கனவே போனில் பேசியது இந்த பெண்ணிடம் தான். தன்னிடம் பேசியது ரூபமோகினியின் ஆவி என்பதை அவன் உணர்ந்து கொண்டான். சந்திரன் தன்ணுணர்வில்  மூழ்கியிருக்க ராஜா ஜீவமோகினியிடம் பேசத் தொடங்கினான்.

  “உங்க அக்காவுக்கு என்ன ஆச்சு? அவங்க சந்திரன் எதுவும் லவ் பண்ணாங்களா? என்ற கேள்விக்கு சந்திரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். திடீரென்று சந்திரனுக்கு அந்த சந்தேகம் வந்தது.

“நான் இதே ஏரியாவில தானே இருந்தேன். நீங்க எங்க ஏரியாவுக்கு வந்து ஒரு வருஷம் இருக்கும். இந்த ஒரு வருஷத்துல உங்க ரெண்டு பேரையும் சேர்ந்த மாதிரி நான் பாத்ததே இல்லையே. அதுவுமில்லாம இந்த வீட்டில்  ரெண்டு பொண்ணு அப்படிங்கறது விஷயத்தையும் யாருமே சொல்லலையே. இந்த வீட்டில்  ஒரே ஒரு பொண்ணு இருந்ததா தான்  நாங்க எல்லாரும் நினைச்சுட்டு இருக்கோம்” என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்க ஜீவ மோகினி வெள்ளையாக சிரித்தாள்.

 “யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை நான் என்னோட படிப்புக்காக பெங்களூரில் இருந்த படிப்பு முடிச்சதும் அங்கேயே வேலை கிடைச்சு அங்கே ஜாயின் பண்ணிட்டேன். இப்போ ஒரு ஆறு மாசம் ஆச்சு எனக்கு வேலை கிடைச்சு. அதுக்கு முன்னாடி நான்  இங்க வந்ததே இல்ல… லீவு நாட்களில் கூட பிராஜக்ட் ல பிஸியா இருந்தேன். அம்மா இந்த வீட்டுக்கு வந்த கடந்த  ஒரு வருஷத்துல நான் ஒரே ஒரு தடவை தான் வந்து இருக்கேன். எங்க ரெண்டு பேரையும் மத்தவங்களும் பார்த்துக்க மாட்டாங்க. அதனால எங்களை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது ஒன்றும் பெரிய ராணுவ ரகசியமும் இல்லையே. இதோ எங்க ரூம் குள்ள வந்தீங்கன்னா அங்க இருக்கற போட்டோஸ் எல்லாம் பார்த்தாலே தெரிஞ்சுடுமே” என்று சொன்னபடி அங்கிருந்த ஒரு அறையை நோக்கி கை காட்ட, திறந்திருந்த கதவின் வழியாக அம்மாவின் இரு புறமும் இரட்டைச் சகோதரிகள் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அந்த புகைப்படம் சந்திரனின் பார்வைக்கு கிடைத்தது.

“சரி எங்களுக்கு முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்க அக்காக்கு என்னாச்சு?” என்ற கேள்விக்கு கைகள் இரண்டையும் விரித்து உதட்டைப் பிதுக்கி தோளை குலுக்கினாள் ஜீவ மோகினி.

“தெரியல… எனக்கு மட்டுமில்லை இங்கே யாருக்குமே தெரியல… ஆனா ஒருநாள் கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மறுபடி வீட்டுக்கு வரவே இல்ல. இங்க பக்கத்து வீட்டுல கணேசன் ஒரு ஒரு அண்ணா இருந்தாங்க இல்லையா … அவர் தான் அக்கா  காதலிச்ச பையனோட ஊரை விட்டு போனதாகவும் அவர் எதேச்சையாக பஸ் ஸ்டாண்டில் அக்காவை பார்த்து பேசும்போது அக்கா இந்த விஷயத்தை அம்மா கிட்டே சொல்ல சொல்லி இருக்காங்க.

கணேசன் அண்ணா… அவகிட்டே கெஞ்சி  தயவு செஞ்சு வீட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்லி சொன்னாராம். ஆனால் அக்கா அவர் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் அந்த பையன் கூட ஓடிப் போயிட்டான்னு சொன்னாரு. நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தோம். ஆனால் கணேசன் சொன்ன ஸ்டேட்மெண்ட் வச்சுக்கிட்டு போலீஸ் அந்த பேச்சை அப்படியே விட்டுட்டாங்க.

அக்கா மேஜர் நாங்க எதுவும் அவளுடைய காதலை பிரிக்க முயற்சி பண்றதா நினைச்சு அந்த கேசை அப்படியே கிடப்பில் போட்டுட்டாங்க. ஆனா அம்மாவால அதை ஏத்துக்க முடியலை. அக்கா அப்படி ஊரை விட்டு ஓடிப் போற பொண்ணு கிடையாது. இந்த விஷயத்துல அம்மா ரொம்பவே தெளிவா இருக்காங்க. இன்னும் சொல்ல போனா அக்கா இப்படி ஒரு காதல் இருந்திருந்தா  அம்மாகிட்ட தைரியமாவே சொல்லி இருப்பாங்க. ஆனா அம்மா கிட்ட அவங்க சொல்லவே இல்லையே ….

ஒரு வேளை அம்மா கிட்ட சொல்லும் போது தடுத்து இருந்தா அப்போ வேணும்னா அக்கா ஓடிப்போறது அப்படிங்கிற முடிவுக்கு வந்து இருக்கலாம். எதுவுமே இல்லாம இப்படி நடக்க வாய்ப்பு இல்லைன்னு  அம்மா உறுதியா நம்புறாங்க. இப்ப வரைக்கும் அக்கா திரும்பி வந்துடுவா… இல்ல கணேசன் சொல்ற மாதிரி எங்கேயோ தனக்கு பிடிச்ச மனுஷனோட  சந்தோஷமாக இருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

ஆனா இப்ப நீங்க சொல்றத வச்சு பார்த்தா அக்கா உயிரோடு இல்லை போல இருக்கு என்றவள் அதே நேரம் வரை பிடித்து வைத்திருந்த கட்டுப்பாட்டை மீறி கதறி அழத்தொடங்கினாள். ராஜா அந்த பெண்ணை அவளது கைகளைப் பிடித்து சமாதானம் செய்தான்.

“ப்ளீஸ் வருத்தப்படாதீங்க” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல, அப்பொழுது  தான் அந்த விஷயம் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

மர்மமான முறையில் நிகழ்ந்த கணேசனின் மரணம் பரபரப்பாக சந்திரனைப் பார்த்து பேச தொடங்கினான்.

மோகினி வருவாள்…      

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

1 COMMENT

  1. கதை சுவாரஷ்யமா போகுது 👌👌👌அப்போ மோகினியை சந்திரன் பேரைச்சொல்லி ஏமாற்றி கனேஷன் ஏதோ பண்ணிருப்பானோ🤔🤔

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here