உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6

0
816


அத்தியாயம் 6
கண்களை விரித்து அந்த பிரம்மாண்டமான இடத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் சக்தி. கண்ணை சுற்றிலும் பச்சை பசேலென செழித்து வளர்ந்து இருந்தது. கிஷோருக்கு சொந்தமான மூலிகைப் பண்ணைக்குத் தான் இப்பொழுது வந்து இருக்கிறாள். விதவிதமான மூலிகைகளின் மணம் அந்த இடம் முழுவதிலும் நிரம்பி இருக்க… அதை ரசித்தபடியே தன்னுடைய வேலையை தொடர்ந்தாள் சக்தி. அங்கே இருந்த ஒவ்வொரு செடியையும் தொடாமல் தள்ளி நின்று அதன் இலையின் அமைப்பு, பூவின் நிறம், பெயர் இவற்றை மனதில் பதிய வைத்துக்கொள்ள முயன்று கொண்டு இருந்தாள்.
“என்ன சக்தி பண்ணை எப்படி இருக்கு?” அவளின் முகத்தில் தோன்றிய பாவனைகளை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கினான் கிஷோர்.
“ரொம்ப அழகா இருக்கு சார்.. ரொம்ப பெரிய இடம்.. பராமரிக்கிறதும் கஷ்டம் இல்லையா?”
“கண்டிப்பா” தலை அசைத்து ஒத்துக்கொண்டான்.
“எங்க பாட்டனார் காலத்தில் இருந்து இதை செஞ்சுகிட்டு இருக்கோம். அப்போ இதை வெறுமனே அவர்கிட்டே வந்த நோயாளிகளின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தினாங்க.. இப்போ நம்ம கிட்டே இருந்து நிறைய ஊருக்கு போகுது…”
“இங்கே எல்லா மூலிகையும் இருக்கா சார்?”
“எல்லாமும் இல்லை.. ஏன்னா சில அபூர்வமான மூலிகைகள் இந்த சீதோஷ்ண நிலையில் கிடைக்காது. அதை தவிர பெரும்பாலான மூலிகை நம்ம கிட்டே கிடைக்கும்.”
“மூலிகையை எல்லாம் அப்படியே செடியா அனுப்புவீங்களா யாருக்கும்?”
“ஹுகும்..இல்லை சக்தி… எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை மூலிகை எல்லாம் கடவுள் மாதிரி… இன்னமும் சொல்லப் போனால் பறிக்கிறதுக்கு முன்னாடி அந்த மூலிகை கிட்டே மந்திரம் சொல்லி அனுமதி வாங்கிட்டு தான் பறிக்கவே ஆரம்பிப்போம். என்ன தான் இதை நாங்க தொழிலா செஞ்சாலும் முழுசா பணத்துக்காக மட்டுமே செய்றது இல்லை… சோ அதனால யாராவது கேட்டா பெரும்பாலும் தர மாட்டோம். ரொம்ப நம்பிக்கையானவங்க கேட்டா மட்டும் கொடுக்கிறது உண்டு.”
“வெறும் செடிகளுக்கு இத்தனை பில்டப் அவசியமா?”
“ம்ஹும்..”அவன் தலை மறுப்பாக அசைந்தது.
“அப்படி பேசக் கூடாது சக்தி… இவை வெறும் செடிகள் இல்லை உயிர்காக்கும் கடவுள்கள்… அப்பா காலத்தில் யாராவது கேட்டா செடிகளை கொடுத்து அனுப்பி இருக்கிறோம். மஞ்சளுக்கு எப்போ வெள்ளைக்காரன் பேட்டர்ன் ரைட் (Pattern Right) வாங்கினானோ அதற்குப் பிறகு அதை நிறுத்தி விட்டோம்.”
“ஓ.. இதில் இவ்வளவு விவரங்கள் அடங்கி இருக்கிறதா?” அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஆமா… வெறுமனே செடி தானேன்னு நீ சொல்ற மாதிரி யாருக்கும் தூக்கி கொடுக்க மாட்டோம். நம்ம இந்திய திருமண்ணில் விளையும் மூலிகைகள் அனைத்தும் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். அது தப்பான யார் கைக்கும் போவதற்கு நாம காரணமா இருக்கக்கூடாது அப்படிங்கிற முடிவில் தெளிவா இருக்கோம்”
“ம்ம்ம்.. இப்படி கேட்கக்கூடாது தான். இருந்தாலும் கேட்கிறேன். இப்போ தான் மருத்துவ துறையில் எவ்வளவோ முன்னேற்றம் வந்துடுச்சே… இன்னும் இந்த மூலிகைகளுக்கு எல்லாம் மவுசு இருக்குதா?” என்று கேள்வி கேட்டவளின் முகத்தில் நிச்சயம் கேலி இல்லை.. தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது.
