உன் மனதில் நானா காவலனே 6

0
926

அத்தியாயம் 6:

மலருக்கு முதலில் தீரன் என்ன சொன்னான் என்பது பிடிபடவே வெகு நேரம் ஆனது. நான் கேட்டது நிஜம் தானா இல்லை வேறு ஏதாவது சொல்லி எனது காதில் தான் இப்படி விழுந்து விட்டதா என்று எண்ணியவள் அவனிடமே திரும்ப “என்ன சொன்னீங்க இன்னொரு தடவை சொல்லுங்க” என்று கேட்க, அவனோ மறுபடியும் “நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்டான். அவன் தன்னை கல்யாணம் செய்து கொள்ள கேட்பான் என்று சற்றும் எதிர்பார்க்காதவள் அதிர்ந்து நிற்க, அவனோ அவள் முன் சுடக்கிட்டு என்ன என்பதுபோல் கேட்டான். பின் சுதாரித்தவள் “என்னய்யா விளையாடுறியா. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது” என்று கோபத்தை அடக்கியபடி கேட்க,
“இல்லை நிஜமா தான் கேக்குறேன் நீ கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று மறுபடியும் அதையே கேட்டான் தீரன்.
அவளுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வர “அப்படியே ஒன்னு விட்டேனா பார் மூஞ்சி முகரை எல்லாம் பேர்ந்துடும். என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்குது. வேலைக்காரிதான அதனால என்ன சொன்னாலும் கேட்டுக்குவானு நினைச்சிகிட்டு இருக்கயா. கண்ணு இரண்டையும் நோண்டிடுவேன் ஜாக்கிரதை. இப்படி ஹீரோ கணக்கா வந்து இவர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்ட நாங்களும் உடனே சரினு அப்படியே இவர் பின்னாடியே போய் விடுவோம்னு நினைப்பா. அதெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. இந்த மாதிரி என்கிட்ட விளையாறது இதுதான் கடைசியாக இருக்கட்டும். ஆளும் மூஞ்சியும் பாரு.. வந்துட்டான் கல்யாணம் காட்சின்னு ஏமாத்த ” என்று அவள் அவனை விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவனோ “நான் என்ன சும்மா விளையாட்டுக்கு உன்கிட்ட கல்யாணத்தை பத்தி கேட்கிறேன்னு நினைச்சியா. நான் நிஜமா தான் கேட்கிறேன் உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா முடியாதா அதை மட்டும் சொல். வேற எந்த பேச்சும் வேணாம்” என்று அவன் திரும்பவும் அதையே கேட்டான்.

உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றவள் “அடிங்க நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் என்ன சும்மா அதையே திரும்ப திரும்ப பேசிகிட்டு இருக்க. உனக்கு அவ்வளவு தான் மரியாதை ஞாபகம் வச்சுக்கோ” என்று கூறிவிட்டு அவள் தனது அறைக்கு செல்ல முனைய, அவளது கையைப் பிடித்து தீரன் வேகமாக அவளை தனது அருகில் இழுத்தான். இழுத்ததில் அவன் மேல் வந்து மலர் விழுக, அவளது கண்களோடு தனது கண்களை கலக்க விட்டவன் “மலர் நான் பொய் சொல்லல நிஜமா தான் கேட்கிறேன் நீ என்ன திருமணம் செய்துகொள்கிறாயா” என்று கேட்டான் தீரன்.
அவன் கையைப் பிடித்து இழுத்ததில் அதிர்ந்து நின்றவள் திருதிருவென விழிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டவன் அவளது கன்னங்களை தன் கைகளால் ஏந்தி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவளுக்கோ தலை கிறுகிறுத்துப் போய் விட்டது. மயக்கம் வருவது போல் இருக்க அப்படியே அவனது சட்டையை பிடித்தபடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள் அவனை ஆழ்ந்து நோக்கி “நீ நிஜமா சொல்றியா. என் கூட விளையாடலயே” என்று கேட்க அவன் இல்லை என்று தலை அசைத்தான்.
“சத்தியமாக” என்று அவள் கை நீட்டி கேட்க அவன் மறுபடியும் ஆமாம் என்பது போல் தலையசைத்தவன் அவள் கையில் கை வைத்து சத்தியம் செய்தான்.
“ஏன் துறைக்கு வாயெல்லாம் திறக்காதா.. மத்ததெல்லாம் பேசுறியே இத வாய்திறந்து சொன்ன என்ன” என்று கேட்க, அவனோ “சத்தியமாக தான் நான் கேட்கிறேன் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று திரும்ப அதையே கேட்க அவளுக்கோ அவன் சொல்வது மெய்யா பொய்யா என்பது கூட புரியவில்லை. ஏன் இவனுக்குள் இந்த திடீர் மாற்றம் என்பது அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.
சற்று நேரம் நகத்தை கடித்தபடி அவள் யோசித்துக் கொண்டிருக்க அவளது கையை தட்டிவிட்டவன் “நகத்தை கடிக்க கூடாது என்று உனக்கு தெரியாதா” என்று கேட்க, அவளோ “ஆமா இப்ப அதுதான் ரொம்ப முக்கியமா போயிடுச்சு” என்று முணுமுணுத்தவள் அவனிடம் “உனக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா முதல் பொண்டாட்டி செத்துப் போய்விடும் என்று யாராவது சொல்லியிருக்காங்களா. அதனாலதான் என்ன கல்யாணம் பண்ணிட்டு நான் செத்துப் போனதுக்கு அப்புறம் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சுருக்கியா” என்று அவள் வர்ஷினியின் பெயரை கூறாமல் பொதுவாக அவனிடம் கேட்க அவனோ அப்படியெல்லாம் இல்லை என்று கூறினான்.
மறுபடியும் சற்று நேரம் யோசித்தவள் “ஒருவேளை அந்த வர்ஷிக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா. அந்த பொண்ண வெறுப்பேத்த என்ன பயன்படுத்துகிறாயா” என்று அவன் மறுபடியும் கேட்க, அவனோ “அவ கூட சண்டைனா ஏன் உன்ன பயன்படுத்தணும். நானே போய் நேரடியா சமாதானப்படுத்த மாட்டேன். ஆனா ஏன் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கிற. நான் கேட்டத தவிர எல்லாத்த பத்தியும் நீ பேசுற” என்று அவன் திரும்ப கூறினான்.
“அதுதான் நான் பாத்தனே..நீங்க ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு டீக்குள்ள பன்னு மாதிரி ஒண்ணாவே சுத்துனீங்களே. அப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு. அதனாலதான் அப்படி கேட்டேன். நீ இல்லைன்னு சொல்லு பாப்போம்” என்று அவள் கூற அவன் உடல் ஒரு நிமிடம் விறைத்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
“இப்படி விறைத்துப்போய் நின்னா நான் எதுவும் கேட்காம விட்டுவிடுவேன்னு நினைச்சுட்டியா. இப்ப நீ சொல்லியே ஆகணும் எதுக்கு அந்த பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க பார்க்குற. காதலிச்சு ஒரு பொண்ண ஏமாத்துறியே அது தப்பில்லை ” என்று கேட்க அவனோ “நான் அவள காதலிச்சா தான அவள கல்யாணம் பண்ணிக்க கேட்கமுடியும். அவளுக்கு நான் ஒரு செக்யூரிட்டி தான். அதை தவிர காதலும் இல்ல கத்திரிக்காயும் இல்ல” என்று உறுதியாகக் கூறினான்
அவனது முகத்தை ஆராய்ந்த பார்த்தவள் அதில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று நோக்க, ஆனால் அவளால் அவனது முகத்தை எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவனது கண்கள் அவன் விளையாடவில்லை என்பதை உறுதியாக கூறியது. மறுபடியும் சற்று நேரம் யோசித்தவள் “உண்மைய சொல்லு நீ நெஜமாவே அந்த பொண்ண காதலிக்கவில்லையா. அது கூட தான சுத்திகிட்டு இருந்த. ஒன்னா உரசிக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துனதை நானும் பார்க்கத்தானே செஞ்சேன். இப்போ திடீர்னு இல்லைன்னு சொன்னா நம்புற மாதிரி இல்லையே” என்று கேட்க,
அவனோ ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டபடி “அந்த பொண்ண முதன்முறையாக உரசிகிட்டு பேசியவன் நான் ஒருவன் தானா” என்று அவளிடம் கேட்க, அவளும் வர்ஷினியை பற்றி நன்றாக தெரிந்தவள் என்பதால் அவளால் இந்த கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. ஆண் நண்பர்களுடன் அவள் நடந்து கொள்வதை தான் மலர் நேரில் பார்த்திருக்கிறாளே. ஆனால் இவ்வளவு நாள் இணக்கமாக இருந்தவர்கள் திடீரென இப்படி மாறியது அதுமட்டுமில்லாமல் தன்னை திருமணம் செய்ய கேட்பது ஏன் என்று அவளுக்கு புரியாவிட்டாலும் இதில் ஏதோ ஒன்று சரி இல்லை என்பது மட்டும் அவளுக்கு விளங்கியது.

