‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை…
ஒன்றும் புரியாமல் வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது அவள் வீட்டின் முன்னால் நின்ற போலீஸ் ஜீப்பும் காவலர்களும்.
தன் வீட்டின் முன் போலீஸ் நிற்கவும் என்னவென்று யோசித்தவாறே வந்தாள் இசை. வாசலில் நிற்கும் காவலர்களை கடந்து உள்ளே சென்றவள், இடிந்த நிலையில் அமர்ந்திருந்த தந்தையையும் தன்னை திட்டியவாறு அமர்ந்திருந்த சிற்றன்னையும் கண்டு திகைத்தாள்.
அவளை பார்த்ததும் ஓடி வந்த அவளது சிற்றன்னை அவள் சிகையை பிடித்து கன்னம் கன்னமாக அறைந்து தள்ளினார்.
“எவன் டி அவன்??? பள்ளிகூடத்துக்கு போறேன்னு ஆட்டி மினுக்கிட்டு போனதெல்லாம் இதுக்கு தானா?? அவன் கூட ஓடிப்போக இருந்தியா இல்லை அவன் பணக்காரன் இல்லைனு தெரிஞ்சி கழட்டிவிடலாம்னு இருந்தியா??? படுபாவி ஒரு பையனை காவு வாங்கிபுட்டியேடி..”, என்றவர் அவளது சிகையை மேலும் அழுத்தமாக பற்றினார்.
அவரது திடிர் தாக்குதலில் நிலைகுழைந்தவள், அவர் சுமத்திய குற்றச்சாட்டில் துடிதுடித்து போனாள். அவர் அடித்தது ஒரு பக்கம் வலியெடுக்க அவர் கைகளில் இருந்து திமிறினாள். ஆனால் அதற்கும் தப்பர்த்தம் கொண்டவர்.,
“என்னடி உண்மை தெரிஞ்சிடுச்சேன்னு நினைக்கிறியா??? இதுவரை ஒரு நாளாச்சும் என் புருஷன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பார்த்திருக்கியா??? ஆனா இன்னைக்கு அவர் வீட்டு வாசல்ல போலீஸ் ஜீப்பை நிக்க வச்சுட்டியேடி.. நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும் சாவு டி.. சாவு.. எங்க மானம் மரியாதையெல்லாம் கெடுத்த நீ சாவு டி..”.வெறி கொண்டவர் போல் அருகில் கிடந்த தென்னம்மட்டையை எடுத்து அவளை அடி விளாசினார்.
ஒன்றும் புரியாமல், தான் என்ன தவறு செய்தோம் என்று அறியாமல், சிற்றன்னை அடிக்கும் அடியை தாங்க முடியாமல் கதறினாள் அந்த பாவை.. ஏற்கனவே போலீஸ் ஜீப்பை கண்டு அக்கம் பக்கத்தினர் அவர்களது வீடுகளில் இருந்து எட்டி பார்த்தவாறு இருந்தனர். இப்போது இசையின் குரல் கேட்கவும் வீட்டின் முன்னால் வந்து நின்று என்னவென்று பார்த்தனர்.
அதுவரை அமைதியாக பார்த்திருந்த காவலர்கள், கூட்டம் கூடவும் பூரணியை அதட்டினார்கள். அவரும் அதில் சற்று அடங்கி அவளை அடிப்பதை நிறுத்திவிட்டு தன் கணவன் அருகே சென்று அமர்ந்துக் கொண்டார்.
சிற்றன்னை அடித்ததில் கை கால்கள் எல்லாம் வரிவரியாக சிவந்து கிடக்க, ஆங்காங்கே தோல் பிய்ந்து ரத்தம் வந்தது.
“இந்த பையனை உனக்கு தெரியுமாம்மா???” இத்தனை நேரம் அவள் அடி வாங்குவதை வேடிக்கை பார்த்த காவலர் அவளிடம் ஒரு செய்தித்தாளை நீட்டி கேட்க., வலியில் எரியும் கைகளால் அதை வாங்கி பார்த்தவள் முதல் பக்கத்தில் கண்ணனின் போட்டோவோடு வந்திருந்த “காதல் தோல்வியில் மாணவன் தற்கொலை” என்ற செய்தியில் மொத்தமாக அதிர்ந்தாள்.
