உன் மனதில் நானா காவலனே – 2

0
798

அத்தியாயம்-2:

அவன் தான் செக்யூரிட்டியாக வந்திருப்பதாகக் கூறிய உடன் மலரின் கண்கள் முன்  பல கனவுகள் வந்து மின்னி மறைந்தது. ‘என்னது செக்யூரிட்டியா வந்திருக்கிறானா. இவனை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த வீட்டிலயே செட்டில் ஆகிடலாம். ஆளும் பார்க்க நல்லாத்தான் இருக்கான். இல்ல இந்த வீட்ல வேலை புடிக்கலேன்னா கூட வேற  எந்த வீட்டுக்கு இவன் செக்யூரிட்டியை போனாலும் நம்மளும் அதே வீட்டுக்கு வேலைக்கு போயிட வேண்டியதுதான்’ என்று மனதிற்குள் பல கணக்குகளை அவள் போட்டு கொண்டிருக்க, அப்பொழுதுதான் ஒருவேளை இவனுக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ என்ற எண்ணம் அவளுக்கு வந்தது.

‘கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்றது’ என்று மனதிற்குள் எண்ணியவள் அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவோடு “உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டாள்.

அவனோ அவளை முறைத்து  பார்த்தவன் ‘உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவளோ அவனது முக திருப்பலை சற்றும் கண்டுகொள்ளாமல் திரும்பவும் அவன் முன்னே சென்று “யோவ் ஒழுங்கா சொல்லு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா” என்று கேட்க அவனோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்து இல்லை என்றான்.

அதைக் கேட்டவுடன் அவள் மனதுக்குள் மத்தாப்பூ பூ பூத்தது போல ஆனந்தமாக இருந்தது. மனதுக்குள் ‘இவன் எனக்குத்தான் எனக்குத்தான்’ என்று அவள் குதிக்க, அப்பொழுது தான்  அவன் பேரை தான் இன்னும் கேட்கவில்லை என்பதை உணர்ந்தவள்  புன்னகைத்தபடியே “உங்க பெயரென்ன” என்று கேட்டாள்.

அவனோ மறுபடியும் அவளை முறைத்துப் பார்த்து “உங்களுக்கு எதுக்கு நான் அதெல்லாம் சொல்லணும்” என்று கோபமாக கேட்க அவளோ “நானும் இந்த வீட்டில் தான் வேலை பார்க்கிறேன். நீங்களும் இங்கதான் வேலை பார்க்க போறீங்க அதனால ஒரு தொழிலாளிக்கு தொழிலாளி நட்பாகி விடலாமே. அதனாலதான் கேட்டேன்” என்றாள் அனைத்து பற்களையும் காட்டிக்கொண்டு சிரித்தபடி.

அவனுக்கு பதில் கூற விருப்பம் இல்லை என்பது அவன் முகத்தில் தெரிந்தாலும் அவளிடம் பெயரை சொல்லாவிட்டால் இங்கிருந்து நகரமட்டாள் என்பதை உணர்ந்தவன் நக்கல் பலரும் குரலில், “ம்ம்ம் தண்டாயுதபாணி” என்றான்.

அவளுக்கோ அவன் குரலில் இருந்த நக்கல் எதுவும் உறைக்கவில்லை. நிஜமாக அதுதான் அவர் பெயர் என்று நினைத்தவள் ‘என்னது தண்டாயுதபாணியா. இந்தப் பேரு நான் எப்படிடா சுருக்கி கூப்பிட முடியும்… ஐயோ ராமா… தண்டம்னு கூப்பிட்டாலும் நல்லா இருக்காது.  பாணினு கூப்பிட்டாலும் நல்லா இருக்காது. ஆயுதம் ரொம்ப  கேவலமா இருக்கும்’ என்று மனதிற்குள்ளேயே அவள் எண்ணிக் கொண்டிருக்க, அவனோ அவளது முகத்தின் முன் சுடக்கிட்டு “ராஜசேகர் சார் எப்ப வருவாங்க என்று மட்டும் சொல்லு தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு இருக்காதே” என்று கூற அவளும் தனது எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு “வந்துருவாங்க.. வந்துருவாங்க மத்தியானம் சாப்பிட வருவாங்க… அதுவரைக்கும் அந்தப்பக்கம் தோட்டத்துல காத்து வர்றமாதிரி நிழலில் ஒரு  பெஞ்ச் இருக்குது அங்க போய் உட்கார்ந்திரு” என்று கூற அவனும் அங்கு சென்று அமர்ந்தான்.

