அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 14

0
606

ஆவிகளைப் பற்றி:

ஒளிரும் பல்புகள் எந்தவித மின்சார கோளாறுகளும் இன்றி உங்கள்  வீடுகளில் திடீரென விளக்குகள் அணைந்து மீண்டும் எரிவது இறந்தவர்களின் ஆவி உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதன் அடையாளமாகும். அந்த  நேரத்தில்  ” யார் அது? என்ன வேண்டும்? ” என்று கேளுங்கள்.  அவர்கள் வேறு வழிகளில் அவர்களின் செய்தியை உங்களிடம் கூற முயலுவார்கள்.

எதுவுமே புரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்த நிலை மாறி இருளில் மூழ்கி தவிப்பவர்களுக்கு கணேசனின் மர்மான  மரணம் ஏதோ ஒரு சிறிய ஒளியை அவர்களுக்கு காட்டியது போல இருந்தது. கணேசனின் மரணம் இயற்கையான மரணம் அல்ல என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கணேசனின் மரணம் நடந்ததற்கான பலமான காரணமாக எதுவுமே பதிவாகவில்லை.

அவனைக் கொல்ல துடிப்பது யாரென்று கேள்விக்கும் சரி , அவனை அத்தனை கொடூரமான முறையில் கொன்றது யார் என்ற கேள்விக்கும் சரி காவல்துறையால் இப்பொழுது வரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். கணேசனின் மரணத்தைப் பற்றி அறிந்த அந்த நாள் பத்திரிக்கை செய்தியில் அந்த கேஸை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கூறிய தகவலை சந்திரன் நினைவுபடுத்திப் பார்த்தான்.

“எவ்வளவு பெரிய கொலைகாரனா  இருந்தாலும் கண்டிப்பா ஒரு சின்ன தடயத்தையாவது விட்டுட்டு போவாங்க. ஆனா இந்த கணேசன் வழக்குல எல்லாமே ஒரே மர்மமா இருக்கு. அவன் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருக்கு. ஆனா அது எதுவுமே ஆயுதங்களால் உண்டானது அல்ல.

கத்தி, துப்பாக்கி, கட்டை இந்த மாதிரி எந்த ஆயுதங்களாலும் அவனை  தாக்கி கொலை பண்ணல. அதுக்கு பதிலா மரத்தோட வேர்களை பயன்படுத்தி  இருக்காங்க. அவன் உடம்பை சுற்றி இருந்த மர வேர்கள் எதுலயும் எந்த ஒரு கை ரேகையோ, முடியோ  கிடைக்கல.

இதுதான் எங்களை ரொம்பவே குழப்புது. இவ்வளவு துல்லியமா பக்காவா ப்ளான் போட்டு செஞ்ச கொலையை நான் பார்த்ததே இல்லை. இந்த கேசில் எங்களுக்கு எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை இந்த கொலையை செய்தது உண்மையிலே மனுஷன் தானான்னு நாங்க  சந்தேகப்படுற அளவுக்கு  இருக்கு” என்று இன்ஸ்பெக்டர் கூறியது இப்போது அவன் நினைவுக்கு வந்தது.

“ராஜா எனக்கென்னவோ அந்த கணேசன் கிட்ட தான் ஏதோ பிரச்சனை இருக்குன்னு தோணுது. மோகினி யாரோ ஒரு பையனோட ஊரை விட்டு ஓடுனதா சொல்றதுக்கு ஒரே சாட்சி அந்த கணேசன் தான். அவனைத்  தவிர மோகினிக்கு  ஒரு காதலன் இருக்கிற விஷயம் யாருக்குமே தெரியாது. அவங்க அம்மா உட்பட… ஆனா  இதுல நான் எங்கே சம்பந்தப்பட்டு இருக்கேன்  அப்படின்னு தான்  எனக்கு புரியல” என்று சந்திரன் குழம்ப , ராஜா நல்ல நண்பனாய் சந்திரனை ஏற்ற தொடங்கினான்.

“சந்திரா தேவையில்லாம யோசிச்சு அளவுக்கதிகமா மனசை போட்டு குழப்பிக்காதே… நம்ம வேணும்னா  அந்த கணேசன் கேசை விசாரிச்சாங்க இல்ல… அந்த இன்ஸ்பெக்டர் கிட்டே போய் பேசிப் பார்க்கலாமா? என் பிரண்டோட அண்ணன் போலீஸ்ல தான் வேலை பார்க்கிறார். அவர்கிட்ட கேட்டா கண்டிப்பா நமக்கு வேண்டிய உதவியை  செஞ்சு தருவாங்க. போய் விசாரிச்சு பார்க்கலாம்” என்று சொல்ல சந்திரன் அதை ஆமோதிக்க… ஜீவ மோகினி அதை தடுத்து நிறுத்தினாள்.

