உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11

0
583

அத்தியாயம் 11

ப்ரியாவிற்கு கனகத்தை துளியும் பிடிக்கவில்லை. மகேசன் இருக்கும் பொழுது ப்ரியாவிடம் பாசத்தை கொட்டுவது போல பேசுவார். அந்தப் பக்கம் நகர்ந்து விட்டால் அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்ப மாட்டார். கனகம் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே வீட்டுக்குள் எப்பொழுதும் கூச்சலும் , குழப்பமும் நிறைந்து இருந்தது.

அப்பாவும், அம்மாவும் சிரித்து பேசிய பலநாட்கள் ஆனதற்கு முக்கிய காரணம் கனகம் தான் என்று அவளது ஆழ்மனம் சொன்னது. அமைதியே உருவான தாயை எந்நேரமும் வாட்டி வதைக்கும் பாட்டியிடம் அவளால் துளிகூட ஒன்ற முடியவில்லை. கனகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவளையும் அறியாமல் அவள் மனதில் தோன்றிய வெறுப்பை முகத்தில் காட்டி விடுவாள்.

வீட்டில் கனகத்தின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். மகேசன் வீட்டில் இருக்கும் நேரம் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர் அவரது தலை மறைந்ததும் கற்பகத்தை போட்டு வாட்டி எடுக்கத் தொடங்கி விடுவார். ஒருநாள் இவர் வேண்டுமென்றே கற்பகத்தை வம்பிழுத்ததை ப்ரியா மகேசனிடம் சொல்லி விட ,அடுத்த நிமிடமே தாயைக் கூப்பிட்டு கண்டித்து தான் ஒரு நல்ல கணவர் என்பதை நிரூபித்தார்.

“அம்மா.. உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா என்னைக் கேளுங்க… வாங்கித் தர்றேன். கற்பகத்தை ஒரு வார்த்தை குறைவாக பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போ நான் இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு கற்பகம் தான் காரணம். அவ உங்களுக்கு மருமகள் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு மனைவி… எனக்குத் தெரிஞ்சு நீங்க இன்னும் அவளை மருமகளா ஏத்துக்கலை. அப்படி இருக்கும் பொழுது அவளை பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று சம்மட்டியால் அடித்ததைப் போல பேச .. வேறுவழியின்றி கொஞ்சம் அடக்கி வாசித்தார் கனகம்.

‘இந்த குட்டிப்பிசாசு தான் போட்டு கொடுத்து இருப்பா.. இனி அவள் இருக்கும் பொழுது கவனமா இருக்கணும்.’ என்று எண்ணியவர் மகனுக்குத் தெரியாமல் மகளிடம் அவ்வபொழுது வீட்டில் நடக்கும் விவரங்களை எல்லாம் சொன்னார்.

அவர்களுக்கு எதிராக சதி வலை பின்னப்படுவது தெரியாமல் மகேசனின் குடும்பம் மகிழ்ச்சியில் இருந்தது. ப்ரியா பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்து இருக்க.. மகேசனும், கற்பகமும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்.

ப்ரியாவை டிவி, பேப்பர் எல்லாவற்றிலும் பேட்டி எடுத்தனர். எல்லாவற்றிலும் அவள் சொன்ன பதில்… மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே தன்னுடைய லட்சியம் என்றே…. ப்ரியா பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து பள்ளிக்கு போகத் தொடங்கி இருந்தாள்.

அன்று அவள் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது கனகத்தின் குரல் தெருமுனை வரைக் கேட்டது.

“ம்ச்.. இன்னிக்கு என்ன பிரச்சினையோ? இந்த கிழவி சும்மாவே இருக்காது போல” என்று முணுமுணுப்புடன் உள்ளே நுழைந்தவள் அங்கே ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையையும் அவருக்கு எதிரில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அல்லியைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் மாடிக்கு செல்லத் தொடங்கினாள்.

ப்ரியா பிறந்ததில் இருந்தே அல்லியை பார்த்து இருக்காத காரணத்தினால் அல்லி யாரென்று ப்ரியாவிற்கு தெரியாது. கனகத்தின் காட்டு கத்தல் குறைந்து அதற்கு பதிலாக  பெரும் குரலெடுத்து அழத் தொடங்கினார்.