அவன் சென்று அவள் சொன்ன இடத்தில் அமர, அவளும் அவனை நினைத்து கொண்டே சமையலறைக்குச் சென்று மதிய உணவிற்கு தேவையான வேலைகள் யாவும் செய்ய ஆரம்பித்தாள்.  அப்பொழுது அங்கு வந்த பருவதம் “என்னடி இவ்வளவு நேரம் ஆயிடுச்சா” என்று கேட்க, “நான் அதெல்லாம் சீக்கிரம் வந்துட்டேன் பாட்டி.  அல்லி பொண்ணு நானும் அப்பவே வந்துட்டேன். இங்க வாசல்ல ஒருத்தர் வந்து ஐயாவை விசாரிச்சுட்டு இருந்தாரு. அதனால தான் அவர்கிட்ட என்னன்னு கேட்டுட்டு வெளியில உட்கார சொல்லி இருக்கேன்” என்று கூற “ஆமா யாரது  எதுக்கு வந்து இருக்காங்க” என்று கேட்டார் அவர்.

“ஏதோ செக்யூரிட்டியாக வந்திருக்காங்களாம்” என்று அவள் கூற, அவரோ “செக்யூரிட்டியா அதான் இங்க ஏற்கனவே செக்யூரிட்டி ரெண்டு பேர் இருக்காங்களே. அப்புறம் எதுக்கு புது ஆளு” என்று அவர் யோசனையாக கேட்க,கூறளுக்கும் அப்போதுதான் அது ஞாபகத்திற்கு வந்தது. ஏற்கனவே மாரிமுத்து மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் செக்யூரிட்டியாக இருக்க எதற்காக புது ஆள் வரவேண்டும் என்று நினைத்தவள், ஒருவேளை ஃபேக்டரியில் வேலைக்கு சேர்த்திருப்பார்களோ’ என்று யோசித்தபடி அவரிடம் கூற, அவரும் “யாருக்கு தெரியும் அவங்க என்ன பண்றாங்கன்னு. சரி விடு நீ மத்தியானம் சமையலை பண்ணு. எப்படியும் என் மருமகளும் பேத்தியும் வர போறது கிடையாது. என் மகன் மட்டும் தான் இன்னைக்கு வந்து சாப்பிட போறேன்னு சொல்லி இருக்கான். அவனுக்கு சமைச்சு வை” என்று கூற அவளும் சமையலறைக்கு சென்று உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்.

 சரியாக அதே நேரத்தில் பருவத்திற்கு அழைத்த ராஜசேகர் தான் வருவதற்கு மூன்று மணிக்கு மேல ஆகும் என்றும் அதனால் காத்திருக்காமல் சாப்பிட்டு விடுமாறு கூற அவரும் சரி என்று அதை மலரிடம் கூறினார்.

நேரம் ஒரு மணியை நெருங்க பருவதம் அவருக்கான உணவை உண்டுவிட்டு மலரையும் உண்ணுமாறு கூறினார். அவளும் சரி என்று உணவைத் தட்டில் போட, அவளுக்கு அப்பொழுதுதான் தண்டாயுதபாணி வெளியில் அமர்ந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது.