“எதுக்கு நீங்க தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கறீங்க? கணேசன் அண்ணா செத்தது ஒரு கொலை… அதுல யாரோ ஒரு  ரவுடி சம்பந்தப்பட்டு இருக்கலாம்ன்னு தான் இங்கே இருக்கிற எல்லாரும் பேசிக்கிறாங்க. தேவையில்லாம நீங்க அந்த கேசை விசாரிக்க போய் ஒண்ணு போலீஸ்காரங்க உங்க பக்கம் திரும்பலாம். இல்ல கொலை செஞ்ச ரவுடி உங்களை டார்கெட் பண்ணலாம். அதனால வேண்டாம் இதை  செய்யாதீங்க” என்று ஜீவ மோகினி அவர்களை தடுத்தாள்.

“இல்லைங்க… இதை  நாங்க செஞ்சுதான் ஆகணும். ஏன்னா அந்த கணேசன் தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அதாவது என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து உங்க அக்காவை நான் கல்யாணம் செய்துக்கணும் அப்படின்னு சொல்லி என்கிட்ட பேசினான். ஆனா அப்போ எனக்கு அதுல எந்த விதமான ஈடுபாடும் இல்ல… அதனால அதை மறுத்துட்டேன்.

என்கிட்ட பேசுன அந்த ஒரு ஆள் இப்போ உயிரோட இல்ல. இரண்டாவது உங்க அக்கா மோகினி.அவளும் இப்போ உயிரோட இல்லை. ஆனா   எங்க வீட்டுக்கு வந்து  என் ஒய்ஃப் அனு உடம்பில் புகுந்து இருக்கா… அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க மறுத்ததால மட்டும் உங்கக்கா என்னை வாழ விடாமல் தடுக்கிறாளான்னு எனக்குத் தோணலை .ஏன்னா அவ என்னை மட்டும் தொந்தரவு செய்யலை… என்னோட அப்பாவையும் தாக்கி இருக்கா.. அதனால கணேசனோட இறப்புக்கும், மோகினியோட மரணத்துக்கும், எனக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு. அது என்னன்னு தெரியாம என்னால என் பொண்டாட்டியை காப்பாத்த முடியாது” என்று சந்திரன் தெளிவாக பேச ஜீவமோகினி அமைதியானாள்.

“உங்க பயம் தப்பு இல்ல… ஆனா இந்த விஷயத்துல நாங்க அமைதியா இருந்தா அது நல்லதில்லை. அனு தங்கச்சியை  காப்பாத்த , நாங்க ஏதாவது செஞ்சுதான் ஆகணும். நீங்க பயப்படாதீங்க. வெளியே  யாருக்கும் தெரியாத மாதிரி அந்த போலீஸ்காரர் கிட்ட தனியா போய் கேஸ் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிறோம்” என்ற ராஜா ஜீவமோகினியை  சமாதானம் செய்தான். அப்பொழுதும் அவள் முகம் தெளிந்தபாடில்லை.

“சார் எனக்கு ஒரு சந்தேகம்? உண்மையிலேயே வந்தது எங்க அக்கான்னு எதை வச்சு  சொல்றீங்க? சம்பந்தமே இல்லாத உங்க வீட்டுக்கு வந்தவ ஏன் ஒரு தடவை கூட என்னையும், எங்க அம்மாவை பார்க்க முயற்சி செய்யலை? எதுக்காக மெனக்கட்டு உங்களை மட்டும் தேடி வரணும்?” என்று கேட்க ராஜா தெளிவாக பதில் சொன்னாள்.

“இது பாருங்க மேடம்… எப்போ ஒரு சந்திரன் வீட்டில் ரொம்ப அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்க ஆரம்பிச்சதோ  அப்பவே  நான் ஆவிகள் பத்தி ஆராய்ச்சி செய்ற  சில பேரை சந்தித்து சில தகவல்கள் விசாரிச்சேன். அதுபடி பார்த்தா ஆவிகள் இறந்ததுக்கு அப்புறம் சில பேரை இரண்டு விஷயத்துக்காக  தொடர்பு கொள்ளலாம். ஒண்ணு அவங்களை பழிவாங்குவதற்காக, இல்லனா அவங்க மூலமாக ஏதாவது ஒரு தகவல் தெரிவிப்பதற்காக இருக்கலாம்.

