உன் மனதில் நானா காவலனே -3

0
808

அத்தியாயம் 3

தீரன் ஏற்கனவே ராஜசேகரிடம் சொல்லியபடி தனது பொருட்களுடன் அவர்களது கெஸ்ட் ஹவுஸில் அன்று மாலையே இடம்பெயர்ந்து விட்டான். அவன் வருவான் என்று முன்னமே தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மலரும் அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அங்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். அந்த அறையை சுத்தப்படுத்தியவள் அவனுக்கு அத்தியாவசிய தேவைகளான அனைத்து பொருட்களும் அங்கே கொண்டுவந்து வைத்து விட்டாள்.

பின் அவன் வந்தவுடன் அவனது பொருட்களையும் அடுக்க உதவி செய்தவள் “உனக்கு வேற ஏதாவது வேணும்னா சொல்லுயா.  நான் வந்து செஞ்சு தரேன்” என்று கூறியவள், “பாத்ரூம் அந்த பக்கம் வெளியில தான் இருக்கு. இங்க அட்டாச்ட் பாத்ரூம் இருக்காது. உங்களுக்கு அது சரிப்பட்டு வருமா” என்று கேட்க, அவனும் “அது எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியவன், பின் தயங்கியவாறு “ஆமா நீயும் அந்த பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவியா” என்று கேட்டான்.

அவளோ “ஆமா இங்க இந்த ரெண்டு அவுட் ஹவுசுக்கு சேர்த்து ஒரே பாத்ரூம் தான் கட்டி வெச்சிருக்காங்க. உங்களுக்கு இதுல ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க ” என்று அவளும் கொஞ்சம் சங்கடத்துடன் கேட்க, அவனோ “இல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நீ இவ்வளவு நாள் இங்க தனியா தானே உபயோகப்படுத்தியிருக்க. இப்போ நானும் உபயோகப்படுத்துனா உனக்கு ஏதாவது சங்கடமா இருக்க போகுதுன்னு  தான் கேட்டேன். உனக்கு அந்த மாதிரி ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லு. நான் இங்க சொல்லிட்டு பக்கத்துல ஏதாவது ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கிக்கிறேன். எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூற அவளோ “இல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க இங்கேயே தங்கிக்க” என்று கூறிவிட அவனும் சரி என்றான்.

பின் அவனே “ஆமா உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லையா இங்கே” என்று கேட்க, அவளோ “இல்ல என்னோட அம்மா அப்பா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கலாம். என்னோட அம்மா நல்லா படிச்சவங்கலாம். ஆனா எங்க அப்பா சுத்தமா படிக்காதவர். அதனால எங்க அம்மா வீட்டில் இதை ஏற்றுக்காம வீட்டை விட்டு அனுப்பிட்டாங்களாம். எங்க அப்பா இங்கதான் டிரைவரா வேலை பார்த்துட்டு இருந்திருக்கிறாரு. இங்க ஏற்கனவே பவளம் ஒரு பார்ட்டி வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. எங்க அப்பா இங்க வேலை செஞ்சனால எங்க அம்மாவும் இங்கேயே வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நான் பிறக்கும்போது பிரசவத்திலேயே எங்க அம்மா இறந்து போயிட்டாங்களாம். அதுக்கப்புறம் இங்கிருந்த பாட்டியும் என்னோட அப்பாவும் தான் என்னை பார்த்துக்கிட்டாங்க. ஒரு தடவ அப்பா ஐயா கூட  ஒரு ஹோட்டலில் நடந்த விழாவிற்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு. ஐயாவுக்கு லேசான காயம் தான். அதுக்கு அப்புறம் போக வேற இடம் இல்லாம இங்கயே அந்த பாட்டி கூட நான் இந்த வீட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இன்னைக்கு காலைலதான் பாட்டி வேலையை விட்டு நின்னாங்க. அவங்க பேத்தி அவங்கள சொந்த ஊருக்கு வர சொல்லிட்டாங்களாம் அதனால இனிமே அவங்க வேலைக்கு வர மாட்டாங்க. இனிமே நான் தான் இங்க ஆல்இன்ஆல்” என்று அவள் புன்னகை பூத்த படியே கூற அவனுக்கோ அவள் நிலைமை வருத்தத்தை தர, “நீ எது வரைக்கும் படிச்சிருக்க” என்று கேட்டான்.