தட்டில் போட்ட சாதத்தை அப்படியே வைத்துவிட்டு வேகமாக வெளியில் வந்தவள் அவன் அங்கேயே அமர்ந்தபடி ஏதோ யோசனையில் இருப்பதை கண்டு அவன் அருகில் சென்றாள். தன் அருகில் ஏதோ நிழல் ஆடுவதை கண்டவன் நிமிர்ந்து பார்க்க அங்கே மலர் நின்றுகொண்டிருப்பதை கண்டான்.  மலரோ “தண்டம் நீங்க சாப்டீங்களா” என்று கேட்க, அவனோ அவளது தண்டம் என்ற அழைப்பில் கோபமுற்று அவளை முறைத்துப் பார்த்தான்.

“என்னை ஏன் முறைச்சு பாக்குறீங்க. உங்க பேரு தான அது. வேற எப்படி நான் சுருக்கி கூப்பிட முடியும்” என்று கேட்க, “நீ கூப்பிடவே தேவையில்லை அமைதியா இருந்தா மட்டும் போதும்” என்றான் அவன் கட்டமாக.

இவளோ “ரொம்பத்தான் பண்றீங்க” என்று கழுத்தை நெடித்துக் கொண்டவள், “ஆமா ரொம்ப நேரமா இப்படியே இருக்கீங்களே சாப்பிட போகலையா. ஒன்னு பண்ணுங்க வந்து சாப்பிடுங்க வாங்க” என்று கூற அவனோ அவளை என்னவென்று கூற முடியாத ஒரு உணர்ச்சி ததும்பும் பார்வை பார்த்தான். அவளுக்கு தான் அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை அதை ஒதுக்கியவள் “என்ன அப்படி பார்க்கிறீங்க. சாப்பிட தானே கூப்பிட்டேன் அதுக்கு ஏன் இப்படி ஒரு பார்வை” என்று கேட்க அவனோ “இல்ல பரவால்ல நான் அப்புறம் வெளியில போய் சாப்பிட்டுக்கிறேன்” என்று தடுமாறியபடி கூறினான்.

” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க வந்ததிலிருந்து இங்கேயே தானே இருக்கீங்க. ஐயா சாப்பிட்டுட்டுதான் உங்களை எப்படியும் பார்க்க வருவாங்க. அதுவரைக்கும் பட்டினியாக இருக்க முடியுமா  என்ன” என்று கூறி அவனை பின்கட்டு வழியாக அழைத்துச் சென்று சமையலறையில் இருந்த ஒரு சேரில் அமரத் செய்தவள் தான் தனக்கு போட்ட சாப்பாட்டை அவனுக்கும் கொடுத்தாள்.

அவள் கொடுத்த உணவை உண்ண ஆரம்பித்தவன் கண்கள் சற்று கலங்கியது போல் இருந்தது. அவளோ  “என்ன காரம் அதிகமா இருக்குதா. நான் அவ்வளவு காரம் எல்லாம் போடலையே” என்று கூற அவனோ இல்லை என்று தலையசைத்து விட்டு மறுபடியும் உண்ண ஆரம்பித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் ‘ஆமா உன் பெயர் என்ன” என்று கேட்க அவளும் சிரித்தபடி “மலர்மதி” என்றாள்.

மலர் பரிமாறிக் கொண்டிருக்க அவனும் அவள் பரிமாறிய அனைத்தையும் உண்டவன் “சாப்பாடு சூப்பரா இருக்கு” என்று அவளை பாராட்டவும் தவறவில்லை. பின் கை கழுவியவன் அப்பொழுதுதான் “நீ சாப்பிடலையா” என்று கேட்க அவளோ “இல்ல ஐயா சாப்பிட்டு போனதுக்கப்புறம் மீதி இருந்தால் நான் சாப்பிடுகிறேன்” என்று கூறினாள்.

“அப்போ எனக்கு நீ கொடுத்தது உன்னோட சாப்பாடா. ஏற்கனவே போட்டு வெச்சிருந்த” என்று அதிர்ந்து போய் கேட்க அவளும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள். அவனுக்கு அவளைப் பார்க்க மிகவும் மாமா மாகவும் அதேசமயம் சங்கடமாகவும் இருந்தது.

