உன் மனதில் நானா காவலனே 7

0
848

அத்தியாயம் 7:

தீரன் தான் வேலையை விட்டு போவதாக கூற ராஜசேகர் குடும்பத்தினரோ மொத்தமாக அதிர்ந்து விட்டனர். முதலில் மீண்ட ராஜசேகரன் “என்ன தீரன் அதற்குள்ளாகவா” என்று கேட்க தீரனும் “நான் இந்த மூணு மாசமா பார்த்த வரைக்கும் உங்க குடும்பத்துக்கு பெருசா எந்த பாதுகாப்பு சிக்கலும் இருக்க மாதிரி எனக்கு தெரியல சார். அது மட்டும் இல்லாம நான் ரொம்ப பெரிய கேஸ் நிறைய ஆபத்துகள் இருக்கும் என நெனச்ச தான் வந்தேன் ஆனா இங்க அந்த மாதிரி எதுவும் நடக்கல, சோ இங்க நான் இருக்கணும்னு அவசியம் கிடையாது. சாதாரண செக்யூரிட்டி யூனிட் உங்களுக்கு பாதுகாப்பா போதும் அதனாலதான் நான் முடிவு பண்ணிட்டேன். அதுமட்டும் இல்லாம என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு தான் இங்க வந்தேன். அவங்களும் கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருப்பதால் என்ன சீக்கிரம் வர சொல்லியிருக்காங்க அதனால நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னுடைய பழைய வேளையில் போய் சேரவேண்டும். முடிந்தவரை இன்று மாலையோ இல்லை நாளை காலையோ நான் கிளம்பி விடுவேன்” என்று கூற ராஜசேகர் வேறு வழி இல்லாததால் ஒத்துக்கொண்டார்.

ராஜசேகருக்கு தனக்கு இருக்கும் ஆபத்து தெரியும் என்பதால் அவருக்கு அடுத்து  இதை எப்படிக் கையாள்வது  என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார்.  வசுந்தரா அப்போது தான் தனது மகளுக்கு ஒரு நல்ல மணமகனைத் தேடிவிட்டதாக நினைக்க அவன் நடுவிலேயே தான் கிளம்புவதாக உரைத்தது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. வர்ஷினியுமே அவனது பதிலில் சற்று ஏமாற்றம் அடைந்தவள் இன்று இரவு எப்படியாவது அவனுடன் ஒன்றாக கூடிக்களிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.

தீரன் உணவிற்கு பின்  தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சற்று நேரம் ஓய்வு எடுத்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.  வீட்டினர் அனைவரும் ஒவ்வொரு வேலையாக வெளியில் சென்றுவிட பருவமும் தூங்க சென்று விட்டார். மதிய உணவிற்கான அனைத்து வேலைகளையும் வேகமாக முடித்த மலர் தீரனை காண அவனது அறைக்கே சென்றுவிட்டாள்.

 அவனும் மலர் கண்டிப்பாக தன்னைக் காண வருவாள் என்று எதிர்பார்த்து இருந்தவன் அவள் வந்த உடனேயே அமரச் சொன்னான். பின் அவளிடம் “மலர் அவங்க வர்ஷினி கூட என்னோட திருமணத்தைப் பற்றி பேசின உடனே உனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டதா” என்று கேட்க, அவளும் ஆமாம் என்பது போல் தலையைசைத்தாள்.

 தொடர்ந்த தீரன் “எனக்கும் இது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதுதான் உடனே கிளம்ப வேண்டும் என்று கூறி விட்டேன். நான் கூட இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம் என்று  கூட யோசிச்சு பார்த்தேன்.  ஆனா இப்போ அது சரிப்பட்டு வராது என்று தோணுது. அதனால நம்ம திட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம செயல்படுத்தியே ஆகவேண்டும். நீ உன் மனதை  எப்படியாவது திடப்படுத்திக்கோ மலர்” என்று கூற அவளுக்கும் பதட்டம் ஏற்பட்டாலும் பின் தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

