இசையின் மலரானவன் 7

0
1176

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு நாள் இசையோட கால்ல வந்து விழுவிங்க..” அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் பார்த்துக் கூறியவனிடம், தான் சொன்னது நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்ற உறுதி.

அவனது அதிகார குரலில் அனைவருமே ஸ்தம்பித்து நின்றனர். பத்து வயதில் அவர்கள் கேட்ட அதே அமுதனின் குரல்.. இன்று இன்னும் கர்ஜனையாய்..!!

அவர்களை கண்டுக்கொள்ளாது அமுதன் இசையை அங்கிருந்து அழைத்து சென்றான்..

அவன் கண்விழித்து பார்த்த போது இசையை காணவில்லை.. சரி வந்துவிடுவாள் என்று அவன் இருக்க, வெகு நேரமாகியும் அவள் வராததால் அவனுக்கு உறுத்தலாக இருந்தது.. முயன்று எழும்பியவன் சுவரை பிடித்துக் கொண்டு வெளியே தேட எங்கும் அவளை காணவில்லை.. அதற்குள் அழகன் வேறு எங்கிருந்தோ ஓடி வந்து அவன் அணிந்திருந்த வேஷ்டியை பற்றியிழுக்க அவனுக்கு எதுவோ தவறாக பட்டது.. இசைக்கு ஆபத்து என்ற அவன் உள்ளுணர்வு கூற அழகனை தொடர்ந்து வந்தான்… அவளை காணும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.. அதைவிட அவன் அங்கு கண்ட காட்சி..!!!

வீட்டிற்கு வந்தும் அவன் அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.. அவள் தான் அவனின் அமைதியை பார்த்து தவித்தாள். ஆனால் அவனிடம் எந்த கேள்வியும் அவள் கேட்கவில்லை..

தன் வலியைவிட தனக்காக என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டாள் என அவளது அன்பை நினைத்து பிரம்பித்து போனான் அமுதன்.

அதன்பின் அவனுக்கு வலித்தாலும் அவன் அதை முகத்தில் கூட காண்பிக்கவில்லை.. மீண்டும் அவள் அவனுக்காக என்று கிளம்பிவிட்டால், என்ன செய்வது என்ற பயமே அவனை அத்தனை வலிகளையும் தாங்கி ஒரே வாரத்தில் மீண்டு வர வைத்தது…

அமுதன் சரியாகி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது… அமுதனுக்கு தன் ரைஸ் மில்லை கொடுக்காத பாண்டியனே அவனை நேரில் சந்தித்து, அவரது நண்பரின் ரைஸ் மில் லீசுக்கு வருவதாக கூறி அழைத்து சென்று அவரது நண்பர் ராகவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்… ராகவனுக்கு அமுதனை பார்த்ததும் பிடித்து போக இரண்டே நாட்களில் பத்திர பதிவை வைத்துக் கொள்ளலாம் என்றுவிட்டார்… அந்த சந்தோஷத்தில் இரவு வீடு வந்தவன் இசையை தேட, அவள் பின் வாசலில் அமர்ந்துக் கொண்டு அழகனோடு விளையாடிக் கொண்டிருந்தாள்…

“இசை…” காய்ச்சலுக்கு பின், அவனாக அழைக்கவும், வேகமாக இசை எழுந்து வர, அவன் அப்போது தான் அவளை முழுதாக கவனித்தான்.. புடவை அணிந்திருந்தாள்.. மாலை தான் குளித்திருப்பாள் போலும் முடியை விரித்துவிட்டிருந்தாள்.. அவளை பார்க்க தேவதை போல் இருக்க அமுதனால் கண்களை அவளை விட்டு அகற்ற முடியவில்லை.. அவள் சிறு பெண் என்று அவன் மூளை அறிவுறுத்த, இல்லை அவள் என்னுடைய மனைவி என்று மனம் வாதிட்டது..

அவனது உணர்வு போராட்டம் தெரியாமல், அவன் தன்னிடம் பேசிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் அவனை நெருங்கினாள் இசை…

“மலர் மாமா… என்மேல இருந்த கோபம் போய்டுச்சா??? என்னை மன்னிச்சிட்டிங்களா???” ஆர்வம் பொங்க கேட்டவளின் அழகில் அவன் மயங்கி போனான்…

“ம்ம்” என்று அவனையும் அறியாமல் தலையாட அவள் முகம் பிரகாசமானது.

