உன் மனதில் நானா காவலனே – 5

0
708

அத்தியாயம் 5:

தீரனும் வர்ஷினியும் நெருக்கமாக இருப்பதைக் கண்டவள் மனதில் வலி எழும்ப சற்று நேரம் தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து அழுது கரைத்தவளுக்கு,  ‘நான் வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்பட கூடாதா’ என்ற எண்ணம் தோன்றியது. பின் தனது கண்ணீரை துடைத்துக்கொண்டவள் “இல்லை நான்  அழுகக்கூடாது. அவர பார்த்தா வசதியானவர் மாதிரிதான் தெரியுது. அவங்க இருவருக்கும் தான் சரியாக வரும். எனக்கு இந்த காதல்  எல்லாம்  சரிப்பட்டு வராது. இதை மறந்துவிட்டு அடுத்த வேலையை நான் கவனிக்க வேண்டும்” என்று எண்ணினாள்.. தீரன் வேறு யாராவது ஒரு நல்ல பெண்ணை காதலித்து இருந்தாலோ அவளுடன் நெருக்கமாக இருந்திருந்தாலோ மலருக்கு இத்தகைய வலி ஏற்பட்டு இருக்காதோ என்னவோ. ஆனால் மலர் வர்ஷினியை பற்றி நன்கு தெரிந்தவள் அல்லவா. தீரனுக்கு இந்த பெண் தான் கிடைத்தாலா, அதுவும் அவளுக்கு ஆண் சகவாசம் அதிகம் ஆயிற்றே. இருவருக்கும் ஒத்துப்போகுமா.

 ஒருமுறை பருவதம் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்க ராஜசேகர் மற்றும் வசுந்தரா ஆகியோரும் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது வர்ஷினி தனது ஆண் நண்பர்கள் சிலரை தினமும் வீட்டிற்கு அழைத்து வருவதை மலர் நேரில் பார்த்திருக்கிறாள். அவர்களுடன் வீட்டிலேயே குடித்து கொட்டமடித்ததையும் எல்லை மீறல்களையும் கண்கூடாக பார்த்தாள். அதனாலேயே தீரனுடன் அவளை மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீரனை பார்த்த இத்தனை நாட்களில் அவனிடம் ஒரு சிறு கெட்ட பழக்கத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை. அப்படிபட்டவனுக்கு வர்ஷினியா என்று  அவள் மனம் வருந்தியது.

என்னதான் தீரனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தான் நினைக்கக்கூடாது என்று அவள் நினைத்தாலும் அவனது ஞாபகம் அவளுக்கு வந்துகொண்டே தான் இருந்தது. பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் இனி இயல்பாக இருக்க வேண்டும் என்ற முடிவோடு வீட்டில் வளையம் வர ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் இவளை வெறுப்பேத்துவது போலவே நடந்துகொண்டார்கள். ஒன்றாக போவதும் வருவதும் இரவில் ஒன்றாக பேசுவதுமாக அவர்கள் இருக்க அவளுக்கோ அவர்களை காணும் போதெல்லாம் ஏனோ வெறுமை மட்டுமே மனதில் மிஞ்சியது. இதனாலேயே அவளது இயல்பான கலகலப்பான குணம் மறைந்து அவள் ஏதோ ஒன்று பறிகொடுத்தது போலவே சுற்றிக் கொண்டிருந்தாள்.

பருவதம் கூட அவளை சில நாட்களாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவளுக்கு வேலையில் நாட்டமில்லாமலும் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பது போலவே  அவருக்கு தோன்றியது. முன்பெல்லாம் வசுந்தரா அவளை ஏதாவது திட்டினால் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் காற்றோடு பறக்க விட்டுவிட்டு வருபவள் இப்பொழுது அதை மனதிற்குள் ஏற்றுக் கொண்டு கண்ணீர்விட்டு வருந்த ஆரம்பித்திருந்தாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த பருவதம் இதைப்பற்றி அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணி அவளை வரவழைத்து “என்ன ஆச்சு” என்று கேட்டார். அவரது அந்த கேள்வி  எதற்காக என்று  அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

மலர் “என்ன பாட்டி. எதுவும் இல்லையே” என்றாள் புரியாமல்.  ஆனால் அவருக்குத் தெரியும் அல்லவா இவள் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்று.

