உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7

0
710

  அத்தியாயம் 7

ப்ரியாவின் வீட்டை பொறுத்தவரை அவள் தான் அந்த வீட்டின் முடிசூடா இளவரசி. அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையவே கிடையாது. படிப்பில் படுசுட்டியாக இருந்த ப்ரியாவிற்கு சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்பது தான் கனவு, ஆசை ,இலட்சியம் எல்லாமே…

குழந்தையாக இருக்கும் பொழுதே கூட மற்ற குழந்தைகள் சொப்பு சாமான் வைத்து விளையாட ப்ரியா மட்டும் டாக்டர் விளையாட்டு விளையாடுவாள். மகளின் ஆசை என்னவென்று தெரிந்த பிறகு பெற்றவர்கள் இருவரும் முன்னைக் காட்டிலும் அதிகமாகவே உழைக்கத் தொடங்கினார்கள்.

உழைப்பின் பயனாக பணம் குவியத் தொடங்கியது. கற்பகம் எல்லா பணத்தையும் சிறந்த முறையில் சேமித்து வந்தார். ப்ரியாவிற்காக நகைகள் வாங்கினார். சொந்தமாக வாங்கிய இடத்தில் ஆடம்பரம் இல்லாத எளிமையான வீட்டைக் கட்டினார்கள்.

வீட்டிற்கு குடி போன பின் பெரும்பாலும் ஹோட்டலில் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை வீட்டின் தோட்டத்திலேயே விளைய வைத்தார். கற்பகம் தன்னால் முடிந்த அளவு செலவுகளை குறைத்து பணத்தை சேமித்தார்.

மகேசன் இரவும் பகலும் அயராது பாடுபட்டார். ஹோட்டலை விரிவுபடுத்தியது போக மீதம் இருந்த பணத்தில் கற்பகத்தின் ஆலோசனையின் பேரில் தவணை முறையில் இரண்டு கார்கள் வாங்கினார்கள்.

‘ப்ரியா ட்ராவல்ஸ்’ உதயமானது. எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. மகேசன் முதலாளியாக சபேசனின் கண்ணில் படும் வரை…. மகேசனின் இப்பொழுது உள்ள செல்வ நிலையைப் பார்த்து அவரால் தாங்கவே முடியவில்லை.

எப்படி முடியும்? மகேசனை தொழிலில் இருந்து விரட்டிய பிறகு அவரும், அவரது மனைவியும் தொழிலில் வந்த லாபத்தில் ஒத்தைப் பைசா கூட இல்லாமல் எல்லாவற்றையும் ஆடம்பரமாக செலவு செய்து தீர்த்தார்கள். இனி மகேசனுக்கு பங்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சந்தோஷத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஆடினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தொழிலில் போட்ட பணத்தை கூட விட்டு வைக்காமல் செலவு செய்ததால் ஓரளவுக்கு மேல் தொழிலில் நஷ்டம் அடையத் தொடங்கியது. விட்டதை பிடிக்கிறேன் பேர்வழி என்று பேர் பண்ணிக் கொண்டு மனைவியின் நகைகளையும், மாமியாரின் நகைகளையும் வாங்கி விற்றவர் வந்த பணத்தை முன் போலவே தின்றே தீர்த்தார். ருசி கண்ட பூனை போல முன்னைப் போலவே சோம்பேறியாக ஊரை சுற்றி வந்தார்.

வீட்டில் மனைவியும், மாமியாரும்  நகைகளைப் பற்றி நச்சரிக்கத் தொடங்க… வீட்டிற்கு போக பயந்து தெருத் தெருவாக சுற்றும் பொழுது தான் மகேசனின் ஹோட்டல் கண்ணில் பட்டது. கடையின் கல்லாவில் மகேசனை பார்த்த பொழுது கூட அவருக்கு ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி இல்லை. கடையில் கேஷியராக வேலை பார்க்கிறார் என்றே நினைத்தார்.

பிறகு தான் அவருக்கு உண்மை தெரியவர அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சை அடைத்தது.

‘பாவிப்பய வீட்டை விட்டு வெளியே துரத்தினா சோத்துக்கு பிச்சை எடுப்பான்னு பார்த்தா இப்படி முன்னை விட பெரியாளாகி நிற்கிறானே… ஐயோ! ஐயோ! எவ்வளவு பெரிய ஹோட்டல்.. நியாயப்படி பார்த்தால் இந்த ஹோட்டலை இவன் என்னுடைய பேருக்குத் தான் எழுதி தந்திருக்க வேண்டும். பின்னே நான் வீட்டை விட்டு வெளியே அனுப்பாவிட்டால் இவனுக்கு இந்த அளவு சொத்து வந்திருக்குமா?’ என்று ரொம்பவும் நியாயமாக(!) சிந்தனை செய்தார்.

