உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3

0
1047

அத்தியாயம் 3

கண் முழித்ததும் ப்ரியா முதலில் தேடியது அறையில் இருந்த கடிகாரத்தைத் தான்…

“மணி எத்தனை?… இருட்டிப் போய் இருக்கே… அச்சச்சோ மணி எட்டு ஆகிடுச்சா? பரிட்சைக்கு படிக்கணுமே…. நேரம் ஆகிடுச்சு” என்று அலறியவள் வேகமாக எழுந்து தன்னுடைய பாட புத்தகங்களைத் தேடத் தொடங்கினாள்.

தான் புது இடத்தில் இருக்கிறோம் என்ற பிரக்ஞை கொஞ்சமும் இல்லாமல் அவள் தன்னுடைய தேடலைத் தொடர…. அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த உருவத்தை கவனிக்காமல் போனாள்.

“ப்ரியா” என்ற குரல் புதிதாக இருக்க… அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கே நின்ற ஒரு பெண்மணியை கொஞ்சம் குழப்பமாக பார்த்தாள்.

“ஹாய்… நான் ஜெயா….” நெடுநாள் பழகியவரைப் போல பேசினார்.

“ம்ம்ம்.. வாங்க .. வாங்க..நீங்க அப்பாவுக்கு சொந்தமா? இல்லை அம்மாவுக்கு சொந்தமா?” “அது…” என்று அவர் தயங்குகையில் ப்ரியா தொடர்ந்து பேசினாள். “அப்பா இன்னும் வேலை முடிஞ்சு வரலை போல… எனக்கு வேற பசிக்குது” ஜெயா என்ற ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்து போனவளாய் அவள் தன்னுடைய போக்கில் பேசிக் கொண்டே தன்னுடைய தேடலைத் தொடர… முகம் மாறாமல் இன்முகத்தோடு ஜெயா பேசினார்.

“என்ன தேடறீங்க ப்ரியா?” “ஹாங்… என்னோட புத்தகத்தைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். வீட்டில் எப்பவும் என்னோட கட்டிலுக்கு பக்கத்தில் தான் வச்சு இருப்பேன். இங்கே கட்டிலுக்கு பக்கத்தில் காணோமே…”என்றாள் குழந்தையாக…

“புத்தகம் எதுக்கு ப்ரியா இப்போ?”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க? நாளைக்கு எனக்கு பரிட்சை இருக்குல்ல… அதுக்கு படிக்கணும்ல…”

“என்ன பரிட்சை ப்ரியா?”

“அது..அது… அது வந்து.. ஆங்.. பயாலஜி இல்லை.. மேத்ஸ்… இல்லையில்லை பயாலஜின்னு தான் நினைக்கிறேன்.” “அதை ஏன் இவ்வளவு சந்தேகமா சொல்ற ப்ரியா? உனக்கு நியாபகம் இல்லையா?”

“எனக்கு..அது.. ம்ச்… தலைவலிக்குது.. அப்பா எங்கே போனார்? எனக்கு பசிக்குதே…”

“வா ப்ரியா சாப்பிடலாம்…”

“அப்பா வந்துடட்டுமே…”

“என்ன ப்ரியா மறந்துட்டியா? உங்க அப்பா தானே இன்னிக்கு காலையில் உன்னை இந்த ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டு போனார்” அவளின் முக உணர்வுகளை படித்தபடியே பேசினாள் ஜெயா.

“ஓ..அப்படியா? ஆனா ஏன்?”

“இங்கே தான் உனக்கு நீட் எக்ஸாம்க்கு கோச்சிங் கிளாஸ் கூட இருக்கு.. அதனால தான்”

“கோச்சிங் கிளாசா? ஆனா அப்பா கிட்டே அவ்வளவு பணம் கிடையாதே”

“இது உனக்கு ப்ரீ தான் ப்ரியா… உன்னோட மார்க்கை வச்சு மெரிட்ல இந்த சீட் கிடைச்சு இருக்கு.. தூக்க கலக்கத்தில் எதுவுமே நியாபகம் வரலியா ப்ரியா உனக்கு” அது தான் உண்மை என்பது போல அடித்துப் பேச, ப்ரியா அதை மறுத்து எதுவுமே பேசாமல் தன்னுடைய தேடலை மட்டுமே தொடந்து கொண்டு இருக்க… ஜெயாவின் முகத்தில் கனிவான புன்னகை வந்து போனது.