அவளுக்கு ஆறுதல் கூறும் விதமாக “மலரு உன் மனசுல ஏதோ ஒரு பெரும் குழப்பத்தில் இருக்க எனக்கு தெரியுது. நீ அதை என்கிட்ட சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. உனக்கு நான் ஒரு பார்ட்டி மாதிரி தான் அதனால அந்த அக்கறையில் சொல்றேன். உன்னோட வயசு பொண்ணுங்களுக்கு சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுக்காம நம்ம பாட்டுக்கு நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கணும். தேவையில்லாத விஷயத்தில் தலையிடக் கூடாது தேவையில்லாத விஷயத்திற்கு ஆசைப்பட்டு அதற்காக வருந்தவும் கூடாது. நீ புத்திசாலி பொண்ணு நான் சொல்லித்தான் எதுவும் புரிஞ்சுக்கணும் என்று  அவசியம் கிடையாது.  உனக்கே தெரியும் எப்படி நடக்க வேண்டும் என்று” என்று அவருக்கு தோன்றியதை அவர் அவளுக்கு சொல்ல அவளும் அவர் கூறிய உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு இனி தீரனை பற்றி நினைக்க கூடாது என்று தனது மனதிற்குள் ஒரு முடிவு செய்து கொண்டாள்.

அடுத்த வந்த சில நாட்கள் மலர் தீரனிடம் சரியாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை..  அவன் கேட்டதற்கு மட்டும் பதில் கூறிவிட்டு சென்று விடுவாள். அவனும் அவளிடம் சிலசமயம் தானாக சென்று பேச்சுக் கொடுத்து பார்த்தாலும் அவளிடமிருந்து சில வார்த்தைகளிலேயே பதில் வரும் அல்லது தலையசைப்போடு சென்றுவிடுவாள். அவனுக்குமே அவளது செய்கை சற்று வித்தியாசமாக பட்டாலும் பின் தனது காரியத்தில் கண்ணாக இவளைப் பற்றிய நினைவை விட்டுவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

ஒருநாள் இரவு வர்ஷினி ஏதோ ஒரு நண்பரின் பார்ட்டிக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வந்து சேர்ந்தாள். அவளை பத்திரமாக அவளது அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்த தீரன் தனது வீட்டிற்கு வர அங்கு மலர் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மலரும் அன்று ஏதோ தூக்கம் வராததால் தனது வேலைகளை முடித்து வீட்டிற்கு வெளியில் அமர்ந்து அன்றைய முழுநிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்தவன் “என்ன ஆச்சு மலர் நீ ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்க. சரியா பேசுவதும் இல்லை ஏதாவது பிரச்சனையா. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் உதவி செய்கிறேன்” என்று கேட்க அவளோ அவனை முறைத்துப் பார்த்து “உங்களுக்கு என் கிட்ட எல்லாம் பேச நேரமிருக்காது சார்” என்றாள்.

பின் “அப்படியே இருந்தாலும் வேலைக்காரி கூட நீங்க ஏன் சார் பேச போறீங்க” என்று எள்ளல் குரலில்  கூறிவிட்டு தனது முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனுக்கு நன்றாக புரிந்தது இவள் தான் வர்ஷினியுடன்  அதிக நேரம் செலவிடுவதை தான் குறிப்பிடுகிறாள் என்று.

