இசையின் மலரானவன் 4

0
1201

ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது.. மனதில் ஏதோ ஓர் நம்பிக்கை.. அமுதன் வந்து திருமனத்தை நிறுத்திவிடுவான் என்று..

“என்னை எப்படி காப்பாத்துவான்?? ஒருவேளை பதினெட்டு வயசு முடியலைன்னு சொல்லி காப்பாத்துவானோ?? அதுக்கு வாய்ப்பில்லையே எனக்கு தான் பதினெட்டு முடிஞ்சி பத்தொன்பது தொடங்கி ரெண்டு மாசம் ஆச்சே!! பின்ன எப்படி தடுப்பான்” என்பதிலே இசையின் எண்ணம் முழுவதும் நேற்று இரவு சுழன்றது. ஆனாலும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் கதிரேசன் அருகே துணிச்சலாக அமர்ந்திருந்தாள்.

ஐயர் சொல்வதை கடனே என்று செய்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல பயம் அதிகரித்தது.

ஐயரும் தாலியை பூரணியின் கையில் கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வர சொல்ல, மலரிசையின் கண்கள் அமுதனை தேடி அலைபாய்ந்தது..

“வர மாட்டானா?? ஏமாத்திட்டானா??? அவனை நம்பியிருக்க கூடாதோ?? நேத்தே செத்து போயிருக்கணுமோ??” இப்படி தான் இருந்தது அவளின் எண்ணங்கள்.. தாலியை கதிரேசன் கையில் கொடுத்த ஐயர் இசையின் கழுத்தில் கட்ட சொல்ல… இசையின் கண்களில் கண்ணீர் நிரம்பியது..

“போச்சு என்னை ஏமாத்திட்டான்..” நினைக்கும் போதே இதயத்தில் யாரோ குத்தீட்டியை வைத்து குத்துவது போல் இருக்க, கண்களை இறுக்கமாக மூடினாள்..

சடாரென்று தன்னை சுற்றி பல குரல்கள் கேட்பது போல் இருக்க கண்களை திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள். அவள் அருகில் தாலி கயிறை ஏந்தியவாறு அமர்ந்திருந்தான் மலர் அமுதன். அவள் தன்னை பார்த்துவிட்டாள் என்ற நிம்மதியில், அவள் கண்களை பார்த்தவாறே அவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டு அவளை தன் சரிபாதியாக்கி கொண்டான் மலர் அமுதன்.

என்ன நடந்தது?? இவன் எப்போது தன்னருகே வந்தமர்ந்தான் என்று தெரியாமல் அவள் தன் பார்வையை அமுதனை தாண்டி பார்க்க, அங்கு அமுதன் எட்டி மிதித்ததில் கீழே விழுந்திருந்த கதிரேசனும், அவனை எழுப்பிக் கொண்டிருந்த அவனது பெற்றோர்களும் கண்ணில் பட்டனர்..

அவள் கழுத்தில் தாலியை கட்டிய அடுத்த நிமிடமே அவளது கை பற்றி எழுந்தவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொள்ள, பூரணி கொதித்துவிட்டார்.. யாரும் இந்த திருப்பத்தை சற்றும் எதிர்பார்ககவில்லை.. கதிரேசனோ ஆத்திரத்தில் அமுதனை அடிக்க போக, அவனை ஒற்றை கையால் அடித்து வீழ்த்தினான் அமுதன்.

“டேய்ய்ய்ய்ய்… எவ்வளவு தைரியம் இருந்த அவ கழுத்துல தாலி கட்டியிருப்ப”, இசையின் தந்தை கோபமாக கத்த, அவரை கேலியாக பார்த்தவன்

“யார் நீ??? பெத்த பொண்ணை நம்பாம அவளை அம்போன்னு விட்டுட்டு இப்போ ஒரு குடிகாரனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தியே நீயெல்லாம் ஒரு அப்பனா???” அமுதனும் அவரை விட மேலாக கர்ஜிக்க அங்கிருந்த அனைவருக்குமே அவன் குரலில் சர்வமும் நடுங்கியது….

அவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த போது அவனுக்கு பத்து வயது. அந்த பத்து வயதிலே அவனின் ஆளுமை அனைவரையும் வியக்க வைக்கும். இன்று இருபத்தியேழு வயது இளைஞனாக அவனது மிரட்டல் அனைவரையும் வாயடைக்க செய்தது.