“அவர் சாப்பிட்டதுக்கு அப்புறம் உனக்கு சாப்பாடு இல்லைன்னா என்ன பண்ணுவ” என்று கேட்க அவளோ சாதாரணமாக “இல்லைனா என்ன தண்ணிய குடிச்சிட்டு நைட்டு பார்த்துக்க வேண்டியது தான்.  இல்லைன்னா நடுவுல பாட்டிமா காபி கேப்பாங்க அப்ப நானும் கொஞ்சம் குடிச்சுக்குவேன். அவ்வளவு தான் பசி போய்விடும்” என்று கூற, அவனோ ஆழ்ந்த குரலில் “உனக்கு பசிக்காதா” என்று கேட்டான் அவன்.

அவனைப் பார்த்து சிரித்தவள் “பல நாள் பட்டினி கிடந்தவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைச்சாளே அது சொர்க்கம் தான். எனக்கு சாப்பாடு ஒரு வேளை மட்டும் இருந்தால் கூட போதும் நான் சமாளிச்சுக்குவேன்.  அதனால எந்த பிரச்சனையும் இல்ல. சரி சரி நீ முன்னாடி போய் உட்காரு ஐயா வர நேரம் ஆயிடுச்சு நானும் எல்லாத்தையும் கொண்டு போய் டேபிள்ல வைக்கிறேன்” என்று கூறியவள் அவனுக்கு தண்ணீர் பருக கொடுத்து அனுப்பி வைத்தாள்.  அவள் தன்னுடைய உணவை அவனுக்கு கொடுத்துவிட்டு பட்டினி கிடந்தது அவனது மனதை சற்று அசைத்துப் பார்த்தது.

சற்று நேரத்திற்குப் பின் தனது உதவியாளருடன் வீட்டிற்கு வந்த ராஜசேகர் உணவு அருந்தும் இடத்திற்கு வர மலரும் அவருக்கு உணவு பரிமாறினாள். அவர் உணவு உண்டு முடிக்கும் நேரம் அவரிடம் சென்றவள் “ஐயா உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்கிறார்” என்று கூற அவரோ யார் என்று கேட்டார்.

“யாரோ பெயர் தண்டாயுதபாணி என்று கூறினார். இங்க வாட்ச்மேன் வேலைக்கு வந்து இருக்கிறாராம் அது தான் உங்கள பாக்கணும்னு சொன்னாங்க வெளியில் உட்கார வெச்சிருக்கேன்” என்று கூற அவரும் முகத்தை சுளித்தவாறு யாரது என்று தனது உதவியாளரிடம் கேட்டார்.

அவரது உதவியாளரும் “இல்லை சார் அந்த மாதிரி யாருக்கும் நான் இன்னைக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கல” என்று கூற ராஜசேகர் திரும்ப மலரை கேள்வியாக பார்த்தார்.

“இல்லை ஐயா நீங்கதான் சொன்னீங்கனு அவங்க சொன்னாங்க அதனாலதான் உட்கார வெச்சிருக்கேன்” என்று கூற அவரும் யோசனையுடன் சரி வரச்சொல்லு என்று கூறிவிட்டு அதிகாரமாக ஹாலின் நடுவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.

அவளோ வேகமாக வெளியில் தோட்டத்தில் அமர்ந்திருந்த தண்டாயுதபானியிடம் வந்தவள் “சீக்கிரம் வாங்க.. சீக்கிரம் வாங்க.. ஐயா உங்களை வரச் சொல்றாரு. நீங்க அவர்கிட்ட முன்னாடியே சொல்லலையா இங்க வரேன்னு. அவர் அந்த மாதிரி யாரையும் நான் வர சொல்லல அப்படின்னு சொல்றாரு” என்று கூறியபடி அவனை அழைக்க, அவனோ “இல்லையே நான் முன்னாடியே சொல்லி இருந்தேன்” என்று கூறினான்.

