தினமும் ஒரு குட்டி கதை
முரட்டுக்குதிரை!
பண்டைய காலத்தில் கிரேக்க நாடு உலகத்திலேயே நாகரிக வளர்ச்சியும், கலை மேம்பாடும், வீரச் சிறப்பு பெற்று உலகம் சிறக்கத் திகழ்ந்தது. பிலிப் என்ற மன்னன் கிரேக்க நாட்டை ஆண்டு வந்தான்.
வீரதீர மேம்பாட்டிலும், உயர்ந்த கொடைத்திறனிலும், கலை கலாசார அறிவிலும் மேம்பட்டுத் திகழ்ந்தான் பிலிப் மன்னன். அவனுடைய அரசவையில் வீரதீர விளையாட்டுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. கலை கலாசார நிகழ்ச்சிகளுக்கும் குறைவு இருந்ததில்லை.
ஒரு தடவை மன்னனின் அவைக்கு அயல்நாட்டிலிருந்து குதிரை வீரன் ஒருவன் வந்திருந்தான். தம்மிடம் குதிரை ஒன்று இருப்பதாகவும், அதன் திறனைப் பரிசோதித்து நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறும் அரசனை வேண்டிக் கொண்டான்.
“”திறனைப் பரிசீலிக்கும் அளவுக்கு அந்த குதிரை அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா?” என்று வியப்புடன் மன்னன் வினவினான்.
“”பெருவலிமையும் அறிவாற்றலும் மிக்க அந்தக் குதிரை சற்று முரட்டுத்தனமானது. அதை அடக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் இந்த அவையில் இருக்கின்றனரா என்று தெரிந்து கொண்டால்தான், அந்தக் குதிரையை வாங்குவது பயனுடையதாக இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்!” என்றான் குதிரை வீரன்.
“”ஒரு குதிரையை அடக்குவது அவ்வளவு சிரமமான செயலா? அதையும்தான் பார்த்துவிடுவோம். குதிரையைக் கொண்டு வாரும்!” என்று மன்னன் உத்தரவிட்டான்.
அரசவைக்கு எதிரேயிருந்த விசாலமான திறந்தவெளியில் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினான் குதிரை வீரன். கருப்பு நிறத்துடன், கம்பீரமான தோற்றத்துடன், நிமிர்ந்து நின்றது குதிரை. குதிரையின் தோற்றம் அனைவரையும் அச்சுறுத்துவதாக இருந்தது.
பிலிப் மன்னன் தமது அவையில் அமர்ந்திருந்த வீரர்களை நோக்கி, “”இந்தக் குதிரையை அடக்கக் கூடிய வீரர் நம்மிடம் இல்லையா?” என்று வினவினான்.
ஒரு வீரன் ஆவேசத்துடன் எழுந்தான். அலட்சியமாகக் குதிரையிடம் நெருங்கினான். கம்பீரமாக அதன் பக்கம் சென்று அந்தக் குதிரையைத் தொட்டான். அவ்வளவுதான். குதிரை பயங்கரமான கனைப்புடன் தன் முன்னங்கால் இரண்டையும் தூக்கி வீரனை ஒரே அழுத்து அழுத்தி வீழ்த்திவிட்டது.
மிகுந்த பலசாலி என்றும், துணிச்சல் மிக்கவன் என்றும் போற்றப்படும் மற்றொரு வீரன் எழுந்தான். அவன் சற்று எச்சரிக்கையுடன் குதிரையை நெருங்கினான். அவன் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக குதிரையைச் சமாளித்துவிட முடியவில்லை. அது தாறுமாறாக இரண்டு கால்களையும் தூக்கிவைத்து தன் மீது அமர்ந்திருந்த வீரனை நாலைந்து தரம் உலுக்கிக் கீழே தள்ளிவிட்டது. அவன் படுகாயம் அடைந்து கீழே உருண்டான்.
அவனைத் தொடர்ந்து நான்கு ஐந்து வீரர்கள் குதிரையை நெருங்கினர். ஆனால், அந்த முரட்டுக் குதிரையை அடக்கச் சக்தியற்று அது செய்த அமர்க்களத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்து படுகாயப்பட்டுத் திரும்பினர்.
அரசனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “”இந்த அரசவையில் குதிரையை அடக்கக்கூடிய வீரன் ஒருவன் கூட இல்லை என்பது வெட்கப்படக் கூடிய ஒன்றாகும். கேவலமாகும்!” என்று சினம் கொப்பளிக்க மொழிந்தான்.
அந்தச் சமயம் அரசனின் மகன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு, தன் தந்தையின் அருகே அமர்ந்திருந்தான். அவனுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். மன்னன் மகன் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்து தந்தையை வணங்கி, “”தந்தையே! எனக்கு உத்தரவு கொடுத்தால் இந்தக் குதிரையை அடக்க முயற்சி செய்து பார்க்கிறேன்!” என்றான்.
மன்னவன் தன் மகனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தான். “”வழக்கமாக குதிரையுடன் பழகும் வீரர்களாலேயே இந்தக் குதிரையை அடக்க முடியவில்லை என்றால், உன்னால் மட்டும் அடக்க இயலுமா?” என்று கேட்டான்.