“இல்ல மலர் அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று அவன் ஏதோ கூற வர அவளோ அவனைத் தடுத்து “இல்ல சார் நான் என்னுடைய நிலையை மறந்து  இருந்திருக்கிறேன். நீங்க எல்லாம் வசதியானவங்க. நான் என்னுடைய எல்லையில் இருந்து கொள்வது  தான் நல்லது” என்று கூற, “என்ன மலர் நானும் கூட இதே அவுட் ஹவுசில் தானே இருக்கேன். இதுல எங்க என்னோட வசதியை நீ பார்த்த” என்று கோபமாகக் கேட்டான் அவன்

அவளோ “பணக்காரர்களுக்கு தான் சார் பணக்காரர்களோட பழக்கவழக்கம் அவங்களோட ஒத்துப்போகும். எனக்கு அதெல்லாம் பார்க்கும் போது தெரியுது. அதை வச்சு என்னால சொல்ல முடியுது நீங்களும் வசதியானவர் தான். அதனால தான் உங்களுக்கு பணக்காரங்க கூட ஈசியா ஒத்துப் போகுது. அதனால தான் சார். சரி விடுங்க சார் இத பத்தி எதுக்கு பேசிகிட்டு” என்று அவள் விட்டேத்தியாக கூற, அவனுக்கு அவளது சார் என்று அழைப்பு மிகவும் வித்தியாசமாக பட்டது.

“என்ன மலர் புதுசா சார் எல்லாம் கூப்பிடற. எப்பவும் வாயா போயா அப்படின்னு தான் கூப்பிடுவ” என்று கேட்க அவளோ “அப்ப நீங்களும் இங்க வேலைக்கு வந்தவர் தான் என்று நினைச்சு நான் அப்படி கூப்பிட்டேன் சார். ஆனால் அது அப்படி இல்லை என்று தெரிஞ்ச அப்புறம் நான் எப்படி உங்கள அப்படி கூப்பிட முடியும். அதனால் தான் சார்னு கூப்பிடுகிறேன்” என்று விளக்கம் தர அவனுக்கோ அவள் என்ன கூறுகிறாள் என்பது புரிந்தாலும் இதற்குத்தான் கூற எதுவுமில்லை என்று அமைதி காத்தான்.  அவன் அமைதியை கண்டவள் தான் கூறியது உண்மைதான் என்று நினைத்துக் கொண்டு அவனுடன் சற்று ஒதுக்கத்துடன் நடந்து கொள்ள எண்ணினாள். “சரி சார் நான் போய் தூங்குகிறேன்” என்று கூறி வேகமாக அந்த இடத்தை விட்டும் அகன்று விட்டாள்.

செல்லும் அவளையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த தீரன் புருவம் முடிச்சிட ஏதோ ஒரு யோசனையில் இருந்தான். பின் தன் அடுத்த கட்ட வேலைகளை தொடங்க எண்ணியவன் ஒரு முடிவு செய்த பிறகு தூங்கச் சென்றான்.

அடுத்த நாள் காலை அனைவரும் உணவு உண்டு கொண்டிருக்க மலரோ அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராஜசேகரிடம் தனது பேச்சைத் தொடங்கிய தீரன் “சார் இனிமேல் வர்ஷினிக்கு பாதுகாப்பு தேவைப்படாது என்று எனக்கு தோன்றுகிறது” என்று கூற அவரோ ஏன் என்பது போல் அவனை பார்த்தார்.

” இந்த ரெண்டு வாரமா நான் நல்லா கவனிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன் அவங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. சுற்றி ஆட்களையும் வைத்து நோட்டம் விட்டு பார்த்தேன். யாரும் இவங்கள தாக்குவதோ இல்லை  இவங்களுக்கு ஆபத்து ஏற்படும் விதமாக நடந்து கொள்ளவில்லை.  அதனால் இவங்களோட பாதுகாப்பு பொறுப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.நான் பாதுகாப்பு கொடுக்கிற அளவுக்கு இங்கு பிரச்சனை இல்லைன்னு நெனைக்கிறேன் சார். அதனால என்னுடைய மற்ற, எனக்கு கீழ வேலை பாக்குறவங்கள வெச்சு இனிமேல் வர்ஷினிக்கு பாதுகாப்பு கொடுக்கலாம். என்னுடைய நேரடி பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூற அவரும் சற்று நேரம் யோசித்தவர் “நீங்க நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறீர்களா” என்று கேட்டார்.