” தெரியல அப்படித்தான் சொன்னாங்க” என்று கூறிய மலர், அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அவனும் அந்த வீட்டிற்குள் தனது கால்களை வைக்கும் போது சில முடிவுகளை உறுதியாக எடுத்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தான்.

உள்ளே வந்தவனை ராஜசேகர் நோட்டம் விட்டுக்கொண்டிருக்க அவரது உதவியாளரும் “யார் நீங்க எப்போ நாங்க உங்கள பாக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தோம்” என்று கேட்க, அவனும் “நீங்கதான் ஹட் செக்யூரிட்டி ஆபீஸரா ஜாயின் பண்ண சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் எனக்கு ஏற்கனவே கொடுத்தீங்க” என்று கூற, அவரோ “ஹெட் செக்யூரிட்டி ஆபீசரா. ஆனா அந்த பொண்ணு வாட்ச்மேன் என்றுதானே சொல்லுச்சு” என்று கேள்வியாய் நோக்க அவனும் அப்பொழுதுதான் அவளை நோக்கினான்.

ராஜசேகர் தன்னை முறைத்து பார்ப்பதை கண்டு பயந்தவள், பயத்தில் “இல்லையா செக்யூரிட்டின்னு தான்  சொன்னாரு. அதனாலதான் நான் வாட்ச்மேனா இருக்குமுன்னு நினைச்சேன்” என்று தயங்கியவாறே கூற, அவளை கோபப் பார்வை பார்த்த ராஜசேகர் பின் அவனிடம் திரும்பி “ஆமா எனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருது. என்னோட  பர்சனல் செக்யூரிட்டி ரிங்குக்கு ஒரு  எஃபீஷியேன்ட் செக்யூரிட்டி ஆபீஸர் வேணும்னு என்னோட நண்பர் கிட்ட சொல்லியிருந்தேன். அவங்க இன்னைக்கு ஆள் அனுப்புவதா சொல்லியிருந்தாங்க நீங்கதானா அவர்” என்று கேட்க அவனும் ஆம் என்றான்.

“ஆனா அவங்க உங்க பேர தண்டாயுதபாணியின் சொல்லலையே. வேறு ஏதோ பேர் தான சொல்லி இருந்தாங்க” என்று ராஜசேகரின் உதவியாளர் வரதன் கேட்க அவனோ திரும்ப மலரை பார்த்து “என் பெயர் தண்டாயுதபாணி இல்லை தீரன்” என்று கம்பீரமான குரலில் கூறினான்.

ராஜசேகரன் செயலாளரோ “ஆமா ஆமா அந்த பேர்ல தான் வாங்கி இருந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட். இப்பகூட உங்களைத்தான் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன்” என்று கூற மலரோ ‘என்ன அவன் பேரு தீரனா. என்கிட்ட மாத்தி சொல்லி ஏமாற்றி விட்டானே’ என்று நினைத்துக் கொண்டு ராஜசேகரை பார்க்க அவரும் அப்பொழுதுதான் அனல் கக்கும் விழிகளோடு அவளை பார்த்தார்.

 தலை குனிந்தவாறே “இல்லையா அவர் அப்படித்தான் சொன்ன மாதிரி இருந்தது. எனக்கு தான் சரியா கேட்கலை போல” என்று கூற, “எந்த வேலைக்கும் நீ ஆக மாட்டனு வசுந்தரா சொன்னது சரி தான். கண்ணு முன்னாடி நிக்காத போய் தொல” என்று கத்த அவளும் வேறு வழி இல்லாமல் சமையலறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.

