அத்தியாயம் 12
ஆபிசில் இருந்து வேகமாக ஓடி வந்த சக்தி வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் கோவிலுக்கு சென்று அமர்ந்து கொண்டாள். கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மனை பார்க்கத் தோதாக அமர்ந்து கொண்டவளின் முகத்தில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.
‘என் வாழ்க்கையில் இன்னொரு ஆணுக்கு இடமளிப்பதா? தன்னால் அது முடியுமா? முடியவே முடியாது. அவரைத் தவிர வேறு ஒருவனை நான் மனதாலும் நினைக்க மாட்டேன்..’ என்று தனக்குத்தானே சூளுரைத்துக் கொண்டாள் சக்தி. இந்த விஷயத்தை கிஷோரிடம் நேரடியாக சொல்லி விடுவது நல்லது. தேவை இல்லாத வீண் கற்பனைகளை அவர் வளர்த்துக் கொள்ள நாம் காரணமாகி விடக் கூடாது என்று முடிவு செய்தவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றாள்.
அவள் மனதில் எப்படி கிஷோர் வர முடியும்? அவள் மனதைத் தான் ஏற்கனவே வேறு ஒருவன் ஆட்சி செலுத்திக் கொண்டு இருக்கிறானே… ஆம்… அவளுக்கானவனை ஏற்கனவே இறைவன் அவளுக்கு கொடுத்து விட்டான். இடையில் வந்த கிஷோரிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாது தான். அதே நேரம் இதற்கு மேலும் மௌனமாக இருப்பது கிஷோருக்கு செய்யும் மிகப்பெரும் துரோகம் என்று உணர்ந்தவளாய் வீட்டுக்கு சென்றவள் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தாள்.
தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. அவள் மனதில் கிஷோரை முதல் நாள் சந்தித்ததில் இருந்து நடந்த அத்தனையும் படம் போல ஓடியது. பார்த்த முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் அவன் மீதான மதிப்பும், மரியாதையும் அவளுக்கு அதிகரிக்கவே செய்தது. தொழிலில் அவனுக்கு இருக்கும் ஈடுபாடு, அவனிடம் வேலை பார்ப்பவர்களின் மீது அவன் காட்டும் அக்கறை, பெண்களிடம் கொஞ்சம் விலகி அவன் காட்டும் கண்ணியம், முதலாளி தானே என்று யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தாமல் எல்லாருக்கும் மதிப்பு கொடுத்து நடந்த பாங்கு… இப்படி எல்லாமே அவளைக் கவர்ந்தது.
அவனுடைய பார்வை தன்னிடம் மட்டும் ஒரு வித அழுத்தத்துடனும், கூர்மையுடனும் பதிவதை அவள் உணர்ந்து இருந்தாள். அப்படி ஒரு பார்வையை வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் அவன் வீசவில்லை என்பதும் அவளுக்கு புரிய… வீணாக தன் மேல் நேசத்தை வளர்த்துக் கொண்டு பின்நாளில் அது நிறைவேறாமல் போகும் பொழுது அதை கிஷோரால் தாங்க முடியுமா? தன் மனதில் வேறு ஒருவன் இருக்கிறான் என்ற நிலையில் கிஷோரிடம் உண்மையை சொல்லி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகே அவளால் தூங்க முடிந்தது.
மறுநாள் காலையில் எப்பொழுதும் போல கிளம்பி ஆபிசுக்கு போனவள் கிஷோரின் வரவுக்காக காத்திருக்கத் தொடங்கினாள். எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்துவிடும் கிஷோர் அன்று கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தான். அன்று வந்ததில் இருந்தே கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தான். சக்தி அவனிடம் பேச முயன்ற பொழுது வேண்டுமென்றே விலகுவது போல தோன்ற.. சிலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு , அதன்பிறகு அந்த முயற்சியை நிறுத்திக் கொண்டாள்.
வேலையை முடித்துக் கொண்டு அன்றைய தினம் கிளம்பும் பொழுது எதிர்பாரா நேரத்தில் கிஷோரே அவளை அழைத்து பேசினான்.
“சாரி சக்தி.. அப்பாவும், அம்மாவும் அப்படி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல… உன்னோட மனசு வருத்தப்பட்டு இருந்தா.. நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்…”
“பரவாயில்லை சார்… அவங்க பேசினதுக்கு நீங்க என்ன செய்வீங்க?”
“இல்லை சக்தி… இப்போ நான் கேட்ட மன்னிப்பு அவங்க அவசரப்பட்டு பேசினதுக்கு தான். மத்தபடி அவங்க பேசின விஷயம் அத்தனையும் உண்மை தான்” என்று கூறி அவளை அதிர வைத்தான்.
“சார்….”
“நோ.. கால் மீ கிஷோர்… நான் உன்னை ரொம்பவே நேசிக்கிறேன் சக்தி.. நீ என்னோட மனைவியா வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன். நான் மட்டும் இல்லை… கல்யாணத்துக்குப் பிறகு உன்னையும் ரொம்ப சந்தோசமா வச்சுப்பேன். இதை உன்கிட்டே ஒருநாள் பொறுமையா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள அப்பாவும், அம்மாவும் அவசரப்பட்டு உன்கிட்டே சொல்லிட்டாங்க…”
“மன்னிக்கணும் சார்.. எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை…”
“இதுவரையில் இல்லை… இனிமேல் வரலாம் இல்லையா?”
