இசையின் மலரானவன் 9

0
1414

“இசை.. போதும்.. வா சாப்பிடலாம்..” அவளை பார்க்காமல் அவன் கிட்சனுக்குள் நுழைந்துக் கொள்ள, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.. .

அதன்பின் அவன் வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட, அவள் தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்.. அவளுக்கு அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தது.. இந்த நான்காண்டுகள் அவன் மீது அவள் சேர்த்து வைத்திருந்த மொத்த கோபத்தையும் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை அடக்கிக் கொண்டாள்..

தன் கோபம் கரையை கடக்கும் போது நிச்சயம் அவளது காதலும் வெளிப்பட்டுவிடும். அப்படி தனது காதலை கூறிய பின் அவன், இல்லை அக்கா மகள் என்ற கடமையில் தான் செய்தேன் என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலே அவள் மௌனியாக இருந்தாள்.

அன்றிரவு அவன் வருவதற்கு முன்பே தூங்கியவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகே வெகு நேரம் அமர்ந்திருந்தான் அமுதன்..

அவள் போட்டிருக்கும் உடையை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.. தன் மனைவிக்காக அவன் முதன் முதலில் வாங்கியது பாவாடை சட்டை.. நினைக்கும் போதே புன்னகை அரும்ப, அவள் தலையை கோதிவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான்..

மறுநாளிலிருந்து இசை முன்பே போல், சமைப்பது, அழகன் அழகியோடு விளையாடுவது என பழைய இசையாக இருக்க, அமுதனுக்கும் நிறைவாக இருந்தது.. இந்த உயிர்ப்பை தானே அவன் இத்தனை நாட்களாக தொலைத்திருந்தான்..

அவர்களது வாழ்க்கை எப்போதும் போல் செல்ல துவங்கினாலும் இசைக்கு அமுதனை நினைத்து யோசனையாக இருந்தது.. எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தான்.. காலையில் செல்பவன் இரவும் தாமதமாக வர, இசைக்கு அவன் என்ன வேலை செய்கிறான் என்று கூட தெரியாமல் குழம்பினாள்.. அவனிடம் அதை பற்றி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டவள், மறுநாள் காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் முன்பு சென்று நின்றாள்.

“மாமா”

அவள் அழைப்பில் நிமிர்ந்தவன் அவளை கேள்வியாக பார்க்க..

“அது.. நாம இங்க இருக்கோமே அப்போ வயலை யாரு பார்த்துக்குவா?” அவனிடம் நேரடியாக கேட்க முடியாமல் அவள் சுற்றி வளைக்க, அவனுக்கோ அவள் கேட்க வருவது புரிந்தது..

“போய் ரெடியாகு இசை.. நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்..” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சென்று ரெடியாக அவள் ஒன்றும் புரியாமல் சென்று தயாராகி, அவனோடு கிளம்பினாள்..

‘மலர் மில்ஸ்’ என்று இருந்த பெயர் பலகையை பார்த்ததும் தன் கண்களை அகல விரித்தாள் மலரிசை…

“மாமா உங்க பேரு??” புரியாமல் இசை அவன் முகம் பார்க்க, அவனோ மறுப்பாக தலையசைத்தான்..

“நம்ம பேரு” என்றான் புன்னகையோடு..

அவன் கூறியதை நம்ப முடியாமல் அவள் பார்க்க, அவன் காரை அதன் இடத்தில் விட்டுவிட்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்.. பொம்மை போல் அவன் கைப்பிடியில் அவள் நடக்க, அவன் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த அனைவரையும் அழைத்து அவளை அறிமுகப்படுத்தினான்..

“இது மலரிசை..” என்றதும் அனைவரும் அவளுக்கு வணக்கம் தெரிவிக்க, அவள் விழித்தாள்…

“இவங்க தான் நம்ம முதலாளி” என்றவனை விழி விரித்து பார்த்தாள் அவள்… அனைவரும் அவளிடம் அன்பாக பேச, அவளும் அவர்களுக்கு தகுந்தவாறு பதிலளித்தாள்.. சிறிது நேரம் அவர்களை பேச அனுமதித்தவன் அவளை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றான்..