“நியாயமா பார்த்தா அண்ணனா  நீ தான் அவளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து செஞ்சு இருக்கணும். என் வயித்தில் பிறந்த மக.. இப்படி கஷ்டப்படுறாளே.. அதை பார்த்துக்கிட்டு இப்படி கல்லு மாதிரி இருக்கறியே.. இதெல்லாம் உனக்கே நல்லா இருக்காடா… அப்படி அவ பெருசா என்னத்த கேட்டுட்டா… நம்ம வீட்டையும், தொழிலையும் சட்டப்படி அவளோட பேருக்கே எழுதி தர சொல்றா.. அதுல உனக்கு என்ன வருத்தம்? எப்படியும் அந்த வீட்டில் நீ குடி இருக்க போறதும் இல்ல… அந்த தொழிலையும் நீ பார்க்கப் போவதும் இல்லை… அந்தப் பணம் வந்து தான் உன்னோட வயிறு நிரம்பணுமா? ஒரே ஒரு கையெழுத்து புருஷனும், பொண்டாட்டியும் போட்டா , அவ பாட்டுக்கு அதை வச்சு ஒரு வாய் கஞ்சி குடிப்பா .. நீயும் தான் உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அவளுக்கு  பிறந்த வீட்டு சீருன்னு எதையுமே செய்யலையே… இதுவே உனக்கு கூடப் பிறந்த தங்கச்சியா இருந்தா இப்படி இருப்பியா? “ என்று குத்திக்காட்டி பேசியவருக்கு அவனை வீட்டை விட்டு வெளியேற்றியது தானும், தன்னுடைய மகளும் தான் என்பது வசதியாக மறந்து போனது.

“இவ்வளவு தூரம் கத்துறேன்.. சரின்னு சொல்றானா பார்…” என்று பேசிக் கொண்டே போக.. ஒரு முடிவுடன் எழுந்த மகேசன்… தங்கையின் புறமும், அன்னையின் புறமும் பார்வையைக் கூட செலுத்தாமல் கற்பகத்தின் முகத்தை பார்த்து பேசத் தொடங்கினார்.

“வர்ற திங்கள் கிழமை ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போய் வீட்டையும் தொழிலையும் அவங்க பேருக்கு மாத்தி கொடுத்திடலாம் கற்பகம்” என்று சொன்னவர் கனகத்தையும், அல்லியையும் பார்க்கவே பிடிக்காதவராக வெளியே சென்று விட கற்பகமும் மறுபேச்சு பேசாமல் அடுப்படிக்குள் முடங்கிக் கொண்டார்.

அதே நேரம் அல்லியும், கனகமும் பார்வையை பரிமாறிக் கொண்டதைப் பார்த்த ப்ரியாவுக்கு தான் உள்ளுர ஏதோ உறுத்தலாகவே இருந்தது. சொன்னதைப் போலவே ப்ரியாவின் பெற்றோர்கள் இருவருமாக கிளம்பி ரெஜிஸ்டர் ஆபிஸ் போய் அவர்கள் கொடுத்த பத்திரங்களில் எல்லாம் படித்துப் பார்க்கக் கூட விரும்பாமல் கையெழுத்து போட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல்… வீட்டுக்கு திரும்பினார்கள்.

இரண்டு நாள் கழித்து கனகம் மகள் வீட்டுக்கு கிளம்புவதாக அறிவித்தார். தடுக்காமல் இருவரும் அமைதியாகி விட.. கனகமும் எந்த அனாவசியமான பேச்சுக்களையும் பேசாமல் கிளம்பி விட ப்ரியாவுக்கு தான் சந்தோசம் தாங்க முடியவில்லை.

“அப்பாடா.. அந்த பாட்டி கிளம்பியாச்சு.. இனி இந்த வீட்டில் எங்கம்மா தான் ராணி.. எங்கப்பா தான் ராஜா.. நான் தான் இளவரசி” என்று உற்சாக கூச்சல் போட்டவள் துள்ளிக்குதித்து வீட்டை வலம் வர.. பெற்றவர்கள் இருவரும் மகளின் செய்கையை பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.

அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது… எல்லா சொத்துக்களும் கனகத்தின் பெயரில் இருப்பதாகவும் அதை அடாவடியாக இவர்கள் அனுபவிப்பதாகவும் கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக வக்கீல் நோட்டீஸ் வர.. மகேசன், கற்பகம் இருவருமே செய்வதறியாது ஸ்தம்பித்து போனார்கள்.

ஒரே நாளில் அவர்களின் வாழ்வு தலைகீழானது. வீடு, கடை, ட்ராவல்ஸ் அனைத்தையும் கோர்ட் ஆர்டரின் மூலம் சபேசன் முடக்கி விட… கட்டிய துணியோடு வீட்டை விட்டு வெளியேறினார்கள் மூவரும். இது ஒன்றும் அவர்களுக்கு புதிதில்லை தான். ஏற்கனவே இப்படி வெளியே வந்தவர்கள் தான். ஆனால் முன்பு சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் போல இந்த முறை அவர்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

கற்பகம் இவ்வளவு நடந்த பிறகும் கூட மகேசனிடம் அவர் கோபத்தை காட்டவில்லை. தன்னைப் போலவே கணவரும் ஏமாந்து விட்டார் என்பது புரிந்ததால் அவரை குத்திக் காட்டி பேச முயற்சி செய்யவில்லை. தாயும், தங்கையும் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் புழுங்கித் தவித்தார் மகேசன். எப்படியாவது வீட்டையும், தொழிலையும் மீண்டும் தன் வசம் கொண்டு வர வேண்டும் என்று உறுதி செய்தவர் மனைவியையும், பெண்ணையும் அழைத்துக் கொண்டு நண்பனின் வீட்டுக்கு சென்றார்.

இரண்டொரு நாள் நண்பனின் வீட்டில் தங்கி இருந்தவர் வெளியில் வீடு வாடகைக்கு பார்க்கத் தொடங்கினார். நல்லவேளையாக ப்ரியாவிற்காக வாங்கிய நகைகள் அனைத்தும் அவள்  பெயரிலேயே பேங்க் லாக்கரில் வைத்து இருந்ததால் அதை கோர்ட் முடக்காமல் விட்டுவிட.. அந்த நகைகளை எடுத்து பேங்கில் அடமானம் வைத்து அந்த பணத்தின் மூலம் வாடகைக்கு ஒரு வீட்டை பார்த்து குடியேறினார்கள்.

ஏற்கனவே ஒருமுறை அவர்களிடம் ஏமாந்தது போதும். இந்த முறை அத்தனை சுலபமாக விட்டு விடுவதாக இல்லை மகேசன் குடும்பத்தார்கள். அந்த ஊரில் உள்ள பிரபல வக்கீலை நாடினார் மகேசன். ஒரு சிலரை சபேசன் ஆள் வைத்து மிரட்ட, மகேசன் கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தன்னுடைய முயற்சிகளை செவ்வனே செய்தார். எந்தப்பக்கம் போனாலும் சபேசன் அந்த பாதையை மறிக்க, மகேசன் கொஞ்சமும் அசராமல் போராடினார்.

கற்பகமும் எப்பொழுதும் போல நல்ல மனைவியாக  கணவனுக்கு துணை நின்றார். ப்ரியாவுக்கு  பெற்றோர் படும் வேதனை எல்லாம் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்து போனது. சபேசனும் இதை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்து இருப்பார் போலும்.

சத்தமில்லாமல் மகேசனின் சொத்துக்களை விற்று பணமாக மாற்ற முயல… கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கி அதையும் தடுத்து நிறுத்தி விட்டார் மகேசன். எல்லாம் அவர்களுக்கு  சாதகமாக மாறத் தொடங்க… சபேசனின் மூளை குறுக்குவாட்டில் யோசிக்கத் தொடங்கியது. அதன் விளைவுகளோ யாரும் எதிர்பாராத அளவில் இருந்தது.              

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here