அவள் “நானா பன்னிரெண்டாம் வகுப்பு  முடிச்சிட்ட அதுக்கு மேல படிக்கலானு கரஸ்பாண்டன்ஸ்ல போட்டேன். அதுக்குள்ள எங்க அப்பா இறந்துட்டாரு. சரி வேற வழி இல்லாம அப்படியே என் படிப்பை நிறுத்திட்டேன்” என்று கூறினாள். அவள் முகத்தில் வருத்தத்தின் சாயல் தெரிகிறதா என்று  ஆராய்ந்து பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

அவனே “நீ அதுக்கு மேல ஏன் படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போய் இருக்க கூடாது” என்று கேட்க, “நான் என்ன படிச்சு கலெக்டராவா ஆகப்போறன். போதும் போதும் எங்க அப்பா இந்த முதலாளி கிட்ட கடன் வாங்கியிருந்தாராம்.  கொஞ்சம் என்ன படிக்க வைக்கறதுக்கு. அந்த கடனுக்காக இப்படியே இங்க வேலை பார்த்துகிட்டு இருக்கேன்” என்று கூறியவள், “சரியா நீ வேற களைச்சு போயி வந்திருப்ப நான் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன்” என்று கூறியவள் அந்த பங்களாவை நோக்கி சென்றாள்.

அவள் அவனுக்கு காபி போட்டுக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த பருவதம் “என்னடி பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று கேட்க அவளோ “பாட்டி இங்க புதுசா வாட்ச்மேன் வந்திருக்காரு இல்ல, அவருக்கு தான் காபி போட்டுக்கிட்டு இருக்கிறேன்” என்று கூறினாள்.

அவரோ “இங்கேயே தங்க சொல்லி விட்டார்களா” என்று கேட்க, “ஆமா மத்தியானம் ஐயா தான் சொன்னாரு அவரை இங்க நம்ம அவுட் ஹவுஸ்ல தங்க சொல்லி. அதனாலதான் அவர் தங்க ஏற்பாடு எல்லாம் பண்ணி கொடுத்தேன். இப்போ காபி போட்டு கொண்டுபோய் கொடுக்கிறேன்” என்று கூற அவரோ “ஏண்டி ஒரு வயசு பொண்ணு இருக்கிற இடத்துக்கு பக்கத்துல இன்னொரு வயசு பையனை என் பையன் தங்க வெச்சி இருக்கானே அறிவு இருக்கா  இல்லையா” என்று அவர் தலையில் அடித்துக்கொண்டு கூறினார்.

 அவளோ “அவர் பார்க்க நல்லவர் மாதிரிதான் தெரிகிறார் அப்படியே இருந்தாலும் இந்த மலர் கிட்ட வாலாட்ட முடியுமா. வால ஒட்ட நறுக்கிட மாட்டேன்” என்று வீராப்பாக பேச அவரும் ” சரி சரி  என்னமோ பண்ணுங்க” என்று கூறியவர், “சரி அந்தப் பையனுக்கு காபி போடும் போது எனக்கும் போட்டுக் கொண்டு வா” என்று கூறினார்.

அவளும் “சரி இதோ கொண்டு வரேன் பாட்டி” என்று கூறியவள் அவருக்கு காபி கொண்டு போய் கொடுத்து விட்டு அவனுக்கு கொடுப்பதற்காக பின்கட்டு வழியாக வெளியே செல்ல முயன்றாள்.

அப்பொழுது அங்கு வந்த வசுந்தரா “ஏய் எனக்கு சுகர் கம்மியா டீ கொண்டு வா” என்று கூற  அவளும் வேகமாக சமையலறைக்கு சென்று வசுந்தரா குடிக்கும் பக்குவத்தில் அவருக்கு டீ கொண்டு வந்து தந்தாள்.

