உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 14 tamil novels

0
218

அத்தியாயம் 14
சக்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் தகவலை தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்தவன் அவள் கண் விழிக்கும் நொடிக்காக காத்திருக்கத் தொடங்கினான். தலை கலைந்து, உடை கசங்கி முகம் இறுக அமர்ந்து இருந்த மகனைக் கண்டதும் பெற்றவர்கள் இருவரும் கலங்கித் தான் போனார்கள்.
காய்ந்து போன கொடி போல படுக்கையில் இருந்த சக்தியைப் பார்த்ததும் அவர்களை பதற்றம் தொற்றிக் கொண்டது.
“டேய்..என்னடா ஆச்சு சக்திக்கு? ஏன் இப்படி இருக்கா?”
“என்னை எதுவும் கேட்காதீங்க அம்மா… அவளை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. என்னைப் பார்த்தா அவ கோபப்படுவா.. அழுது ஆர்ப்பாட்டம் செய்வா.. இரண்டுமே அவளை பாதிக்கும்”
“என்னடா செஞ்சு வச்சே அவளுக்கு கோபம் வர்ற அளவுக்கு” என்று மகனின் முகத்தை உற்றுப் பார்த்தார் இராமமூர்த்தி.
“அப்பா.. ப்ளீஸ் இப்போ எதையும் பேச வேண்டாம்… இப்போதைக்கு நீங்க சக்தியை பார்த்துக்கோங்க.. எல்லாத்தையும் உங்களுக்கு அப்புறமா சொல்றேன்” என்றவன் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட பெற்றவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டனர்.
சில மணி நேரம் கழித்து கண் விழித்த சக்தி முதலில் தேடியது கிஷோரைத் தான்.
“அவர் எங்கே?”
“யாரும்மா?”
“உங்க பையன்.. அந்த கொலைகாரன் எங்கே?” என்றாள் ஆத்திரம் அடங்காமல்…
“சக்தி என்ன வார்த்தை பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசறியா?” கமலத்திற்கு கோபம் வந்தது.
“ஏன் புரியாம.. என்னை சமாளிக்க முடியாதுன்னு உங்க கிட்டே தள்ளி விட்டுட்டு ஓடிட்டாரா.. எங்கே அந்த பாவி”
“இப்படி எல்லாம் பேசாதே சக்தி… கிஷோர் யாருக்கும் மனதால் கூட கெடுதல் செய்ய மாட்டான். இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தான். ஏதோ வேலை இருக்குனு இப்போ தான் கிளம்பினான்”
“அவரை உடனே வர சொல்லுங்க… எனக்கு அவர்கிட்டே பேசணும்…”
“இல்லம்மா இப்போ நீ நல்லா ஓய்வு எடு… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்” என்று கமலம் பொறுமையாக எடுத்து சொல்ல… சக்தியால் அமைதியாக இருக்கவே முடியவில்லை.
“இல்லை… நான் அவரை இப்பவே பார்த்தாகணும்… வர சொல்லுங்க” என்று பிடிவாதம் பிடித்தாள் சக்தி. ஆத்திரத்தில் கையில் கிடைத்த பொருளை எல்லாம் உடைக்கத் தொடங்கினாள். வேறு வழியின்றி கிஷோருக்கு தகவலை தெரிவிக்க… பெற்றவர்களை வீட்டிற்கு புறப்பட சொன்னவன் அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு சாவதானமாக வந்தான்.
கட்டிலில் படுத்து கண்களைக் கூட மூடாமல் வாசலையே பார்த்து அவனின் வருகைக்காக காத்திருந்த சக்தியைக் கண்டதும் அவன் நெஞ்சில் யாரோ கத்தியை விட்டு திருகியதை போல வலித்தது.
“உங்களுக்கு அவரைப் பத்தி என்ன தெரியும்? எப்படி தெரியும்? அவர் இப்போ எங்கே இருக்கார்? எப்படி இருக்கார்?”… என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கியவளை இருண்டு போன முகத்துடன் பார்த்தான் கிஷோர்.
“எத்தனை முறை கேட்டாலும் என்னோட பதில் ஒண்ணு தான் சக்தி.. நான் அவனை கொன்னுட்டேன். இனி அவனுக்கு உன்னோட வாழ்க்கையில் இடமில்லை… என்னை தான் நீ கல்யாணம் செஞ்சாகணும்” என்று சொன்னவனை கண்டதும் உடல் பதறியது அவளுக்கு.
“நீ..நீ என்னை ஏமாத்த பார்க்கிற.. அவருக்கு எதுவும் ஆகல…”
“உன்னை ஏமாத்தி எனக்கு என்ன ஆகப் போகுது?”
“என்னை கல்யாணம் செஞ்சுகிறதுக்காக இப்படி பொய் சொல்லுற”
“ஓ.. நீ என்னை கல்யாணம் செஞ்சுக்க வேண்டாம்.. வே… வேற ஒரு நல்ல பையனா பார்த்து நா.. நானே கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்” தொண்டையில் இருந்து வார்த்தைகள் வெளிவர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தாலும் அதையும் மீறி பேசினான் கிஷோர்.
“எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீ யார்? அவரை என்ன செஞ்சே.. அதை முதலில் சொல்லு”
“உனக்கு நல்லது நடந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் சக்தி… ஆனா அவன் மட்டும் உனக்கு வேண்டாம்”
“அவரைத் தவிர வேற யாரும் எனக்கு வேண்டாம்” தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தாள் சக்தி.
“அவன் நல்லவன் இல்லை சக்தி.. அவனைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது…”
“அவரைப் பற்றி நீ சொல்லி தெரிஞ்சுக்கும் நிலையில் நானும், என்னுடைய காதலும் இல்லை. இவ்வளவு தூரம் என்னைப் பற்றியும் , அவரைப் பற்றியும் தெரிஞ்ச உனக்கு அது தெரியாமல் போயிடுச்சா?”
“ஹ..வாய் பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு சக்தி… ஆனால் அவனை பத்தின உண்மை தெரிஞ்சா நிச்சயம் நீ அவனை திரும்பிக் கூட பார்க்க மாட்டே”
“பேசியே நேரத்தை வீணாக்க வேண்டாம்… அப்படி என்ன தான் செஞ்சார்னு சொல்லுங்க… உங்களால முடியாது.. சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருந்தா தானே?”
“இதோ பார் சக்தி… தேவை இல்லாத பேச்சுக்கள் வேண்டாம். அவன் உனக்கு இணையானவன் இல்ல.. அவனை மறந்துடு.. வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்கோ.. அது தான் உனக்கு நல்லது” என்று மீண்டும் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக சொன்னவனின் பேச்சில் அவளுக்கு ஆத்திரம் வந்தது.
“இனி உங்க கிட்டே பேசி எந்த பலனும் இல்லை. நான் என்னோட வேலையை ராஜினாமா செய்றேன்… நாளைக்கே வந்து என்னோட பொறுப்புகளை முடிச்சு கொடுத்துட்டு போறேன்” என்று சொன்னவள் அங்கே நிற்கக் கூட பிடிக்காமல் கிளம்பி சென்று விட கிஷோர் உன்மத்தம் பிடித்தவனைப் போல ஆகினான்.
“இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்… ஆண்டவா.. என்னோட சக்திக்கு நீ தான் புரிய வைக்கணும்” என்று சொன்னவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here