அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 9

1
426

ஆவிகளைப் பற்றி:

எக்டோ-மிஸ்ட்

இந்த பேய்கள் தரையில் இருந்து பல அடி உயரத்தில் தோன்றும். அவை வெள்ளை, சாம்பல் அல்லது கறுப்பு நிறங்களில் மூடுபனி போல புகையின் வடிவத்தை எடுத்துக்கொள்கின்றன. இந்த வகை ஆவிகளால்  விரைவாக நகர முடியும். அவை பொதுவாக கல்லறைகளில் அதிகம் காணப்படுகிறது.

இத்தனை நேரம் தெளிவாகத் தானே இருந்தாள்!. இந்த சில நிமிடங்களுக்கு முன் அவளுக்கு என்ன ஆனது? எதனால் அவள் இப்படி மாறினாள்? என்பது புரியாத புதிராக இருந்தது ராஜாவிற்கு .ஏற்கனவே சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான். இப்போது இவள் வேறு வினோதமாக நடந்து கொள்கிறாள். இது அந்த அமானுஷ்ய சக்தியின் வேலையாகத்தான் இருக்க கூடும் என்று ராஜா நம்பினான்.

மெல்ல மெல்ல அந்த அமானுஷ்ய சக்தியின் மாய சுழலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ தானும் வந்து சிக்கி விட்டதை அவன் உணர்ந்தான். தான் தப்பிக்க வேண்டும் என்றால் சந்திரனையும், அனுவையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டது அவன் மனம்.

ஒருவழியாக நிலைமையை சமாளித்து கொண்டு அனுவிற்கு காரில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த மருந்துகளின் மூலம் சிகிச்சை செய்தான். நெற்றியில் பிளாஸ்திரி போட்டு விட்டு அனுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

அவள்  இயல்பானதும் நடந்தவற்றை முழுதாக விவரிக்காமல் மேலோட்டமாக சொல்லியபடி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அனுவிற்கு ராஜா சொன்னவற்றை நம்பவே முடியவில்லை. காரில் அமர்ந்து ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தது வரை மட்டுமே அவளின் நினைவில் இருந்தது. அதன் பிறகு நடந்த எதுவும் அவளின் நினைவில் இல்லை. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது  அங்கே அவர்களுக்கு அடுத்ததாக இன்னொரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

10 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார்கள். அந்த நேரம் வீடே ஒரே அமைதியாக இருந்தது.

சந்திரனும் வீட்டில் இல்லை..

‘என்னவாயிற்று?’ என்ற அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல அந்த வீட்டில் ஒருவருமே இல்லை. அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது எல்லோரும் அவசரமாக உள்ளூரில் இருந்த மருத்துவமனைக்கு சென்றதாக கூறிய போது யாருக்கு என்ன ஆனதோ என்று பயத்துடனும், பதட்டத்துடனும் ராஜாவும், அனுவும் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர்.

‘இம்முறை யாருக்கு என்ன ?’ என்று பதட்டத்துடன் இருவரும் செல்ல இந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது சந்திரனின் தந்தை ராமன். என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்ற கேள்விகளுக்கு அங்கே இருந்த யாருக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் சந்திரனின் தந்தையின் தலையில் வலுவான காயம் ஏற்பட்டிருந்தது.

தலை எதிலேயோ பலமாக மோதி இருக்க வேண்டும் மற்றவர்கள் வந்து பார்க்கும்போது சுயநினைவு இல்லாத நிலையில் அவர் கீழே விழுந்து இருந்ததையும் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது மட்டுமே மற்றவர்கள்  பார்த்து இருக்கிறார்கள். உடனே அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பதட்டத்தில் ராஜாவுக்கோ, அனுவுக்கோ போன் செய்து கூட யாருமே தகவல் தெரிவிக்கவில்லை.

தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி மருத்துவமனையில் சேர்ந்து கொண்டே இருப்பது நல்ல விஷயமாக யாருக்கும் படவில்லை. ஆனால் சந்திரன், ராஜா,அனு மூவருக்குமே இந்த விபத்துக்களின் காரணம் யாராக இருக்கக்கூடும் என்று தெரிந்தாலும் அதைப்பற்றி அங்கேயே கவலையுடன் இருந்த மற்றவர்களிடம் சொல்வதற்கு வாய் வரவில்லை.

சொன்னால் அவர்களின் கவலை இன்னும் அதிகம் ஆகிவிடக்கூடும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் , அதை விடவும் இப்போது அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருந்தது வேறு ஒரு விஷயம். இத்தனை நாள் சந்திரனை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த அமானுஷ்யம்… இப்பொழுது சந்திரனின் தந்தை ராமனை தாக்கியது ஏன்? மோகினியின் குறி  சந்திரனாக மட்டுமே இருந்திருந்தால் அவள் சந்திரனை மட்டும்தானே பின் தொடர்ந்து பழிவாங்க முயன்றிருக்க வேண்டும்.

இப்போது அவனின் தந்தையும் காயப்படுத்தினால் என்றால் அதன் பொருள் என்ன? அப்படி என்றால் அவளின் பழிவாங்கும் படலத்தில் சந்திரனின் தந்தையும் அடக்கமா? என்ற கேள்வி சந்திரனின் மனதையும் ராஜாவின் மனதையும் வெகுவாக குழப்பியது. ஏற்கனவே காரின் உள்ளே தனக்கு ஏற்பட்டிருந்த மனமாற்றத்தை எண்ணி குழம்பிக் கொண்டிருந்தால் இந்த விஷயத்தை கவனிக்கத் தவறினாள் அனு.

அது மட்டும் இல்லாமல் சற்று நேரத்திற்கு முன் ராஜா  கொஞ்சம் சுதாரித்து இருக்காவிட்டாலும் கூட அனுவோடு சேர்ந்து அவனும் பரலோகம் போய் சேர்ந்து இருப்பான். கண்டிப்பாக அது சாதாரணமான நிகழ்வு இல்லை. அப்படியெனில் மோகினி அடுத்து பறிக்கக் காத்திருப்பது என்னுடைய உயிரையா இல்லை அனுவின் உயிரையா?

சந்திரனின் தந்தைக்கு தலையில் காயம்பட்டு அதிகமான அளவில் ரத்தம் போயிருந்ததால் சுயநினைவின்றி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலுக்கு தேவையான ரத்தம் கிடைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் மருத்துவமனை சேர்ந்தவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். சந்திரனின் ரத்த வகையும் அவரது ரத்த வகையும் வேறு வேறாக இருந்ததால் , சந்திரனால்  அவருக்கு உதவ முடியவில்லை. எல்லோரும் கையை பிசைந்து கொண்டிருந்த நேரம் ஒரே ஒரு பாட்டில் ரத்தம் மட்டும் கிடைத்தது.

சந்திரனின் தந்தையுடைய உடல்நலத்தைப் பற்றி அறிய வேண்டி அவருடைய பழைய மருத்துவ குறிப்புகளையும் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனையில் கேட்க, சந்திரனும் ராஜாவும் மட்டும் ராமன்  தங்கி இருந்த அவரது அறைக்கு செல்ல முடிவு செய்தார்கள்.

அங்கே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனின் தந்தையின் ரத்தம் வீட்டில் ஆங்காங்கே தெளித்து கிடந்தது. கண்களில் வலியோடு அதை கடந்து சென்ற சந்திரன் , அவரது அறைக்குச் சென்று பீரோவிலிருந்து அவரது மருத்துவ குறிப்புகள் அடங்கிய பைலை தேடி எடுத்தார்கள்.

மீண்டும் வாசலுக்கு வரும் பொழுது ரத்தக் கறை படிந்திருந்த அந்த இடத்தை கடக்க முடியாமல் கால்கள் மடங்கி அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழத் தொடங்கினான் சந்திரன்.