“ஏண்டி பொட்டக் கழுதை உனக்கு எத்தனை பேருடி கேட்குது??? முதல்ல ஒருத்தனை சாகடிச்சிட்ட இப்போ இவனா??? நீ நல்லாவே இருக்க மாட்ட டி” அமுதனை எதிர்த்து பேச துணிவில்லாமல் இசையிடம் காய்ந்தார் பூரணி… அதில் அவள் நடுங்கி அமுதனோடு ஒன்ற, அமுதன் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்…

“ஏய்!!! யார்க்கிட்ட பேசுற தெரியுமா??? என்னோட பொண்டாட்டிக்கிட்ட.. எப்போடா என்னோட அக்கா செத்துப்போவா.. அவளோட இடத்தை பிடிச்சிக்கலாம்னு காவல் கிடந்த உனக்கெல்லாம் என் இசையை பேசுறதுக்கு தகுதி கிடையாது..” ஒற்றை விரலை நீட்டி அமுதன் மிரட்டியதில் பூரணிக்கு குலை நடுங்கியது..

அவன் தனக்காக பேசுவதை நம்ப முடியாமல் பார்த்தாள் இசை.. தனக்காக பேசவும் இந்த உலகத்தில் ஒரு உறவு இருக்கிறதா?? அமுதனை கண்கொட்டாமல் பார்த்தாள் இசை.. அவன் கைகளுக்குள் அடங்கியிருப்பதை அவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தாள்..

அவளுக்கு இப்போதைக்கு அந்த குடிகாரனிடமிருந்து தப்பித்ததே பெரும் ஆறுதலாக இருந்தது.

“உன்னை ஊரை விட்டு தள்ளி வச்சிருக்கு. நீ எவ்வளவு தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள வந்திருப்ப???” அவனை தோற்கடித்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் மாசி வார்த்தைகளை விட, அவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை….

“ஊரை விட்டு தள்ளிவச்சிருக்கிங்களா??”, கண்களில் கேலியோடு கேட்டவன், “நீங்க என்னை ஊரை விட்டு தள்ளி வைக்கல. நான் தான் உங்க எல்லாரையும் என்னை விட்டு தள்ளி வச்சிருக்கேன்.. என் வீட்டையும் வயலையும் தாண்டி தான் ஊருக்குள்ள போக முடியும்.. நீங்க எல்லாரும் தினமும் அந்த வழியா தான் போறிங்க ஆனா நான் என்னைக்குமே உங்க வீட்டு பக்கம் வந்ததா ஞாபகம் இல்லை.. இப்போ சொல்லுங்க… நீங்க என்னை தள்ளி வச்சிருக்கிங்களா இல்லை நான் உங்களை தள்ளி வச்சிருக்கேனா???”

பொட்டில் அறைந்தாற் போல் அவன் கேட்ட கேள்வியில் அங்கிருந்த அனைவருமே தடுமாறி போனார்கள்.. அவனை ஊரை விட்டு தள்ளி வைத்தவர்கள் கூட எதுவும் பேச முடியாமல் சிலையாகி நிற்க, அமுதனின் முகத்தில் வெற்றிப் புன்னகை…

“என்னடா திமிரா??? இப்போதுலயிருந்து உங்க ரெண்டு பேரையும் ஊரை விட்டு தள்ளி வைக்கிறோம்..இனி ஊருக்குள்ள நீங்க வரக்கூடாது…” அடங்காமல் மாசி கத்த, அவரை எகத்தாளமாக பார்த்தவன்,

“நல்லா கேட்டுக்கோங்க, எங்க இரண்டு பேருக்குமே நீங்களும் தேவையில்லை. எதுக்கும் உதவாத உங்க ஊரும் தேவையில்லை..” என்றவன் இசையிடம் திரும்பி, “தாலியை தவிர வேற நகையெல்லாம் கழட்டு இசை” என்க, அவளோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற் போல் அனைத்தையும் வேகமாக கழட்டி அவன் கையில் கொடுத்தாள்.. அதை வாங்கியவன் அதனோடு தன் பாக்கெட்டில் இருந்து சில இரண்டாயிரம் நோட்டுகளையும் வைத்து அருகில் நின்றுக் கொண்டிருந்த மாசியின் முகத்தில் விட்டெறிந்தான்.