“ஆயிரம் பேர் வரலாம் போகலாம்… ஆனா யாரும் அம்மாவுக்கு ஈடாக முடியாது இல்லையா? அது போலத் தான் நம்ம சித்த மருத்துவமும்.. இன்னும் சொல்லப் போனால் எத்தனையோ வியாதிகளுக்கு முழுமையான மருந்து சித்த மருத்துவத்தில் தான் இருக்கு… இங்கிலீஷ் மருந்து சாப்பிட்டா சாவை தள்ளிப் போடலாம்.. அவ்வளவு தான். நோயிலிருந்து முழுமையா வெளிவரணும்னா அதுக்கு சித்த மருத்துவம் தான் ஒரே வழி” என்று தெளிவாக எடுத்துரைக்க அவன் பேசுவதை கவனித்துக் கேட்டுக் கொண்டாள் சக்தி.
கிஷோர் அந்த தொழிலில் அடி முதல் நுனி வரை அனைத்து விஷயங்களையும் கரைத்து குடித்து இருந்தான். சக்தி கேட்கும் கேள்விகளுக்கு ‘உனக்கு எதற்கு அந்த தகவல்?’ என்று கேட்டு அலட்சியப்படுத்தாமல் , அவள் எது கேட்டாலும் மறைக்காமல் தெளிவாக எடுத்து சொன்னான்.
“இங்கே வெறுமனே செடி வளர்ப்பு மட்டும் தான் இல்லையா?”
“ஆமா சக்தி.. மருந்து தயாரிப்பு எல்லாம் நம்ம பேக்டரியில் தான்….”
“ஆடிட்டர் எங்கே சார்?”
“அவர் பின்பக்கம் இருக்கார். அங்கே தான் செடிகளுக்கு வாங்கிய உரங்களின் கணக்கு விவரம் இருக்கிறது. அதை எல்லாம் பார்த்துட்டு இருக்கார்…”
“நாமும் அங்கே போகலாமா சார்?”
“இங்கே இருக்கிற எல்லாத்தையும் பார்த்தாச்சா?”
“இங்கே வெறுமனே செடி வளர்ப்பு மட்டும் தானே சார்… அதை எல்லாம் இங்கே வேலை செய்றாரே ஒரு பெரியவர் ராமுன்னு அவரிடம் கேட்டு வாய்ஸ் ரெக்கார்ட் செஞ்சு வச்சுக்கிட்டேன்… வேலை எல்லாம் முடிச்ச பிறகு பொறுமையா கேட்டு தெரிஞ்சுக்கிறேன்.” என்று சொன்னவளை ஆச்சரியமாக பார்த்தான் கிஷோர்.
“எப்படி சரியா ராமுவைப் பிடிச்ச? எங்க அப்பாவுக்கு பிறகு அவர் தான் இங்கே எல்லா விவரமும் தெரிஞ்சவர்”
“அதுவா? உள்ளே வந்தவுடன் ஒரு பூவை பறிக்கப் பார்த்தேன்.. வேகமா ஓடி வந்து தடுத்துட்டார்.. அவரோட செயலில் கோபம் இல்லை அக்கறை இருந்தது. நீங்க சொன்ன மாதிரி அந்த செடியை ஏதோ கடவுள் மாத்தி ட்ரீட் செஞ்சார்.. அப்போ அது அவரோட தொழில்பக்தின்னு நினைச்சேன். அதனால அவர் கிட்டே விவரம் கேட்டேன்” என்று முடிக்க கிஷோரின் பார்வையில் மாற்றம் வந்து இருந்தது.
“நீங்க இப்படி அதிக புத்திசாலியா இருக்கிறது சரியில்லை சக்தி… போற போக்கைப் பார்த்தா கம்பெனியை நீங்க உங்க கைக்குள்ளே கொண்டு வந்துடுவீங்க போலவே” என்று கிண்டல் போல சொல்ல சக்தி லேசாக சிரித்து வைத்தாள். மின்னல் மின்னியது போல அவளின் பளிச்சென்ற புன்னகையில் தலைக்குப்புற விழுந்தான் கிஷோர்.
“இப்படி சிரிக்காதீங்க சக்தி… என்னோட மனசு ரொம்ப ஸ்ட்ராங் இல்லை… உங்க கிட்டே எப்பவுமே நான் பலவீனமா உணருறேன்”
“…”
“ஏன் சக்தி… என்ன தான் இயல்பா இருக்கிற மாதிரி நீங்க காட்டிக் கொண்டாலும் ஒரு விலக்கம் தெரியுதே? நான் மட்டும் இல்லை.. ஆபிசில் ஆண், பெண் இப்படி பாகுபாடே இல்லாமல் எல்லாரையும் தள்ளி நிறுத்தி வச்சு இருக்கீங்களே… அதுக்கு என்ன காரணம்?”