சமையல் அறைக்குள் வந்தளுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. ‘இவன் பேரு தண்டாயுதபானின்னு  தான் சொன்னான்.  அதைத்தான் நான் அவர்கிட்ட போய் சொன்னேன். இப்படியா பொய் சொல்லுவான். என் கிட்ட தனியா மாட்டட்டும் அப்ப தெரியும் இந்த மலர் யாருன்னு’ என்று நினைத்தவள், ‘ஆமா இவங்க என்ன லூசா செக்யூரிட்டினா வாட்ச்மேன் தானே அதைத்தானே நானும் சொன்னேன். அதுக்கு ஏன் இந்த முறை முறைக்கிறாங்க. ஆனா ஒன்னு  மட்டும் தெரியுதுடி மலரு. உனக்கு நேரமே சரியில்லை. நம்ம எது சொன்னாலும் அது தப்பாவே போய்விடுது” என்று எண்ணிக்கொண்டவள், “ஆனால் இவன மட்டும் சும்மா விடக்கூடாது. அந்த ஐயா கிட்ட திட்டுவாங்க வெச்சிட்டான். தனியா சிக்கட்டும் அப்ப அவனுக்கு இருக்குது கச்சேரி” என்று கோபமாக எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள் கோபத்திற்கு எப்பொழுதும் தான் ஆயுள் குறைவு ஆயிற்றே. சற்று நேரத்தில் அதை மறந்தும் விட்டாள்.

பின் தீரனிடம் பேசியவர் “சொல்லுங்க என் நண்பர் உங்கள பத்தி எல்லாத்தையும் சொன்னார். நீங்க ஏற்கனவே இது மாதிரி பாதுகாப்புக்காக செக்யூரிட்டி ஹெட்டா சில  இடங்களில் வேலை செய்திருக்கீங்கன்னு சொன்னாங்க. இதுக்காகவே ஸ்பெஷலா செல்ப் டிபன்ஸ் ட்ரைனிங் மற்றும் ஃபயர் ஆர்ம் ட்ரைனிங் அதெல்லாம் எடுத்திருக்கீங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் நான் உங்கள பார்க்க வர சொன்னேன். உங்க சம்பளத்தை பத்தி எல்லாம் ஏற்கனவே என்னோட மேனஜர் உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன்” என்று கேட்க அவனும் ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

” நீங்க என் கூட இருக்கணும் கொஞ்ச நாள். அவ்வளவுதான் வேறு எதுவும் தேவையில்ல. ரொம்ப பெரிய செக்யூரிட்டி பிராப்ளம்  இருக்குன்னு நான் சொல்ல வரல.  ஆனா இப்ப சமீப காலமாக சிலரால்  எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சில பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு.  அதனாலதான் இந்த ஏற்பாடு பண்ண நான் ஒத்துக்கிட்டேன்” என்று கூற அவனும், “எனக்கும் உங்களை பத்தின அத்தனை டீடெயில்ஸ் வந்துடுச்சு.  நீங்க கவலைப்பட வேண்டாம் உங்க குடும்பத்தோட பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு” என்று கூற அவரும் “சரி நீங்க எப்ப இருந்து ஜாயின் பண்ணிக்கிறிங்க” என்று கேட்டார்.

அவனோ “நான் இன்றிலிருந்து  கூட ஜாயின் பண்ண ரெடிதான்” என்று கூற, ராஜசேகர்  “அப்போ நீங்க எங்க இருக்கிங்க. எங்க அவுட் ஹவுஸில் வந்து தங்கிக்கோங்க.  உங்களுக்கு தேவையான அனைத்து வசதியும் இங்க செய்து தரப்படும்” என்று கூற அவனும் சரி என்று ஒத்துக் கொண்டான்.

“நான் இங்கேயே ஷிப்ட் பண்ணிக்கிறேன்” என்று கூற, ராஜசேகர் மலரை அழைத்து “இவர் இனிமேல் நம்ம வீட்ல தான் தங்கப் போகிறார். அவுட் ஹவுசில்  உன்னோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற வீட்டுல இவரை நீ தங்க வச்சுக்கோ. அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடு” என்று கூற அவளும் சரி என்று தலையாட்டினாள்.