“எனக்கு என் பொண்டாட்டி மட்டும் போதும்.. உங்க நகை எதுவும் தேவையில்லை.. அந்த காசு அவ கட்டியிருக்க புடவைக்காக”, முகத்தில் அடித்தாற் போல் கூறியவன் இசையின் கையை பற்றியவாறு அங்கிருந்து நகர்ந்தான்..

அவர்கள் செல்வதை தடுக்க முடியாமலும் தங்களை விட சிறியவன் அனைவரையும் அவமானப்படுத்தியதிலும் அனைவரும் கறுத்து போய் நின்றிருந்தனர்…

ஊர் கோவில், அமுதனின் வீட்டின் அருகில் இருப்பதால் இசையின் கையை பற்றியவாறே அவனது வீட்டை நோக்கி நடந்தான் அமுதன்.. முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு எதையோ தீவிரமாக சிந்தித்துகொண்டு வருபவனின் முகத்தை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக் கொண்டே வந்தாள் இசை.. அவளுக்கு அவனிடம் என்ன கேட்பது என்றே தெரியவில்லை..

சுற்றி கம்பு வேலி போட்டிருக்க நடுவில் வீற்றிருந்தது அந்த ஓட்டு வீடு. வீட்டின் முற்றமே பெரிதாக இருந்தது…வீட்டின் ஒரு பக்கத்தில் காலியாக சிறிது இடம் கிடந்தது. வீட்டின் முன் பக்கம் ரோஜா மலர்கள் பூத்து குலுங்க, மற்றொரு பக்கம் செம்பருத்தி, கொய்யா, பலா என வரிசையாக மரங்கள் வளர்ந்திருந்தது.. வீட்டின் முன் நின்று பார்க்கும் போதே வீட்டின் பின்னால் சுமார் பத்து வயல் பச்சை பசேலேன அவள் கண்களை குளிர்வித்தது.. தினமும் அவனது வயலையும் வீட்டையும் கடந்து தான் பள்ளிக்கு செல்வாள் ஆனால் இத்தனை நிதானமாக கவனித்தது இல்லை..

அவள் கைப்பிடித்து அவன் வீட்டினுள் நுழைய, அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.. இனி வாழ்க்கை எப்படி போகும் என்று அவளுக்கு தெரியாது ஆனால் இந்த நிமிடம் அவள் நிம்மதியாக உணர்ந்தாள்…

உள்ளே வந்தவன் அவளை விட்டுட்டு பின் வாசல் வழியாக வெளியே சென்று விட, இசை அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள். மொத்தமே இரண்டறைகள்.. ஒன்று அவள் நின்றுக்கொண்டிருந்த வரவேற்பறை, மற்றொன்று அடுக்களை போலும். வரவேற்பறையின் ஒரு பக்கம் நார் கட்டிலும் ஒரு அலமாறியும் மட்டுமே இருந்தது டீ.வியோ வேறு அலங்கார பொருட்களோ எதுவுமே அங்கு இல்லை… மற்றொரு பக்கம் சிறிதாக மேடை போல் போடப்பட்டு சாமி போட்டோ இருந்தது…அதை திரை சீலையால் மறைத்திருந்தான்..

அதன் அருகில் சென்றவள், முழங்காலிட்டு அமர்ந்து விளக்கை ஏற்றினாள். மனமுருக கடவுளை வேண்டியவள் கண் திறந்து பார்க்க, அவள் எதிரே அமுதன் நின்றுக் கொண்டிருந்தான்… அவனை பார்த்ததும் கண்கள் கலங்க கூப்பிய கைகளை இறக்காமலே அவனை பார்த்தாள்..

நன்றி சொல்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் அவள் முகத்தை பார்க்காமல் சுவற்றை பார்த்து, “வெளியே போறேன்.. தனியா இருந்துப்பியா” என்க,

அவள் தலையை எல்லா பக்கமும் உருட்டினாள். அவளின் செய்கையை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அமுதன் அங்கிருந்து சென்றுவிட்டான்.. அவன் செல்லவும் அந்த அறையை சுற்றி வந்தவள் அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.. அவள் நினைத்தது போல் சமையலறை தான். நிறைய பொருட்கள் இல்லாவிட்டாலும் தேவையான பொருட்கள் மட்டும் இருந்தது..

