அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 16

1
572

ஆவிகளைப் பற்றி:

உத்தரபிரதேசத்தில் மீரட்டின் ஜி.பி. பிளாக் ஒரு அமானுஷ்ய இடமாகும். இங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது. நள்ளிரவில் மெழுகுவர்த்தியின் ஒளியில் நான்கு ஆண்கள் அமர்ந்து மது அருந்துவதை பார்த்தாக சிலர் கூறுகின்றனர். இதனாலேயே இந்த பகுதிக்கு மக்கள் செல்ல அஞ்சுகின்றனர்.

“அந்த முனியன்  தான் ஏதோ மந்திரம் எல்லாம் போட்டு அவளை கட்டி வச்சிருக்கேன். இப்போதைக்கு அவளால அசையக்  கூட முடியாது. மோகினியும்  தப்பிக்க முடியாதுன்னு சொன்னாரே சந்திரா”

“எனக்கும் அதான் புரியல… ஆனா இப்ப வீட்டுல அனுவை பாதுகாக்கிறதுக்காக கட்டியிருந்த கயிறு அறுந்து போய் இருக்குன்னு சொல்றாரு. அனு எங்கே போறான்னு தெரிஞ்சுக்க அவ  பின்னாடியே அவரும், அவரோட ஆட்களும் ஓடிகிட்டு இருக்காங்க. சீக்கிரம் வா அங்கே  போகலாம். மோகனியால அனுவோட  உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு” என்றதும்  ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கே சென்றார்கள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அனுவின் பெற்றோர்கள் பதட்டத்திற்கு உள்ளானார்கள்.

“என் பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று தெரியலையே” என்று அனுவின் தாயார் பதட்டமடைந்தவர்… “நாங்களும் உங்க கூட வர்றோம்  மாப்பிள்ளை எங்களையும் கூட்டிட்டு போங்க” என்று சொல்ல வேறு வழியின்றி மருத்துவமனையில் சொல்லிவிட்டு அனுவின் பெற்றவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு அவர்களின் கார் பறந்தது.

முனியனிடம் போனில் பேசி வழி கேட்டுக்கொண்டே அவர்கள் சென்ற இடம்…

அதே இடம் தான்…

மோகினியின் வீட்டிற்கு பின்புறம் உள்ள அதே மாந்தோப்பு…

“இந்த இடம் வரைக்கும் தான் தம்பி உங்க பொண்டாட்டி ஓடி வர்றதைப்  பாத்தோம். ஆனா அதுக்கப்புறம் எங்கே போனாங்கன்னு எங்களுக்கு  தெரியலை.” என்று முனியன்  உட்பட எல்லோரும் கையை பிசைந்துகொண்டு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்க, சந்திரன் மட்டும் அந்த மாந்தோப்புக்குள் நுழைய முடிவெடுத்தான்.

ராஜாவிடம் இருந்த பதட்டத்தில் பாதி அளவு கூட சந்திரனிடம் இல்லை. அவன் இதை எதிர்பார்த்தே வந்தவன் போல செயல்பட்டான். ராஜா தான் முனியனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“எப்படி இந்த அளவுக்கு அஜாக்கிரதையா இருந்தீங்க? நீங்க ரொம்ப கவனமா இருப்பீங்கனு நம்பித்தானே உங்ககிட்ட அனுவை விட்டுட்டு  நாங்க வந்தோம். நீங்க எப்படி இந்த அளவுக்கு  அசால்ட்டா இருக்கலாம்?” என்று ராஜா சண்டை போட, முனியனின் பதில் தயாராக இருந்தது.

“தம்பி நான் ஒண்ணும் அஜாக்கிரதையாக எல்லாம் இல்ல.. அனுவை என்னோட  மந்திரக்கட்டுல  தான் வச்சு இருந்தேன். இந்த மோகினி எப்போ வெளியே வந்தாளோ  எனக்குத் தெரியல. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அனு கட்டில்ல  தூங்கிட்டு தான் இருந்தா… நான் இப்படி ஆகும்னு  நினைக்கவே இல்லை. எனக்கு பாத்ரூம் வந்துச்சு. அதனால நான் பாத்ரூம் போயிட்டு வந்தேன்.

அப்ப கூட அனுவை தனியா விட்டுட்டு போகலை. என்னோட ஆட்கள் ரெண்டு பேரையும் அனுவுக்கு காவலா வச்சுட்டுத்  தான் போனேன். ஆனால் நான் வந்து பார்க்கும்போது அனு அங்கே  இல்ல. என்னோட ஆட்களும் ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்து கிடந்தாங்க. நான் அவங்களைப் பத்தி கூட கவலைப்படாமல் அவரோட  பொண்டாட்டி பின்னாலே ஓடி வந்திருக்கேன்.” என்று கோபமாக விளக்கம் கொடுக்க ராஜா என்ன பேசுவது என்று புரியாமல்  அமைதியானான்.