” சும்மா தலைய தலைய ஆட்டினா மட்டும் வேலைக்கு ஆகாது. வேலையில உன்னோட கவனத்தை காமி” என்று அவர் அதட்ட அவளும் “சரி அய்யா. இவருக்கு தேவையான எல்லாத்தையும் நான் செஞ்சு கொடுத்துடுறேன்” என்று முணு முணுக்கும் குரலில் கூற அவரும் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு “சரி நான் கிளம்பறேன். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா இந்த பொண்ணுகிட்ட கேளுங்கள் பி கம்ஃபார்டேபிள்” என்று கூறிவிட்டு அகன்றார்.

அவர் சென்றவுடன் தீரன் அவளை திரும்பிப் பார்க்க அவளோ இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளது முறைப்பை கண்டுகொள்ளாதவன் அவளைக் கடந்து செல்ல முயல மலர் “யோவ் என்னய்யா.  நீ என்கிட்ட உன் பேர வேற தான சொன்ன” என்று கேட்க அவனோ “நான் எப்ப என் பேரு உனக்கு சொன்னேன்” என்றான் நிதானமாக.

“சும்மா பொய் சொல்லாத அய்யாவை பாக்கணும்னு நீ சொன்னப்ப நான் உன் பேரைக் கேட்டேன். நீ தான் தண்டாயுதபாணினு என்கிட்ட சொன்ன. நானும் அதையே போய் அவங்க கிட்ட சொன்னா திட்டுறாங்க. உன் பெயர் ஏதோ தீரன்னு சொல்றாங்க” என்று ஒருமையில்  அவள் பேச அவனோ கடுப்புடன் “கொஞ்சம்  மரியாதையா பேசு” என்று கூறினான்.

 மலரோ “என்ன திட்டுவாங்க வெச்ச உனக்கு மரியாதை ஒண்ணுதான் குறைச்சலா போயிடுச்சா” என்று முனுமுனுத்தவள், “மரியாதை தான கொடுக்கணும். இப்போ கொடுக்கிறேன்” என்று கூறி, “சார் உங்க பேர் என்ன சார்” என்று நக்கலாக கேட்க அவனும் மலரை முறைத்தவாறு “தீரன்” என்றான்.

“அதுதான் உனக்கு இவ்வளவு நல்ல பெயர் இருக்கே. அப்புறம் எதுக்கு என்கிட்ட பொய் சொன்ன” என்று திட்டு வாங்கிய கோபத்தில் கேட்க, “எல்லார்கிட்டயும் என் பெயரை சொல்லணும்னு அவசியம் எனக்கில்லை” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து சென்றான். அவளோ “ரொம்பதான் பண்றான். இந்த புது வாட்ச்மேனுக்கு இவ்வளவு திமிர் எல்லாம் ஆகாது” என்று மனதில் நினைத்துக்கொண்டவள் தனது அடுத்த வேலையை கவனிக்கச் சென்றாள்.

இங்கு வீட்டை விட்டு வெளியே வந்த தீரன் ஒருவருக்கு தனது கைப்பேசியில் அழைத்து “நாம நினைச்ச மாதிரியே தான் எல்லாம் போயிட்டு இருக்கு. நானும் இங்க வந்து வேலையில சேர்ந்துட்டேன். இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு பிறகு நாம நெனச்சது எல்லாம் முடிந்துவிடும்” என்று கூற மறுமையில் என்ன கூறப்பட்டதோ “என்ன பத்தி கவலைப்பட வேண்டாம். இது எப்படி நடக்கனுமோ அதை கண்டிப்பா நடத்தி முடித்து விடுவேன்” என்று கூறியவன் பேச்சில் இருந்த உறுதி எப்பாடு பட்டாலும் அதை நான் செய்து முடிப்பேன் என்ற தோனியில் இருந்தது. அவன் உண்மையான நிலைப்பாடுதான் என்ன.. யார் இந்த தீரன்??

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here