தீரனிடம் மலர் “இங்க பாரு உண்மைய சொல்லிடு. நான் ஒரு நேரத்தை போல ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன். இதுல ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு. அதை நீ என்கிட்ட மறைக்கப் பார்க்கிற. அதை நீயா சொல்லப் போறியா இல்ல நானா தெரிஞ்சுக்கட்டுமா” என்று கேட்க அவன் சற்று நேரம் அமைதிக்கு பின், “சரி எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தான் நான் திருமணத்திற்கு கேட்கிறேன்” என்று மறுபடியும் உணர்வற்ற ஒரு குரலில் அவளிடம் கூறினான்.
அவளுக்கோ அவனது பதிலில் சலிப்பாக போயிற்று “என்னையா நீ எப்படி கேட்டாலும் இப்படி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தா என்னால என்ன முடிவு எடுக்க முடியும். நீ என்ன விரும்பித்தான் கல்யாணம் செஞ்சுக்க கேட்கிற என்பது நம்புற மாதிரி இல்ல. வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு ஆனா நீ மறைக்குற.. உண்மைய சொல்லிடு” என்று விடாப்பிடியாக அவனிடம் அவள் கேட்க அவனோ மறுபடியும் யோசனையில் மூழ்கிவிட்டான்.
சற்று நேரம் அமைதிக்கு பின் “சரி நான் உன்கிட்ட சில விஷயமும் சொல்றேன் ஆனா அது உன்னை தாண்டி யார்கிட்டயும் போகாது என்ற நம்பிக்கையில் மட்டும்தான் நான் சொல்றேன். நீ என் நம்பிக்கையை காப்பாத்தணும்” என்று அவளிடம் அவன் கேட்க, அவளும் ” நீ என்னை நம்பலாம்” என்று நம்பிக்கை வாக்குறுதி கொடுத்தாள். பின் தீரன் அவள் கேட்பதற்கான பதிலை அவளிடம் விளக்க ஆரம்பித்தான்.
அவன் கூறுவதை கேட்க கேட்க அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. திறந்த வாய் மூடாமல் ஸ்தம்பித்துப் போய் அவள் நிற்க, அவள் நிலையை கண்டவன் “என்ன ஆச்சு” என்று கேட்டான்.
மலர் “என்ன இதெல்லாம்” என்று ஆதிர்ச்சி விலகாமல் திரும்ப அவனிடம் கேட்க அவனும் “ஆமாம் அதனாலதான் நான் இங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே வேற யாராவதாக இருந்தா என்னால இத பத்தி பேசி இருக்க முடியாது. ஆனா எனக்கு உன்கிட்ட ஒரு நம்பிக்கை உணர்வு வருது அதனால தான் இதை பத்தி நான் உன் கிட்ட பேசுறேன். நீ எனக்கு உதவி செய்ய முடியுமா” என்று கேட்க, அவளோ “ஆனால் இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்று புரியாமல் அவனிடம் கேட்டாள்

அவன் மறுபடியும் தன்னுடைய விளக்கங்கள் சிலவற்றை அவளுக்குக் கொடுக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் வாய் மூடவில்லை. “என்னையா இப்படி எல்லாம் சொல்ற. மனசு பக்குன்னு இருக்கு ” என்று கூற, அவனோ “உண்மையத்தான் சொல்றேன் இது மாதிரி நடக்க 99% வாய்ப்புகள் இருக்கு. அதனாலதான் நான் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்கிறேன். உனக்கு இதுல விருப்பமா இல்லையா என்று மட்டும் நீ சொன்னால் போதும்” என்று அவன் முடித்துவிட, அவளோ “ஆனால் இந்த கல்யாண டிராமா எவ்வளவு நாளைக்கு. இந்த பிரச்சனையெல்லாம் முடிந்த அப்புறம் நான் அடுத்த எங்கேயாவது ஒரு வீட்டில் போய் வேலை செய்ய முடியுமா இல்ல மறுபடியும் இதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நான் என்ன பண்றது” என்று கேட்க, அவளை கூர்ந்து நோக்கியவன் “நல்லா கேட்டுக்கோ மலர். இது ட்ராமா இல்லை நிஜத்துல கல்யாணம் நடக்கப் போகுது. எனக்கு வாழ்க்கையில திருமணம் என்று நடந்தால் அது ஒரு முறை தான். அது உன்கூட நடக்கும் போது என் வாழ்க்கை முழுக்க நீ தான் என் மனைவியா இருக்க முடியும், வேறு யாரும் இருக்க முடியாது. என்னோட குடும்பத்திலும் அப்படித்தான் என்ன வளர்த்திருக்காங்க” என்று அவன் உறுதியாக கூற, மலருக்கு தான் என்ன முடிவை எடுப்பது என்பது தெரியவில்லை கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
‘அவன் கூறுவது சரிதான் என்றும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் என்று அவளுக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்த கல்யாணம்… அது சரிப்பட்டு வருமா’ என்ற யோசனையில் அவள் இருக்க அவனோ “எதுவா இருந்தாலும் என்கிட்ட நீ நேரடியாக கேட்கலாம்” என்று அவளை ஊக்கபடுத்தினான்.