 சற்று நேரம் அவள் அமைதியாக இருக்க அவளது முகத்தைப் பார்த்தவன் “ஏதோ உன்னோட மனசுல  இருப்பதுபோல் இருக்கே. என்ன ஆச்சு மலர் ஏதாவது கேட்கணும்னா என்கிட்ட நேரடியாக கேளு” என்று கூற, அவளும் சற்று தயங்கியபடி “இந்நேரம் நீங்க நினைச்சு வந்த விஷயம் சரியாக இருந்திருந்தால் அவங்க கல்யாணத்தைப் பற்றிப் பேசும்போது நீங்க அதுக்கு சம்மதம் சொல்லியிருப்பிங்க தானே” என்று கேட்க அவனோ சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் “வாய்ப்பில்ல மலர். எனக்கு தேவையான காரியம் நிறைவேறும் வரை இருந்திட்டு  அப்புறம் நான் இங்கிருந்து போயிருப்பேன். அதையும் தாண்டி இந்த கல்யாண பேச்சுக்கள் எல்லாத்துக்கும் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டான். அவளோ “அப்ப நீங்க என்னை புடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்க கேட்டிங்களா” என்று கேட்க அவனோ இல்லை என்று தலையசைத்தான். அவனது பதிலில் அவளுக்கு மனதிற்குள் பாரம் ஏறியது போல் இருந்தது. அவளும் மறுபடியும் “வர்ஷினி” என்று ஏதோ கேட்க வர “வர்ஷினி பத்தி நம்ம ரெண்டு பேரும் பேசாம இருக்கறது நல்லது என்று நினைக்கிறேன். வீணா நம்ம ரெண்டு பேருக்குள்ள சில மனக்கசப்புகள் தான் ஏற்படும்” என்று கூறி அவளது வாயை மொத்தமாக அடைத்து விட்டான்.

அன்றைய நாள் முழுவதும் இருவருக்கும் ஏதோ ஒரு யோசனையிலேயே சென்றது. அன்று இரவு அனைவரும் உணவு உண்டபின் மலர் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க வர்ஷினியின்  தாய் தந்தை தங்களது அறைக்கு சென்று விட்டனர். தீரனும் அடுத்த நாள் காலை கிளம்புவதாக முடிவெடுத்திருந்ததால் அவனும் உணவிற்குப்பின் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அவுட் ஹவுசுக்கு சென்றுவிட்டான்.

அங்கு யாரும்  இல்லை என்பதை கண்டு கொண்ட வர்ஷினி தீரனை பார்க்க அவனது அவுட் ஹவுசுக்கு சென்றாள். அவள் உள்ளே நுழையும் போது தீரன் லேப்டாப்பில் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்க அவன் அருகில் சென்று நெருக்கமாக அமர்ந்தாள் அவள். உடனே பதறி அடித்து  எழுந்த தீரன் “என்ன வர்ஷினி இங்க என்ன பண்ற” என்று கேட்டான். அவள் மேல் இருந்து வந்த வாடை அவள் குடித்துவிட்டு வந்திருக்கிறாள் என்று அவனுக்கு உணர்த்தியது.

வர்ஷினி “தீரன் நீங்க புரிஞ்சிக்கலயா. இல்ல புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு புரியவில்லை” என்று கண்களில் மையலோடு பேச அவனும் அவளது கண்களைப் பார்த்தே அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவன் “வர்ஷினி எனக்கு உன்னோட இன்டென்ஷன் புரியுது. ஆனா நான் அதற்கான ஆள் கிடையாது. அதனால ப்ளீஸ் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணு. அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது” என்று அவளிடம் மெதுவாக எடுத்துக்கூற, அவளோ அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு “நோ ஐ வாண்ட் யூ ஐ நீட் யூ” என்று வெளிப்படையாகவே அவனிடம் கேட்டுவிட்டாள்.

தீரன் கோபத்தில் “ஜஸ்ட் ஷட் அப். நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கேன் எனக்கு அந்த மாதிரி இண்டென்ஷன் எதுவும் இல்லை, உன் கூட நான் அந்த மாதிரி பழகவும் இல்லைன்னு உனக்கு புரியாதா” என்று அவன் கூற அவளோ அவன் அருகில் வந்து  தனது மூச்சுக்காற்று அவன் மேல் படும் அளவிற்கு நெருங்கி  நின்றவள் “நிஜமா நான் உன்ன இம்ப்ரஸ் பண்ணலையா” என்று கேட்க அவனோ இல்லை என்று உறுதியாக தலையசைத்தான்.

அவளோ அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கியவள் அவனது கழுத்து வளைவில் முகம் புதைப்பது போல் நெருங்கி “என் மேல உனக்கு இன்ட்ரஸ்ட் வரலையா” என்று ஹஸ்கி வாய்சில் கேட்க அவனோ இறுகிய  குரலில் “கொஞ்சம் தள்ளி நின்னா வசதியா இருக்கும்  நீ இப்படி நிக்கிறது எனக்கு பிடிக்கலை” என்று கூறினான்.