“இன்னொரு  விஷயம் தம்பி… மோகினி என்னை இந்த இடத்துக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக வச்சிருக்குன்னு தோணுது. அது  நினைச்சிருந்தா என் கண்ணுல படாம எங்கேயோ மறைஞ்சு போயிருக்கலாம். ஆனால் நான் பின்னாடி வர்றதை உறுதி செஞ்சுட்டு தான் அது அடுத்த அடியை எடுத்து வச்சது. இதோ இந்த தோப்புக்குள்ள நுழையும்போது  கூட என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரிச்சது… அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னு எனக்கு தெரியல. ஒருவேளை உங்களுக்கு அவ போன இடம் எதுன்னு தெரியணும்னு நினைச்சு தான் என்னை பின்தொடர்ந்து வர அவ அனுமதிச்சு இருக்கானு நினைக்கிறேன்”

“என்ன ராஜா இப்ப கூட இது எதேச்சையா  நடந்த சம்பவம்ன்னு சொல்ல போறியா?” என்று சந்திரன் ராஜாவை பார்த்து கேட்க அவனது தலை இல்லை என்று மறுப்பாக அசைந்தது.

சந்திரன் தன்னுடைய தந்தை அனுமதித்திருக்கும் மருத்துவமனையில் தகவல் சொல்லி முனியனின் உதவி ஆட்களையும் அதே  மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டான்.

அனுவின் பெற்றோரின் கைகளில் மந்திரித்த கயிறு இல்லாததால்  உள்ளே வர வேண்டாம் என்று முனியன் தடுத்து விட தோப்பின் வாசலிலேயே அவர்கள் பதட்டத்துடன் காத்திருக்கத் தொடங்கினார்கள்.

அதேநேரம் மற்ற மூவரும் உள்ளே பிரவேசித்தார்கள். வெளியில் பார்ப்பதற்கு சாதாரண மாந்தோப்பு போலத்தான் அந்த இடமும் இருந்தது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் அது ஏதோ ஒரு மாய உலகத்தை போல மாறிவிட்டது. மாந்தோப்பாக இருந்த அந்த இடம் ஒரு அடர் கானகமாக மாறியது.

மதிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது… அந்த தோப்பு மட்டும்  உள்ளே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே காலடி எடுத்து வைத்ததுமே அவர்களது உடலை குளிர் ஊடுருவியது. அந்த இடத்தைச் சுற்றிலும் பனி படர்ந்திருக்க, அருகில் நிற்பவர் உருவம் கூட தெரியாத அளவிற்கு ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

அந்த இடத்தின் உள்ளே செல்வதற்கு சந்திரனுக்கும் ராஜாவுக்கும் பயம் இருந்தாலும் அனுவை காப்பாற்ற வேண்டிய காரணத்தால் தொண்டையில் எச்சிலை விழுங்கி கொண்டு ஒவ்வொரு அடியாக முன் வைத்தார்கள். முனியன் கட்டிய கயிறு அவர்கள் இருவரின் கைகளில் இருந்தது ஒரு வித பாதுகாப்பு அளித்தாலும் அன்று நடந்ததைப் போலவே மோகினி காற்றாக மாறி அந்த கயிறை பிடித்து இழுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை அறிந்திருந்ததால் திகிலுடன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடி நடந்தார்கள்.

பக்கத்தில் இருப்பவரின் உருவம் கூட கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பகல் நேரத்திலேயே அந்தகாரம் சூழ்ந்து இருந்த அந்த இடத்தில் நாயின் ஊளையும், ஆந்தையின் அலறலும் மட்டுமில்லாமல் வேறு சில வினோத ஒலிகளும் எழுந்தது. அதனோடு சேர்ந்து இரண்டு ஆண்களின் ஓலங்களும் ஒலிக்க, ஒரே ஒரு பெண் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலித்தது.

அந்த பெண்ணின் குரல் மோகினியின் குரல் என்பது சந்திரனுக்கும், ராஜாவுக்கும் புரிந்தது. மற்ற இரு ஆண்களின் குரல் யாருடையது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. முனியன்  ஏற்கனவே பலமுறை இது போன்ற சூழலை எதிர் கொண்டதாலோ என்னவோ சாதாரணமாக இருந்தார். ஆனால்  இந்தச் சூழலுக்கு முற்றிலும் புதிதான மற்ற இருவருக்கும் பயத்தில் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.

ஆங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்த மோகினியின் குரல் இடையிலேயே தீனமாக  ஒலிக்கத் தொடங்கிய அந்த இரு ஆண் குரல்கள் வந்த  திசையை நோக்கி மூவரும் சென்றார்கள். சந்திரனும் ராஜாவும் ஒருவர் கையை மற்றவர் பிடித்து வண்ணம் ஒவ்வொரு அடியாக முன்னேற முனியன் பார்வையை நாலாபுறமும் சூழல விட்டபடி சற்று ஜாக்கிரதையுடன் நடந்து கொண்டிருந்தார்.

