உன் மனதில் நானா காவலனே – 4

0
641

அத்தியாயம் 4:

அவன் தனியாக வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு ‘நாமளும் போய் அவன் கூட பேசிப் பார்க்கலாமா’ என்று யோசனை வந்தது. ‘அவன் வேற வாட்ச்மேனா இல்லையான்னே எனக்கு தெரியல’ என்று நினைத்தவள் தனது அறையை விட்டு வெளியில் சென்று தீரன் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்தாள்.  அவன் அப்பொழுதும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு அவன் மனதில் என்ன எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தது என்பதை அவன் முகத்தை வைத்து யூகிக்க முடியவில்லை.

 தன் அருகில் ஆள் வரும் அரவம் கேட்பதை உணர்ந்து திரும்பி பார்த்தவன் அங்கு வந்து கொண்டிருந்த மலரைக் கண்டவன் புருவம் சுருங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அருகில் வந்தவள் “என்னய்யா இன்னும் தூங்கலையா. இங்க நின்னுகிட்டு இருக்க” என்று கேட்டாள்.

” இல்ல சும்மாதான் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். தூக்கம் வரல புது இடமில்ல. ஆதான்” என்று அவன் கூற,  அவளோ “ஆமா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்று கூறினாள். அவனோ அவன் இருக்கும் இந்த இறுக்கமான சூழ்நிலையில் இவள் என்ன கேட்க போறாளோ என்ற எரிச்சலில் கேளு என்றான் கடுப்பாக..

“ஆமா நீ வாட்ச்மேன் தானே. ஆனா அங்க வேற ஏதோ பெருசா உன்ன பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்களே” என்று கேட்க அவனோ அவளை முறைத்துப் பார்த்து, “நான் வாட்ச்மேன்னு உன்கிட்ட வந்து சொன்னனா” என்று கோபத்தோடு கேட்டான்.

அவள் அவனது கோபத்தை புறம் தள்ளிவிட்டு “ஆமா நீ தான் செக்யூரிட்டின்னு சொன்ன. செக்யூரிட்டினா வாட்ச்மேன் தானே. சரியா தான கேக்குறேன்” என்று அவள் கேட்க அவனுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. பின் அவளுக்கு அதை புரியவைக்க எண்ணியவன் “இங்க பாரு பாதுகாப்பு கொடுக்கிற எல்லாருமே ஒவ்வொரு வகையில் செக்யூரிட்டி தான். வீட்டுக்கு காவல் இருக்கிறவங்கள வாட்ச்மேன் இல்ல செக்யூரிட்டினு சொல்ற மாதிரி ஆளுங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறவங்களும் செக்யூரிட்டின்னு தான் சொல்வாங்க” என்று கூற அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தாள்.

“என்ன புரியலையா” என்று அவன் கேட்க அவளும் உதடு பிதுக்கி இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள். “சரி சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. இப்போ அரசியல்வாதிங்க பெரிய நடிகர்கள் தொழிலதிபர்கள் இவங்களுக்கெல்லாம் வெளியில பாதுகாப்பு இருக்காது. அதனால அவங்க கூடவே ஆளுங்கள் அவங்க பாதுகாப்புக்கு இருப்பாங்க. சில பெரிய தலைவர்களுக்கெல்லாம் வெளியில எதிரிங்க நிறையா இருப்பாங்க அப்படிப்பட்ட மனிதர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தான்  ஹியூமன் செக்யூரிட்டி. புரியுதா” என்று கேட்க அவளோ “இப்போ எனக்கு புரிஞ்சது. இந்த அரசியல்வாதிகள் நடிகர்கள் கூட எல்லாம் பக்கத்துல திம்சுகட்ட மாதிரி பெரிய பெரிய மலைமாடு மாதிரி நிறைய பேர் நிப்பாங்களே அவங்க தானே” என்று கேட்க அவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.

தீரனோ “அப்ப நான் திம்சுகட்டையா” என்று கோபமாக  கேட்க “மன்னிச்சிடுங்க தெரியாம சொல்லிட்டேன்” என்று பயத்துடன்   கூறினாள்.