“ஹேய்ய்ய்.. மாமாவுக்கு கோபம் போய்டுச்சு… நான் போய் ஸ்வீட் செய்ய போறேன்” என்றவள் அடுக்களையை நோக்கி போக, அடுத்த நொடி என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் அவன் கைகளுக்குள் இருந்தாள்… அவன் அணைப்பில் அவள் விழிவிரித்து பார்க்க, அவள் கண்களில் முத்தமிட்டவன்,

“உன்னை யாரு புடவை கட்ட சொன்னது??” என்றான்.

அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமலும், அவனது அருகாமையில் உள்ளுக்குள் ஏதோ பிரழ்வது போன்ற உணர்விலும் தத்தளித்தவள் கண்களை மூடிக் கொள்ள, அவன் அவளது கன்னம் மூக்கு என்று வஞ்சனையில்லாமல் முத்தங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்…

மனதில் இருந்த சந்தோஷமும் அவளை புடவையில் பார்த்ததும் அவனை வசமிழக்க செய்ய, அவன் அணைப்பிலும் முத்ததிலும் இசை திணறினாள்…

“சு..சும்மா தான் மாமா கட்டினேன்..” அவன் கைகள் தன்னிடம் நடத்தும் ஜாலத்தில் அவள் நெளிந்தவாறே உரைக்க, அவன் பார்வை அவள் உதட்டின் மேல் நிலைத்தது.

அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளது உதட்டில் முத்தமிட போக, வெளியே கேட்ட அழகனின் சத்ததில் தன்னிலை அடைந்தான்..

அப்போது தான் அவனுக்கு தான் செய்துக் கொண்டிருக்கும் செயலின் வீரியம் புரிந்தது.. அவன் கைகளில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த இசையின் பார்வையில் அவனுக்கு குற்றவுணர்வு எழ.. வேகமாக அவளை விட்டு விலகியவன் அவன் தலையை அழுத்த கோதிக் கொண்டான்…

“போய் தூங்கு இசை…” அவளது முகம் காணாமல் அவன் .கூற, அவள் ஓடிச்சென்று கட்டிலில் பெட்ஷீட்டை தலைவரை மூடிக் கொண்டு படுத்துவிட்டாள்.. இன்னும் அவன் உதடு தன்மேல் இருப்பது போன்ற பிரம்மையில் கண்களை மூடி அவன் நின்றிருந்ததற்கு எதிர்புறமாக திரும்பி அவள் படுத்துக் கொள்ள, அமுதன் தான் மனதளவில் அடிவாங்கி போனான்..

அவள் குழந்தை என்று சமாதானம் செய்தாலும்.. இல்லை என்னோட மனைவி என்று சண்டையிட்டது அவன் மனது.. அதற்கு மேல் அவளை பார்த்துக் கொண்டிருந்தால் சரிவராது என்று நினைத்தவன் வெறுந்தரையிலே படுத்துக் கொண்டான்.. அப்படி படுத்தால் அவன் மனதில் இருக்கும் வெம்மை குறையும் என்று எண்ணிணானோ என்னமோ??

அடுத்த நாளிலிருந்து இசை அவன் முகம் பார்க்கவே தயங்கினாள்.. அவன் வீட்டில் இருந்தாலே அவள் நிலத்தில் புதையல் தேடிக் கொண்டிருக்க, அமுதனுக்கு தன் மீதே கோபம் வந்தது.. தான் அப்படி நடந்துக் கொண்டதால் தான், அவள் இப்படி இருக்கிறாள் என்று தன்னை தானே நொந்துக் கொண்டான்.. அதனால் அவனும் அவள் முகம் பார்ப்தை தவிர்த்தான்..

