உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10

0
575

அத்தியாயம் 10

நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்க… இப்பொழுதெல்லாம் கிஷோர் சக்தியிடம் முன்பு போல சீண்டிப் பார்க்கவில்லை என்றாலும் அவனது பார்வை மட்டும் அவளையே சுற்றி வந்தது.

ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் இருந்த சக்திக்கு நாளடைவில் ஏனோ அந்தப் பார்வையை பொறுத்துப் போக முடியவில்லை.ஏதோ ஒரு விதத்தில் அவனது பார்வைகள் அவளை இம்சித்தது.

கிஷோரின் பார்வைகள் என்றுமே அத்துமீறியது இல்லை. ஆனால் அவன் கண்களில் தெரிந்த காதல், ஏக்கம், தவிப்பு இதெல்லாம் அவளை ரொம்பவே தொல்லை செய்தன.. கிஷோரின் மனதில் நினைப்பது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை எனும் பொழுது இப்படி ஆசையை வளரவிடுவது நல்லது இல்லை.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடுவது நல்லது என்று அவள் முடிவு செய்து இருந்த நேரம் காலம் கடந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அவளைத் தேடி கிஷோரின் பெற்றோர்கள் ஆபிசுக்கே வந்து விட்டனர்.

கிஷோர் வெளியில் போய் இருந்த நேரம் ராமமூர்த்தியும், கமலமும் ஆபிசுக்கு வந்தவர்கள் நேராக சக்தியை பார்த்து பேச வந்து விட, அவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் என்ன விஷயம் என்று யோசித்து தலையை குழப்பி கொண்டாள் சக்தி. அவளை அதிகம் யோசிக்க வைக்காமல் பேச்சை தொடங்கினார் இராமமூர்த்தி.

“நீதான் சக்தியா?”

“ஆ..ஆமா…”

“நாங்க யார் தெரியுமா?”

“தெரியும்.. எம்டி சாரின் பேரண்ட்ஸ்…”

“நல்லது… எத்தனை நாளாய் இங்கே வேலைப் பார்க்கிற?”

“ஆறு மாசம் இருக்கும்”

“என்ன செய்றோம்னு தெரிஞ்சு.. எல்லாத்தையும் ப்ளான் செஞ்சு தான் செய்ற போல…” என்று அதட்ட…  சக்தி துணுக்குற்றாள்.

“என்னங்க போதும் விளையாட்டு.. பிள்ளை முகமே வாடிப் போச்சு.. சும்மா விளையாடுறார்மா… என்று கமலம் சிரித்துக் கொண்டே சொன்னவர் சக்தியை தனக்கு அருகில் அமர்த்திக் கொள்ள சக்திக்கு உள்ளம் படபடப்பாக இருந்தது.

‘இது சரியில்லை’ என்று அவளது உள்ளுணர்வு அவளை எச்சரிக்கை செய்ததில் இன்னும் அதிகமாக தவித்துப் போனாள்.

“கிஷோர் இல்லாத நேரமா பார்த்து உன்கிட்டே பேசணும்னு தான் இப்போ வந்தோம் சக்தி… கிஷோருக்கு எப்பவும் உன்னைப் பற்றிய பேச்சு தான். சக்தி திறமையானவள்… அவள் அப்படி.. அவள் இப்படி என்று… இதுவரையில் எங்ககிட்டே எந்தப் பொண்ணைப் பற்றியும் அவன் பேசியது இல்லை. அது தான் உன்னைப் பார்க்க கிளம்பி வந்துட்டோம். நேரில் பார்க்க அம்சமா ரதியாட்டம் இருக்கிற சக்தி…” என்று கமலம் சொல்ல லேசான புன்னகையுடன் தலை அசைத்து அதை ஏற்றுக்கொண்டாள்.