கைகள் நடுங்க அதை கீழே போட்டவள் அதிர்ச்சியில் அழ ஆரம்பிக்க, அந்த காவலர் அவளை பரிதாபமாக பார்த்தார்.
“சொல்லும்மா உனக்கு இவனை தெரியுமா????”
“ம்ம் தெரியும். என் பின்னாடி காதலிக்கிறேன்னு சொல்லி சுத்தினான்.. நான் முடியாதுன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டேன் அப்புறம் நான் பார்த்தது இல்லை…” அழுகையோடு என்றாலும் தெளிவாக அவர் கண்களை பார்த்துக் கூறினாள்.
“இவன் கொஞ்ச நாளா காதல் தோல்வின்னு சொல்லி தண்ணியடிச்சிட்டு சோகத்துல திரிஞ்சிருக்கான்.. நேத்து விஷத்தை குடிச்சிட்டு அவன் சாவுக்கு காரணம் நீ தான்னு எழுதி வச்சிட்டு செத்துட்டான். அதனால தான் உன்னை விசாரிக்க வந்தோம். நீ இப்போ எங்க கூட போலீஸ் ஸ்டேஷன் வரணும்..” அவளிடம் கூறியவர் ஜீப்பின் அருகில் நின்றிருந்த பெண் போலீசை அழைத்து அவளை ஜீப்பில் ஏற்ற கூறினார்.
அவர் கூறியதில் சர்வமும் நடுங்கியது இசைக்கு.. ஏன் இப்படி செய்தான்.. அவன் காதலை கூறினால், தான் ஒத்துக் கொள்ள வேண்டுமா??? மறுக்கும் உரிமை கூட தனக்கு இல்லையா??? தந்தை கூட அமைதியாக இருக்கிறாரே…. திரும்பி தந்தையின் முகத்தை பார்த்தவள் அவர் விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்திருக்கவும் அவர் அருகில் சென்றாள்..
“அப்பா என்னை நம்புங்கப்பா.. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைப்பா.. நீங்க போலீஸ்கிட்ட சொல்லுங்கப்பா… என்னை கூட்டிட்டு போக வேண்டாம்னு சொல்லுங்கப்பா..” தந்தையின் காலை பற்றிக் கொண்டு கதறியவளை கண்டு அவர் அசையக்கூட இல்லை… மாறாக தன் காலை பற்றிக் கொண்டு அழுதவளை எட்டி மிதித்தார் அவர். அதில் அந்த சிறு பாவை அதிர்வாக அவரை பார்த்தாள்…
அவள் அருகில் வந்த பெண் போலீஸ், “இந்தாம்மா வா… உன்னை அரெஸ்ட் பண்ணிட்டு போகலை. விசாரிக்க தான் கூட்டிட்டு போறோம். உன் வீட்ல இருந்து யாராவது வந்தாலும் பிரச்சனையில்லை…” என்றவர் அவளுக்காக காத்திருக்க., இசை அவளது தந்தை மற்றும் சிற்றன்னையின் முகத்தை பார்த்தாள்..
நிச்சயம் வர மாட்டார்கள் என மனம் அடித்து சொல்லியது ஆனாலும் அழைத்தாள்.. ம்ம்ஹும் எந்த பயனும் இல்லை.. காதே கேளாதது போல் அமர்ந்திருந்தார்கள்..
அதற்கு மேல் பொறுமையில்லாமல் அந்த பெண் காவலர் அவளை அழைக்க, வேறு வழியில்லாமல் அவரோடு சென்றாள் இசை..
