உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 8

0
238

அத்தியாயம் 8
சக்தி அடுத்த நாளும் பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்க, அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் காரில் ஏற்றிக் கொண்டான் கிஷோர். சக்தியின் முகத்தில் முதல் நாள் நிகழ்வின் சாயல் எதுவும் தென்படுகிறதா என்று ஊன்றி கவனித்து, உணர்வுகளை படிக்க முயற்சி செய்தான். ஆனால் சக்தியின் முகமோ இறுகிப் போய் இருந்தது. சில மணி நேர பயணத்திற்குப் பிறகு அவர்களின் கார் பேக்டரியை வந்து சேர… அங்கே ஒவ்வொரு இடமும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருந்தது. கிஷோர் ஆடிட்டருடன் பேசியபடியே அலுவலக அறைக்குள் செல்ல, சக்தி அங்கே இருந்த ஒவ்வொரு இடமாக சுற்றி வந்து கொண்டு இருந்தாள்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. எண்ணெய் காய்ச்சுவதும், மூலிகைகளை பொடிகளாக அரைப்பதும் என்று எல்லாரும் மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க.. அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்கள் செய்யும் வேலைகளை கவனித்தாள் சக்தி.
“என்ன சக்தி எல்லா இடத்தையும் பார்த்தாச்சா?” என்று கேட்டபடியே அங்கே வந்தான் கிஷோர்.
“பார்த்துகிட்டே இருக்கேன் சார்….” அவன் முகம் பாராமல் பதில் பேசினாள் சக்தி.
“ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“இருக்கு சார்… நாம பொருளை உற்பத்தி செய்வதில் இருந்து அதை மருந்தா மாற்றும் வரையிலும் ரொம்பவே மெனக்கெட வேண்டி இருக்கு தான். ஆனா நாம விற்கும் விலை கொஞ்சம் அதிகமோனு தோணுது…”
“குட்… காஸ்டிங் (Costing) வரைக்கும் யோசிச்சு இருக்கீங்களே…. நீங்க சொல்றது சரி தான் சக்தி… அப்படி எல்லா பொருளுக்கும் விலை அதிகமா நிர்ணயம் செஞ்சு இருக்க மாட்டோம்.. குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தான். ஏன்னா அந்த பொருட்கள் எல்லா சீசனிலும் கிடைக்காது. குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தான் கிடைக்கும். அதனால அந்த மருந்துகளுக்கு தேவை அதிகமாகவே இருக்கும். நாம எத்தனை பாட்டில் கொடுத்தாலும் ஒருமணி நேரத்தில் விற்று தீர்ந்து விடும்.”
“இது தப்பில்லையா சார்… நோயாளிகளுக்கு மருந்தின் தேவை எப்பவுமே இருக்கிறப்போ மருந்தின் விலையை இப்படி அதிகமா வச்சு கொள்ளை அடிக்கறீங்க நீங்க.. ஏழை மக்கள் பாவம் இல்லையா?” என்று கோபத்தில் அவனுக்கு எதிராக குரல் உயர்த்தி பேசியவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான்.
“வெல்… சக்தி.. இப்போ நீங்க என்கிட்ட கேட்ட அதே கேள்வியை ஒரு கார்ப்பரேட் மருந்து கம்பெனி கிட்டே கேட்க முடியுமா உங்களால?” என்று அமர்த்தலான குரலில் கேட்க சக்தியின் முகம் நொடியில் சிவந்து போனது.
‘சே! அவசரப்பட்டு பேசிட்டேனே..’ என்று தன்னையே நொந்து கொண்டாள்.
“நான் உங்க கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன் சக்தி.. நாங்க பணத்துக்காக இந்த தொழிலை செய்யலைன்னு… ஆனா நீங்க அடிக்கடி இதே மாதிரி பேசறீங்க.. இனியொருமுறை இப்படி பேச வேண்டாம் சக்தி” என்று இறுகிப்போன குரலில் எச்சரித்தவன் அவளது வாடிய முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் இறங்கி வந்தான்.
“அடிக்கடி இப்படி கோவப்படாதீங்க சக்தி… கோபத்தில் உங்க முகமெல்லாம் சிவந்து போய் இருக்கும் பொழுது இன்னும் அழகா இருக்கீங்க.. பார்வையை உங்க முகத்தில் இருந்து திருப்ப நான் ரொம்பவே திணற வேண்டியதா இருக்கு. நானும் மனுஷன் தான் சக்தி. கண்ணுக்கு முன்னாடி தேவதையை மிஞ்சக்கூடிய அளவுக்கு ஒரு பொண்ணு இருந்தா நானும் என்ன தான் செய்ய முடியும்? என்னையும் மீறி நேத்து மாதிரி நான் ஏதாவது தப்பும் தவறுமா நடந்துட்டா.. அப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது” என்று சொன்னவன் அதற்கு மேலும் அங்கே இருந்தால் எதையாவது உளறிக் கொட்டி வைத்து விடுவோம் என்று தோன்ற வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.