 அவனும் ஆமாம் என்று கூற “சரி அப்ப ஓகே நீங்க இன்றிலிருந்து என் கூடவே வந்துடுங்க. ஆனா நாளைக்கு நான் ஃபாரின் போக வேண்டிய வேலை இருக்கு அதனால நடுவுல இரண்டு நாள்  நான் இங்க இருக்க மாட்டேன். அந்த டைம்ல நீங்க எங்க வீட்ல இருந்தாலும் சரி இல்ல வீட்ல இருக்கவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் சரி அது உங்க விருப்பம். ஆனா இதனால உங்க சம்பளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று கூற அவனும் சரி என்று விட்டான்.

அவன் வர்ஷினியின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து விலகியது அங்கிருந்த மூன்று பெண்களுக்குமே மிகவும் அதிர்ச்சி அளித்தது. முதலில் வர்ஷினி. அவளுக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்தவன் இன்று தன்னுடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டது ஏன் என்று தான் அவளுக்கு புரியவில்லை. ‘தனக்கு நெருக்கமாக தானே இருந்தார் திடீர்னு ஏன் இந்த முடிவு. நேற்று இரவு கூட அவனுடன் தானே பார்ட்டிக்கு சென்று வந்தேன். அப்பொழுது கூட அவன் இதைப்பற்றி கூறவில்லையே’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

அடுத்தது மலர், ‘நேத்து நைட்டு கூட ஏதோ யோசிச்சுகிட்டு இருந்தாரு இதைப் பத்தி யோசிச்சிருப்பாரோ. ஆனா நேத்து ரெண்டு பேரும் ஒண்ணா வெளியில போயிட்டு வந்தாங்க. அந்த பொண்ணு குடித்திருந்தப்போ இவர்தானே கை தாங்களா கூட்டிட்டு போனாரு.  அதை நானும் பார்த்தேனே ஒருவேளை அவ குடிச்சிருந்தது இவருக்கு பிடிக்கலையோ என்னவோ. ஆனா அதுக்கு முன்னாடி அவ குடிச்சிட்டு வருவதை நானும் பாத்திருக்கேன் இவரும் அவளை கைத்தாங்கலாக கூட்டிட்டு போய் இருக்காரு. இப்போ திடீர்னு என்ன ஆச்சு” என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

இதில் மூன்றாவது ஆள் வர்ஷாவின் தாய் வசுந்தரா. வர்ஷினி மற்றும் தீரனின் நெருக்கம் அவருக்கு இருவரும் காதலிக்கிறார்களா என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. வர்ஷினியின் ஆட்டங்கள் அனைத்தையும் அறிந்தவர் அவளை இவனுக்கு எப்படியாவது திருமணம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அவர் பார்த்த வரைக்கும் தீரன் ஒழுக்கமாகவும் அடக்கமாகவும் நடந்து கொள்ளும் விதம் அவரை மிகவும் ஈர்த்தது. அவன் பார்ப்பதற்கும் வசதியானவன் போல் இருப்பதால் தங்களது வசதிக்கு குறைவாக இருந்தாலும் தங்களது ஒரே பெண்ணை திருமணம் செய்த பின் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லையே என்று மனதிற்குள் பல கணக்குகளை போட்டு வைத்திருந்தார்.

 ஆனால் திடீரென்று அவன் வர்ஷாவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது அவருக்கும் சற்று வருத்தத்தை கொடுத்தது. அதனால் இதை அடுத்து எப்படி கொண்டு செல்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

 ஆனால் இவர்கள் அனைவரின் யோசனைக்கு காரணமானவனோ மனதிற்குள் வேறுசில எண்ணங்களோடு  தனது அடுத்த கட்டத்தை திட்டத்தை  நோக்கி செயல்பட ஆரம்பித்திருந்தான்.