“அதுக்கு வாய்ப்பு இல்லை… என் மனசில் உங்களுக்கு இடம் இல்லை சார்.. நீங்க வேற யாரையும் கல்யாணம் செஞ்சுகோங்க…”
“எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன்னோட தான் சக்தி…”
“அது நடக்காது ..நடக்கவே நடக்காது…”என்று குரலை உயர்த்தி கத்தினாள் சக்தி.
“நான் நடத்தி காட்டாமல் விட மாட்டேன் “ என்று குரல் உயர்த்தாமல் கிஷோர் பேச சக்தியின் உடல் நடுங்கத் தொடங்கியது.
“இல்லை சார்.. என் மனசில் வேற ஒருத்தர் இருக்கார்.. அவரைத் தான் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்.. உங்க மனசில ஆசையை விதைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் இல்லை. வீணா இப்படி ஒரு நினைப்பை வளர்த்துக்க வேண்டாம்…” என்று தீர்க்கமாக சொன்னவளை துளைக்கும் பார்வையுடன் பார்த்தான் கிஷோர்.
“நீ யாரை காதலிக்கிறாய் சக்தி?” என்றவனின் பார்வை அவள் உள்ளத்தை ஊடுருவி செல்வதைப் போல இருக்க… உடலில் ஓடிய நடுக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அது உங்களுக்கு தேவை இல்லாதது சார்…”
“என்னை தவிர்க்கிறதுக்காக இப்படி பொய் சொல்லுறியோன்னு எனக்குத் தோணுது” என்றான் அவளை பேச வைத்து விடும் நோக்கோடு…
“இல்லை.. நான் உண்மையிலேயே அவரை விரும்பறேன். அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்”
“ம்ம்ம்.. சரி அப்போ சொல்லு.. அவர் யாரு? அவரை எப்போ பார்த்த? எங்கே இருக்கார்? இப்போ என்ன செய்றார்? உங்களில் யார் காதலை முதலில் சொன்னது?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்க… சக்தியின் முகத்தில் திகைப்பு வந்தது.
“அ… அதை எல்லாம் நீங்க எதுக்காக கேட்கறீங்க?”
“சும்மா தெரிஞ்சுக்கத் தான்… சொல்லேன்”
“இல்லை.. உங்ககிட்டே சொன்னா அவரை எதுவும் செஞ்சுடுவீங்க.. நான் சொல்ல மாட்டேன்”
“எனக்கு ஒரு சந்தேகம் சக்தி…”
“எ..என்ன?” என்றவளின் பார்வை அவனது அமர்த்தலான குரலிலும், தீர்க்கமான பார்வையிலும் நடுங்கிக் கொண்டு இருந்தது.
“ஒருவேளை நீ விரும்பற ஆளை இனி நீ சந்திக்கவே இல்லைனா… அப்போ எனக்கு உன்னோட வாழ்க்கையில் இடமிருக்குமா?”
“இ..இல்லை.. கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சு வாழத் தான் போறோம்…”
“வரலைன்னா…” மீண்டும் அதே கேள்வியை முன்பை விட அதிக அழுத்தத்துடன் கேட்டவனை பயத்துடன் பார்த்தாள் சக்தி. அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. தடுமாறத் தொடங்கிய கால்களை இழுத்துப் பிடித்து அவன் அருகில் நெருங்கி வந்தாள்.
“அவர் நிச்சயம் வருவார்…”
‘வர மாட்டான்…”
“ஏ..ஏன்?”
“அவனை நான் கொன்னுட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி கண்களை இறுக மூடிக் கொண்டு சொன்னவன் மீது வெறியோடு பாய்ந்தாள் சக்தி…
“இல்லை.. நீ… நீ… பொய் சொல்லுற.. அவருக்கு எதுவும் ஆகல.. எனக்குத் தெரியும். என்னோட உள்ளுணர்வு பொய் சொல்லாது. அவருக்கு எதுவும் ஆகல…”
“வீண் கற்பனை வேண்டாம் சக்தி.. அவனை நான் தான் கொன்னேன். இனி அவன் உன் வாழ்க்கையில் வர முடியாது” என்று மீண்டுமாக அழுத்தி சொல்ல.. வெறி வந்தவள் போல அவனை நெருங்கினாள். தன்னுடைய ஆத்திரம் தீருமட்டும் கிஷோரின் நெஞ்சில் வேகமாக அடித்தவள் கண்கள் சொருகி, வேரறுந்த கோடி போல சாய… மின்னலென அவளை தாங்கிக் கொண்டான் கிஷோர்.
“என்னை மன்னிச்சுடு சக்தி.. கத்தி எடுக்காம ஆபரேசன் செய்ய முடியாது.. உனக்கு வலிக்கும்னு தெரிஞ்சே தான் இப்படி பேசினேன். இனியும் தள்ளிப் போட்டு நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் வீணாக்க நான் விரும்பல…” என்று சொன்னவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு ஆபிசில் எல்லாரும் வாயைப் பிளந்து பார்ப்பதை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் காரில் அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு விட்டான் புயலென.
உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12 tamil novels
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
4
+1
+1
+1
+1