பின் ஏதோ யோசித்தவள் “இப்ப எனக்கு சரியா புரிஞ்சிருச்சு. அவங்க போகும்போதெல்லாம் வந்து தள்ளிப்போங்க தள்ளிப்போங்க என்று சொல்லுவாங்கல்ல அடி ஆளுங்க. அவங்க தான நீங்க” என்று கேட்க அவனோ மறுபடியும் அவளை முறைத்தான்.

” இப்ப எதுக்கு நீங்க திரும்ப திரும்ப என்னை முறைச்சுகிட்டு இருக்கீங்க. தெரியாம தானே கேட்கிறேன் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க இல்லைன்னா விடுங்க” என்று கூற அவனுக்கு தனது வேலையை எப்படியாவது அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அவளிடம் “அது இல்ல. அவங்க கூடவே இருக்கணும் அவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவங்கள பாதுகாக்கணும். அந்த மாதிரி வேலை” என்று கூற அவளோ யோசித்து  “அப்பா போலீஸ் மாதிரியா” என்று கேட்டாள். அவன் ஆமாம் என்று கூற “சரி சரி..  உன்ன பார்த்தாலும் படிச்சவன் மாதிரி தான் இருந்துச்சு. நான் கூட நீ வாட்ச்மேன்னு சொல்லும்போது சாரி சாரி செக்யூரிட்டினு சொல்லும்போது முதல்ல சந்தேகப்பட்டேன்.  உன்ன பாத்தா படிச்சவன் மாதிரி இருக்குது இப்படி சொல்றானேன்னு. இப்ப எனக்கு புரிஞ்சுது என்ன மன்னிச்சிடு” என்று அவள் இயல்பாக கூற, அவனும் பரவாயில்ல விடு என்று கூறிவிட்டு நகர, அங்கு தண்ணீர் பாய்வதற்காக போட்டு வைத்திருந்த பைப் அவன் காலை தடுக்கிவிட்டது.

 அவன் நிலைதடுமாறி நிற்க முயல,  எவ்வளவு முயன்றும் தன்னை சமம் செய்துகொள்ள முடியாமல் அவள் மேலேயே சரிந்து விழுந்துவிட்டான். அவன் தன்மேல் விழுக போகிறான் என்று யூகித்தவள் விலக நினைக்கும் முன் அவன் அவள்மேல் விழுந்துவிட்டான். நல்ல வேளையாக அவர்கள் விழுந்தது புல் தரை என்பதால் மலருக்கு பெரிதாக  அடி எதுவும் படவில்லை. ஆனால் விழுந்த மாத்திரத்தில்  அவர்கள் இருவரது இதழ்களும் உரச அவள் அதிர்ச்சியில் விழிகள்  தெறிந்துவிடும் அளவிற்கு அவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவனது மொத்த பாரமும் அவளது இளம் தளிர் மேனியில் அழுத்த அவளால் மூச்சை கூட விட முடியவில்லை. அவனும் முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாரித்து எழுந்தவன் அவளை தூக்கிவிட்டான். இருவருக்கும் அது மிகவும் சங்கடமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. தீரன்  அவளிடம் “சாரி தெரியாம நடந்திருச்சு” என்று திணறியவாறே  கூற அவளும் நிலைமையை புரிந்துகொண்டு பரவாயில்லை என்று கூறிவிட்டு வேகமாக தனது அறைக்கு வந்து விட்டாள்.  சற்று நேரம் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, தான் வந்த காரியம் ஞாபகத்திற்கு வர மலரது ஞாபகத்தை ஒதுக்கிவிட்டு  அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலானான்.