“”நமது வீரர்களைவிட உயர்ந்தவன் என்று நான் கூறிக் கொள்ளவில்லை. ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கிறேன் என்று தான் கூறுகிறேன்!” என்றான்.
மகனால் அந்த குதிரையை அடக்க முடியும் என்ற நம்பிக்கை மன்னருக்கு இல்லாவிட்டாலும், மகனின் ஆசையை ஏன் தடுக்க வேண்டும் என்று எண்ணி அனுமதி கொடுத்தான்.
இளவரசன் அந்தக் குதிரையை நோக்கி, அதன் தோற்றத்தையும், அது நின்றிருந்த நிலையையும் ஒரு தடவை கண்ணோட்டம் விட்டான். பிறகு அந்தக் குதிரையை நெருங்கி, அதன் கடிவாளத்தைப் பற்றி சூரியன் இருக்கும் பக்கம் அதன் முகம் இருக்குமாறு திருப்பி நிறுத்தினான்.
பிறகு சட்டென்று குதிரை மீது பாய்ந்து ஏறினான். குதிரை சற்று அதிர்ச்சியடைந்தது போலத் தடுமாறியது. இளவரசன் கடிவாளத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அது நின்றிருந்த நிலையிலிருந்து திரும்பாமல் இருக்குமாறு எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டான்.
குதிரை இரண்டொரு தடவை துள்ளிக் குதித்தது. ஆனால், மற்றவரிடம் நடந்து கொண்டதைப் போல அவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு குதிரை அமைதியடைந்து விட்டது.
பிறகு இளவரசன் குதிரையைச் செலுத்தி அந்த மைதானத்தை ஒரு தடவை வலம் வந்து பிறகு குதிரையை விட்டுக் கீழிறங்கினான்.
மன்னன் மட்டுமன்றி, அங்கிருந்த அனைவருமே அந்தக் காட்சியைக் கண்டு பிரமிப்பு அடைந்தனர். “வலிமையும், வீரமும் மிக்க வீரர்களாலேயே முடியாத சாதனையை இளவரசன் மட்டும் எவ்வாறு சாதித்தான்’ என்று எல்லாரும் அதிசயப்பட்டனர்.
மன்னன் அந்த குதிரைக்குத் தக்க விலை கொடுத்துவிட்டான்.
அன்று மாலையில் அரண்மனைப் பூந்தோட்டத்தில் மன்னன் தமது குடும்பத்தினருடன் உலாவிக் கொண்டிருந்தான்.
அப்போது இளவரசனை நோக்கி, “”மகனே! மற்ற வீரர்கள் அடக்க மிகவும் சிரமப்பட்ட குதிரையை உன்னால் மட்டும் எவ்வாறு அடக்க முடிந்தது?” என்று வினவினான்.
இளவரசன் மன்னனை நோக்கி, “”தந்தையே! அந்தக் குதிரையின் செயற்பாட்டை கூர்ந்து பார்த்ததில் ஓர் உண்மையைக் கண்டு கொண்டேன். அந்தக் குதிரை இயல்பாகவே சற்று முரடாக இருந்தாலும், அது தரையில் விழும் தனது நிழலைக் கண்டு ஒருவித மிரட்சியும், வெறியும் அடைந்து விடுகிறது.
“”அதைக் கண்டு கொண்ட காரணத்தால்தான், நான் குதிரையைச் சூரியன் இருக்கும் திசைப் பக்கம் அதன் முகம் இருக்கும் விதத்தில் திருப்பி நிறுத்தினேன். நான் நினைத்தது சரியாக ஆகிவிட்டது. குதிரைக்கு தன் நிழலைக் காண வாய்ப்புக் கிடைக்காததால், அது மிரட்சி அடைவதனின்றும் தடுக்கப்பட்டது. அதன் பிறகு, அதை அடக்குவது எளிதாயிற்று. குதிரைக்காரன் வேண்டுமென்றே தான் குதிரையைத் திருப்பி நிறுத்தியிருந்தான்.
“”அவன் தந்திரத்தை முறியடித்த காரணத்தால்தான் எனக்கு வெற்றி கிடைத்தது!” என்று கூறினான் இளவரசன். உடல் வலிமையைவிட மனவலிமையே உயர்ந்தது என்பதை நிரூபித்துக் காண்பித்த தமது புதல்வனை பிலிப் மன்னன் பெரிதும் பாராட்டினான்.
இவ்வாறு சின்ன வயதிலேயே தன் அறிவு பலத்தையும், உடல் வலிமையையும் நிரூபித்துக் காண்பித்த அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மகா அலெக்சாண்டர் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்றான். மிகவும் இளம் வயதிலேயே நாட்டின் மன்னனாகப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் எகிப்து, பாரசீகம் போன்ற பெரிய நாடுகளை வென்று அந்த வெற்றிப் பெருமையோடு பாரதம் வந்தான். பாரதத்தில் அவனால் முழுவெற்றி காண முடியாவிட்டாலும், தனது வீரதீர பராக்கிரமத்தை நிலைநாட்டிவிட்டுத் தன் தாயகம் திரும்பிச் சென்றான்..