அவரோ அதை பருகிவிட்டு “என்னது இவ்வளவு கேவலமா இருக்குது. ஒரு டீ கூட போட தெரியாதா. கலனி தண்ணி மாதிரி ஏதோ ஒன்றைப் போட்டு வந்திந்திருக்க. இதை மனுஷன் குடிப்பானா” என்று அவர் டீயை அவள் மேல் வீச அது அவளது கையிலும் ஆடையிலும் பட்டு தெறித்தது. அவளோ டீ பட்ட இடத்தின் எரிச்சலை கூட கண்டுகொள்ளாமல்  “என்ன மன்னிச்சிடுங்க அம்மா. நான் மறுபடியும் போய் டீ போட்டு கொண்டு வரேன்” என்று கூற அவரோ “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ கொடுக்கிற டீய குடிச்சுட்டு நான் என்ன பரலோகம் போறதா. உன்னை எல்லாம் வேலைக்கு வச்சிருக்கேன் பாரு என்ன சொல்லணும்” என்று கூறிவிட்டு அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.

காபி கொண்டுவருகிறேன் என்று சொன்னவள் வெகு நேரம் ஆகியும் வராததால் அந்த வீட்டிற்குள் வந்த தீரன் இவை அனைத்தையும் கண்டு விட்டான். டீ கொட்டிய இடத்தை துடைத்து கொண்டிருந்தவள் எதேச்சையாக  திரும்பிப் பார்க்க அங்கு நின்று கொண்டிருந்தான் தீரன்.  அவனை கண்டவுடன் “ஐயோ சாரி யா உனக்குதான் காபி கொண்டு வரலாம்னு வந்த அதுக்குள்ள அம்மா கேட்டாங்க. அதான் அதை கொடுக்க போயிட்டேன்.  இரு சூடு பண்ணி தரேன்” என்று கூறி சமையலறைக்குச் செல்ல அவனும் அங்கு யாரும் இல்லாததால் அவளுடனே சமையல் அறைக்குச் சென்றான்.

அவனோ சற்று கோபமாக “அவங்க ஏன் உன் மேல டீய கொட்டி விட்டாங்க” என்று கேட்க அவளோ “அவங்களுக்கு பிடிக்கல அதனால தான் என் மேல கொட்டுனாங்க” என்றாள் சாதாரணமாக.

தீரன் இன்னும் கோபம் அடங்காதவனாக “பிடிக்கலனா அதுக்கு மேல தான் தூக்கி போடுவாங்களா. நீ ஏன்னு கேட்க மாட்டியா. தொழிலாளர்கள் சட்டப்படி யாரும் இந்த மாதிரி நடந்துக்க கூடாது உனக்கு இது கூட தெரியாதா” என்று கேட்க, அவளோ “எனக்கு அதெல்லாம் தெரியாதுயா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் சமையல்கட்டு வீட்டுவேலை அவ்வளவுதான். அதோட என் வாழ்க்கை இப்படியே போயிடும். ஏதாவது ஒரு நல்லவன் எனக்கும் பார்த்து வாழ்க்கை கொடுத்தான்னு வெச்சிக்கோ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா அவன் கூட போயிடுவேன். அதுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்” என்று கூற,

 அவனோ “இப்படியே இருந்தா உனக்கு தான் வாழ்க்கை கஷ்டம்.  எல்லாத்துக்கும் குனிஞ்சு போகாத அப்போ எல்லாரும் கொட்டிக்கிட்டே தான் இருப்பாங்க” என்று கூறினான். அவளோ அவன் முன்னே சூடான காபியை நீட்டி “இதெல்லாம் வாங்கி வாங்கி பழகிப் போயிருச்சுயா. இனிமேல் மாற்றவும் முடியாது. இந்த நீ காபியது குடி. ஆறிட போகுது” என்று கூற அவனும் காபியை குடித்துவிட்டு சமையல் அறையிலிருந்து வெளியே வந்தான்.