அவளோ “மத்ததெல்லாம் சரிதான் ஆனா இந்த கல்யாணம் அதுதான் என்ன ரொம்ப உறுத்துது” என்று அவள் கலக்கத்தோடு கேட்க, அவனோ “நமக்கு கல்யாணம் ஆனா தான் இந்த பிரச்சனையிலிருந்து ஈஸியா நம்ம வெளியில் வர முடியும் அதனால் தான் சொல்கிறேன். கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மலர். நீ மட்டும் சம்மதம் சொன்னா எல்லா பிரச்சினையையும் சுலபமா தீர்த்துடலாம்” என்று கூற அவளும் சற்று நேரம் யோசித்து விட்டு அவனது வற்புறுத்தலால் அரைமனதாக அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். அவனை விட அவன் செய்ய துணிந்த அந்த நல்ல காரியதுக்காகவாவது தான் சம்பாதித்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

அவள் மனதிற்குள் ‘காதல் இல்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் கடமைக்காக மட்டுமே ஒரு திருமணம் செய்தால் அந்த திருமணம் நிலைத்திருக்குமா’ என்று கேள்வி ஆணித்தனமாக எழுந்தது. மனதுக்குள் ஒரு பயம் சூழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் “ஒருவேளை வர்ஷினி உங்கள உண்மையாவே காதலித்திருந்தால்” என்று சந்தேகத்தோடு அவனை பார்க்க அவனும் சற்று நேரம் யோசித்து விட்டு “அதற்கான வாய்ப்புகளே இல்லை. அதனால நீ அதை பத்தி கவலைப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டான்.
” ஆனால் உங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா” என்று கேட்க அவனுக்கும் அதை நினைத்து கவலை இருந்தாலும் இப்போதைய சூழ்நிலைக்கு அதை பற்றி கவலைப்பட்டால் காரியம் நடக்காது என்று எண்ணியவன் அதை அவளிடமும் கூறினான்.
” இப்பொழுது நமக்கு ஆக வேண்டிய வேலை தான் முக்கியம் அதனால் இந்த விஷயங்களை எல்லாம் நம்ம ஒதுக்கி வைத்தால் நல்லது. அவங்கள நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ கவலைப்படாதே. என்னைக்கா இருந்தாலும் நீ தான் எங்க வீட்டு மருமகள்” என்று கூறி முடித்து விட்டான்.
அவளுக்கு இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலை இதை எப்படி எதிர்கொள்வது என்பது சுத்தமாக புரியவில்லை. ஆனால் அவன் மீது கொண்ட நம்பிக்கையால் அவள் சரி என்று அவன் கூறிய அனைத்திற்க்கும் ஒத்துக்கொண்டாள். அவளது தெளிவில்லாத முகத்தை கண்டவன் “உனக்கு இதுல பயம் இருந்தா சொல்லிடு நான் வேணா இதை வேற வழியில பார்த்துக்கிறேன்” என்று கூற, அவளோ விரக்தியாக சிரித்தபடியே “நான் என்ன ஒண்டிக்கட்ட. நான் போனா கவலைப்பட இங்க யாரும் இல்ல. அதனால நீங்க வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு நான் கண்டிப்பா உதவி பண்றேன்” என்று கூற அவனோ அவளை கோபமாக பார்த்தான்.