“மாமா என்ன பண்றீங்க?? என்னை போய்???” வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற, அவன் அவளை அழைத்து சென்று அவனது சீட்டில் அமர வைத்து,

“நீ தான் எங்க எல்லாருக்குமே முதலாளி இசை… இந்த தொழில் எல்லாமே உனக்கு சொந்தமானது.. சீக்கிரம் உன் பெயருக்கு மாத்திடனும்” என்றவனை அவள் அதிர்ச்சியாக பார்க்க,

“நான் இதெல்லாம் முன்னாடியே முடிவு பண்ணினது தான் இசை.. வீடு வயல் எல்லாத்தையும் உன்னோட கல்யாண சீதனமா கொடுத்துட்டு நான் ஊரை விட்டு போய்டலாம்னு இருந்தேன் ஆனா விதி என்னை உன்கூட சேர்த்து வச்சிடுச்சு” என்றவன் சிரிக்க, அவளோ அவனுக்கு தன்னை திருமணம் செய்துக் கொண்டதில் விருப்பமில்லையோ என்று தோன்றியது.

அவளின் அதிர்ச்சியை, மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டவன், பக்கத்து ஊரிலிருந்த அவனது மற்ற ரைஸ் மில்லுக்கும் அழைத்து சென்றான்.. அன்று தன்னை லீசுக்கு எடுக்க கூட விடாத மாசியின் முன்பு இன்று அவன் மூன்று மில்லிற்கு சொந்தகாரனாக முன்னேறி நின்றான்..

அவனது உழைப்பு அனைத்தையும் பிரம்பிப்பாக பார்த்துக் கொண்டு வந்தாள் இசை.. அனைவரிடமும் அவளை முதராளி என்றே அறிமுகப்படுத்தினான்..

‘அவனிடம் இதெல்லாம் எனக்கு வேண்டாம்.. நீ தான் வேணும்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது இசைக்கு.. அப்படி கூறிய மறுநொடி, இல்லை அக்கா பெண் அது இதென்று பேசுவனோ என்று பயமாக இருக்கவே, வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.. அவளுக்கு இதை பற்றியெல்லாம் அவன் தன்னிடம் கூறவில்லை என்று எந்த கோபமும் இல்லை.. மாறாக தனக்காக யோசிப்பவனை நினைத்து மகிழ்ச்சியாகவே இருந்தது.

அடுத்து வந்த ஒரு வாரமும் இசை வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தாலும் அமுதனிடம் அதிகம் பேசவில்லை.. அவனும் வேலைப் பளுவில் அதை சரியாக கவனிக்காமல் போக, அவளது மெயின்ஸ் பரிட்சை முடிவுக்கான நாள் நெருங்கியது.

நாளை ரிசல்ட் என்ற நிலையில் இசைக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை.. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக, எழுந்து அமுதனின் அறையை நோக்கி சென்றவள், தயங்கியவாறே அவன் அறைக் கதவை தட்டினாள்.

“என்ன இசை??? தூக்கம் வரலையா??? மாலையில் இருந்து அவளது டென்ஷனை அவனும் கவனித்துக் கொண்டிருந்தவன் சரியாக யூகித்து கேட்க,

“இ..இல்.இல்ல… நான் இங்க ஒரு ஓரமா படுத்துக்கவா???” அவன் என்ன நினைப்பானோ என்று பயத்தில் அவளுக்கு வேர்த்து வழிந்தது. அவனுக்கோ, குழந்தை போல் கேட்டவளை வாரி அணைக்க தோன்றிய மனதை அடக்கியவன்,

“நீ உன் ரூமுக்கு போ இசை” என்க, அவள் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு சென்றாள்..

‘உனக்கு தேவையா?? நீயே வலிய போய் அவமானபட்டுட்டியே… லூசு லூசு” தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தவள் கட்டிலில் புரண்டுக் கொண்டிருக்க, அவள் அறை வாசலில் நின்றுக் பார்த்திருந்தான் அமுதன்..