இங்கு தனது அறைக்கு வந்த மலரோ படபடப்புடன் காட்சியளித்தாள். அவளுக்கு அவனது அருகாமையும் அவனிடமிருந்து வந்த இயற்கையான அவனின் மணமும் அவளது மனதை படபடக்க செய்வது. தனது அருகில் அவனது சுவாசம் சூழ்ந்து இருப்பது  போலவே ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. அதுவும் அந்த இதழ் உரசலை நினைத்தவளுக்கு ஏனோ மனதில் பலவித எண்ணங்களை தோற்றுவிக்க தன்னை முயன்று அடக்கினாள்.  தன்னை நிலைப்படுத்த எண்ணி, தனது குறிக்கோளை மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் ‘இல்ல மலரு இனிமேல் இவன் கிட்ட நம்ம தள்ளியே இருக்கணும். இல்லைன்னா நம்ம குறிக்கோள் தவறிப் போய் விடும். வாட்ச்மேனுக்கு ஆசைப்பட்டு நம்ம அடியாளுக்கு வாக்கப்படக் கூடாது’ என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டவள் அப்படியே உறங்கியும் விட்டாள். அவள் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாலும் அவளால் அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவனை தள்ளி நிறுத்த முடியவில்லை. கனவிலும் நினைவிலும் அவளுக்கு அவன் மட்டுமே. அதிலும் சில நொடிகளே என்றாலும் ஏற்பட்ட அந்த இதழ் உரசல் அவளை மொத்தமாக கட்டிப்போட்டது அவனது காலடியில்… தீரன் அவளவன் என்று நினைக்கவும் தூண்டியது..

அடுத்த நாள் காலை தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க அப்பொழுது அவளுக்கு தீரன் ஞாபகம் வந்தது. அவனை பற்றி எண்ணியவுடன் முகத்திலு புன்னகை தவழ சமையலறையிலிருந்து அவனது அவுட் ஹவுஸை எட்டிப்பார்த்தாள்.  அங்கிருந்து பார்த்தால் அவுட் ஹவுஸ் தெரியும் என்றதால் எட்டிப்பார்க்க அங்கு தீரன்  அவனது வீட்டின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவளோ அப்படியே சற்று நேரம் மெய் மறந்து நின்று விட்டாள். முறுக்கேறிய தேகமும் திண்மையான தோள்களும் கொண்டு அவன் உடற்பயிற்சி செய்யும் தோரணையும் அவள் குனிந்து நிமிரும்போது அலை அலையாக  படரும் கேசமும், தன் இலக்கே குறியாய் வேறெங்கும் பார்க்காத அவனது கண்களும், இறுக மூடிய  உதடுகளும் அவள் உள்ளத்தை தடம் புரளச் செய்தது.

அப்போது அங்கு வந்த வசுந்தராவின் குரலைக் கேட்டு தனது சுயத்திற்கு வந்தவள் வேகமாக அவருக்கு காபி கொண்டுபோய் கொடுத்தாள். ராஜசேகரும் அங்கு வந்துவிட அவருக்கு சத்துமாவு கஞ்சி கொண்டுபோய் கொடுத்தவள் பின் வர்ஷாவிற்காக கிரீன் டீ தயாரித்துக் கொண்டிருந்தாள்.

வர்ஷா கீழே இறங்கி வராததால் அந்த இடைவெளியில் தீரனுக்கு காபி கொடுத்து விடலாம் என்று நினைத்தவள், அவனுக்கு காபி எடுத்துக்கொண்டு போக சரியாக அந்த நேரம் அங்கு வந்த வர்ஷா “இங்க என்ன நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிற” இன்று அதிகாரமான குரலில் கேட்டாள். மலரோ அவளை சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை. பின் திணறியவாறே “இல்ல மேடம் காபி கொடுக்க வந்தேன்” என்று கூற அவளோ “அவர் என்ன உன்ன மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டு உடம்ப வளர்க்குற ஆள்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா. அவர் எக்சைஸ் பண்ணும்போதே தெரியல, அவர் ரொம்ப பிட்டா இருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிற ஆளுன்னு. போ  போய் அவருக்கும் க்ரீன் டீ கொண்டு வா” என்று அவளை விரட்ட,  தீரனுக்கோ அவனது உணவு விஷயத்தில் யாரும் தலையிட்டால் பிடிக்காது. ஆனால் அதை நேரடியாக வர்ஷாவிடம்  கூற முடியாமல் “விடுங்க வர்ஷா எனக்கு காபி குடிக்கிறது பழக்கம் தான். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கிரீன் டீ மட்டும் குடித்தால் போதாது எக்சசைஸ் கரெக்ட்டா பண்ணினா போதும். நான் என்ன சாப்பிட்டாலும் என்னோட உடம்பை பாதுகாப்பதில் கவனமாக இருப்பேன். அதனால கிரீன் டீ எனக்கு அவசியமில்ல. நீங்க குடுங்க மலர்” என்று கூறி மலரிடம் இருந்து காப்பியை வாங்கிக்கொண்டான்.