ஜீப்பின் பின் இருக்கையில் ஏறிய போது மனம் வலித்தது.. தந்தையை பார்த்தவாறே இருந்தாள்… ஜீப் கிளம்ப மொத்த ஊரும் அவளை வேடிக்கை பார்த்தது. போலீஸ் ஜீப் ஊரை கடந்து செல்ல, ஊரின் எல்லையில் அவனது வயலில் நின்று பார்த்திருந்தான் மலர் அமுதன்.
பார்க்காதே என மனம் சொன்னாலும் கேளாமல் அவன் வீட்டை பார்த்தவள், அங்கு அவன் அதே பார்வையோடு நின்றிருக்கவும் அவமானத்தில் தலை குனிந்தாள்.. சிற்றன்னை அடித்ததோ இப்படி போலீஸ் விசாரனைக்காக அழைத்ததோ எதுவும் அவளுக்கு வலிக்கவில்லை.. ஆனால் தன்னை நம்பவோ ஆறுதலிக்கவோ யாரும் இல்லை என நினைக்கும் போது தான் அதிகமாக வலித்தது…
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவள் அவர்கள் காண்பித்த இடத்தில் அமர்ந்தாள்.. மனம் ஊமையாக கதறி அழுதது. கண்களில் பெருகும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் அவள்… கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் அவளுக்கு வாழ்க்கையே திசை தெரியாமல் இருட்டாக தெரிந்தது.. எவ்வளவு தான் தைரியசாலி என்றாலும் அந்த சூழ்நிலையை கையாள தெரியாமல் இலக்கில்லாமல் வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
இலக்கில்லாமல் அமர்ந்தவளின் கண்களுக்கு ஒரு சிறு ஒளி தெரிவது போல் தோன்ற என்னவென்று கூர்ந்து பார்த்தாள்.. மலர் அமுதன்… அவன் தான் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் அழுத்தமான நடையுடன் வந்துக் கொண்டிருந்தான். அவனை கண்டதும் நம்ப முடியாமல் பார்வையை விலக்காமல் அவனை பார்த்தாள். அவன் பின்னால் சற்று வயதான தம்பதியினர் வர, அவர்கள் யாரென்று அவளுக்கு தெரியவில்லை…
அடுத்து நடந்தது எல்லாம் மாயம் போல் தோன்ற.. அவன் வந்த பதினைந்தாம் நிமிடம், இந்த கேசுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விடுவித்தார்கள். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவள் கண்களை துடைத்தவாறு நிற்க, அந்த தம்பதியினர் அவள் அருகில் வந்தனர்..
“அம்மாடி எங்களை மன்னிச்சிடு மா… கண்ணன் பண்ணின தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம் மா…” அந்த வயதான பெண்மணி அவள் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க.. இசைக்கு ஒன்றும் புரியவில்லை…
“நீங்க தப்பா நினைச்சி பேசுறிங்க போல இருக்கு மா…. எனக்கு கண்ணன்னு யாரையும் தெரியாது…” அப்பாவியாக கூறியவளை கண்டு கண்ணனின் தாயார் கதறினார் என்றால் அவர்கள் பேசுவதை பின்னால் நின்று கேட்ட அமுதனின் கண்கள் கலங்கி போனது.
“அம்மாடி… உனக்கு அவனோட பேரு கூட தெரியலையே மா ஆனா அந்த பாவி நீ தான் அவன் சாவுக்கு காரணம்னு சொல்லி எழுதி வச்சிட்டு செத்துட்டானே. இரண்டு பொம்பளை பிள்ளைங்களுக்கு அப்புறம் பிறந்தவன். கொஞ்சம் பயந்த சுபாவமா இருந்தாலும் ரொம்ப நல்லவன்.. எப்படி இப்படியொரு முடிவு எடுக்க மனசு வந்துச்சோ….” அவளை கட்டிக்கொண்டு அந்த பெண்மணி அழ, அப்போது தான் இசைக்கு புரிந்தது அவர்கள் யாரென்று.