அவளோ அவனது பேச்சை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல்,  அவளை அணைக்க முயன்றாள். தீரன் அவளை வேகமாக உதறித்தள்ள முயல அவளோ அவனை இன்னும் நெருக்கமாக வந்து அணைத்துக் கொண்டாள்.

தீரன் “வர்ஷினி எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மி. நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். உன்னோட எல்லையை மீறிகிட்டு இருக்க. அப்புறம் நீ என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்”  என்று சற்று கடுமையான குரலில் கூற அவளோ அதை சற்றும் கண்டுகொள்ளவில்லை.

வர்ஷினி அவனது கோபத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் “ஐ லைக் யூ யூ லைக் மீ. அப்புறம் என்ன பிரச்சனை ஜஸ்ட் ஒரு காம்ப்ரமைஸ் தானே” என்று பச்சையாகவே சிலதை கூறி அவனை பின்னாலிருந்து அணைக்க “அவன் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா” என்று கூறியபடியே அவளது கைகளை விலக்கிவிட்டு திரும்பி வாசலை பார்க்க அங்கு நின்றுகொண்டிருந்தாள் மலர்.

வர்ஷினி  குடித்திருந்ததால் அவள் சுற்றியிருக்கும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. ஆனால் தீரன் மலரை கவனித்து விட்டான். அவன் வர்ஷினியிடம் இருந்த தன் கையை விலக்கிவிட்டு மலரிடம் செல்ல முனைய வர்ஷினி அவனை விலக விடாமல் இழுத்து அவனது கண்ணத்தில் முத்தமிட்டு விட்டாள். அதைக் கண்ட மலருக்கு கண்களில் நீர் பெருக வேகமாக தனது அறையை நோக்கி ஓடிவிட்டாள்.

தீரனுமே வர்ஷினி தன்னை முத்தமிடுவாள் அதுவும் மலரின் முன்னால் வைத்து முத்தமிடுவாள்  என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. வேகமாக வர்ஷினியை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளை ஓங்கி அறைந்து “இந்த மாதிரி வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்கிட்ட அவ்வளவுதான் கொன்னுடுவேன் ஜாக்கிரதை. முதல்ல இங்கிருந்து வெளியே போ” என்று கூறியவன் அவளை தனது அறைக்கு வெளியில் இழுத்து சென்று தோட்டத்தில் தள்ளிவிட்டான்.  அவள் ஏற்கனவே முழுதாக போதையில் இருந்ததால் தனது அறைக்கு செல்ல முடியாமல் அங்கு தோட்டத்தில் இருந்த புல்வெளியில் அப்படியே படுத்துவிட்டாள்.

மலரின் ஞாபகம் வந்தவன் வேகமாக அவள் அறைக்குச் சென்று கதவை தட்ட அவள் சற்றுநேரம் கதவைத் திறக்கவே இல்லை. ஆனால் உள்ளே கேட்ட விசும்பல் சத்தம் அவள் அழுகிறாள் என்பதை மட்டும் அவளுக்கு உறைத்தது.

“மலர் கதவைத்திற. ஏன் உள்ளேயே இருக்க கொஞ்சம் கதவு திறந்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்று அவன் அவளிடம் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூற முனைய, அவளோ உள்ளிருந்து “யாரும் என்கிட்ட பேச வேண்டாம். தயவு செஞ்சு போயிடுங்க” என்று அழும் குரலில் கூறினாள். “இப்ப நீ கதவை திறக்க போறியா இல்லையா” என்று அவர் கோபமாக கத்த அவளுக்கோ அவனது குரலுக்கு அடிபணியாமல் இருக்கமுடியவில்லை. வேகமாக வந்து கதவை திறந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