அப்பொழுது எதிரில் வந்த வர்ஷினி அவனைக் கண்டு “ஹேய் யார் நீ எதுக்கு கிச்சனிலிருந்து வெளியில வர” என்று கத்தி கேட்க, அவனோ பாக்கெட்டில் கைவிட்டபடி நிமிர்ந்து நின்றவன் “என்னை இந்த வீட்டில உங்க அப்பாவுக்கும் இந்த வீட்டு ஆளுங்களுக்கும் ஹெட் செக்யூரிட்டியாக அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க. ஐ வில் பி டேகிங் கேர் ஆப் யுவர் ஃபேமிலி சேஃப்டி” என்று கூற அவனது செய்கை அவளை கவர்ந்தது.

“நீங்கதானா அது. ஓகே நைஸ் டு மீட் யு” என்று அவனிடம் கையை நீட்ட அவனும் அவளுக்கு கை கொடுத்து “சேம் ஹியர்” என்றான். “மை நேம் இஸ் வர்ஷினி அன்ட் யூ ஆர் மிஸ்டர்??” என்று இழுக்க, அவனும் “ஐ அம் தீரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அப்பொழுது சரியாக சமையலறையிலிருந்து வெளியே வந்த மலர் அந்த காட்சியை கண்டு ‘என்னது இந்த குரங்கு அவருக்கு கைகொடுக்குது. இந்தமாதிரி சம்பவங்கள் எல்லாம் நடக்கவே நடக்காதே. இவளுக்கு வேலைக்காரங்க யாரையுமே பிடிக்காதே. எப்படி இவர்கிட்ட மட்டும் போய் கை கொடுக்குது’ என்று நினைத்தவள் அவர்களை நோட்டமிட வர்ஷினி வெகு நேரம் அவனிடம் சிரித்த முகமாகவே பேசிக்கொண்டிருந்தாள்.

இவனும் புன்னகைத்தவாறே பதில் கூறிக்கொண்டிருக்க மலருக்கோ அவர்கள் தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று சரியாக கேட்கவில்லை.

ஆனால் இருவரும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள் என்பதை கண்டு கொண்டவள் ‘இந்த வாட்ச்மேனுக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுது பாரேன்.  ஒருவேளை நேபாளி கூர்க்காவா இருந்திருப்பானோ” என்று யோசித்தவள் அவர்கள் பேசி முடிப்பதற்காக காத்திருந்தாள். பின் இருவரும் பாய் சொல்லி விட்டு வர்ஷினி மேலே தனது அறைக்குச் செல்ல அவனோ பின்னால் இருந்த தனது அவுட் ஹவுஸுக்கு சென்றுகொண்டிருந்தான்.

 வேகமாக அவன் பின்னால் ஓடியவள் “யோவ் செக்யூரிட்டி கொஞ்சம் நில்லுயா” என்று கூற அவனோ யார் என்பது போல் திரும்பிப் பார்த்தான். அங்கே மலரை கண்டவன் என்ன என்பதுபோல் புருவம் உயர்த்தி கேட்க “நீ செக்யூரிட்டி தான உனக்கு இங்கிலீஷ் எல்லாம் எப்படி தெரியுது. அதுமட்டுமில்லாமல் வர்ஷினி அம்மா வேலைக்காரர்களை மதிக்க கூட மாட்டாங்க உன்கூட மட்டும் எப்படி சிரித்து சிரித்து பேசறாங்க” என்று தனது சந்தேகத்தை அவனிடம் கேட்க, அவனோ “இங்க பாரு சும்மா செக்யூரிட்டி செக்யூரிட்டினு கூப்பிடாத. என்னோட பேரு தீரன். நான் உன்ன விட வயசுல மூத்தவன் அதனால கொஞ்சம் மரியாதையோடு கூப்பிட பழகிக்கோ” என்று கோபத்தோடு கூற அவளும் “சரிங்க சார்” என்று அந்த சாரை சற்று அழுத்தத்தோடு கூப்பிட அவனும் “இது கொஞ்சம் பெட்டரா இருக்கு. இதையே மெயின்டெய்ன் பண்ணு” என்று கூறினான்.