அதுவரை அமைதியாக நின்ற கண்ணனின் தந்தையும், “எங்களுக்கும் ரெண்டு பெண் பிள்ளைங்க இருக்காங்க மா.. அதான் போலீஸ் உன்னை விசாரிக்க கூட்டிட்டு வந்ததா அந்த தம்பி வந்து சொன்னதும் ஓடி வந்தோம். இனி உன்னை இதுக்காக எப்பவும் யாரும் கூப்பிட மாட்டாங்கம்மா… நீ நல்லா இருக்கணும். முடிஞ்சா எங்க பையனை மன்னிச்சிடுமா” என்றவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.
அவர்கள் செல்வதை பார்த்தவள், இந்த அன்பான பெற்றோரின் ஞாபகம் கூட அவனுக்கு சாகும் போது வரவில்லையா என்று தான் தோன்றியது. தான் இங்கு அன்பான பெற்றோருக்காக ஏங்கி நிற்க, அன்பான பெற்றோர் கிடைத்தும் அவர்களை விட்டுவிட்டு இறந்துபோன கண்ணனை நினைத்து மனம் கசந்தது.
இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவளின் முன்னால் ஆட்டோ வந்து நிற்க, அமுதன் அவளிடம் ஏறும்படி சைகை செய்தான். மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற் போல் அவள் ஏற, அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஓட்டுநரிடம் இசையை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்துவிடுமாறு கூறி பணத்தையும் கொடுத்தான்.
தனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம் என்று கூட அவளுக்கு சரியாக தெரியாது. ஆனால் தனக்காக உதவி செய்பவனை நன்றி பெருக்கோடு பார்த்தவள், தன் இரு கைகளையும் அவனை நோக்கி கூப்பினாள். அதில் அவன் கண்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நொடியே மீண்டும் அதே பாவனை வந்து அமர்ந்துக் கொண்டது. அது கேலியா, கிண்டலா, பரிதாபமா??? எதுவென பிரித்தறிய முடியாமல் பார்த்தாள் இசை. அப்போது தான் இசைக்கு புரிந்தது, அவன் இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று…
ஆட்டோவில் தன் வீட்டின் முன் வந்து இறங்கியவளை மீண்டும் வசைப்பாட துவங்கினார் அவளது சிற்றன்னை.. அக்கம் பக்கத்தினர் கூட அவளை கேவலமாக பார்ப்பது போல் ஒரு பிரம்மை.. எதையும் கண்டுக்கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைய போனவளை வெளியே தள்ளி கதவை பூட்டினார் பூரணி.
இசை அழுது கரைந்த போதும், அவர் இறங்கி வரவில்லை, மாறாக மாசி தான் கதவை திறந்து அவளை உள்ளே விட்டார். சண்டையிட்ட பூரணியையும் ஒரு பார்வையிலே அவர் அடக்க, அது இசைக்கு சற்று ஆறுதலளித்தது.. ஆனால் அந்த நிம்மதிக்கும் ஆயுட்காலம் இரண்டு நாட்கள் தான் என்பதை மூன்றாம் நாள் காலை வெளியே போய்விட்டு வந்த தந்தை, மறுநாள் அவளுக்கு நிச்சயம் என்றதில் சுக்குநூறானது.
அவள் தன் மேல் எந்த தப்பும் இல்லை என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் அவள் தந்தை கேட்கவில்லை… அவளை போலீஸ் அழைத்து சென்ற போது கூட அமைதியாக இருந்தவர் அவள் கல்யாணம் வேண்டாம் எனவும் தன் பெல்ட்டால் விளாசிவிட்டார்.
அழுதழுது அவள் கண்ணீர் தான் வற்றியதே தவிர, யாரும் அவள் சொல்வதை கேட்கவில்லை மாறாக மறுநாள் அவர்கள் ஊரில் சாரயம் காய்ச்சி அடிக்கடி ஜெயிலுக்கு போகும் கதிரேசனுக்கு அவளை நிச்சயித்தார்கள்.. யாரும் பொண்ணு கொடுக்காமல் மது, மாது என உல்லாசமாக சுற்றியவனை மாசியே அணுகி பெண் தருவதாக கூறவும் அவனும் வாயெல்லாம் பல்லாக வந்துவிட்டான். நிச்சயம் செய்ய வந்த போது கூட குடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த அவனை மாப்பிள்ளையாக, அவள் முன் நிறுத்திய போது அவள் மனம் அருவெறுப்பில் மரத்துப்போனது.