தீரன் “மலர் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு பெருசா எடுத்துக்கற” என்று கேட்க அவளோ “உங்களுக்கு வேணா நீங்க வளர்ந்த சூழ்நிலையிலும் நீங்க படித்த சூழ்நிலையிலும் இந்த மாதிரி இருக்கிறது சகஜமாக இருக்கலாம். ஆனால் என்னால இப்படி ஒரு விஷயத்தை நினைத்து கூட பார்க்க முடியல. இது ஒரு நாடக கல்யாணமாய் இருந்திருந்தா நான் இப்ப இதுல இவ்வளவு வருத்தப்படடுற அளவுக்கு எந்த விஷயமும் இல்லை. ஆனா நீங்க இந்த கல்யாணம் உண்மையான கல்யாணம்னு சொல்றீங்க. அப்படி என்ன கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு வேறு ஒரு பொண்ணு இப்படி முத்தம் கொடுத்தா அத பாத்துட்டு எதார்த்தமா எடுத்துட்டு போகணும்னு நீங்க எப்படி சொல்ல முடியும். அதை என்னால எப்படி தாங்கிக்க முடியும்” என்று கேட்க, அவனுக்கோ ‘இவள் இதையே எப்படி சொல்றாளே, மற்ற விஷயங்கள் எல்லாம் என்ன பத்தி தெரிந்தது அவ்வளவுதான். என்னை போட்டு துவச்சு எடுத்துறவா போலவே’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன் அதை முகத்தில் காட்டாதவாரு, “நான் சொன்னது உண்மைதான். இனிமே நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என் வாழ்க்கை துணையாக இருக்கப்போவது நீ மட்டும் தான்  உன்னை தவிர  வேற யாரும் என் வாழ்க்கையில வர மாட்டாங்க. நான் உனக்கு தாலி கொடி கட்டிய அந்த நொடியிலிருந்து நான் உனக்கு மட்டுமே ஆனவன்” என்று கூற அவள் இடுப்பில் கைவைத்து கொண்டு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ ‘நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா’ என்று மனதிற்குள் எண்ணியபடி அவளை பார்க்க அவளோ “அப்ப கல்யாணம் ஆகுற வரைக்கும் எல்லா பொண்ணுங்களையும் பார்க்கலாமுனு இருக்கியா” என்று அவனைத் திட்ட அவனோ அவனது உரிமையான பேச்சை கூட கவனிக்காமல் “கண்டுபிடிச்சுட்டாளே” என்று மனதில் எண்ணியவாறு “அப்படி எல்லாம் இல்ல மலர். நான் எந்த பொண்ணையும் இனிமே அப்படி நினைக்க கூட மாட்டேன்” என்று கூற, அவளோ “அப்ப இதுக்கு முன்னாடி நினைச்சிருக்கியா” என்று திரும்ப கேட்டாள். அவனோ தனது இரண்டு கைகளையும்  தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டவாறு “அம்மா தாயே. என்ன நிஜமா விட்டுவிடுமா. நான் எதுவுமே பண்ண மாட்டேன். பொண்டாட்டி ஆகறதுக்கு முன்னாடியே இவ்வளவுனா பொண்டாட்டி  ஆனதுக்கப்புறம் நான் ரொம்ப பாவம்மா.  என்னை மன்னிச்சு விடுமா” என்று கூற, அவளும் “இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும். இனிமேல் எந்த பெண்ணாவது உங்ககிட்ட வந்து ஒட்டிக்கிட்டு நின்னா அவ்வளவுதான்” என்று கோபமாகக் கூற அவனோ சரண்டர் என்று கையை தூக்கியவன் “இனிமே நான் எந்த பொண்ணு கிட்டயும் பேச மாட்டேன் சரியா” என்று கூற அவளும் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “சரி சரி நீ போய் தூங்கு” என்று கூறினாள்.

அவனும் “நாளைக்கு நம்ம ப்ளான் படி எல்லாம் நடக்கணும் சரியா” என்று கேட்க அவளும் அவன் கூறியதற்கு சரி என்று தலையசைத்தாள்.

அவள் அருகில் வந்தவன் ஆதுரமாய் தலையை தடவி “எதுக்கும் பயப்படாதே மலர். உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் உனக்கும் அந்த பிரச்சினைக்கும் நடுவில் வந்து விடுவேன் என்பதை மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டா போதும்” என்று கூற அவளும் சரி என்றாள்.

அந்த அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் திரும்ப அவளிடம் வந்து “உனக்கு என்ன மூணு மாசமா தான் தெரியும். ஆனா நீ எந்த தைரியத்துல நான் சொன்னதுக்கு ஒத்துகிட்ட” என்று கேட்க அவளோ அவனது கண்களை நேராகப் பார்த்து “இந்த கண்ணிலிருக்கிற நேர்மை கொடுத்த தைரியத்தில்தான்” என்றாள்.

அவனது கைகளோ அவளது பதிலைக் கேட்டு அப்பொழுதே அணைக்க வேண்டும் என்று பரபரத்தது. எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யும் பழக்கம் உடையவன் என்பதால் சற்றும் யோசிக்காமல் அவள் அருகில் சென்றவன் அவள் என்ன என்பதை உணரும் முன்பே அவளை கையை பற்றி இழுத்து அணைத்தான்.