அவளோ மனதிற்குள் ‘சார்  ஒன்னு தான் இந்த டபரா தலையனுக்கு குறைச்சலா போயிருச்சு’ என்று நினைத்தவள் “சரி சொல்லு அந்தப் பொண்ணு வேலைக்காரர்களை சுத்தமா மதிக்காது ஆனா உன்ன மட்டும் எப்படி இவ்வளவு மதிச்சு நல்லா பேசுது” என்று தனது சந்தேகத்தை  கேட்க, “நான் வேணா அந்த பொண்ணு கிட்ட கேட்டு சொல்லட்டுமா” என்று கேட்டான் தீரன் நக்கலாக.

அவளோ “ஐயோ ஆள விடு சாமி நான் நல்லா இருக்குறது உனக்கு புடிக்கலையா” என்று கைகள் இரண்டையும் தலைக்கு மேல் வைத்து கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள். அவனும் அவளது செய்கையை பார்த்தவன் புன்னகைத்தவாறு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டான்.

அன்று இரவு உணவிற்கு அனைவரையும் அழைத்த ராஜசேகர் தீரனுக்கு அனைவரையும் அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார். தனது மனைவி தாய் மற்றும் மகளை அவனுக்கு அறிமுகப்படுத்தியவர் தீரனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

தீரனை பற்றி அவர்களிடம் கூற ஆரம்பித்தவர் “இவர் நம்மளோட பாதுகாப்பிற்காக நான் தனியா கேட்டு வர சொல்லியிருந்தவர். சாதாரண செக்யூரிட்டி பாடிகாட் மாதிரி எல்லாம் இவரை நினைச்சுக்காதீங்க.  என்னோட நண்பர் மிலிட்டரி ஆபீஸர் வஜ்ரவேல் தெரியுமில்ல. அவர்கிட்ட ட்ரெய்னிங் எதிர்த்தவர் தான் இவர். விஐபி செக்யூரிட்டிக்காகவே தனியா ஸ்பெஷல் ட்ரெயினிங் எல்லாம் எடுத்திருக்காரு. அதுவும் சாதாரண ட்ரெய்னிங்  கிடையாது துப்பாக்கி  லைசன்ஸ் எல்லாம் கூட இருக்கு. ஃபயர் ஆரம் ட்ரெய்னிங் எடுத்திருக்காரு.  ஒரு ஆறு மாசத்துக்கு நம்ம கூட தான் இருப்பாரு.  இவருக்கு தேவையான அத்தனையும் செய்து கொடுங்கள். அதேசமயம் செக்யூரிட்டி என்று மரியாதை இல்லாமல் நடத்த கூடாது. இவர் கவர்மெண்ட்ல ஒரு முக்கியமான பொசிஷன்ல இருக்காருனு எனக்கு தெரியும் ஆனா என்ன பொசிஷன்ல இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதனால அதுக்கு ஏத்த மரியாதையை நீங்க குடுப்பீங்க என நான் எதிர்பார்க்கிறேன். அதுல ஏதாவது சின்ன குறை கூட இருக்க கூடாது” என்று ராஜசேகர் கண்டிப்புடன் கூற வசுந்தராவும் அவனது தோற்றத்தை வைத்து அவர் வசதியான குடும்பத்து பையன் தான் என்பதை புரிந்து கொண்டார். அவனிடம் நல்ல விதமாகவே பழகியவர் “நீங்க எந்த ஊரு தம்பி” என்று அவனது குடும்பத்தை பற்றி விசாரித்தார்.

அவனோ அவர் கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் “நான் இங்க ஆபீஷியலா தான் வந்திருக்கேன். அதனால பர்சனல் டேட்டா எதுவும் சொல்வது கிடையாது என்ன மன்னிச்சிடுங்க” என்று நாசூக்காக அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டு விட்டான்.

