உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4

0
929

சக்தி வேலையில் சேர்ந்து ஒரு மாதம் தாண்டி இருந்தது. சக்தியைப் பற்றி யாராலும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை .மற்றவர்களின் கணிப்பிற்கு அப்பாற்பட்டவளாக இருந்தாள்.

ஆணோ ,பெண்ணோ அலுவலகத்தில் யாரிடமும் தேவை இன்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை. தானுண்டு.. தன் வேலையுண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் வேலை பார்த்து வந்தாள்.

வந்த ஒரு மாதத்தில், அவளது உழைப்பையும், வேலையில் அவளுக்கு இருந்த அர்பணிப்பையும் பார்த்து உண்மையில் கிஷோர் வியந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். சொல்லும் வேலைகள் அனைத்தையும் கற்பூரம் போல எளிதில் கற்றுத் தேர்ந்தாள் சக்தி.

சக்தியின் மீது அங்கிருந்த எல்லாருக்கும் நல்ல மதிப்பு ஏற்பட்டது. உண்மையை சொல்லப் போனால் முதல் நாள் அவளிடம் எரிந்து விழுந்த அந்த மேனேஜர் முதல் அந்த ஆபிஸின் கடைக்கோடி உதவியாளர் வரை அவளது திறமையில் மிரண்டு போய் இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கடிவாளம் கட்டிய குதிரை போல அவளது கவனம் முழுக்க வேலையில் மட்டுமே இருந்தது. அன்றைய வேலை முடிந்து கிளம்புவதற்கு நினைத்த சக்தியை அழைத்து பேசினான் கிஷோர்.

“சக்தி நாளைக்கு நீங்க ஆபிஸ் வர வேண்டாம்…”

“ஏன் சார்?”

“உங்க வீடு எங்கே இருக்கு சக்தி?” என்றவனின் கேள்விக்கு அவளது பார்வை கண்ணகியை போல மாற.. வேகமாக தலையில் கை வைத்துக் கொண்டான் கிஷோர்.

“சக்தி இன்னும் இரண்டு நாளைக்கு உங்களுக்கு இங்கே வேலை இல்லை… நம்ம பாக்டரியையும், நம்ம நிலங்களையும் பார்வையிடப் போறோம். அதனால உங்க வீட்டுக்கே நான் வந்து காரில் கூட்டிட்டுப் போறேன்னு சொல்ல வந்தேன்”

“தேவை இல்லை சார். நான் ஆபிசுக்கே வர்றேன். அது உங்களுக்கு பிடிக்கலைனா வழியில் ஏதாவது ஒரு பஸ் ஸ்டாப்பில் நான் காத்திருக்கிறேன். அங்கே வந்து என்னை அழைச்சுட்டு போங்க…” என்றாள் கறாராக…

“ஏழ்மையானவர்களை கண்டு என்றுமே நான் கேலி பேசி சிரித்ததில்லை சக்தி” என்றான் ஆழ்ந்த குரலில்…

“…”

“அப்போ உங்க வீட்டுக்கு நான் வர்றதை நீங்க விரும்பலை.. அப்படித்தானே?”

“…”

“உங்க பயோ டேட்டாவை எடுத்து பார்த்தா அடுத்த நிமிஷமே என்னால உங்க வீட்டு அட்ரசை கண்டு பிடிக்க முடியும் சக்தி… அது உங்களுக்கும் தெரியும்.. இருந்தும் இது போல சின்னபிள்ளைத்தனமான எண்ணம் ஏன் சக்தி?”

“அனாவசிய பேச்சுக்கள் வேண்டாம் சார். எனக்கு நேரமாகிடுச்சு.. நாளைக்கு எங்கே காத்திருக்கட்டும்?” என்று அவளது பிடியிலேயே அவள் தீர்மானமாக நிற்க… ஒரு பெருமூச்சுடன் பேச்சை தொடர்ந்தான் கிஷோர்.

“ஆபிசுக்கு வரும் வழியில் இருக்கே கோவில் பஸ் ஸ்டாப் அது உங்களுக்கு வசதியா இருக்குமா?”

“பக்கம் தான் சார்… எனக்கு ஓகே தான்”

“சரி.. அப்படின்னா அங்கே காலையில் ஒரு எட்டு மணிக்கு வந்திடுங்க… நாம கொஞ்சம் ட்ராவல் செஞ்சு போக வேண்டி இருக்கும். அதனால தான் சீக்கிரம் வர சொல்றேன்” என்று விளக்கம் அளிக்க.. மறுத்து பேசாமல் தலை ஆட்டி சம்மதித்தவள் விடை பெற்று கிளம்ப.. கிஷோரின் முகம் யோசனையானது.

‘இவ்வளவு தூரம் மற்றவங்களை நெருங்கவே யோசிக்கிறவளுக்கு நான் தினமும் அவள் வீடு போய் சேரும் வரை தொடர்ந்து வருவது தெரிந்தால் என்ன ஆகுமோ? கடவுளே… இதுக்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்டணும். ஆபிசில் அவளிடம் தனித்து பேசவே முடியலை. அப்படியே ஒரு வார்த்தை பேசினாலும் பார்வையிலேயே தள்ளி வச்சிடறா..சரி வீட்டுக்கு போய் நல்ல முறையில் எல்லாத்தையும் செய்யலாம்னா ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திட்டா… இந்த இரண்டு நாளையும் நல்ல படியா பயன்படுத்திக்கணும்.’ என்று எண்ணியவன் தன்னுடைய அடுத்த வேலையான அவளை பின் தொடரும் வேலையை செவ்வனே செய்தான்.