அன்று தனது குழுவோடு அவன் ராஜசேகருக்கு பாதுகாப்பாக சென்று விட்டதால் வர்ஷினியால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலைவரை அவனது வரவிற்காக அவள் காத்துக் கொண்டிருக்க அவன் வந்தவுடனே அவனது அறைக்கு செல்ல முயன்றான். வர்ஷினி  வீட்டின் முன்னே நின்று அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்க அவன் அங்கே ஒருத்தி இல்லாதது போல் சற்றும் கண்டுகொள்ளாமல் செல்ல அவளுக்கு தான் அவமானமாக போயிற்று.

அப்பொழுது அறைக்குள் நுழைந்தவன் பின் இரவு உணவிற்கு மட்டும் தான் தனது அறையை விட்டு வெளியே வந்தான். வர்ஷினி மறுபடியும் அவனிடம் ஏதோ பேச முயற்ச்சி செய்ய அதற்குள் ராஜசேகரும் அவனுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவளால்  அவனிடம் எதுவும் கேட்க முடியவில்லை. எப்படியும் உணவிற்குப் பின் அவன் தோட்டத்தில் தான் இருப்பான் என்று எண்ணியவள் அதற்காக காத்திருக்கலானாள். அவள் நினைத்தது போல் அவனும் இரவு உணவு முடித்துவிட்டு தோட்டத்தில் வந்து அமர்ந்திருக்க அவன் அருகில் சென்றவள் “என்ன ஆச்சு தீரன். ஏன் என்னோட செக்யூரிட்டியாக இருக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்க” என்று கேட்க அவனோ அவளைப்பார்த்து “தண்ணி அடிச்சுட்டு வர்றவங்களுக்கு எல்லாம் நான் செக்யூரிட்டியாக இருக்கணும்னு அவசியம் கிடையாது  ஒரு நார்மல் டிரைவர் இல்லை பாடிகாட் போதும் வர்ஷினி” என்று கூறினான். அவளோ “ஏன் இப்படி பேசுறீங்க தீரன். நமக்குள்ள ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கே அது அவ்வளவு தானா” என்று கேட்க, அவனோ அவளை ஏளனமாக பார்த்து “என்ன ரிலேஷன்ஷிப் வர்ஷினி” என்று நக்கலாக  கேட்டான்.

வர்ஷினி ” என்ன தீரன் புரியாத மாதிரி கேக்குறீங்க. வி ஆர் பிரண்ட்ஸ் ஆன் பெனிஃபிட்ஸ்” என்று அவள் சாதாரணமாக கூற, அவனும் “அப்படியா ஐ டோன்ட் தின்க் சோ. நான் உங்களுக்கு செக்யூரிட்டியாக வந்தேன் வேற எதுக்காகவும் வரல” என்று கூறிவிட்டு நகரம் முனைய இவை அனைத்தும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தால் மலர். அவர்கள் தூரத்தில் பேசிக் கொண்டிருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு வாக்குவாதம் என்று மட்டும் புரிந்தது. எதுவும் கேட்காத காரணத்தினால் சற்று நேரம் நின்று கொண்டிருந்தவள் காதலர்களுக்குள் நடக்கும் ஊடல் என்று நினைத்துக்கொண்டான்.

பின் ‘சரி என்னவா இருந்தா நமக்கென்ன நம்ம போய் நம்ம வேலையை பார்க்கலாம்’ என்று தனது படுக்கையை விரித்தவள் ஐந்து நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மறுபடியும் ஜன்னல் வழியாக பார்க்க அங்கு வர்ஷினி அவனை கட்டிக்கொண்டு நின்றாள் அதைக் கண்டதும் அவள் மனதில் சுளிர் என்று ஒரு வலி உண்டானது. வேகமாக தனது படுக்கை அறைக்குச் சென்றவள் தனது தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள். அவள் மனம் அவனை நினைக்க கூடாது என்று அறிவுறுத்தினாலும் அதை அனைத்தையும் மறந்து அவளுடைய நினைவு முழுவதும் தீரனே நிரம்பி  இருந்தான்.

 தனது மனதை முயன்று அடக்கியவன் ‘அவனை நினைக்காதே என்று சொன்னால் நீ ஏன் அவன் பின்னாடியே செல்கிறாய் மனமே அவனை மறந்து விடு’ என்று அதற்கு அறிவுறுத்தினாள்.

