உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 5 tamil novels

0
368

அத்தியாயம் 5
ப்ரியா அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தாண்டி இருந்தது. பகலில் அவளை தூங்க விடாமல் அவளை கேள்வி கேட்டு அவளைப் பற்றி தெரிந்து கொள்வதில் முனைப்பாக இருந்தார் ஜெயா.. அவளது சிறுவயது நாட்கள், அப்பா, அம்மா, நட்பு வட்டம், படிப்பு என்று எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். அவள் மனதில் இருப்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் தானே அதற்கு ஏற்றார்போல் அவர் வைத்தியம் பார்க்க முடியும்.
மகேசனும், கற்பகமும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கற்பகம் ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். படிப்பறிவில்லாத மகேசனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுப்பதை விரும்பாத கற்பகத்தின் பெற்றோர் அவர்களது காதலை எதிர்க்க வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இருவரும்.
இங்கே மகேசனின் வீட்டில் திருமணத்திற்கு பிறகு அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருந்தது. மகேசனுக்கு அம்மா மட்டும் தான். அதாவது மகேசனின் அப்பாவின் இரண்டாம் மனைவி கனகம். தங்கை அல்லிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இருக்க… தங்கையின் கணவர் சபேசனும் ,மகேசனும் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த குடும்பத் தொழிலை சபேசன் சூழ்ச்சியால் தன்வசம் கைப்பற்றிக் கொண்டார்.
மகளின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மகேசனின் தாய் கனகம் மகனையும், மருமகளையும் வெறுக்கத் தொடங்கினார். யாரிடமும் சம்மதம் கேட்காமல் மனைவியோடு வந்து நின்ற மகன் நாளை மனைவியின் பேச்சைக் கேட்டு தன்னை வெளியே அனுப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை, மகள் அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்க.. அந்த பயம் அவர் மனதில் ஆலமரமாக வளர்ந்து நின்று இருவரின் மீதும் வெறுப்பை வாறி இறைக்க செய்தது. ஆரம்பம் முதலே முதல் தாரத்தின் மகன் என்ற வெறுப்பு மகேசனின் மீது அவருக்கு இருக்க…இந்த சந்தர்ப்பத்தில் அது தானாகவே வெளியே வந்தது. ஒரு கட்டத்தில் மகேசனே பொறுக்கமாட்டாமல் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
வீட்டை விட்டு வெளியேறினால் தொழில் கையை விட்டு போய்விடும் என்று தெரிந்தே தான் இருவரும் வெளியேறினார்கள். ஏற்கனவே தொழிலில் அவரது தங்கையும், தங்கை கணவரும் ஒன்று சேர்ந்து அவரை செல்லாக் காசாக மாற்றி இருக்க.. அதற்கு மேலும் அங்கே இருந்தால் தன்மானத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதாலேயே அந்த முடிவை எடுத்தனர்.
வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது இனி பசியில் வாடப் போவது அவர்கள் இருவர் மட்டும் இல்லை மூன்று ஜீவன் என்று. ஆம்! கற்பகம் அப்பொழுது கருவுற்று இருந்தார். ஆரம்ப காலங்களில் ரோட்டோரத்தில் மனைவியோடு தங்கினார் மகேசன். அவரின் கெட்ட நேரமோ, சபேசனின் சதி வேலையோ எங்கே வேலை தேடி சென்றாலும் கிடைக்காமல் போக… கர்ப்பிணியான கற்பகம் வேலைக்கு செல்வதையும் அவர் அனுமதிக்கவில்லை.
மாதங்கள் இப்படியே கழிய… ரோட்டோரத்தில் அவர்கள் தங்கி அவர்கள் படும் துன்பங்களை கண்டு கற்பகம் வீட்டாரும்… மகேசனின் வீட்டாரும் எள்ளி நகையாடினார்கள். தன்னுடைய சுயமரியாதையை ஒதுக்கி வைத்து விட்டு கற்பகத்திற்க்காவும், வயிற்றில் வளரும் தங்களது வாரிசுக்காகவும் கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்யத் தொடங்கினார் மகேசன்.