“மன்னிக்கணும் சார்.. ஆபிஸ் விஷயம் தவிர என்னோட சொந்த விஷயத்தை நான் யாரோடவும் பேசுறது இல்லை” என்றாள் நறுக்கு தெரித்தாற்போல
“இப்படி நீங்க அளவுக்கு அதிகமா உங்களைப் பற்றிய விசயங்களை மறைச்சு வைக்கும் பொழுது எனக்கு தோணுறது ஒண்ணே ஒண்ணு தான்…. உங்ககிட்ட நிறைய ரகசியமும், மற்றவங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களும் மறைஞ்சு இருக்கு. சரிதானே?” என்று துளைக்கும் பார்வையுடன் பேச… நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“அப்படியே இருந்தாலும் அதனால ஆபிசுக்கு எந்த பாதிப்பும் வராத பொழுது அதைப் பத்தி நீங்க கேள்வி கேட்பது நாகரீகம் இல்லை சார்” என்றாள் அழுத்தமாக…
“அதாவது… என்னைப் பத்தி கேட்காதேடா மடையா… அப்படி கேட்டா நீ நாகரீகம் தெரியாதவன்னு சொல்றீங்க… அப்படித் தானே?” அவன் பார்வை கொஞ்சமும் மாறாமல் அவள் மீது அழுத்தத்துடன் படிய… சக்தியும் தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டாள்.
“எனக்குத் தெரிஞ்சு அப்படித் தான் அர்த்தம் சார்” என்று கொஞ்சமும் தயங்காமல் பேசியவளின் தைரியத்தை கண்டு கிஷோர் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான்.
“முதலாளி கிட்டே பேசுறோம் அப்படிங்கிற பயமே இல்லை உங்களுக்கு அப்படித்தானே?”
“எதுக்கு சார் பயப்படணும்? நான் ஒண்ணும் சும்மா சம்பளம் வாங்கலை.. கடுமையா வேலை செய்றேன். அதுக்கு உண்டான பணத்தை சம்பளமா வாங்கிக்கிறேன். அதுக்காக உங்களுக்கு கூழைக் கும்பிடு போட நான் ஆள் கிடையாது” என்று பொட்டில் அடித்தாற் போல பேச.. கிஷோரின் முகத்தில் மின்னல் வந்து போனது.
“வெரி ஸ்மார்ட்” என்று தனக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தவன் அவள் பாராத நேரத்தில் ஓரக்கண்ணால் அவளை ரசிக்கத் தொடங்கினான். கிஷோரிடம் கோபமாக பேசிவிட்டு வேகமாக திரும்பி நடந்தவள் காலை ஏதோவொரு செடியின் வேர் தட்டி விட.. கீழே விழப் போனவளை நொடிப்பொழுதில் கைகளில் தாங்கி இருந்தான் கிஷோர்.
கீழே விழப் போகிறோம் என்ற பயத்தில் இருந்தவள் கிஷோர் தன்னை தாங்கிப் பிடித்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். கைகளில் தாங்கியவனிடம் இருந்து விடுபட அவள் போராட, கிஷோருக்கோ அந்த எண்ணம் துளியும் இருப்பதாகவே தெரியவில்லை. அவளின் முகத்திற்கு வெகு அருகில் தன்னுடைய முகத்தை கொண்டு வந்தான். நெஞ்சம் படபடக்க உறைந்து நின்ற சக்தியை மேலும் நெருங்கி முன்னேறினான்.
அவளை முத்தமிட சொல்லி… அவனது உடம்பில் உள்ள ஹார்மோன்கள் அனைத்தும் குதியாட்டம் போட…. சொன்னதை அப்படியே செய்யும் நல்ல பிள்ளையாக கிஷோரும் தாபம் சுமந்த விழிகளுடன் அவளது இதழ்களை நெருங்கினான். ஒரு நொடி தான்.. கொஞ்சம் தாமதித்தாலும் அவன் முத்தமிட்டு விடுவான் என்று தோன்ற… தன்னுடைய பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி வேகமாக அவனை தள்ளி விட்டவள் திரும்பியும் பாராமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
‘ஆஹா.. வடை போச்சே… இன்னைக்கு ஒரு கிஸ் கிடைக்கப் போகுதுன்னு நினைச்சேன். கடைசியில் இந்த ஆண்டவன் இப்படி ஆப்பு வச்சுட்டானே.. சரி இன்னொரு நாள் பார்த்துக்கலாம்… எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்டும்…’ என்று எண்ணி தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
அதன்பிறகு சக்தி அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. உள்ளம் படபடப்பாக இருந்தது.
‘அது தெரியாமல் நடந்த ஒன்றா? இல்லை வேண்டுமென்றே அப்படி நடந்து கொண்டாரா? இல்லை இதெல்லாம் என்னோட மனக் குழப்பமா? அவர் இயல்பா தானே இருக்கார்… எனக்கு மட்டும் தான் இப்படி தப்பு தப்பா தோணுதோ’ என்றெல்லாம் எண்ணி அவள் குழம்பத் தொடங்கினாள்.
அதே குழப்பம் அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் வரையிலும் ஏன்? வீடு திரும்பிய பிறகும் கூட தொடர்ந்தது. அவளுடைய குழப்பத்தை அறிந்து இருந்தாலும் அதை நீக்க கிஷோர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவளாகவே சிந்தித்து ஒரு முடிவெடுக்கட்டும் என்று எண்ணினான்.
‘என்னைப் பற்றி அவள் நினைக்க, நினைக்க.. என் மீது அவளுக்கு ஈர்ப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்’ என்று எண்ணினான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here