வர்ஷினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு தீரன் பேசியது பிடிக்கவில்லை என்றாலும் அவன் முன்னால் கோபத்தை காமிக்க முடியாமல் அமைதியாக நின்றாள். பின் அவளுக்கு மலர் க்ரீன் டீ கொடுக்க “இல்ல எனக்கு வேண்டாம். நான் காபியே குடிச்சுகிறேன்” என்று கூற அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த தீரன் மறுபடியும் தனது காபியை குடிக்கத் தொடங்கினான்.

அவர்கள் காபி குடித்து முடித்த பின் அந்த காபி கப்பை எடுத்தவள் சமையலறை சென்று விட இங்கு வர்ஷினி விடாமல் அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளை ஒதுக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் ஏதோ கடனுக்கு என்று பேசிக் கொண்டிருந்தான். அன்று காலை முதல் அவன் அவர்களுக்கு பாதுகாப்பிற்கான வேலையில் சேர வேண்டிய காரணத்தால் வேகமாக கிளம்பி வந்தவன் அவர்களுடனேயே காலை உணவை முடித்துக்  கொள்ள தீரனும் ராஜசேகரனுடன் கிளம்பிவிட்டான். வர்ஷினி மற்றும் வசுந்தரா ஆகியோர் தங்களது அன்றாட கிளப் பிரண்ஸுடன் சுத்த வெளியே சென்றுவிட மீண்டும் மலரா தனிமையில் இருந்தாள். இப்படியே ஒரு வாரம் செல்ல,  இந்த  ஒரு வாரமும் அவளும் அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.  அவன் இரவில் கைப்பேசியில் பேசுவதும் அந்த வீட்டை நோட்டம் விடுவதுமாக இருக்க அவளுக்கு புரிந்தது என்னவோ இவன் இந்த வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கிறான் என்று மட்டும்தான். அதை தாண்டி அவன் மேல் இருக்கும் நல்ல  அபிப்பிராயம் அவளை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை.

நாட்கள் மெதுவாக செல்ல, வர்ஷினி தன்னுடைய நண்பர்களின் பர்த்டே பார்ட்டிக்கு சென்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தாள். அவள் வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டிருந்த நேரம் அவளது கார் சிலரால் மறிக்கப்பட்டது. அதுவும் அவர்களது வீட்டில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில். முதலில் அவள் யாரென்று பார்க்க முகத்தில் முகமூடி கட்டிய சிலர் அவரது காரின் முன் நின்று கொண்டிருந்தனர். அதை கண்டவளுக்கு இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

அவர்கள் காரின் அருகே வந்து காரின் கதவை ஒரு பக்கமா திறக்க முனையும் முன் அவள் வேகமாக கதவை திறந்து கொண்டு தனது வீட்டை நோக்கி ஓடினாள்.  அவர்களும் இவள் ஓடுவாள் என்று எதிர்பாக்காமல் இருக்க, சுதாரித்தவர்கள் அவளை பின்னாடியே துரத்திக் கொண்டு வர அப்பொழுது சரியாக அவளுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது.