இரண்டு நாட்கள் கழித்து வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன் அவள் அருகே ஒரு கவரை வைக்க, இசை அதை கையில் எடுத்துக் கொண்டு அவனை கேள்வியாக பார்த்தாள்…

“உன்னோட காலேஜ் அட்மிஷன் ஃபார்ம்”. என்றவனை பார்த்து இன்பமாக அதிர்ந்தவள் அவனை பார்க்க,

“உனக்கு பிடிச்ச கோர்ஸ்ல சேர்ந்துக்கோ.. அடுத்த மாசம் காலேஜ் போகணும். அதோட அதுல என்னோரு ஃபார்ம் இருக்கு. அது சிவில் சர்விஸ் எக்ஸாம்க்காக படிக்கிற கோச்சிங் சென்டர் ஃபார்ம்.. அதையும் நிரப்பிடு.. இப்போவே படிக்க ஆரம்பிச்சா தான் சீக்கிரம் நீ ஆசைப்பட்ட மாதிரி உன் லட்சியத்தை அடைய முடியும்.” அவள் முகத்தில் தோன்றும் பாவனைகளை தன்னையும் அறியாமல் ரசித்தவாறே அவன் கூற, அவள் கண் கலங்கினாள்.

அவளின் ஆசை அவள் அப்பாவுக்கு கூட தெரியுமோ என்னமோ ஆனால் அமுதன் அறிந்து வைத்திருப்பதை நினைத்து அவள் கண்கள் அருவியை கொட்ட, பேச்சு வராமல் ஊமையாக நின்றாள் அவள்..

“நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது எனக்காக இல்லை. என் அக்கா பொண்ணு அவ ஆசைப்பட்டதை படிக்கணும்.. உன்னோட கனவ நனவாக்குற கடமை எனக்கு இருக்கு… அதோட இந்த ஊர் முன்னாடி நீ ஜெயிச்சு காட்டணும்…” எப்போதும் ஒருவரியில் பேசுபவன் நீளமாக பேசவும் அவள் அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள்..

அவனது கடமை என்ற வார்த்தை அவள் மனதை சுருங்க வைத்தாலும், தனக்காக ஒருவன்.. தன் ஆசைகளை நிறைவேற்றி வைக்க துடிக்கும் ஒருவன்.. நினைக்கும் போதே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்று பெருக, சந்தோஷத்தில் உதடுகள் விரிந்தாலும், கண்கள் கண்ணீரை பொழிந்தது..

“கண்டிப்பா மாமா… நான் ஜெயிச்சு காட்டுவேன்…” கண்களை துடைத்தவாறு அவள் உரைக்க, அவன் கையில் இருந்த மற்றொரு ஃபார்மை அவளிடம் நீட்டினான்..

என்னவென்று வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள்.. அது அவளை கல்லூரி ஹாஸ்டலில் சேர்ப்பதற்கான படிவம்… அதிர்ச்சியாக அவள் அவளை காண.,

“இங்க இருந்து படிக்கிறதை விட, ஹாஸ்டல்ல யாரோட தொல்லையும் இல்லாம படிக்கலாம்…அதான் என் ப்ரெண்ட் மூலமா சென்னையில் இருக்கிற கல்லேஜுல அட்மிஷன் வாங்கியிருக்கேன்” என்றவன் அவன் முகத்தை பாராமல் சுவற்றை வெறித்தான்.

‘நீங்க எனக்கு தொல்லை இல்ல மாமா..’ அவள் மனம் ஊமையாக கதற, ஆனந்த கண்ணீரில் கரைந்தவள் இப்போது அவனை பிரிய வேண்டும் என்ற கவலையில் கண்ணீர் வடித்தாள்..

“சாயங்காலம் ரெடியாகு.. டவுனுக்கு போய் காலேஜுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்..” என்றவன் அங்கிருந்து சென்றுவிட, புதிதாக அவன் மேல் மொட்டுவிட்டிருக்கும் காதலை எண்ணி அழ தொடங்கினாள் அவள்..!!

காலமும் நேரமும் யாருக்காவும் காத்திராமல் செல்ல, அவள் கல்லூரியில் சேரும் நாளும் வந்தது.

இடைபட்ட நாட்களில் இருவரிடமுமே கணத்த மௌனம் மட்டுமே நிலவியது. இசை அவனிடம் பேச முயன்றாலும் அவன் சுருக்கமாக முடித்துக் கொண்டான்.. அவளை ஹாஸ்டலில் சேர்க்கும் போது கூட அலைப்புறுதலுடன் இருந்தானே தவிர அவளிடம் பேசவில்லை.. இசை தான் வீட்டில் துவங்கி சென்னையை வந்தடைந்த பின்னும் அவன் கையை விடாமல் பற்றிக் கொண்டு இருந்தாள்..