இதோ மறுநாள் ஊர் கோவிலில் வைத்துக் கல்யாணம். கதிரேசனுக்கு ஜாதகத்தில் எதோ தோஷம் இருப்பதால் திருமணத்திற்கு முதல் நாள் ஊர் கோவிலில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என மாப்பிள்ளை வீட்டினர் கூறிவிட, கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.
கல்யாண வீடு என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் வீடு வெறிச்சோடியே இருந்தது.. எந்த ஆரவாரமும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துக் கொண்டு மாசி குடும்பத்தினர் தங்கள் காரில் கோவிலுக்கு சென்றனர். தன் பெண் குழலியை, கல்யாணம் முடியும் வரை இங்கே இருக்க வேண்டாம் என அவரது தம்பியின் வீட்டிற்கு அனுப்பிவிட்டார் பூரணி.
இன்னும் சிறிது நேரம் தான்.. எல்லாம் சரியாகி விடும்.. கொஞ்சம் பொறுத்துக் கொள்.. மனதில் இதையே திரும்ப திரும்ப சொல்லி தன்னை தைரியப்படுத்திக் கொண்டிருந்தாள் மலரிசை.. அதன் பிறகு அவளை கோவிலுக்குள் அழைத்து சென்றதோ, கதிரேசனின் அருகில் நிறுத்தியதோ எதுவுமே அவள் கவனத்தில் பதியவில்லை.. எப்போது இந்த நரகத்தில் இருந்து விடிவு கிடைக்கும் என்பது மட்டுமே அவள் எண்ணமாக இருந்தது.
கர்ப்பகிரகத்தில் வீற்றிருந்த அம்மனை கண்சிமிட்டாமல் பார்த்தாள் இசை. அவளுக்கு இப்போது எதுவும் வேண்டிக்கொள்ளவும் தோன்றவில்லை.. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. மெய் மறந்து அவள் நிற்க, தன் இடையில் எதோ ஊர்வது போல் இருந்த உணர்வில் அம்மனிடமிருந்து பார்வையை விலக்கி, தன் இடையை பார்த்தாள்.. அருகில் நின்றிருந்த கதிரேசன் தான் கோணல் சிரிப்புடன் அவள் இடையில் கை வைத்திருந்தான்..
அவனை அருவெறுப்பாக பார்த்தவள் சட்டென்று அவன் கையை உதறிவிட்டு நகர்ந்து நின்றுக் கொண்டாள் கண்களில் கண்ணீரோடு… அவளின் உதாசீனம் கதிரேசனின் ஆத்திரத்தை கிளப்ப, அவளை இப்போதே இழுத்து அறைய துடித்தான் ஆனால் நாளை காலை வரை அமைதியாக இருப்போம் என்று தன்னை அடக்கி கொண்டவன் அந்த சிறு பெண்ணை எப்படி துன்புறுத்தலாம் என்று யோசிக்க துவங்கினான்..
பூஜை அனைத்தும் முடிந்துவிட முதலில் கதிரேசன் வீட்டினர் கிளம்பிவிட்டார்கள். அதன் பின்னரே இசையின் வீட்டினர் கிளம்ப ஆயத்தமாக, மலரிசையை காணவில்லை… எங்கே சென்றாள் என அனைவரும் கோவிலை சுற்றி தேட அவள் எங்கும் இல்லை..