அவனது பதில் அவருக்கு திருப்தி அளிக்காமல் இருப்பது அவர் முக பாவனை வைத்து கண்டு கொண்டவன் “இந்த மாதிரி விஐபி செக்யூரிட்டியாக போகும்போது நாங்க யாரும் எங்க பர்சனல் டேட்டாவை சொல்ல மாட்டோம்.  அது எங்கள் தொழில் தர்மம் அதனால நீங்க தப்பா நினைக்க வேண்டாம்” என்று கூற அவரும் ஒருவாறு சமாதானம் அடைந்தார்.

அப்பொழுது அங்கு உணவு பரிமாற வந்திருந்த மலரும் ‘இவன் நம்ம நினைச்ச மாதிரி ஒரு சாதாரண செக்யூரிட்டி வாட்ச்மேன் கிடையாது போல பெருசா ஏதோ சொல்றாங்க என்று புரிந்து கொண்டவள், அவன்கிட்டயே அப்புறம் தனியா கேட்டுவிடுவோம். நம்ம இதுக்கெல்லாம் நம்ம மூளையை உபயோகித்து குழம்பிப் போக வேண்டாம். வீணா எதுக்கு அதுக்கு வேலை கொடுக்கணும்’ என்று எண்ணியவள் அனைவருக்கும் அமைதியாக உணவு பரிமாறினாள்.

அப்பொழுது வசுந்தரா வழக்கம்போல் அவளது சமையலை குறை கூறுவதற்காக “என்ன குருமா வைத்திருக்க நீ” என்று கோபமாக கேட்க, அவர் கண்டிப்பாக அவளைச் சாடப் போகிறார் என்று உணர்ந்த தீரன் “ஆமாம் சப்பாத்திக்கு செமையா இருக்கு உன்னோட குருமா” என்று அவளை பாராட்ட வசுந்தராவோ அப்பொழுது தீரனை மீறி எதுவும் கூற முடியாத ஒரு காரணத்தால் அமைதியாகிவிட்டார்.

தீரன் கூறியதும் மிகையல்ல. அந்த சப்பாத்திக்கு அவள் செய்திருந்த பன்னீர் பட்டர் மசாலா அவ்வளவு அருமையாக இருந்தது. வசுந்தரா தான் அவளைக் குறை கூறியே பழகிவிட்டதால் அப்பொழுதும் அதைக் குறை கூற வர தீரன் தன் சாமர்த்தியத்தால் அவளை அன்று அவரிடம் திட்டு வாங்குவதில் இருந்து தப்பித்துக் வைத்தான்.

மலரோ மனதிற்குள் ‘இந்த ஆள் புண்ணியத்துல நம்ம இன்னைக்கு எப்படியும் திட்டுவாங்காம தப்பித்து விட்டோம்’ என்று எண்ணிக்கொண்டு சமயலறைக்கு சென்று பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருக்க அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

பின் அவர்களது தட்டுகளையும் பாத்திரங்களையும் சமையலறைக்கு கொண்டு வைத்தவள் அனைத்தையும் திறந்து பார்க்க அதில் ஒரு பருக்கை கூட சாதம் மீதம் இல்லை.

அதைக் கண்டவள் மனதிற்குள் ‘இன்னைக்கும் நம்ம பட்டினிதான். ஆண்டவா என்னைக்காவது இவங்கள கொஞ்சம் பாவம் பார்த்து எனக்கும் கொஞ்சம் வைக்க சொல்லுயா. நானும் பத்த மாட்டேங்குது என டெய்லியும் கொஞ்சம் கொஞ்சம் அதிகமா போட்டா நான் எவ்வளவு போட்டாலும் தீர்ந்து போயிடுது. என்னமோ போயா கடவுளே நமக்கு இது என்ன புதுசா. இருக்கவே இருக்கு தண்ணி கொஞ்சம் மோர். அதை குடித்தால்  முடிந்தது நம்ம நைட் சாப்பாடு’ என்று தனக்குத்தானே கூறியவள் மோரை குடித்துவிட்டு அனைத்தையும் ஒழுங்குபடுத்தி தனது அறைக்கு செல்லும் போது இரவு பத்து முப்பதை கடந்திருந்தது