அரை மணி நேரம் தனது படுக்கையிலேயே கண்ணீர் சிந்தியபடி இருந்தளுக்கு அதற்கு மேலும் அப்படியே இருக்க அம்மா மனம் கேளாமல் எட்டிப்பார்க்க அங்கு அவன் மட்டும் அமர்ந்திருந்தான் வர்ஷினி அங்கே இல்லை. ‘என்ன இவர் மட்டும் தனியா உட்கார்ந்திருக்காரு. அந்த பொண்ண காணோமே’ என்று எண்ணியவாறு தலையை நன்றாக வெளியில் விட்டு எட்டிப் பார்க்க அப்பொழுது என்ன தோன்றியதோ தீரனும் திரும்பி அவளைப் பார்த்தான்.

 அவன் தன்னைப் பார்ப்பதை சற்றும் எதிர்பாராதவள் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க அன்று பௌர்ணமி நிலவொளி நன்றாக இருந்ததால் அவனுக்கு அவள் பார்ப்பது நன்றாக தெரிந்தது.

அவன் தன்னைக் கண்டு விட்டதால் அதிர்ச்சி அடைந்தவள், வேறு வழி இல்லாமல் தனது அறையை விட்டு வெளியே வந்து அவன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள். அவன் கையை கட்டிக்கொண்டு அவளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க அவன் அருகில் சென்றவள் “நீ இன்னும் தூங்கலையா சார்” என்று கேட்க அவன் இல்லை என்று தலையாட்டினான்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் “எதுக்கு மலர் அங்கிருந்து என்ன பார்த்துகிட்டு இருந்த” என்று அவன் நேரடியாக கேட்க அவளோ முதலில் என்ன சொல்வது என்று தெரியாமல்  திணறினாள்.  பின் தன்னை சுதாரித்துக் கொண்டு “இல்ல சார் எனக்கு சரியா தூக்கம் வரல. அதான் ஜன்னல் கிட்ட கொஞ்சம் காத்து வாங்கிட்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்று தான் பார்த்தேன். அப்போ நீங்க இங்க தனியா நின்னுகிட்டு இருந்தீங்க. அதுதான் ஏன் இந்த நேரத்துல நீங்க இங்க இருக்கீங்கன்னு யோசிச்சு கிட்டு உங்கள பாத்துக்கிட்டு இருக்கும் போது நீங்க என்ன பாத்துட்டீங்க. சரி பேசலாம்னு தான் வெளியில் வந்தேன்” என்று அவள் கூற அவனோ அவளை நம்பாத பார்வை பார்த்தான்.

 அவளது பார்வையை உணர்ந்து கொண்டவள் “நெஜமாதான் சார். உள்ள கொஞ்சம் புழுக்கமாக இருந்தது. அதனால தான் ஜன்னலைத் திறந்தேன். இந்த ஜன்னலை திறந்தால் சிலுசிலுனு காத்து வரும் ஏன் உங்களுக்கு தெரியாதா” என்று கூற அவன் “வேறு எதுவும் பார்க்கவில்லையா” என்று கேட்டான்.

அவளோ “வேறு என்ன சார் இருக்கு பார்ப்பதற்கு” என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்க அவனும் அவர் நிஜமாகவே எதுவும் பார்க்கவில்லை என்று நினைத்து “சரி உட்காரு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவளும் அங்கு அருகில் இருந்த ஒரு திட்டில் அமர சற்று நேரம் அவன் தலை குனிந்தே இருந்தான். அவன் ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் முக பாவத்திலிருந்து கண்டு கொண்டவள் “என்ன சார் ஏதோ யோசனையாய் இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் சற்று நேரம் அவளது விழிகளோடு தனது விழிகளை கலக்க விட்டு, பின் “மலர் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று அவளிடம் நேரடியாக கேட்டே விட்டான். அவன் இப்படி ஒரு கேள்வியை தன்னிடம் கேட்பான் என்று எதிர்பாராதவள் அதிர்ச்சியில் சமைந்து நின்றாள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here