கோவிலின் பின்னால் சற்று தொலைவில் இருந்த பாழடைந்த அந்த கிணற்றின் முன்னால் நின்றிருந்தாள் இசை. அனைவரும் மாப்பிள்ளை வீட்டினரை அனுப்பி வைக்கும் சமயத்தில் யாரும் அறியாமல் ஓடி வந்துவிட்டாள். இதற்கு மேல் அவளுக்கு ஓடுவதற்கும் தெம்பில்லை வாழ்வதற்கும் தெம்பில்லை.. இந்த ஒரு வாரமாக தன்னை புழுவை பார்ப்பது போல் பார்க்கும் தந்தை, வன்மத்தோடு பார்க்கும் சிற்றன்னை, நக்கலாக சிரிக்கும் தங்கை.. வீட்டை விட்டு இறங்க கூட முடியாத அளவுக்கு தன்னை கண்டாலே முகத்தை திருப்பிக் கொள்ளும் ஊர்க்காரர்கள் என அனைவருமே ஒரு விதத்தில் அவளை சித்ரவதை செய்தார்கள்.
கிணற்றின் அருகே நிலவொளியில் நின்று வானத்தில் தெரிந்த நிலவை வெறித்தாள் இசை..
.
“அம்மா!!! நான் உங்ககிட்ட வரப் போறேன் மா… எனக்கு இங்க யாரையும் பிடிக்கல..என் ஆசை, கனவு எல்லாமே போச்சு… படிக்கணும்னு ஆசைப்பட்டது தப்பாம்மா??? யாரோ ஒருத்தன் பண்ணின தப்புக்கு நான் ஏன் மா தண்டனை அனுபவிக்கிறேன்??? அப்பாவுக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும்.. ஆனா இந்த அளவுக்கு பிடிக்காதுன்னு இப்போ தான்மா தெரியும்..” இறைவனடி சேர்ந்துவிட்ட அன்னையிடம் வாய்விட்டே பேசியவள், இதற்கு மேலும் வாழ வேண்டாம் என்ற நோக்கத்தில் கிணற்றினுள் குதிக்க போனாள் ஆனால் தன் மேல் ஊசி குத்துவது போன்ற உணர்வில் நிமிர்ந்து பார்த்தவள், அங்கு கையை கட்டிக்கொண்டு தன்னை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த அமுதனின் பார்வையில் அப்படியே நின்றாள்…
அவளை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. கண்களில் மெல்லிய சிரிப்பு தேங்கியிருக்க.. வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்.
“ஏன் இவன் இப்படி பார்க்கிறான்?? ஒரு வேளை உள்ள குதிச்சிட்டா நம்மளை காப்பாத்திடுவானோ??? ம்ம்ஹும் இன்னைக்கு செத்தே ஆகணும்…” இப்போதும் அவன் தன்னை பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரியாமல் அவள் பார்க்க, அவன் அப்படியே தான் நின்றிருந்தான்.. இது சரிவராது என்று நினைத்தவள் குதிக்க போக, அவன் பல்வரிசை தெரிய சத்தம் வராமல் சிரித்தான்..
அதில் கடுப்பாகியவள் வேகமாக கிணற்றை சுற்றி அவனிடம் சென்றாள்.. அவள் அருகில் வருவதை பார்த்தவன் மீண்டும் நிர்மலான முகத்தோடு அவளை ஏறிட,
“என்ன தான் உன் பிரச்சனை??? எதுக்காக இப்படி பார்த்து தொலைக்கிற??? உனக்கும் என்னை பார்த்தா கேவலமாக இருக்கா?? அதனால தான் சிரிக்கிறியா??? இல்ல என் வாழ்க்கைய பார்த்தா சிரிப்பா இருக்கா??? அன்னைக்கும் இப்படி தான் பார்த்து வச்ச… உன்னை பார்க்கிற அன்னைக்கெல்லாம் எனக்கு பிரச்சனையா தான் இருக்கு..” ஒரு வாரமாக அனைவரின் மேலும் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் வெடித்து சிதறியது அவளிடம்.. தன்னை அநாதையாக விட்டு சென்ற தாயிடம் தொடங்கி, தன்னை படைத்த ஆண்டவன் முதற்கொண்டு அனைவர் மீதும் கோபத்தில் இருந்தவள், அது மொத்தத்தையும் அவனிடம் ஆவேசமாக காட்டினாள். அவள் உணர்வுகள் அவனுக்கு புரிய அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஏன் இப்படி எல்லாரும் என்னை கஷ்டப்படுத்துறிங்க??? நான் என்ன செஞ்சேன்??? ஒருத்தனை ரோட்ல போட்டு அடிக்கும் போது காப்பாத்தினது தப்பா?? அதுக்கு ஏன் அவன் என்னை லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்ணினான்??? அவன் செத்து என் வாழ்க்கையையும் சாகடிச்சிட்டானே… அந்த பையன் பேரு கண்ணன்னு கூட எனக்கு தெரியாது…” ஆவேசமாக கத்தியவள் சுயபட்சாபத்தில் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து அழ, அவன் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது…
தன் முன் மண்டியிட்டு, முகத்தை கையால் மூடி அழுபவளை காண சகியாமல் அவளை அவன் எழுப்ப போக, சட்டென்று அழுகையை நிறுத்தியவள் வேகமாக எழும்பி கிணற்றை நோக்கி திரும்பினாள்..