அவள் பஸ்ஸில் ஏறி பாதுகாப்பாக வீட்டிற்கு சென்று சேரும் வரை சிறிதளவு இடைவெளி விட்டு தொடர்ந்து வந்தவன் யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தன்னுடைய காரில் வராமல் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்திருந்தான் எப்பொழுதும் போல.

அதை செய்யாமல் போனால் அவனால் இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. பணம் கொடுத்தால் இதை எல்லாம் செய்வதற்கு எத்தனையோ ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள். ஆனால்  அவளை இப்படி பின் தொடரும் வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

அவள் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்து விட்டதை தானே தன்னுடைய கண்ணால் நேராக பார்த்தால் மட்டுமே அவனுக்கு திருப்தியாக இருந்தது. கிஷோரின் பகல் பொழுதுகளையும், இரவுப் பொழுதுகளையும் சக்தியின் நினைவுகளே ஆக்கிரமித்தன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவனைக் கவர்ந்தாள் சக்தி. அவளை தன்னுடைய கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளும் நாளை ஆர்வமுடன் எதிர்பார்க்கத் தொடங்கினான் கிஷோர். மறுநாள் காலை அவள் சொன்ன நேரத்திற்கு வந்து பஸ் ஸ்டாப்பில் அவனது கார் நிற்கவும், அவள் வந்து சேரவும் சரியாக இருக்க… பேச்சுக்கள் தேவையின்றி காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் சக்தி.

வெள்ளை நிறத்தில் சிகப்பில் பூ போட்ட புடவை அணிந்து இருந்தவள்  தலையில் சூடி இருந்த மல்லிகையை ரசித்தபடியே அவளை ஏக்கத்துடன் பார்வையிட்டன கிஷோரின் விழிகள்.

‘ராட்சசி.. அழகா இருந்தே என்னை கொன்னு திங்கிறா… ஒரு முறையாவது என்னை நிமிர்ந்து என்னோட முகத்தை நேருக்கு நேரா பார்க்கிறாளா பார்… அப்படிப் பார்த்தா தானே என்னோட கண்ணில் இருக்கிற காதலை உணர முடியும்.’

“ஏன் சக்தி இப்படி தனியா என்னோட கிளம்பி வர்றீங்களே… உங்களுக்கு பயமா இல்லை?” வேண்டுமென்றே அவளை சீண்ட… அவள் பதிலே சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“கார் இப்போ பாதை மாறிப் போனா என்ன செய்வீங்க சக்தி?” அவளின் மௌனத்தை உடைக்க முயன்றான் கிஷோர்.

“…”

“உங்க அமைதிக்கு காரணம் என்ன சக்தி? ஹேண்ட் பேகில் கத்தி எதுவும் மறைச்சு வச்சு இருக்கீங்களா? பாதை மாறிப் போனா எடுத்து சதக்குன்னு குத்துற ஐடியாவில் எதுவும் இருக்கா? எதுவா இருந்தாலும் முன்கூட்டியே சொல்லிடுங்க சக்தி.. நான் கொஞ்சம் உஷாரா இருப்பேன்” என்றவன் போலியாக பயப்பட அவனை திரும்பியும் பாராமல் மொபைலை நோண்டியபடி அவனுக்கு பதில் அளித்தாள் சக்தி.

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு சார்… நீங்க நல்லவர்.. சும்மா என்னை சீண்டுறதுக்காக இப்படி பேசி உங்க எனெர்ஜியை வேஸ்ட் செய்யாதீங்க” என்று சொன்னவள் மொபைலில் மூழ்கி விட அவள் சொன்னதை கேட்டு சந்தோசம் அடைவதற்கு பதிலாக அவன் முகம் வருத்தமடைந்தது.

“உன்னோட நம்பிக்கையில் தீயை வைக்க… மனுஷன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கான்… நம்பிக்கையாம் நம்பிக்கை… எனக்கு உங்ககிட்ட நல்லவன்னு பேர் எடுக்க விருப்பம் இல்லை சக்தி… இப்படி என்மேல அதிகமா நம்பிக்கை வச்சு என்னோட கையை கட்டிப் போடாதே. எனக்கு எப்பவும் நீ பக்கத்தில் இருந்தா மூளை குறுக்குவாட்டில் தான் யோசிக்குது. இப்போ கூட உன்னை அப்படியே…” என்று தனக்கு மட்டும் கேட்குமாறு மெல்லிய குரலில் முணுமுணுக்க … நல்லவேளை அது எதுவும் சக்தியின் காதுகளில் விழவில்லை.

பாதி வழியில் அவர்களுடன் கம்பெனி ஆடிட்டரும் சேர்ந்து கொள்ள அதன்பிறகு காரில் தொழில் முறை பேச்சுக்கள் மட்டுமே நடந்தது. ஆடிட்டரின் கேள்விகள் அனைத்திற்கும் கிஷோர் விளக்கம் அளித்துக் கொண்டு இருக்க இருவர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்து வந்தாள் சக்தி. அங்கே போனதும் தன்னுடைய இந்த அமைதியான மனநிலை மாறப்போவது அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.          

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here