எவ்வளவோ அமைதியாக இருந்தும் அவரால் அதை அப்படியே விட முடியவில்லை. கையிலே பத்து காசு கூட இல்லாத நிலையில் மகேசனின் சொத்துக்கள் அவரை வெறியேற்றியது என்று தான் சொல்ல வேண்டும் எப்படியாவது இதை தன்னுடையதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவர் அதற்கு என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினார்.

அருமையான திட்டமும் தீட்டினார். வீட்டிற்கு போனதும் நகையைப் பற்றி பேசத் தொடங்கிய மனைவியை தனியே அழைத்து சென்றவர் தான் கண்ட காட்சிகளை கூற ,அல்லிக்கோ நெஞ்சில் ரத்தம் வந்தது.

“ஐயோ என் அண்ணன் இப்போ நல்லா சம்பாதிக்கறாரா? அப்படின்னா அவன் பொண்டாட்டிக்கு நகையா வாங்கி குமிச்சு இருப்பானே..” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழ, சபேசனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“சனியனே…எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன்.. உன்னோட நினைப்பு பூரா நகையில் மட்டும் தான் இருக்கு.. நான் மொத்த சொத்தையும் சேர்த்து சுருட்ட ஐடியா யோசிச்சுக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா?” என்று அவர் நீட்டி முழக்க… அல்லியின் முகத்தில் கவலை நீங்கி மகிழ்ச்சி வந்தது.

“அது தானே.. என் புருஷனா கொக்கா? என்ன திட்டம்ங்க..  முழுசா அந்த ஹோட்டலை எப்படியாவது என்னோட பேருக்கு மாத்திட ஏதாவது வழி இருக்குதான்னு பாருங்க” என்று சொன்ன மனைவியை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் சபேசன்.

“என்னது ஹோட்டல் மட்டுமா? அப்போ அவனோட வீட்டையும், ட்ராவல்ஸ் கம்பெனியையும் அவனுக்கே விட்டுக் கொடுக்கப் போறியா?” என்றவரின் முகத்தில் இருந்த எரிச்சல் என்னவோ அவருக்கு சொந்தமான சொத்தை விட்டுக் கொடுக்க சொல்கிறாயா என்பது போல இருக்க சட்டென்று முக பாவனையை மாற்றிக் கொண்டார் அல்லி…

“நான் அப்படி சொல்வேனாங்க.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் நம்ம வசம் கொண்டு வந்துடுங்க.. நீங்க தான் அதில் கில்லாடியாச்சே.. ஏற்கனவே நம்ம தொழிலை விட்டு அவனை அனுப்ப முடிஞ்சது தானே.. இப்பவும் முடியும்” என்று கணவனுக்கு மேலும் உரமூட்டினார் அல்லி.

“அது அவ்வளவு சுலபம் இல்லை அல்லி.. இதுக்கு முன்னாடி அவனை தொழிலை விட்டு விரட்டினோம்னா அது குடும்பத் தொழில்.. நம்ம வேலை சுலபமா போச்சு. இது அப்படி இல்லை. முழுக்க முழுக்க அவனோட உழைப்பில் வந்தது. அதுவும் இல்லாம முன்னாடி அவனுக்கு நம்ம மேல இருந்த அதே நம்பிக்கையும் ,பாசமும் இப்பவும் இருக்கிறது சந்தேகம் தான். ஒருவேளை அவனே மாறினால் கூட அவனோட பொண்டாட்டி சும்மா இருப்பான்னு நினைக்கறியா?”

“அப்படின்னா அந்த சொத்தை எல்லாம் மறந்துட வேண்டியது தானா?” ஆற்றாமை தாங்காமல் கேட்டாள் அல்லி.

“கண்டிப்பா இல்லை அல்லி.. அதெல்லாம் நம்ம சொத்து… நாம தான் அதை அனுபவிக்கப் போறோம்.. ஆனா உடனே இல்ல.. கொஞ்ச நாள் கழிச்சு” என்று சொன்னவரின் விழிகள் ஆசை வெறியில் பளபளத்தது.                                

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here