அவன் எதற்கு தன்னை இவ்வளவு கோபமாக பார்க்கிறான் என்று புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ அவளை கையை பிடித்து அருகில் இழுத்து “இங்க பார் இந்தக் கல்யாணம் நம்மளோட வாழ்க்கை முழுவதற்கும் என்று நான் சொல்லிவிட்டேன். ஆனா நீ இப்பவும் ஒன்டிகட்ட எனக்கு யார் இருக்கா நான் போனா யாரு கவலை படப்போறாங்கன்னு எல்லாம் பேசிகிட்டு இருந்தா நான் மனிதனாகவே இருக்கமாட்டேன். இனிமேல் பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா பேசு” என்று அவன் கட்டளையிடும் குரலில் பேச அவளுக்கு அப்பொழுதுதான் அது உறைத்தது.
அவனை சமாதானப்படுத்தும் விதமாக “என்ன மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி எல்லாம் நான் பேசமாட்டேன்” என்று கூற, அவனும் “நீ பேசாம இருக்கிறது தான் உனக்கும் நல்லது” என்று கூறிவிட்டு அவனது சில திட்டங்களை அவளுக்கு விளக்கிக் கூறினான்.
அதை நன்றாகக் கேட்டுக் கொண்டவள் சரி என்று கூற, அவனும் சில சந்தேகங்களை மட்டும் அவளிடம் கேட்டு விட்டு பின் தனது அறைக்கு நிம்மதியாக உறங்கச் சென்றுவிட்டான். ஆனால் இங்கு மலருக்கு தூக்கம் தொலைதூரம் சென்று விட்டது. என்ன தான் அவனை அவளுக்கு பிடிக்கும் என்றாலும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் திருமணம் என்பது அவசியமா என்று அவளால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் அவன் கூறியதை பார்த்தால் அவன் குடும்பம் தன்னை ஏற்றுக் கொள்ளுமா என்ற பயமும் அவளுக்கு சூழ்ந்தது. ஆனால் இதில் அவன் சொல்லாமல் விட்ட சில விஷயங்களும் இருந்தது அது தெரியும் போது அவரது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அது நடக்கும் போது தான் தெரியவரும்.

அடுத்த நாள் காலை எழுந்துவள் தனது அன்றாட வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க, காலை வேளை உணவிற்காக அனைவரும் அங்கு சாப்பாட்டு அறையில் கூடியிருந்தனர். மலர் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு இருக்க அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் தீரன். அவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணுமாறு ராஜசேகர் கூற அவனும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான். அப்பொழுது வசுந்தரா அவனது குடும்பத்தை பற்றி விசாரிக்க தீரனோ அதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்தான்.
” நான் எப்பவும் என் கணவர் கிட்ட கேட்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆனா இன்னிக்கு அவர்கிட்ட கேட்காமல் நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். என்ன ராஜ் உங்களுக்கு நான் ஏதாவது ஒரு முக்கியமான முடிவு எடுத்தா அதுல எந்த பிரச்சினையும் இல்லையே” என்று கேட்க, அவரும் “நீ என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும்” என்று நல்ல கணவனாக பதிலைக் கூற வசுந்தரா “தீரன் நீங்களும் வர்ஷாவும் ரொம்ப நெருக்கமாக பழகியிருக்கீங்க. நல்ல நட்போடு இருக்கீங்க நீங்க இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது” என்று அவர் கேட்க அதை சற்றும் எதிர்பார்க்காத தீரன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான்.
அப்போது அங்கு வந்த மலர் தனது கையிலிருந்த பாத்திரத்தை கீழே விட அது விழுந்த சத்தத்தில் தான் அனைவரும் தங்கள் சுயத்திற்கு வந்தனர். தீரன் மலரை திரும்பப் பார்க்க அவளது அதிர்ந்த முகம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்று அடித்துக் கூறியது. முந்தைய நாள் இரவு அவர்கள் திருமணத்தை பற்றி தீரன் கூறியிருக்க அடுத்த நாள் இன்னொரு பெண்ணுடன் அவனுக்கு திருமண பேச்சு என்பது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. அவளது முகமும் அதை வெளிப்படுத்த, சரியாக புரிந்து கொண்ட தீரன் வசுந்தராவை நோக்கி “எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை மேடம். நான் என்னோட ஜாப இன்னையோட ரிசைன் பண்ணிக்கிறேன்” என்று கூறி ராஜசேகரன் குடும்பத்தின் தலையில் பெரிய இடியை இறக்கினான் மலரின் வருங்கால மணவாளன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here