தனது அறைக்கு வந்தவள் கதவை திறக்க அவளது கதவின் முன் இருந்தது ஒரு பார்சல். என்ன என்று அவள் எடுத்து பார்க்க உள்ளே அவளுக்காக இருந்தது ஒரு பார்சல் பிரியாணி. அவளுக்கு இது யார் வைத்திருப்பார் என்று யோசனை வர அப்போதுதான் அருகில் உள்ள தீரனின் அறையை பார்த்தாள்.

 அவளுக்கு புரிந்தது இது தீரன் வேலைதான் என்று. அவனது அறைக்கதவை தட்டி அவள் அவன் வெளியே வருவதற்காக காத்திருக்க அவனும் கதவை திறந்தவன் என்ன என்பது போல் பார்த்தான்.

அவள் கையில் இருந்த பிரியாணியை காமித்து “ரொம்ப நன்றி” என்று கூற அவனும் புன்னகை முகமாகவே “நீ எனக்கு பசித்த நேரத்துக்கு சாப்பாடு போட்டல்ல. என்னால உன் அளவுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க முடியல. கிடைச்சது இந்த பிரியாணி தான்” என்று கூற அவளோ “எனக்கு எங்க அப்பா இருந்தப்ப இந்த மாதிரி வாங்கி கொடுத்தாரு அதுக்கப்புறம் நீதான் வாங்கி கொடுத்திருக்க. ரொம்ப நன்றி” என்று சந்தோஷமாக கூறியவள் தனது வீடு நோக்கி ஓடி விட்டாள்.

அவளது வீடு நோக்கி வந்தவள் வேகமாக உணவை உண்டு கொண்டிருக்கும் பொழுது அவளது நினைவு முழுவதும்  தீரன் தான் இருந்தான். பின் அந்த நினைவே ஒதுக்கியவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு தூங்கச் செல்லலாம் என்று நினைத்து காற்றாட இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஜன்னலை திறக்க அங்கு அவள் கண்டதோ அந்த பங்களாவை நோட்டமிட்டுக் கொண்டிருந்த தீரனை  தான்.

இவர் ஏன் இந்த நேரத்துல பங்களாவை சுத்தி பார்த்துட்டு இருக்கார், அதுவும் வெறிக்க வெறிக்க என்று யோசித்த மலர், ‘ஒருவேளை ஏதாவது கெட்ட எண்ணத்தோட பார்க்கிறானா’ என்று எண்ணி முதலில் பயந்தாள். பின்  ‘இல்லை இல்லை அவர் பார்க்க நல்லவர் மாதிரி தான் இருக்காரு. அதனால கெட்டவனாக இருக்க முடியாது. ஒருவேளை ஏதோ செக்யூரிட்டின்னு சொன்னாங்கல்ல அதனாலதான் இப்படி வீட்டை பார்க்கிறாரோ என்னமோ’ என்று எண்ணியவள் சற்றுநேரம் அவன் அங்கே இருப்பதை பார்த்து கொண்டிருக்க அவனது உருவம் அவளது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நிலவொளியில் நின்று கொண்டிருந்த அவனது கம்பீரத் தோற்றம் அவளை கவர்ந்தது. ஆண்களுக்கு மட்டும்தான் பெண்கள் நிலவொளியில் இருக்கும்பொழுது வானத்து தேவதையாகவோ நிலவின் மறு உருவமாக தெரிவார்களா,  பெண்ணிற்கும் அதே எண்ணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அல்லவா. அந்த நிலவு ஒளியில் நின்று கொண்டிருந்தவன் கடவுளின் தூதனாகவும் அவளை ரட்ச்சிக்க வந்த தேவனாக தான் அவளுக்கு தெரிந்தான். அவள் மனதில் ஆழ பதிந்தவன் அவளை மீட்டுச்செல்வானா??? அவன் உண்மையில் ரட்சகன் தானா??

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here