ஹாஸ்டலில் அவளின் அறையை பார்த்து அவளது பொருட்களை வைக்க உதவியவன் கிளம்ப தயாராக, அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. அவளது அறையில் அவள் மட்டுமே வந்திருக்க இருவர் மட்டுமே தனித்து இருந்தனர்…

“நல்ல படிக்கணும்… மூணு மணிக்கு காலேஜ் முடியும். அதுக்கப்புறம் பக்கத்துல இருக்கிற கோச்சிங் சென்டர்ல சிவில் சர்வீஸ் கோச்சிங்.. அது ஆறு மணிக்கு முடியும்.. ஹாஸ்டலுக்கு ஆறரைக்குள்ள தான் வரணும், அதனால கவலையில்ல… இது உன்னோட ஏ.டி.எம் கார்ட்.. பணம் போட்டிருக்கேன்.. எடுத்துக்கோ.. எதை பத்தியும் கவலைபடாம நிம்மதியா படிக்கணும் சரியா???” சிறு குழந்தைக்கு கூறுவது போல் கூறியவன் அவள் கண்களை பார்க்க, அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்..

அவனுக்கும் அவளை பிரிவது கஷ்டமாகவே இருந்தது ஆனால்…!!! அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை…அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளின் கண்களை நேராக சந்தித்து,

“உனக்காக நான் இருக்கேன்.. என்னை நம்பு…” என்க,

அவள் அழுகை நின்றது.. அவளிடம் அவன் இதற்கு முன்பு கூறிய அதே வார்த்தைகள் ஆனால் அன்று, நான் வருவேன் என்றவன் இன்று உனக்காக நான் இருக்கிறேன் என்றான்..

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அங்கிருந்து சென்றுவிட, அவள் சிலையாக நின்றாள்… ஆனால் மனதில் அப்படி ஒரு நிம்மதி… அவனது ஒற்றை வார்த்தை தன்னிடம் புரியும் மாயம் குறித்து அதிசயமாக இருந்தது. அதன்பின் அவள் தன்னை தானே தேற்றிக் கொண்டாள்..

அவளை சென்னையில், கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்த அமுதனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.. அவன் அதிகம் பேசாவிட்டாலும் எப்போதும் கேட்கும் அவளது கொலுசொலி இல்லாமல் வீடே வெறிச்சோடியிருந்தது… அழகனோ வீட்டின் முன்பு படுத்திருக்க,. அதன் அருகில் அன்று இசை தூக்கி வந்த நாய் குட்டியும் படுத்திருந்தது. அவனுக்கு உடம்பு சரியான மறுநாளே சென்று அந்த குட்டியை கண்டுபிடித்து எடுத்து வந்துவிட்டான். அதை அவள் கையில் கொடுக்கும் போது அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே அமுதனுக்கு தோன்றியது. நாய்குட்டிக்கு அழகி என்று பெயர் சூட்டியிருந்தாள்.

இப்போது அழகனும் அழகியும் அவளை காணாமல் வாசலில் படுத்திருக்க, அவனும் அவர்களின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டான்.. அவனையும் அறியாமல் கண்கள் கலங்கியது… ஆனால் மனதை இறுக்கிக் கொண்டான்..

மலரிசையின் கல்லூரி வாழ்க்கை ஆரவாரமாக ஆரம்பித்தது.. அமுதனை மனம் தேடினாலும் கல்லூரிக்கு செல்ல போகும் உற்சாகம் அவளிடம் நிரம்பி வழிந்தது.. அவள் அறையில் இருந்த பெண்களும் அவளுடன் நன்றாகவே பழக, அவளும் சகஜமாக இருந்தாள்.. முதல் நாள் மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்றவள், அங்கு சீனியர் என்ற முறையில் அனைவரையும் ரேகிங் செய்துக் கொண்டிருந்தவனை கண்டு திகைத்தாள். அவன் ஒரு வருடத்திற்கு முன்பு கண்ணனை அடித்த நால்வரில் ஒருவனான சந்தோஷ்.

இசையின் மலராவான்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here