“நிர்வாகத் திறமை கூட நிறைய இருக்கிறதா கிஷோர் சொன்னான். அவன் இல்லாத நேரத்தில் கூட கம்பெனியை நல்லா பார்த்துக்கிட்டியாமே…” என்று இராமமூர்த்தி பாராட்ட  கூச்சத்துடன் தலை அசைத்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை.. ஏதோ என்னால முடிஞ்ச அளவு…”

“உன்னோட படிப்பைக் கூட கரஸ்ல படிக்கறியாமே.. படிச்சுகிட்டே வேலை பார்க்க ரொம்பவும் திறமை வேணும் சக்தி… இன்னும் எத்தனை வருஷம் இருக்கு உன்னுடைய படிப்பு முடிய…”

“இன்னும் ஆறு மாசம் சார்…”

“மேற்கொண்டு என்ன ஐடியா சக்தி?”

“அப்படியே கரஸில் பி.ஜி. (P.G) படிக்கப் போறேன் சார்…”

“மறுபடியும் படிப்பா…. படிச்சுக்கிட்டே இருந்தா எப்போ கல்யாணம் சக்தி?” என்று கமலம் கேட்க சக்தியின் முகத்தில் வெட்க சிதறல்கள். அவளுடைய மனக்கண்ணில் ஒரு ஆணின் நிழல் வந்து போனது.

“அதுக்கென்ன அவசரம் மேடம்?” வெட்கத்தை மறைக்க போராடியபடியே கேட்டாள் சக்தி.

“எங்க வீட்டுக்கு வர்றியா சக்தி…”

“இல்லை சார்.. மன்னிக்கணும். வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்குத் தான் போவேன்.. வழியில் வேற எங்கேயும் போக மாட்டேன்” என்று அழுத்தமாக உரைக்க ராமமூர்த்தியும் கமலமும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“இன்னிக்கு ஒருநாள் வர சொல்லலை சக்தி.. மருமகளா.. எங்களுக்கு இன்னொரு மகளா…  எப்பவும் எங்க கூடவே இருக்க சம்மதமா?” என்று கேட்க… மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து போனாள் சக்தி. அதுவரை இருந்த இயல்பு நிலை மாறி பதட்டத்துடன் வேகமாக எழுந்து கொண்டாள் சக்தி. அவளின் முக பாவனையை பார்த்ததும் இருவரும் குழம்பிப் போனார்கள்.

“என்ன சக்தி.. என்னாச்சு? ஏன்மா? முகமெல்லாம் இப்படி வேர்க்குது?” என்று ஆதரவாக பேசியபடி கமலம் அவளை நெருங்க வேகமாக பின்னடைந்தாள்.

“வேண்டாம் போய்டுங்க.. எனக்கு அந்த மாதிரி எண்ணம் துளியும் இல்லை.” என்று சொன்னவள் அதற்கு மேல் அங்கே நில்லாமல் யாரிடமும் சொல்லக் கூட தோன்றாமல் பேய் துரத்துவது போல வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள். அடுத்த சில நிமிடங்களில் ஆபிசுக்கு வந்த கிஷோருக்கு நடந்ததை சொல்ல, கிஷோர் நொந்து போனான்.

அழுத்தமாக தலையை கோதிக் கொண்டவன் தன்னுடைய பெற்றோரைப் பார்த்து நலிந்து  போன குரலில் பேசினான்.

“அவசரப்பட்டுட்டீங்க… கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம். அட்லீஸ்ட் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்”

“தம்பி நாங்க உனக்காகத் தான்…”

“அவ கிட்டே கல்யாணத்தைப் பத்தி பேசுறதா இருந்தா நானே பேசி இருக்க மாட்டேனா? நீங்க அவசரப்பட்டீங்கம்மா… வேண்டாம்.. இப்போ எதையும் பேச வேண்டாம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க… இனி நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன். இனி சக்தி கிட்டே கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்” என்று உறுதியான குரலில் சொன்னவன் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட ..மகனுக்கு உதவி செய்வதாய் நினைத்துக் கொண்டு அபத்தமாக எதையோ செய்து விட்டோம் என்பது புரிய வருத்தத்துடன் அவர்களும் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக பீச்சிற்கு வண்டியை விட அவன் மனம் ஊமையாக அழுது தீர்த்தது.

“நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன் சக்தி?… என்னோட வாழ்க்கையில் மிச்சம் இருக்கிற ஒவ்வொரு நாளும், உன்னோட தான் தொடங்கணும். உன்னோட தான் முடியணும்.. ஆனா அதை உன்னோட முகம் பார்த்து நேருக்கு நேராக கேட்க முடியாத சூழ்நிலை கைதியா இருக்கேனே..

