இன்னிக்கு லீவா???????

0
88

இன்னிக்கு லீவா

அலாரம் அடிக்காமலேயே அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வழிப்புத் தட்டியது அர்ச்சனாவுக்கு. தினப்படி பழக்கமாகிப் போனதாலோ என்னவோ ஐந்து மணிக்கு மேல் படுக்கை முள்ளாகக் குத்தத் தொடங்கும். ஆனால் இன்றைய நாள் தொடங்கும் போதே வலியுடன் தொடங்கியது. காலையிலேயே பல்வலி உயிரே போனது அவளுக்கு. முகத்தில் ஒருபக்கம் முழுவதும் வீங்கிப் போய் இருந்தது.

கடந்த ஒருவாரமாகவே வலி இருந்தது தான். ஆனால் அலுவலகப் பணி அதிகமாக இருக்கவே லீவ் எடுக்க இயலாத நிலை. நாளை, மறுநாள் என்று டாக்டரைப் பார்க்க போவதை ஒத்தி வைத்தபடியே ஒருவாரம் ஓடிப் போனது. மெடிக்கலில் சொல்லி வாங்கிய மாத்திரைக்கும் இப்போது பல்வலி அடங்குவதாக இல்லை.

இன்று வேறு வழியே இல்லை என்பதால் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லியாயிற்று. ஆடிட் முடிந்தபடியால் அந்த உம்மனாமூஞ்சி மானேஜரும் முறைத்துக் கொண்டே நேற்று விடுப்புக்கு ஒப்புக் கொண்டார். இன்று என்னவானாலும் டாக்டரைப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணியபடி காலைப் பணிகளில் ஈடுபட்டாள்.

அவர்களுடையது கூட்டுக்குடும்பம். வயதான மாமியார், மாமனார், திருமண வயதில் நாத்தனார், அர்ச்சனா அவளது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என பெரிய குடித்தனம். அத்தனை பேருக்கும் காலை காபி டிபன் தயார் செய்து நிமிரும் போது மணி எட்டரை ஆகியிருந்தது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு பத்து மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்க முடிவு செய்தாள்.

“அச்சு!!!! இன்னிக்கு லீவ் தானே உனக்கு. இந்த பாங்க் வேலையை மட்டும் முடிச்சு வச்சிடேன். அரைமணி நேர வேலை தானே. போயிட்டு வந்துரு” கிட்டத்தட்ட கட்டளை போல் இருந்தது சுபாஷின் குரல். ‘அந்த அரைமணி நேரம் எனக்கு ரெஸ்ட் கிடைச்சா உங்களுக்கு எங்க நோகுமாம்” வாய்விட்டு கேட்க முடியாவிட்டாலும் சரி என்பதாய் தலையை ஆட்டி வைத்தாள்.

சரியாக ஒரு ஒன்பதரை மணிக்கு வாசலில் மணி அடிக்க யாரென்று எட்டிப் பார்த்தால் தரகர் வந்திருந்தார். நாத்தானாருக்கு ஏற்ற வரன் இரண்டு மூன்று இடங்கள் வந்திருப்பதால் மாமனாரிடம் அவற்றைக் காட்டிப் பேச வந்திருந்தார். “அச்சும்மா!! இங்கே வந்து பாரேன். இன்னிக்கு நீயும் வீட்டுல இருக்கிறது நல்லதாப் போச்சு. இதுல எந்த இடம் சரி வரும்னு பார்த்து சொல்லு” மாமியார் அழைக்க மறுப்பு சொல்ல வழியின்றி போனது.

அது இதென்று இழுத்து மணி பதினொன்றாகிப் போனது. அடித்துப் பிடித்து பேங்கிற்குச் சென்று க்யூவில் நின்று வேலையை முடித்தால் மணி ஒன்று. டாக்டர் இனி மூன்று மணிக்கு மேல் தான் பார்க்க முடியும். சரி வீட்டிற்குப் போய் ஒரு இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தால் சரியாகும் என்று கணக்குப் போட்டபடி வந்தால் அடுத்த அதிர்ச்சி.

ப்ளம்பிங் வேலைக்கு என்று சொல்லி வைத்திருந்த ஆள் இன்று தானா வர வேண்டும்? ‘ஐயோ அச்சு!! தூக்கம் போச்சு!!!’ மனசுக்குள் வெறுத்தபடி மேற்பார்வையிட நின்றாள். வேலை முடிந்து ஆட்கள் கிளம்பவும் மணி சரியாக மூன்று. மதிய உணவை முடித்துக் கொண்டு நிமிரும் முன் பிள்ளைகள் இரண்டும் பள்ளியில் இருந்து வந்து சேர்ந்தாயிற்று.

“ஐ!!!!!! அம்மாஆஆஆஆஆ!!! ஜாலி ஜாலி!!! இன்னிக்கு அம்மா லீவு. அம்மா இன்னிக்கு எங்களுக்கு ஸ்பெஷல் டிஃபன் செய்யறியா? நைட்டுக்கு அப்படியே கோபி மஞ்சூரியன் செய்யறியா? ப்ளீஸ்மா” தன் தாடையை பிடித்துக் கெஞ்சும் செல்லங்களுக்காக எதையும் செயய்லாம் என்று அடுத்தகட்ட வேலையில் இறங்கினாள்.

வேலைகள் அவளது நேரத்தை விழுங்கிக் கொள்ள வலியோ அதிகமானது தான் மிச்சம். டாக்டரிடம் செல்ல நேரம் கிடைத்தபாடில்லை. இரவு உணவு முடிந்து ‘அப்பாடா கொஞ்ச நேரம் வலிக்கு மாத்திரை போட்டுட்டு தூங்கலாம்’ என்று நினைக்கும் போது “அச்சு!!! இன்னிக்கு லீவ் தானே உனக்கு. என்னோட ஒயிட் ஷர்ட்டைத் தோய்ச்சு போட்றுக்கலாமே. அப்படி என்ன வெட்டி முறிச்ச?” என்ற சுபாஷைப் பார்த்ததும் ‘அடேய் போங்கடா!!!! இன்னிக்கு லீவா எனக்கு?’ நொந்தே போனது மனசு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here