முதலில் அதிந்தவள், பின் அது தனது தந்தையின் கார் என்று தெரிந்த பின்னர் சிறிது நம்பிக்கை வர ஆரம்பிக்க, அதன் அருகே வேகமாக  ஓட, அதிலிருந்து வேகமாக இறங்கினான் தீரன். கணநேரத்தில்  அவர்களுக்கும் வர்ஷிக்கும் நடுவில் வந்தவன் அவர்களை தடுக்க முயல ஒருவன் வேகமாக முன்னே வந்து வீரனை அடிக்க முயன்றான். தீரனோ லாவகமாக அவனது கையைத் தடுத்தவன் பின்னே மடக்கி முதுகுப்புறமாக பலமாக உதைக்க அவனோ வலியில் துடித்துக் கொண்டே கீழே விழுந்தான். மற்றவர்களும் ஒருசேர அவனைத் தாக்க வரை அனைவரையும் லாவகமாகத் தடுத்தவன் திரும்ப அடிக்க அவனது அடி தாங்கமுடியாமல் அனைவரும் அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்ற ரீதியில் தப்பியோடினர்.

இவை அனைத்தையும் கண்ட ராஜசேகருக்கு மனதில் பெரும் நிம்மதியை தோன்றியது. தான் சரியான ஒரு நபரைத்தான் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று அவருக்கு புரிந்தது. இதில் அவர் புரிந்துகொண்ட இன்னொன்று தனக்கு இருக்கும் ஆபத்தை விட தனது பெண்ணுக்கு தான் அதிக ஆபத்து என்பதை. அதை அவர் சரியாகப் புரிந்து கொண்டார். பின் சில விஷயங்களைப் பற்றி யோசித்தவர் மனதிற்குள் பல கணக்குகளை போட்டு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். அது என்னவென்றால் வர்ஷினிக்கு பாதுகாப்பாக தீரனை நியமிப்பது தான்.

தனது முடிவில் உறுதியாக இருந்தவர் இதற்கு எப்படியாவது தீரம் சம்மதிக்க வேண்டும் என்று எண்ணினார். அதேசமயம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த வர்ஷினி தீரன் தன்னை காப்பாற்றி அவர்களை அடித்து துவம்சம் செய்தது அவளுடைய மனதில் அவனுக்கு ஒரு இடத்தை தந்தது.

 ஆனால் அது காதலா என்று கேட்டால் சத்தியமாக இல்லை. அவளுக்கு  அவனது ஆண்மை  கம்பீரமும் பெரிதாக ஈர்த்தது. வர்ஷினிக்கு இருக்கும் பல பாய்பிரண்ட்களில் இவனும் ஒருவனாக இருக்க வேண்டும், அவனை வெளியில் அழைத்துச் சென்று பெருமைப்பட வேண்டும் என்று மட்டுமே அவள் எண்ணினாள்.

பின் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தவர்கள் நடந்த அனைத்தையும் அங்கு வசுந்தரா மற்றும் அவரது தாயிடம் கூற, தனக்கு இருக்கும் ஒரே பெண்ணிற்கு ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்  வசுந்தராவிற்கு தொற்றிக்கொண்டது. பர்வதமும் தனது பயத்தை தன் மகனிடம் கூற அவரும் அப்பொழுது முடிவு எடுத்தவராக தீரனிடம் “தீரன் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீங்க இனிமேல் எனக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்துவதற்கு பதிலாக எனது பெண் வர்ஷாவிற்கு அந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி தர முடியுமா. நீங்கள் அவள் கூடவே இருக்க முடியுமா” என்று கேட்க அவனோ “என்னால் எப்படி சார் முடியும்” என்று தயக்கமாக கேட்டான்.

அவரோ “அவள் ஸ்கெடுள் படிதான் கிளாஸ் போயிட்டு வர்றா. மத்த படி அவ பிரண்ட்ஸ் பார்ட்டி அப்படிதான் போறா. சொல்லப் போனா என்ன விட அவ கூட இருக்கிறது உங்களுக்கு வேலை கம்மி தான். அதனால நீங்க அவ கூட இப்போதைக்கு பாதுகாப்பாய் இருந்தா பரவாயில்லையா இருக்கும் என்று எனக்கு தோணுது. எனக்கு உங்களுக்கு கீழ செயல்படுற எனக்கு முன்ன இருந்த பாதுகாப்பு ஆட்கள் போதும்” என்று கூற அவனும் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்தான்.