காலையில் இருந்து பயத்தில் சாப்பிடாமல் இருந்தது பசியை கிளப்ப, அங்கிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தாள். ஒன்றிலும் சாப்பாடு இல்லை.. ம்ச் என்று சலித்துக் கொண்டவள் வயிற்றை தடவிக் கொண்டே வரவேற்பறைக்கு வந்தாள்.. அங்கு போடப்பட்டிருந்த நார் கட்டிலில் அமர்ந்தவள் சற்று நேரத்திலே பசி மயக்கத்திலும் ஒரு வாரமாக அனுபவித்த மனவுளைச்சலின் தாக்கத்திலும் நார் கட்டிலில் சரிந்து தூங்கி போனாள்..

வெளியே சென்ற அமுதன் திரும்பி வந்த போது கண்டது, அடித்து போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்த இசையை தான். வயிற்றை கையால் இறுக்கிக் கொண்டு குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தாள்.. அவள் இதழ் மென்னகையில் விரிந்திருக்க, நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறாள் என்று அனுமானித்துக் கொண்டவன் அவளை எழுப்பாமல் தன் வேலைகளை கவனித்தான்..

இசை கண்விழித்த போது மாலையாகிவிட்டது. அடித்து பிடித்து எழுந்தவள் இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமா என்று தன் தலையில் கொட்டியவாறு கட்டிலை விட்டு இறங்க.. அவள் இறங்கிய அடுத்த நிமிடம் எங்கிருந்தோ ஓடி வந்து அவள் கால்களை சுற்றியது அந்த நாய்.. அதில் பயந்து அலறியவள் வீட்டிற்குள் ஓட, அது அவளை துரத்தியது…பயத்தில் ஓடிக் கொண்டிருந்தவள், அவள் சத்தம் கேட்டு அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்த அமுதனை பாய்ந்து சென்று கட்டிக் கொண்டாள்.

“என்னை காப்பாத்துங்க… காப்பாத்துங்க..” அவன் கையை பற்றிக் கொண்டு அவள் துள்ள, அவளது திடிர் தாக்குதலில் அவன் தடுமாறினான். அவளை பிடித்துக் கொண்டு நாயிடம் திரும்பியவன்..

“டேய்.. அழகா போதும் டா.. இசை பயப்படுறா பாரு.. போ வெளிய…” அவன் அதட்ட அதற்கெல்லாம் பணிய மாட்டேன் என்பது போல் இசையின் கால்களையே சுற்றியது அந்த அழகன்…

“இங்க பாரு இசை.. அது ஒன்னும் பண்ணாது.. நீ கத்துறத பார்த்து தான் அதுவும் குரைக்குது..” அழகனை அடக்க முடியாதவன் இசையை சமாதானம் செய்ய, அவளோ அவன் மார்பை துளைத்து உள்ளே நுழைந்து விடுபவள் போல் அவனோடு அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருந்தாள்..

இருவருமே தான் சொல்வதை கேட்க மாட்டேன் என்க அதில் எரிச்சலுற்றவன், “மச்ச்… அழகா வெளியே போ” என்று ஓங்கி அதட்ட, அடுத்த நொடி அவனை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே ஓடிவிட்டது அது..

“இசை.. அது போய்டுச்சு..” அது சென்ற பின்னும் தன்னை இறுக்கி அணைத்திருப்பவளை அவன் விலக்க, அவள் சட்டென்று அவனிடமிருந்து பிரிந்து தலையை குனிந்து கொண்டு நின்றாள்.. ஏனென்று தெரியாமல் அவள் கன்னங்கள் சிவப்பேறியது..

அவள் குனிந்திருந்ததால் அவளது கன்னச்சிவப்பு அவனுக்கு தெரியாமல் போக அவளை இயல்பாக்கும் பொருட்டு,

“வா இசை சாப்பிடலாம்” என்றான்… அவள் பயத்தோடு மீண்டும் வெளியே பார்க்க,

“அழகன் நான் கூப்பிடாம வரமாட்டான்… நீ வா..” என்றவன் சமையலறைக்குள் நுழைய அவளும் அவனோடு சென்றாள்.. ஒரு தட்டில் அவளுக்கு சாப்பாடு போட்டவன் அவளிடம் நீட்டினான்.. அதை வாங்கி கொண்டவள் எங்கிருந்து சாப்பிடுவது என்று தெரியாமல் நிற்க, அவன் இன்னொரு தட்டில் தனக்கு எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து கீழே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.. அவளும் அவனை பின்பற்றி அவனை விட்டு சில அடிகள் தள்ளியமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்..