இதில் என்ன காரணமா வேணும்னாலும்  இருக்கலாம். ஆனா சம்பந்தமே இல்லாத இவங்கள அந்த ஆவி  இந்த அளவுக்கு தொந்தரவு பண்ணுதுன்னா அவங்க மூலமா ஏதாவது காரியம் ஆகணும்னு கூட அந்த ஆவி தொந்தரவு பண்ணலாம். அதேசமயம் சந்திரன் வீட்டுக்கு வந்து இத்தனை தடவை அவனை மிரட்டின அந்த ஆவி  ஒரு முறை கூட அவனை காயப்படுத்தியது இல்லை. அவனை மிரட்டி இருக்கு…பயமுறுத்தி இருக்கு. ஆனா அவளால தான்  இப்ப சந்திரனோட அப்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கார்.

அவன் பொண்டாட்டி உடம்புலயும் மோகினி புகுந்து தொல்லை கொடுக்கிறா. எங்களுக்கு என்னமோ இதில் ஏதோ மர்மம் இருக்கும்னு தோணுது. அதாவது சந்திரன் தெரிஞ்சுக்க வேண்டிய மர்மம்… இல்ல சந்திரனே கூட சம்பந்தப்பட்டிருக்கலாம். முழு விவரமும் தெரியணும்னா அதுக்கு முதல்ல கணேசனுடைய மரணத்தை பற்றி எங்களுக்கு தெரிஞ்சாகணும். ஏதாவது ஒரு சின்ன புள்ளி கிடைச்சா தான், அதுக்கப்புறமா தான் இதை பத்தி யோசிக்க முடியும்” என்று தன்னுடைய கருத்தை தெளிவாக முன் வைத்தான் ராஜா..

“எனக்கு இப்போ ஒரு கேள்வி கேட்கணும்… மோகினி அதாவது உங்க அக்கா இறந்த பிறகு இந்த வீட்டுக்கு வரவே இல்லன்னு நீங்க முடிவு பண்ணி இருக்கீங்க… எங்களை அவ தொல்லை பண்ணுனும்னு நினைச்சு, அடுக்கடுக்கா நிறைய தொல்லை கொடுத்தா. எங்களை பயமுறுத்தினா… அதனால் எங்களுக்கு தெரிந்தது. ஆனால் இந்த வீட்டை சேர்ந்த யாரையும் அவ அப்படி காயப்படுத்தி பார்க்க விரும்பி இருக்க  மாட்டா…

அவ  கண்டிப்பா இங்கே  வந்து இருப்பா… நீங்க எப்பயாவது உணர்ந்து  கூட இருக்கலாம். ஆனா நீங்க தான் இந்த வீட்லயே இல்லயே. அதனால உங்க அம்மா நினைவு தெளிஞ்சதுக்கு  அப்புறம் அவங்க கிட்ட கேட்டு பாருங்க. அவங்களுக்கு தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யம் இருந்த மாதிரி எப்பவாவது உணர்ந்தாங்களானு கேட்டுப்பாருங்க… ஒருவேளை உங்கள் கேள்விக்கான பதில் அவங்ககிட்ட கிடைக்கலாம்” என்று சொல்ல ஜீவமோகினி சிந்தனை வசப்பட்டாள்.

அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் சந்திரனும் ராஜாவும் மீண்டும் வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு அவரது தாயாரை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு மறக்காமல் அறிவுறுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். ராஜாவிற்கு தெரிந்த அந்த போலீஸ் துறை நண்பரை தேடி இருவரும் பயணித்தார்கள். ஏற்கனவே போனில் இருவரும் வருவது குறித்த தகவல்களை சொல்லி இருந்ததால்  அவர்கள் போன நேரத்தில் அவரும் அவர்களுக்காகவே காத்திருந்தார்.

ஆரம்பத்தில் வேறு ஏதோ விஷயம் என்று எண்ணியிருந்த அவர் கணேசன் மரணம் குறித்து கேள்வி கேட்டதும் அவரது முகமே மாறிப்போனது.

“ அந்த கேசை எனக்குத் தெரிஞ்ச  ஒரு இன்ஸ்பெக்டர் தான் பார்த்தார். ஆனா இப்போ அவர் வேலையில் இல்லை. அந்த கேசினாலேயே அவருக்கு  வேலை போயிடுச்சு. அந்த கேசால ரொம்ப மன அழுத்தம் அவருக்கு. தாங்க முடியாமல் சூசைடு டிரை பண்ணும் அளவுக்கு இருந்தார்.