ரோட்டில் குப்பை பொறுக்குவது, சாக்கடை அள்ளுவது… என்று அத்தனை வேலையையும் செய்தார். பணத்தில் திளைக்காவிட்டாலும் ஓரளவுக்கு வசதியோடு இருந்த கணவன் தன்னை திருமணம் செய்து கொண்டதாலேயே இப்படி மாறிப் போய் விட்டார் என்று எண்ணி வருந்தினார் கற்பகம். கற்பகத்தை வெளியில் வேலைக்கு செல்லக் கூடாது என்று மகேசன் கண்டிப்பாக சொல்லி இருந்ததால் ரோட்டோரத்தில் இருந்தபடியே சிறுசிறு வேலைகளை செய்யத் தொடங்கினார். மகேசனுக்கு தெரியாமல் தான்.
கல்யாண வீடுகளில் வேலைக்கு போவது… வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, கோலம் போடுவது என்பது போல சிறிய வேலைகள் தான். கிடைத்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தார் கற்பகம். நிறைமாத கர்ப்பத்துடன் ஒருநாள் அவர் ஒரு வீட்டில் வேலை முடித்து விட்டு வெளியே வர அந்த காட்சியை கண்ட மகேசன் துடித்துப் போனார்.
தன்னைப் போலவே ஓரளவுக்கு வசதியாக வாழ்ந்த பெண் இப்படி பிரவசம் நெருங்கும் நேரத்தில் கூட உடலை வருத்தி இத்தனை துன்பப்படுவதற்கு காரணம் தான் மட்டுமே என்று உறுதியாக நம்பினார்.
நாளடைவில் இருவரும் மனம் விட்டு கலந்து பேசி தங்களது மனதை பகிர்ந்து கொண்ட பிறகே ஒருவரைப் பற்றி மற்றவர் நினைக்கும் எண்ணம் எவ்வளவு தவறு என்று முடிவு செய்து அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தனர். அது தான் பணம்.
பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் நேர்மையான வழியில்… நம்மிடம் பணம் இருந்து இருந்தால் நம்முடைய உறவுகள் இப்படி நம்மை தூக்கி எறிந்து இருக்கவும் மாட்டார்கள். தங்களது நிலைமையைப் பார்த்து எள்ளி நகைத்திருக்கவும் மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
தெளிவான முடிவு எடுத்த பிறகு அவர்கள் திட்டமிடுதலும் தெளிவாக இருந்தது. கற்பகம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுத்தார். அதை மூலதனமாக வைத்து ஒரு தள்ளுவண்டி கடையை ஆரம்பித்தார்கள். எடுத்த உடனே அசுர வளர்ச்சியை எட்டி விடவில்லை. ஆயிரம் முறை சறுக்கி விழுந்தார்கள். ஆனாலும் விடாமல் முயற்சி செய்து ஓரளவுக்கு தங்களது நிலையை உயர்த்திக் கொண்டார்கள்.
மகள் பிறந்த பிறகு பொறுப்புகள் கூட கணவன், மனைவி இருவரும் மாடாய் உழைத்தனர். ப்ரியா பிறந்த நேரம் அவர்கள் தொழிலில் நல்ல பேரும் கிடைத்தது. வாடகைக்கு சின்னதாக ஒரு வீட்டையும் பார்த்து குடியேறினார்கள்.
ப்ரியாவை நல்ல அரசாங்கப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள். தள்ளுவண்டி கடைக்கு பதிலாக சின்னதாக ஒரு ரோட்டோர கடையை விலை பேசி தொழிலை தொடர்ந்து நடத்தி வந்த காசில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொஞ்சம் இடத்தையும் வாங்கிப் போட்டார்கள்.
ப்ரியா ஆசைப்பட்ட எதையும் அவர்கள் வாங்கித் தராமல் இருந்தது இல்லை. அதே நேரம் பணம் சேர்த்து வைப்பதில் இருவரும் அதிக முனைப்போடு இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தங்களை அவமானப்படுத்திய உறவுகளின் முன்பு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மனதிலும் வேரூன்றியது மட்டும் இல்லாமல் ப்ரியாவின் மனதிலும் பதிந்து போனது.
பெற்றவர்களின் நிலை புரிந்து அவளும் அவர்களுக்கு அதிகம் தொல்லை தராமல் நல்ல பெண்ணாக நடந்து கொண்டாள். படிப்பில் படுசுட்டி ப்ரியா. அவர்களின் வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் அது ஆண்டவனுக்கு பொறுக்கவில்லை போலும். சபேசனின் கண்ணில் இவர்கள் படும் வரை அவர்கள் வாழ்க்கை நிம்மதியாகத் தான் இருந்தது. அதன் பின்பு தான் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.

 

 

 

 

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here