சக்தி அப்படியே சிலை போல நின்று விட்டாள். ‘எப்படி அவன் இப்படி பேசலாம்…. அதுவும் என்னைப் பார்த்து?’ என்று உள்ளூர ஆத்திரம் பெருகியது. அவனை நேருக்கு நேராக பார்த்து இனி தன்னிடம் அப்படி பேசக்கூடாது என்று தெளிவாக சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தவளுக்கு ஏனோ அந்த சந்தர்ப்பத்தை கிஷோர் கொடுக்கவேயில்லை. எப்பொழும் யாரையாவது உடன் வைத்துக் கொண்டு தொழிலைப் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்க சக்தியும் அவர்களுடன் சேர்ந்து விவாதித்தாள். ஆடிட்டர் முன்னிலையில் கிஷோரிடம் அதைப் பற்றி பேச முடியாமல் வேறு வழியின்றி தள்ளிப் போட்டாள்.
காரில் வரும் பொழுதும் அவளுக்கு தனிமை கிடைக்கவில்லை. காரை விட்டு இறங்கி அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் விடுவிடுவென தன்னுடைய வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தவள் கொஞ்ச நேரம் கழித்து கிஷோரின் மொபைலுக்கு அழைத்தாள்.
கிஷோர் தன்னுடைய வீட்டிற்குள் நுழையவும் சக்தியிடம் இருந்து போன் கால் வரவும் சரியாக இருக்க மிகுந்த யோசனைக்குப் பிறகே போனை எடுத்தான். அவள் எதற்காக இப்பொழுது போன் செய்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாதா? எடுக்காமல் விட்டாலும் அவள் சும்மா விட மாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ‘எதையாவது பேசி சமாளிப்போம்’ என்று நினைத்தவன் போனை எடுத்து பேசினான்.
“ஹலோ”
“என்கிட்டே இப்படி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க..”
“போனை எடுத்ததும் ஹலோன்னு தான் எல்லாரும் பேச்சை தொடங்குவாங்க சக்தி.. அது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?” என்றான் ஒன்றுமறியாதவன் போல…
“வேணாம் சார்.. என்னிடம் உங்க பணக்கார விளையாட்டை எல்லாம் வச்சுக்காதீங்க.. நான் வேற மாதிரி”
“இல்லையே சக்தி.. இன்னிக்கு கூட நான் பார்த்தப்போ உங்களுக்கும் எனக்கு இருக்கிற மாதிரி இரண்டு கை, இரண்டு கால் தானே இருக்கு… வித்தியாசமா எதுவுமே என் கண்ணில் படவில்லையே” என்றான். அவளை சீண்டும் விதமாக.
“சார்.. நான் வேலை செய்யும் கம்பெனி முதலாளி என்ற வகையில் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சு இருக்கேன். இனியொரு முறை இன்னிக்கு பேசினது போல என்கிட்டே பேசினா அப்புறம் என்னோட பேச்சும், நடவடிக்கையும் வேற மாதிரி இருக்கும். பின்னாடி வருத்தப்படாதீங்க” என்று முகத்தில் அடிப்பது போல பேசிவிட்டு அவனது பதிலை கேட்கக்கூட பிடிக்காமல் போனை வைத்து விட இந்தப்பக்கம் கிஷோர் முகத்தில் சிரிப்பு பொங்கியது.
‘அம்மாடி ..எப்படி கோபம் வருது பார்… எத்தனை நாளைக்கு இதெல்லாம்… சீக்கிரமே எல்லாத்தையும் சரி செஞ்சிடறேன் செல்லம்’ என்று போனைப் பார்த்து செல்லம் கொஞ்சியவனின் முக பாவனைகள் மிகச் சரியாக அவனது பெற்றோரின் பார்வையில் பட்டுவிட மகனின் மகிழ்ச்சியான முகத்தையும், போனை அவன் செல்லம் கொஞ்சுவதையும் பார்த்து தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
வீட்டிற்கு வந்த மகனிடம் அவனது தாயார் கமலம் பேச்சுக் கொடுக்க.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகன் அறியாமல் அவனது போனை எடுத்த அவனது தந்தை ராமமூர்த்தி கடைசியாக மகனுக்கு யாரிடம் இருந்து போன் வந்து இருக்கிறது என்ற தகவலை மட்டும் பார்த்து விட்டு மீண்டும் போனை எடுத்த இடத்திலேயே வைத்து விட கிஷோருக்கும் தெரியாமலே போனது பெற்றவர்களின் கவனம் சக்தியின் புறம் திரும்பியது பற்றி…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here