அவளும் அவனை கவனித்துவிட, அவன் வந்து அவள் அருகில் படுத்துக் கொண்டான்.. அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. தன்னை உரசும் அளவிற்கு படுத்திருப்பவனின் நெருக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.. அவனுக்கு அப்படியெல்லாம் இல்லையோ என்னவோ அவன் கண்மூடி தூங்க ஆரம்பித்தான்..

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவளுக்கு தூக்கம் கண்களை சுழற்ற, சிறிது நேரத்திலே அவனை ஒட்டிக்கொண்டு அவளும் தூங்கிவிட்டாள்..

மறுநாள் அதிகாலையிலே அமுதனுக்கு முழிப்பு வர, கண்களை திறந்து பார்த்தவனின் முகம், தன் நெஞ்சில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த இசையை பார்த்ததும் மென்மையானது.. அவளை மெலிதாக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவள் தூக்கம் கலையாமல் அவளை அருகில் படுக்க வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றான்.

இரவு அமுதனின் அருகாமையில் உறங்கியதாலோ என்னமோ இசை மிகவும் புத்துணர்வுடன் இருந்தாள். நேற்ற இருந்த பதட்டம் எதுவும் இல்லாமல் பொறுமையாக அமுதன் வாங்கி கொடுத்திருந்த லேப்டாப் முன்பு அமர்ந்திருந்தாள். அவள் அருகில் பதட்டத்தின் மொத்த உருவமாக அமுதன் அவளது ரிசல்ட்டை பார்த்துக் கொண்டிருந்தான்…

லேட்டாப்பை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் இசை.. பதட்டம்.. எதிர்பார்ப்பு என அவன் முகம் போட்டிப்போட்டுக் கொண்டிருக்க, அவனது முகத்தில் இறுக்கம் தளர்ந்து புன்னகை அரும்ப ஆரம்பித்தது. அவனின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு புரிந்துவிட, அவனே கூறட்டும் என்று அமைதியாக அவன் முகத்தை பார்த்திருந்தாள்..

“நீ பாஸாகிட்ட இசை..” உரக்க கத்தியவன் அவளை அணைத்துக் கொண்டான். அவன் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது.. தன் வெற்றியில் அவனுக்கு எத்தனை மகிழ்ச்சியென்று பூரித்து போனாள். உடனடியாக மேனேஜருக்கு போன் செய்து தங்களது மில்லில் வேலை செய்யும் அனைவருக்கும் இனிப்பு கொடுக்குமாறு உத்தரவிட்டவன் அவளை அன்று முழுதும் தன் கையணைப்பிலே வைத்திருந்தான்..

இசைக்கு அவளின் மகிழ்ச்சியைவிட அமுதனின் மகிழச்சியை காணவே அத்தனை மகிழ்வாக இருந்தது…

“ரொம்ப சந்தோஷமா இருக்கு இசை.. என் அக்கா ரொம்ப சந்தோஷப்படுவா.. இனி இன்டர்வியூ மட்டும் தான்.. நீ நிச்சயம் நல்லா பண்ணுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதோட என் கடமையும் முடிஞ்சிடும்” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைக்க, அவனது கடைசி வாக்கியத்தில் இசையின் இதயம் எதையெதையோ கற்பனை செய்து பயந்தது..

பாஸாகிய உற்சாகம் வடிந்துவிட, எங்கே தன்னை அவனிடமிருந்து பிரித்துவிடுவானோ என்ற அச்சத்தில் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்…

அவளின் விடா முயற்சியின் பலனாக இன்டெர்வியூவிலும் அவள் தேர்ச்சி பெற்றுவிட, டிரைனிங் ஆர்டரும் வந்து சேர்ந்தது.. அவளை விட அமுதன் தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்… அவளை ஆளாக்கி அந்த ஊரின் முன்னால் சென்று நிறுத்த வேண்டும் என்ற வெறி அவனுள் தீயாய் கணன்றது..