சந்திரனுக்கும், ராஜாவுக்கும் முன்னும் பின்னும் ஏதேதோ கோரமான  உருவங்கள் தோன்றி அவர்களை மிரட்டியது. அவர்களுக்கு  பின்னாலேயே  ஏதோ ஒரு உருவம் நிற்பது போன்ற ஒரு தோற்றம். பயத்தில் மூச்சுவிட மறந்து போய் அவர்கள் திரும்பிப் பார்க்கும்போது அங்கே யாருமே இல்லாமல் இருப்பார்கள்.துடிக்கும் இதயம் பயத்தில் வெளியே வந்துவிடும் போல இருந்தது.

இப்படியே சில கணங்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம் வரையிலும் சரி அந்த ஆண்களின் அழுகைச் சத்தம் ஓயவே இல்லை அவர்கள் அழுகைச் சத்தம் ஒரு கட்டத்தில் கதறலாக  மாறியது. உயிர் போகும் போது ஒரு மனிதனின் கதறல் எந்த அளவிற்கு கொடூரமானதாக இருக்குமோ அந்த அளவிற்கு கொடூரமாக இருந்தது அவர்களின் கதறல்.

அவர்களின் கதறலை ஆனந்தத்துடன் ரசித்த  ஒரு பெண் குரல் வெற்றிச் சிரிப்பு சிரித்து கும்மாளமிட்டது. சந்திரன் ஏற்கனவே பல முறை அனுபவித்த அதே சிரிப்பை அங்கே உணர்ந்தான். சந்திரனின் உடல் குளிர்ந்து போனது. ராஜாவுக்கும்  பதட்டம் அதிகமடைந்தாலும்,  நண்பனுக்காக தான் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டான்.

முற்றிலும் மாயங்களால் நிறைந்திருந்த அந்த இடம் ஒரு இடத்தில் அதீத அமைதியுடன் இருந்தது. ஏதோவொரு சக்தி அந்த இடத்தை நோக்கி தன்னை இழுப்பதைப் போல உணர்ந்தான் சந்திரன்.

அந்த இடத்திற்குள் அவன் முன்னேறி செல்வதைப் பார்த்த முனியனும், ராஜாவும் அவனை பின்தொடர முனைய… அவர்கள் இருவராலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. விபரீதத்தை உணர்ந்த ராஜா சட்டென பாய்ந்து சந்திரனின் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினான்.

“சந்திரா உள்ளே போகாதே” என்று தடுக்க முனியனும் அதையே பார்வையால் தெரிவித்தார்.

“ஆமா தம்பி… எங்க இரண்டு பேரையும் உள்ளே வர விடாமல் உன்னை மட்டும் தனியே வரவழைக்க அந்த ஆவி ஏதோ சதி செய்ற மாதிரி இருக்கு.”என்று முனியனும் எச்சரிக்க சந்திரன் சிந்தனையானான்.

“இதோ பாருங்க சாமி … உங்களால முடிஞ்சா நீங்களும் வாங்க… என்னை மட்டும் அவ உள்ளே கூப்பிடறான்னா… நான் மட்டுமே தெரிஞ்சுக்க ஏதாவது விஷயம் இருக்கும்னு தானே அர்த்தம்… நான் உள்ளே போறேன்.. நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருந்து என்ன நடக்குதுன்னு பாருங்க…”என்று சொல்ல ராஜா ஆத்திரப்பட்டான்.

“முட்டாள் மாதிரி பேசாதே சந்திரா… இந்த இடமே ரொம்ப வித்தியாசமா இருக்கு… எதுவுமே நம்ம கட்டுப்பாட்டில் இல்லை. ஏதேதோ மாயமெல்லாம் நடக்குது. இதுல எங்களை விட்டு நீ பிரிஞ்சு தனியாப் போறது எனக்கு சரியாப் படலை.”

“ஆமா தம்பி… என்னோட கண் பார்வையில் நீங்க இருந்தா தான் உங்களுக்கு எதுவும் ஆபத்து வந்தா என்னால காப்பாத்த முடியும்… சொன்னா கேளுங்க” என்று சந்திரனிடம் எடுத்து சொல்ல… சந்திரன் குழம்பிப் போனான்.

‘உள்ளே போவதா … வேண்டாமா?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவனை சுற்றிலும் இருந்த பனி விலகி… காட்சிகள் அவனுக்கு மட்டும்  தெளிவாக காணும்படி இருந்தது. அங்கே சற்று தூரத்தில்…. பார்க்கவே கொடூரமாக இருந்த ஒரு மரத்தில் அனு தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தாள்.

அனுவின் கதறலும், மோகினியின் வெறி கொண்ட சிரிப்பும் ஒருங்கே அவனது செவிகளைத் தீண்ட, ராஜாவின் பிடியை உதறிவிட்டு வேகமாக மனைவியை நோக்கி ஓடினான்.

“அனுனுனு”

மோகினி வருவாள்…  

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

1 COMMENT

  1. அனு என்ன செய்தாள் ஏன் இப்படி செய்யுது இந்த மோகினி பேய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here