அதை  எப்படி உனக்கு நான் புரியவைப்பேன்? உன்னை என்னோட கண்ணுக்குள் பொத்தி வச்சு பார்த்துப்பேன் சக்தி… இதுநாள் வரை நீ அனுபவிச்ச எல்லா துன்பத்தையும் சரி கட்டுற அளவுக்கு அன்பால் உன்னை திக்குமுக்காட வைப்பேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டியா சக்தி? உன்னை பக்கத்திலேயே வச்சுக்கணும்னு ஆசைப்பட்டுத் தானே போலியா ஒரு இன்டர்வியூ வச்சு உன்னை வேலைக்கு தேர்ந்தெடுத்தேன்.

எப்பவும் என்னோட கண் எதிரிலேயே … உன்னை பார்த்துகிட்டே என்னோட நாட்களை கழிச்சிடலாம்ன்னு தான் அப்படி செஞ்சேன். ஆனா உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டே என்னோட மனசை உன்கிட்டே சொல்ல முடியாம நான் படுற வேதனை நரகத்தை விட கொடுமையா இருக்குடி… நானும் உன்னை வற்புறுத்தக் கூடாதுன்னு ரொம்ப பொறுமையா இருக்கேன்.

நீயாகவே ஒருநாள் என்னையும் என்னோட காதலையும் புரிஞ்சுக்கிட்டு என்னைத் தேடி வரணும்னு எதிர்பார்க்கிறேன். வருவியா சக்தி.. வந்தாலும் உன்னால முழுமனசோட என்னை ஏத்துக்க முடியுமாடி? உன்னை என்னோட கைகளுக்குள்ளே வச்சுக்க சொல்லி என்னோட மனசு ஒவ்வொரு நிமிஷமும் பரபரக்குது. ஆனா உன்னோட கண்ணில் ஒரு துளி காதலைக் கூட பார்க்காம என்னால உன்னை நெருங்க முடியலையே…

மனதார நேசிக்கும் ஒரு பெண்ணை கண் எதிரிலேயே வைத்துக் கொண்டு நேசத்தை வெளிபடுத்த முடியாமல் தவிக்கும் என்னுடைய நிலை என்னோட எதிரிக்கும் வரக்கூடாது சக்தி. உனக்கு சாய்ந்து கொள்ள தோள் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் உனக்கு பக்கத்திலேயே தான் நான் இருப்பேன் சக்தி.

நீயா என்னோட தோள் சாய்ஞ்சு அழணும்னு நான் எதிர்பார்க்கிறேன். என்னை நோக்கி நீ ஒரு அடி எடுத்து வை.. அது கூட வேண்டாம்… வெறுமனே ஒரு பார்வை… ஒற்றை பார்வை போதும். உன்னோட மனசில் இந்த கிஷோருக்கு இடம் இருக்கா.. இல்லையானு தெரியாம உயிர் போகுது சக்தி. உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவேன்டி. ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடு…

மூச்சுத் திணறுது சக்தி… எனக்கு உயிர்க்காற்று நீ தான்… உன்னால் மட்டும் தான் என்னைக் காப்பாற்ற முடியும். என்னோட பார்வை சொல்லாத காதலையா என்னோட வாய் வார்த்தை சொல்லிடப் போகுது… உனக்காக நான் காத்திருப்பேன் சக்தி…

என்னைக்காவது நீ என்னை புரிஞ்சுக்கிட்டு என்னைத் தேடி வருவாய் அப்படிங்கிற நம்பிக்கையில்.. ஆனா நீ எனக்கு கிடைக்க மாட்ட அப்படிங்கிற ஒரு நிலைமை வந்தா அதுக்குப் பிறகு நான் உயிர் இருந்தும் பிணத்துக்கு சமம்டி.” யாருமற்ற தனிமை கொடுத்த தைரியத்தில் மனதில் இத்தனை நாளாய் தேக்கி வைத்திருந்ததை எல்லாம் வாய்விட்டே புலம்பினான் கிஷோர்.  

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here