இசையோ இப்போதெல்லாம் அவனிடமிருந்து தூரம் செல்கிறோமோ என்ற பயத்துடன் அவனை ஒட்டிக் கொண்டே சுற்றினாள்.. அவனும் இனி ஒரு வருடத்திற்கு அவளை பிரிய வேண்டும் என்பதால் அவளை விலக்கவில்லை..

வீட்டின் பின்னால் நின்று அழகனுக்கும் அழகிக்கும் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தவள் அமுதன் கூப்பிடவும் வேகமாக ஹாலுக்கு வந்தாள்.. அங்கு யாரோ ஒருவன் அமர்ந்திருக்க யாராக இருக்கும் என்று யோசித்தவாறே அமுதனை நெருங்கினாள் இசை..

“வா இசை.. இது என்னோட ப்ரெண்ட் நந்தன்.. லாயரா இருக்கான்..” என்றவன் முகம் முழுதும் புன்னகையோடு தன் எதிரில் இருந்தவனிடம், இது “இசை.. நான் சொல்லிருக்கேனே..” என்க,

நந்தன் அவளை சுவாரஸ்யமாக பார்த்தான்.. அவனது பார்வை அவளுக்கு எரிச்சலை தர, அவனை முறைத்தவாறு நின்றாள்..

“அமுதன் எல்லாம் சொன்னான் இசை.. உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிங்க… நீங்க இன்னும் முன்னேறனும்..” என்றவன் தான் கொண்டு வந்திருந்த ஃபைலில் இருந்து ஒரு பத்திரத்தை எடுத்து இசையிடம் நீட்டினான்..

அவன் தன்னிடம் பத்திரத்தை நீட்டவும் அதை வாங்காமல் அவள் அமுதனை பார்க்க, அவன் வாங்கு என்றான்..

எதோ தவறாக பட, கைகள் நடுங்க அதை வாங்கியவள் அமுதனை பார்த்தவாறு நிற்க, அவன் போன் அடித்தது..

“மேனேஜர் தான் போன் பண்றாரு.. நீ படிச்சி சைன் பண்ணு இசை.. நந்தன் அவளுக்கு புரியுற மாதிரி சொல்லுடா” என்றுவிட்டு அவன் போனோடு வெளியே செல்ல, இசைக்கு இதயம் படபடவென அடித்தது.. மேலோட்டமாக அதை பார்த்தவளுக்கு, அதில் இருந்த டிவோர்ஸ் என்ற வார்த்தையை பார்த்ததும் தலையை சுற்றிக் கொண்டு வந்தது..

கண்கள் இருட்டிக் கொண்டு வர, சுற்றி நடப்பது எதுவும் தெரியாத நிலையில் தள்ளாடினாள் அவள்..

அவளின் தள்ளாட்டத்தை கவனிக்காத நந்தன், “படிச்சிட்டு சைன் பண்ணுங்க இசை.. எல்லாம் அமுதனோட முடிவு தான்.. அவனுக்கு ரொம்ப பெரிய மனசு..” என்று அமுதனுக்கு புகழாரம் சூட்டியவன், “எனக்கு கூட இப்போ உங்களை மாதிரி ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்ணும்னு ஆசையா இருக்கு” என்றவன் அவளது முகம் பார்க்க, அவள் அவனை அத்தனை கோபமாக உறுத்து விழித்தாள்..

ஏற்கனவே டிவோர்ஸ் என்றதும் அவளுள் புயல் அடித்துக் கொண்டிருக்க, நந்தன் வேறு அவளை போல் உள்ள பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றதும் அவளுக்குள் ஆவேசம் பொங்க.. அந்த பத்திரத்தை தூர எறிந்தவள்,

“எழும்பு டா நீ.. எவ்வளவு தைரியமிருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ.. எங்க அவன்.??.” இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமும் வெடித்து சிதற ஆயத்தமானது இசையிடத்தில்…

இசையின் மலராவான்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here