“ப்ரியா… இப்போ ராத்திரி எட்டு மணி… முதலில் சாப்பிடு.. அப்புறம் பொறுமையா உன்னோட புக்கை தேடி எடுத்து படிக்கலாம்…” என்று சொல்ல அதில் அவள் சமாதானம் அடையவில்லை.

“இல்லை.. சாப்பிடும் பொழுது கூட விடாமல் படிச்சா தான் என்னால நல்ல மார்க் எடுத்து நீட் எக்சாமில் பாஸ் பண்ண முடியும்”

“புக்கை வச்சு படிச்சுகிட்டே சாப்பிட்டா.. மூளையில் பதியாதுன்னு இப்போ புதுசா ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு சொன்னாங்களே.. அது உனக்குத் தெரியாதா?”

“ஆங்…அது.. ஓ.. எனக்குத் தெரியுமே”

“அப்புறம் என்ன? சாப்பிட்ட பிறகு வந்து படிச்சுக்கலாம் வா” “சாப்பிட்ட பிறகு தேவைப்படும் தானே…. அதுதான் தேடுறேன்…” பிடிவாதமாய் அவள் மீண்டும் தேடலைத் தொடர…

“சாப்பிட பிறகு நானும் சேர்ந்தே வந்து தேடுறேன்.. இப்போ வா” என்று அவள் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்து செல்ல… அப்பொழுதும் கூட அறையை விட்டு வெளியேறும் வரை அந்த அறையில் புத்தங்கங்கள் எங்கேயும் இருக்கிறதா? என்று கண்களால் தேடியபடியே வெளியேற… அதை கண்டும் காணாதவர் போல அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியேறினார் ஜெயா.

எதை எதையோ பேசியபடி அவளை உணவு உண்ண வைத்தவர் மீண்டும் அறைக்குள் கூட்டி வந்தார். வெறுமனே அவள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை கொடுக்க.. அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டவள் அதில் இருந்த ஒரு வார்த்தையைக் கூட படிக்காமல் மடியில் புத்தகத்தை விரித்து வைத்து, விட்டத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள். அதன் பிறகு அசையவே இல்லை.

சில மணி நேரங்கள் நின்று அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்த ஜெயா, எந்த மாற்றமும் இல்லாமல் அவள் அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அறையை விட்டு சத்தமில்லாமல் வெளியேறி மாடியை வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் பரபரப்புடன் எழுந்து நின்றான் ரவி.

“டாக்டர் அவள்… எப்படி இருக்கா? ரொம்பவும் பிரச்சினை செய்தாளா? அவங்க அப்பாவை கேட்டு அழுதாளா? சாப்பிட்டாளா?…” என்று மூச்சு விடாமல் அடுக்கிக்கொண்டே போக சிரித்த முகம் மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார் மனநல மருத்துவர் ஜெயா.

“ரிலாக்ஸ் ரவி… நீங்களும் குழந்தை மாதிரியே நடந்து கொண்டால் எப்படி?” என்று லேசாக அதட்ட கண்களை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

“இப்போ சொல்லுங்க டாக்டர்… அவளோட மனநிலை எப்படி இருக்கு?” என்றான். அவனது முகம் உணர்ச்சிகள் தொலைத்து கற்பாறையாக இருந்தது.

“அவ நேற்று… இல்லையில்லை… கடந்த சில மாதங்களா என்ன மனநிலையில் இருக்காளோ அதே மனநிலையில் தான் இப்பவும் இருக்கா.. ஒரு துளி கூட மாறல…”

“அவங்க அப்பாவை…”

“இல்ல… அவளோட புத்தகத்தைத் தான் தேடினா”

“கடவுளே.. இப்போ என்ன செஞ்சுட்டு இருக்கா டாக்டர்…”

“இதுக்கும் அதே பதில் தான்..கடந்த சில மாதங்களா எப்படி பகலில் தூங்கி இரவில் விட்டத்தை வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தாளோ அதே மனநிலையில் தான் இப்பவும் இருக்கா”

“என்ன செய்றது டாக்டர்? அவளை பழையபடி மாத்திடலாம் தானே?” தவிப்புடன் வெளிவந்தது கேள்வி.