இதை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த மலருக்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கப் போகிறார்களா என்ற எண்ணம் மனதில் தோன்றி சிறு வலியை ஏற்படுத்தியது. அவள் காதல் மனம் அவளிடம் ‘எப்படி பார்த்தாலும் அவனுடைய தகுதிக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன். ஆனா அந்த வர்ஷினி மாதிரி ஒரு ஆளும் கூடஹஅவனுக்கு ஒத்து வரமாட்டாங்க’ என்று எண்ண, அவள் மனமோ ‘அவன் பாடு அவள் பாடு இதுல உனக்கு என்னடி மலரு’ என்று அவளையே திரும்ப கேள்வி கேட்டது.

 ‘அதுவும் சரிதான் அவங்க ரெண்டு பேருக்குள்ள நான் யாரு. யாரோ ஒரு சாதாரண வேலைக்காரி” என்று எண்ணிக்கொண்டவள் தனது வேலைகளை பார்க்க தொடங்கினாள். நடுவில் அவர்களை கவனிக்கவும் தவரவில்லை. அவளது காதல் மனம் அவன் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்க அதை முயன்று அடக்கியவாறு இனி தன் காதலை மனதிற்குள்ளேயே புதைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த நாள் முதல் வர்ஷினி தீரனுடனே அதிக நேரத்தை செலவழித்தாள். அவள் போகும் இடமெல்லாம் அவனும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் இருவரும் சற்று நெருக்கமாக ஆனது போல் வர்ஷினி உணர்ந்தாள். ஏன் மலரும் கூட அதை நன்கு உணர்தாள்.

அவனது அண்மையிலும் ஆண்மையிலும் தன்னை தொலைத்த வர்ஷினி  அவனிடம் தன்னை இழக்கும்  நிலையிலும் இருந்தாள். ஆனால் காதலினால் அல்ல. தீரன் அவளிடம் காட்டிய நெருக்கம் அவளை அவன் பால் பெரிதும் ஈர்த்தது என்னவோ உண்மை தான். தன் தாய் தந்தையரின் சரியான கவனிப்பு இல்லாமல் வளர்ந்ததாலோ என்னவோ அவளுக்கு ஆண் நண்பர்களின் பழக்கம் அதிகம். எல்லைமீறும் அளவிற்கு பழக்கம் அவளுக்கு இருந்தது. தீரனிடம் கூட அவள் அதையேதான் எதிர்பார்த்தாள்.  அவனிடம் அவளுக்கு ஏற்பட்டது இனக்கவர்ச்சி மட்டுமே.

தீரன் தினமும் வர்ஷினியுடன் இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தான்.  இதை மலரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளிடம் வெகு நேரம் பேசுபவன், அவள் சென்ற பின் சில நிமிடங்கள் அங்கேயே ஏதோ ஒன்றை யோசித்துக்கொண்டு நிற்பவன்  பின்னரே தனது அறைக்கு செல்வான். இதை மலரும் தனது அறையிலிருந்த பார்த்துக் கொண்டு தான் இருப்பாள்.

அன்றும் அதே போல் இருவரும் பேசிக் கொண்டிருக்க சற்று நேரம் அவர்களை கவனித்துக் கொண்டிருந்த மலர் சில வேலைகள் இருந்ததால் தனது அறைக்குள்ளே சென்று அதை முடித்து விட்டு வெளியே வர அங்கு இருவரும் காணாமல் போயிருந்தனர்.

‘என்னது ரெண்டு பேருமே சீக்கிரம் கிளம்பி விட்டார்களா. இரண்டையும் காணோமே’ என்று எண்ணியவள் வெளியில் எட்டிப் பார்க்க மலர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள். ஆம், இருவருமே அங்கு ஒரு சுவர் ஓரத்தில் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு இருக்க வர்ஷினி அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு இருந்தாள். அதைக் கண்ட மலருக்கு இதயத்தை யாரோ பிடுங்கி எறிந்தது போல் ஒரு வலி உண்டானது. கண்களில் கண்ணீர் கோடாக வழிய அந்த இடத்தில் அப்படியே சரிந்து அமர்ந்தவள் அவளுடைய காதலை எண்ணி மனதுக்குள் நொந்து கண்ணீர் வடித்தாள்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here