நாங்களே கட்டாயமாக ஓய்வு கொடுத்து லீவில் அனுப்பி இருக்கோம். இப்ப அவர் ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கார். அந்த கேஸ் பத்தி அவர் சொன்ன தகவல்கள் என்னாலேயே நம்ப முடியல. எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு.

இதுக்கு முன்னாடி  நான் எத்தனையோ கேஸ் பார்த்து இருக்கேன். ஆனால் அந்த கணேசனோட கேஸ் மாதிரி எந்த ஒரு குழப்பமான கேசையும்  நான் பார்த்ததில்லை. அந்த கேஸ் இப்ப வரைக்கும் எங்க டிபார்ட்மெண்ட்க்கு ஒரு சவாலாக தான் இருக்கு” என்று பெரும் பீதியை கிளப்பி அவர் கேஸ் குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை சந்திரன், ராஜா இருவரிடமும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

இறந்துபோன அந்த கணேசனோட போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் எங்க எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைக்கும்னு ஆரம்பத்தில்  நினைச்சோம். ஆனா அந்த ரிப்போர்ட் படிச்சதுக்கு அப்புறமா எங்களோட  மூளை குழம்பிப் போயிடுச்சு”

 “ஏன் சார்? என்ன காரணம்?” என்றான் சந்திரன்.

“அவர் சாகறதுக்கு காரணம் யாரோ  பலமா அவரோட கழுத்தை நெறிச்சு கொன்னு இருக்காங்க. ஆனால் அவரோட கை கால்கள் எல்லாத்தையுமே ஏதோ மரத்தோட வேரை வச்சு கட்டின மாதிரி எங்களுக்கு அவர் காலிலிருந்து, கைகளிலிருந்து மரத்தோட வேர் பகுதி கிடைச்சது. அதுமட்டுமில்ல அவரோட உடம்பின்   உள்பகுதியிலும் மர வேர்கள்  நிறைய இருந்து இருக்கு.

கண்ணுக்கு தெரியாத மாதிரி மெல்லிய வேர்களின் பகுதிகளும் கிடைச்சு இருக்கு. நல்ல பெரிய பெரிய வேர்கள் அவரோட தொண்டைக்குள் போயிருக்கு. இது யாரும் வந்து கோவமா குத்தியோ, தரையில் இருக்க செடியோட வேர் கழுத்துக்குள்ளே போன மாதிரியோ இல்லை. மரத்தோட வேர்  எப்படி தண்ணீரை தேடி வளருமோ, அதே மாதிரி அந்த வேர் அவர் கழுத்து முழுக்க அவரோட நிரம்பி இருந்தது. எதோ ரத்தத்தை தேடி ஓடின மாதிரி…” என்றவர் சில நொடிகள் கண்களை மூடி அந்த நினைவுகளை கடக்க முயன்றார்.

“சாதாரண மனுஷன் கோவத்துல வேரை எடுத்து அவரை கொன்னு  இருந்தாக்கூட வேர்கள் இந்தளவுக்கு உள்ளே போயிருக்க வாய்ப்பு கிடையாது. ஆனா அவரோட கழுத்துப் பகுதியிலிருந்து எங்களுக்கு அவ்வளவு வேர் கிடைச்சது. அதை விட முக்கியமான விஷயம்  அவரோட கழுத்துல எந்தவிதமான ஓட்டையும் கிடையாது.

துளியளவு கூட ரத்தம் கசியல.. இது எல்லாத்தையும் விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா … ஒருவேளை வாய்வழியாக அந்த வேர் உள்ளே போயிருந்தாலும்  அவருடைய வாயில் வேரோடு சின்னச்சின்ன பகுதிகள் கிடைச்சிருக்கும். ஆனா அவரோட வாயில் இருந்து எங்களுக்கு அப்படி எதுவும்  கிடைக்கல.

அது தான் எங்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. அந்த நேரத்துல அவர் எப்படி அங்கே போனார்னு யாருக்கும் தெரியல. அவர் வீட்ல விசாரிச்சா நைட் ஷோ  படம் பார்த்துட்டு வரேன்னு சொல்லி போயிருக்காரு. அது மட்டும் தான் சொல்றாங்க. மத்தபடி அவங்க யாருக்கும் வேற  எந்த தகவலும் தெரியல.” என்று சொல்ல அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போய் நின்றார்கள் சந்திரனும் ராஜாவும்.

அதேநேரம் அனுவின் உடம்பில் இருந்த மோகினி அவளின் காவலுக்காக அங்கே இருந்த முனியன்  அசரும் நேரத்திற்காக காத்திருந்தாள். அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் அல்லவா…

மோகினி வருவாள்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here