“என்ன வேணும் உனக்கு? ஏன் இப்படி எங்களை இம்சை செய்ற? நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்? உன்னை கல்யாணம் செய்ய மறுத்து பேசினதுக்கா இப்படி என்னை பழி வாங்குற? இதோ இந்த ராஜா சொல்றான்… நீ உயிரோட இருக்கனு… ஆனா எனக்கு நல்லாத் தெரியுது… நீ இந்த நிமிஷம் உயிர் இல்லாம அலைஞ்சுட்டு இருக்கிற ஆத்மானு… உனக்கு என்ன தான் வேணும்?” என்று காலியாக இருந்த அந்த வீட்டைப் பார்த்து சத்தம் போட, ராஜா தான் அவனை சமாதானம் செய்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தான்.

இருவரும் வீட்டை பூட்ட முற்படும் போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு வினோதமான சத்தம் கேட்டது.

சந்திரனும் ராஜாவும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர்.

‘இது என்ன புதிதாக ஏதோ சத்தம்!’ பார்வையாலேயே இருவரும் பேசிக்கொண்டார்கள். பூட்டை நீக்கிவிட்டு கதவைத் திறந்து கொண்டு மீண்டும் ஒருமுறை வீட்டினுள்ளே பிரவேசித்தார்கள். இரவு மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊர் முழுக்க அமைதி. வீடும் கூட அமைதியாகத்தான் இருந்தது. ஆனால் நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது.

சத்தம் என்றால் பெரும் சத்தம் இல்லை. இது ஒரு லேசான சப்தம். ஏதோ ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து உரசி உரசி செல்வதைப்போல ஒரு சத்தம். என்னவாக இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இருவரின் பார்வையும் வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் அலசி ஆராய்ந்தது. அந்த நேரத்தில் சந்திரன் பார்வை அவனது தந்தையின் அறைப்பக்கம் பாய, அறைக்கதவு தானாகவே திறந்தது.

அதைப் பார்த்து அதிர்ந்தாலும் உள்ளே செல்ல சந்திரன் முடிவெடுத்து முன்னேற, ராஜா அவன் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“என்னை தடுக்காதே ராஜா…”என்று சொல்லி நண்பனின் கைகளை விலக்கி விட்டு அறைக்குள் நுழைய… ராஜாவும் திகிலுடன் அவனை பின் தொடர்ந்தான்.

பயத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மீண்டும் அந்த அறைக்குள் பிரவேசித்தனர் இருவரும். அவனது அப்பாவின் பைலை எடுத்து விட்டு அவன் பூட்டி விட்டு வந்திருந்த பீரோவின் கதவுகள் இப்பொழுது  முழுவதுமாக திறந்து, காற்றில் லேசாக இப்படியும், அப்படியுமாக அசைந்து கொண்டிருந்தது. நன்றாக உற்று கவனிக்கும் போது, அதன் உள்ளே இருந்து தான் அந்த சத்தம் வந்து கொண்டிருப்பதை நண்பர்கள் இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.

சந்திரனின் தந்தையுடைய பீரோவில் அவரது துணிக்கு அடியில் சிறிதாக ஒரு மரத்தாலான ஒரு பெட்டி இருந்தது. சந்திரன் வீட்டில் ஒரே பிள்ளை என்பது ஒரு காரணம் என்றாலும்… சந்திரனின் படிப்பிற்காக அவனது அம்மாவின் நகைகள் அனைத்தையுமே விற்றுத்தான் அவனை படிக்க வைத்தார் ராமன். அவர்கள் வீட்டில் நகையே இல்லாத பொழுது நகைப்பெட்டி மட்டும் எங்கிருந்து வந்தது?

அதுநாள் வரையில் அந்தப் பெட்டியை சந்திரன் பார்த்ததில்லை. மெதுவாக அந்தப் பெட்டியை திறந்து பார்த்தான் பார்த்தவனின் கண்கள் வெளியே தெறித்து விடுவது போல ஆனது.