“முடியாது… இதுக்க மேல என்னால வாழ முடியாது.. நான் சாகணும்.. அது தான் சரி.. நான் சாகணும்..” வெறி பிடித்தவள் போல் கத்தியவள் கிணற்றில் குதிக்க போக, அமுதன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்…
“என்னை விடு… நான் சாகணும்…. எனக்கு இங்க யாருமே இல்ல.. நான் செத்தே ஆகணும்…” அவன் பிடியில் இருந்து அவள் திமிற, அவன் அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்…
“என்னை சாக விடு டா… எனக்கு என் அம்மாகிட்ட போகணும்” அவன் மார்பில் தன் கைகளால் குத்தியவள் அவன் மார்பிலே சாய்ந்து கதறினாள்…
அவளின் அழுகை சிறிது சிறிதாக தேய்ந்து தேம்பலாக மாற, தூரத்தில் யாரோ வரும் அரவம் கேட்டது.. நிச்சயம் இசையை தேடித்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்தவன் அவளை தன்னிடம் இருந்து பிரித்தான். அப்போது தான் அவளுக்கும் அவன் மார்பில் சாய்ந்து அழுதுக் கொண்டிருக்கிறோம் என்பதே உரைத்தது..
வேகமாக அவனை விட்டு நகர்ந்தவள், அவளின் பெயரை சொல்லி யாரோ அழைப்பது கேட்கவும் நடுங்கினாள்..
“வந்துட்டாங்க.. என்ன தேடி தான் வராங்க.. அவங்ககிட்ட மாட்டினா அந்த குடிகாரனுக்கே என்னை கட்டி வச்சிடுவாங்க… என்னை விடு நான் செத்துடுறேன்…” அவர்களிடம் மாட்டிக் கொள்ள கூடாது என இசை பதற, அமுதன் அவள் கைகளை அழுத்தமாக பற்றினான்…
ஒரு கையால் அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன் அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தான்… அவன் பார்வையின் தீட்சன்யத்தில் அவள் அவனை அசையாமல் பார்க்க,
“என்னை நம்பு, நான் வருவேன்…” அவள் கண்களை நேராக பார்த்துக் கூறியவன், காலடி சத்தம் அருகில் கேட்கவும் அங்கிருந்து கிளம்பினான்..
அவன் பேசியதை விட, அவன் தன்னிடம் பேசியதை கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் என்ன கண்டானோ மீண்டும் அவளை நோக்கி திரும்பியவன் அவளை அணைத்து, அவள் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தத்தை பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான்… அதில் காமமோ காதலோ எதுவும் இல்லை.. அது ஒரு தாய் தன் குழந்தைக்கு கொடுப்பது போல மட்டுமே இருந்தது.
அவன் செல்லவும் அவள் வீட்டினர் வந்து அவளை பிடித்துக் கொண்டனர், அவளை மீண்டும் வசைபாடியவர்கள் அவளை அங்கிருந்து அடித்து இழுத்து சென்றனர்
இசையின் மலராவான்…..