முதலில் சாப்பிட்டு முடித்த இசை, பின்வாசலுக்கு சென்று அங்கே இருந்த தொட்டியில் நீரை மொண்டு தட்டை கழுவி விட்டு சுற்றிப் பார்த்தாள்.. தொட்டியின் அருகே குளியலறையுடன் கூடிய கழிவறை இருந்தது.. வீட்டின் பின்னாலும் மரங்கள் நிற்க, அதை பார்த்துக் கொண்டிருந்தவளை கலைத்தது அவன் சத்தம்.. தனது தட்டை கழுவியவன் அவள் கையில் இருந்த தட்டையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான்…

மீண்டும் வெளியே வந்தவன் அவள் கையில் ஒரு பையை திணித்தான்..

“உனக்கு தேவையான டிரெஸ் இருக்கு.. எனக்கு தெரிஞ்ச மாதிரி வாங்கிருக்கேன்… மாத்திக்கோ” என்றவன் சென்றுவிட, இசை வியந்தவாறே பையை திறந்து பார்த்தாள்.. அதில் இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..

அவளை சிறு பெண்ணாக எண்ணி பாவாடை சட்டை வாங்கி வந்திருந்தான்.. வீட்டில் அவள் இது போன்ற உடை தான் அணிவாள்.. அது எப்படி அவனுக்கு தெரியும் என்று யோசித்தவள் அன்று இரவு தன்னை பார்த்தானே என்று ஞாபகம் வந்தவளாக அவன் வாங்கி வந்த துணியை குளியலறையில் சென்று அணிந்துக் கொண்டாள்.. மேல் சட்டை மட்டும் சற்று லூசாக இருந்தது.

தான் கட்டியிருந்த பட்டுபுடவையை மடித்தவள், அவனை தேடி முன்வாசலுக்கு வர, அங்கு அவன் அழகனுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்..

அவளை கண்டதும் அழகன் குரைக்க,

“ஷ்..அழகா… இனி அவளும் நம்ம வீட்ல ஒருத்தி.. சும்மா அவளை பயம் காட்டக் கூடாது…” அவன் கூறியதில் அது அமைதியாகி தன் சாப்பாட்டை சாப்பிடுவதில் கவனமானது…

இனி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவள் வீட்டினுள் சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். அருகில் அவளுக்காக அவன் வாங்கி வந்திருந்த துணிப்பை இருக்க, அதை எடுத்து பார்த்தவளுக்கு மீண்டும் சிரப்பு வந்தது. நான்கு பாவாடை சட்டை, இரண்டு புடவை வாங்கியிருந்தான். அதை வருடியவள் மீண்டும் அதை அதன் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து தன் திருமணத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

யோசனையில் அப்படியே அமர்ந்திருந்தவள் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அமுதன் தான் கதவை சாற்றிக் கொண்டிருந்தான். கதவை தாழிட்டவன் அவள் அருகே செல்ல, அவளுக்கு இதயம் தொண்டைக்குழியில் வந்து துடித்தது… அவன் அருகே வரவும் தாமாக எழுந்து நின்றவள் அவனை மருட்சியாக பார்த்தாள்.

“எதாச்சும் பண்ணிடுவானோ???” முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிய, அவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு அவன் அதரங்கள் இறுகியது. கண்களில் அனல் பறக்க அவளை பார்த்தவன்,

“இந்த தாலி உன்னோட காவலுக்கு மட்டும் தான்.. வேற எதுவும் கற்பனை பண்ணாம தூங்கு…” அவளிடம் வார்த்தைகளை கடித்து துப்பியவன் கட்டிலின் ஓரத்தில் மடித்து வைத்திருந்த பெட்ஷீட்டை எடுத்து, கீழே விரித்து அதில் படுத்துக் கொண்டான்..

இசையின் மலராவான்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here