அதனுள்ளே இருந்தது ஒரு செயின்.

எந்த டாலரை அவன் வீட்டு வாசலில் பார்த்தானோ அந்த டாலருக்கு பொருத்தமான செயின். எந்த செயினையும், டாலரையும் மோகினியின் கழுத்தில் அவன் பார்த்திருந்தானோ அதே செயின் தான் இது. ஏற்கனவே இந்த செயினுக்கு உரிய டாலர்தான் அன்று சந்திரனின் கைகளுக்கு சிக்கியது. இன்று அந்த செயின் மட்டும் எப்படி தன்னுடைய தந்தையின் பீரோவுக்குள் வந்திருக்க  முடியும்? என்ற கேள்வி சந்திரனை போட்டுக் குடைய கேள்வியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு எல்லா விவரங்களையும் சொன்னான்.

“ராஜா… இந்த செயின் இது மோகினி உடையது. என்கிட்ட ஒரு டாலர் இருக்குன்னு நான் சொன்னேனே… அந்த டாலரோட செயின் இங்கே  வந்தது எப்படின்னு தான் எனக்கு தெரியவில்லை. அந்த டாலரும், செயினும் பார்க்கவே ரொம்ப வித்தியாசமான அமைப்பு. நான் பார்த்திருக்கேன்… இது ரெண்டையும் சேர்த்து அந்த பொண்ணோட கழுத்தில் நான் பார்த்து இருக்கேன்.

இந்த செயினோட டாலர் மட்டும்தான் அந்த உருவம் எங்க வீட்டுக்கு வந்தப்போ கிடைச்சது… செயின் கிடைக்கல. ஆனா அந்த செயின் அப்பாவோட பீரோவில் இருக்கிற பெட்டியில் எப்படி வந்துச்சு? எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குடா… ஒண்ணுமே புரியல..

இது எப்படி அப்பாகிட்ட வந்துச்சு? என் வீட்டுக்கு டாலர் வந்துச்சுனா அதை அந்த உருவமே கொண்டு வந்து போட்டுச்சு. அதுவும் என்னை மிரட்டுறதுக்காக. அது எனக்கு தெரியும். ஆனா அப்பாவோட பீரோவில் நகைப் பெட்டிகளில் வைத்து அந்த செயின் எப்படி வந்திருக்க முடியும்? ஒண்ணு அவரே எடுத்து வச்சு இருக்கணும் இல்ல… அவருக்கு தெரியாம வேறு யாராவது கொண்டு வந்து வச்சு இருப்பாங்களா? அதுவும் இல்லைன்னா எனக்கு முன்னாடியே அந்த உருவம் அப்பாவையும் வந்து மிரட்டி இந்த செயினை அவர்கிட்டே போட்டுடுச்சா?

அப்படியே வேறு யாராவது வந்து வச்சிருந்தாலும்  அந்த உருவம் அவரை எதுக்கு காயப்படுத்தி பார்க்கணும்? அப்படி அவருக்கு சம்பந்தம் இல்லாத பட்சத்தில் அந்த உருவம் அப்பாவை எதுக்கு தாக்கி இருக்கணும்?… அதுக்கு  வாய்ப்பில்லையே… அவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருக்கு. அதனால தான் இந்த ஊருக்கு வந்ததும்  ஹாஸ்பிடல்ல சீரியஸா இருக்காரு.

என்னை சுத்தி என்னன்னமோ நடக்குது… அப்பாவுக்கும், மோகினிக்கு என்ன சம்பந்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல” என்று கொட்டித் தீர்த்த  சந்திரன் ராஜாவின் தோளில் சாய்ந்து கொண்டு அழ தொடங்கினான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

1 COMMENT

  1. எங்களுக்கும் ஒன்னுமே புரியல்ல யார் அந்த மோகினி ஏன் இப்படி பண்றா 🤔🤔🤔

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here