“நிச்சயமா? ஆனா..அதுக்கு…”

“எவ்வளவு பணம் செலவானாலும் நான் பார்த்துக்கிறேன் டாக்டர்”

“ஹா ஹா.. பணத்தால் எல்லாத்தையும் சரி செய்ய முடியாது மிஸ்டர் ரவி… இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.. “

“அவ எதையாவது இயல்பா செய்றாளா டாக்டர்?”

“ம்ம்ம்.. சாப்பிடறது தானே செஞ்சுக்கிறாங்க… ஆனா தூக்கம் கஷ்டம் தான்… ஏற்கனவே அவங்க அப்பா அவங்களை தினமும் தூக்க மருந்து கொடுத்து தான் தூங்க வச்சு இருப்பார்னு நினைக்கிறேன்”

“ஆ..ஆமா டாக்டர்..அப்படித்தான் என்கிட்டேயும் சொன்னார்”

“பயப்பட வேண்டாம் ரவி… கூடிய சீக்கிரமே அவங்களை பழையபடி மாத்திடலாம்… அதுக்கு நான் கேட்கிற உதவிகளை மட்டும் நீங்க செஞ்சு கொடுத்தா போதும்”

“கண்டிப்பா டாக்டர்… வந்து” என்று சொன்னவன் கொஞ்சம் தயங்க…

“சொல்லுங்க ரவி…

“இப்படி ஒரே ஒரு ரூம் மட்டும் இருக்கிற சின்ன வீட்டில் உங்க இரண்டு பேரையும் தங்க வச்சு இருக்கேன்னு வருத்தப்பட வேண்டாம் டாக்டர். ப்ரியா எப்பவும் உங்க கண்ணெதிரில் இருந்தா நல்லதுன்னு தோணுச்சு.. என்னால இந்த வீட்டில் உங்களுக்கு உதவியா நிறைய பேரை வேலைக்கு வைக்க முடியும் டாக்டர். ஆனா ப்ரியா கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு. இவ இப்படி மனநிலை சரியில்லாம இருக்கிறது வெளியில் தெரியறது அவளோட எதிர்கால வாழ்க்கையை பாதிக்கலாம். அதனால தான்” என்று தயக்கமாக இழுக்க.. புரிந்து கொண்டதாக சொல்லி மெல்ல தலை அசைத்தார் ஜெயா.

“அதுவும் இல்லாம நீங்க ரொம்ப பிஸியான டாக்டர்… யாருக்கும் இப்படி வீட்டில் தங்கி நீங்க வைத்தியம் பார்த்தது கிடையாது. நம்ம பேமிலி பிரண்ட்ஸ் அப்படிங்கிறதால தான் இதை ஒத்துக்கிட்டு இருக்கீங்க.. அதுக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன்.”

“நமக்குள்ளே நன்றி எல்லாம் அனாவசியம் ரவி.. ப்ரியாவை குணப்படுத்துறது அப்படிங்கிறது எனக்கு நீங்க கொடுத்து இருக்கிற சவாலாகத் தான் நான் பார்க்கிறேன். அப்புறம் இன்னொரு விஷயம் ரவி.. அடிக்கடி இங்கே வர வேண்டாம் . எதுவா இருந்தாலும் போனில் பேசுங்க… மற்ற விவரம் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ நீங்க கிளம்பலாம்”

“சரி டாக்டர்.. நாளையில் இருந்து நான் இங்கே வரலை… வீடு முழுக்க சிசிடிவி கேமரா வச்சு இருக்கேன். உங்க பாதுகாப்புக்கு வீட்டுக்கு வெளியே எனக்கு நம்பிக்கையான ஆளை வாட்ச்மேனா வச்சு இருக்கேன். வேளா வேளைக்கு சாப்பாடு உங்களை தேடி வரும். வேற என்ன தேவையா இருந்தாலும் எனக்கு உடனடியா போன் செய்ங்க…”

“ஒரு நிமிஷம் ரவி…. ப்ரியாவுக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியக்கூடாது அப்படின்னு நீங்க எடுத்த முடிவில் இப்பவும் உறுதியா இருக்கீங்க தானே?”

“நிச்சயமா டாக்டர்” என்று உறுதி அளித்தவன், தன்னுடைய மனதின் சோகத்தை மறைப்பதற்காக , வேக நடையோடு அங்கிருந்து செல்ல… லேசான புன்னகையுடன் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தார் ஜெயா. மனநல மருத்துவரால் அவனது மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடியாதா என்ன?        

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here