” ரொம்ப நன்றி உன்னோட நம்பிக்கையை நான் எப்பயும் காப்பாற்றுவேன்” என்று கூறி அவளை விடுவித்தான், “பத்திரமா இருந்துக்கோ” என்று நெற்றியில் முத்தமிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டான். அவன் அணைப்பான் என்பதையே எதிர்பாராதவள் அவள் முத்தம் கொடுத்தவுடன் அதிர்ச்சியில் பேயறைந்தது போல் அப்படியே நின்றாள்.

 பின்பு சுதாரித்து தனது நெற்றியை தொட்டுப் பார்க்க அங்கு அவனின் முத்தத்தின் ஈரம் இருந்ததை உணர்ந்தவள் கண்மூடி அப்படியே ரசித்துபடியே உறங்கச் சென்றாள்  தன்னவனின் நினைவோடு.

அடுத்த நாள் காலை ராஜசேகரன் இல்லத்திற்குள் வந்த தீரன் அங்கு குழுமியிருந்த அனைவரிடமும் “இந்த வீட்டை விட்டு போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று கூற ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு அவனை அந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர்.

பருவதம் கூட அவளை அருகில் அழைத்து “உன்ன பார்த்தா நல்ல பையன் மாதிரி இருக்கு. இவ்வளவு நாள் இங்க இருந்திருக்க இப்போ நீ போகணும்னா சொல்லும்போது  இந்த வீட்டில் இருக்க ஆள் ஒருத்தர் போற மாதிரி கஷ்டமா தான் இருக்கு.  பத்திரமா இருந்துக்கோ. உன் குடும்பத்தை பத்தி நீ எங்களுக்கு சொல்லலனாளும் பரவால்ல. உன்னோட நடவடிக்கை வைத்து உன்னோட குடும்பம் எவ்வளவு நல்ல குடும்பம் என்று  எனக்கு புரியுது.  எந்த கஷ்டமும் இல்லாமல் நல்லா இருக்கணும். உனக்கு கல்யாணம் நடக்கும் போது கண்டிப்பா எங்களையும் கூப்பிடு. ஒரு பாட்டியா நானும் வந்து உன்னை ஆசிர்வாதம் செய்கிறேன்” என்று கூற அவனும் சரி என்றவன் அனைவரிடமும் விடைபெற்று சென்று விட்டான்.

அவன் அவர்களிடம் விடைபெற்று வெளியே செல்ல மலரோ வேகமாக சமையலறையின் பின்கட்டு வழியாக வெளியில் சென்று அவனைப் பார்த்தாள். அவள் வருகைக்காக காத்திருந்தவன் போல் அவளை பார்த்து தலையசைத்து கிளம்புவதாகக் கூற அவளும் ஏக்கமான பார்வையோடு அவனுக்கு தலையசைத்து வழியனுப்பி வைத்தாள். அவள் மனமோ இன்னும் ரெண்டு நாள் தான் அதுக்கப்புறம் அவன் கூட தான் இருக்கப் போற அதுக்குள்ள ஏன் இவ்வளவு சீனு என்று கேட்க அதை அடக்கியவள் திரும்ப அறைக்குள் நுழைய, அங்கு வந்த வசுந்தராவும் “இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க. வேலையெல்லாம் பார்க்கிற எண்ணம் இருக்குதா இல்லையா” என்று கேட்க அவளும் வேகமாக சமையலறைக்கு சென்று அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

பருவத்திற்கு அவள்மேல் சிறிய சந்தேகம் இருந்தது என்னவோ உண்மை. அவள் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக சற்று மாறுபட்டு இருப்பது போல் உணர்ந்தவர் அவளிடம் வந்து என்ன என்று கேட்க அவளோ எதுவும் இல்லையே என்று கூறி சமாளித்து விட்டாள். இவ்வாறாக இரண்டு நாட்கள் செல்ல அன்று காலை எழுந்து வந்த வசுந்தரா “மலர் காபி கொண்டுவா” என்று கூற அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. “மலர் காபி கொண்டுவா” என்று அவர் மறுபடியும் கத்த அப்பொழுதும் எந்த பதிலும் இல்லை.

 அப்பொழுது எழுந்து வந்த பருவதமும் “என்ன ஆச்சு வசுந்தரா. ஏன்  நீ கத்தறே” என்று கேட்க வசுந்தராவை “இவ காபி கொடுக்காம என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கா” என்று கேட்டவர் சமையலறைக்குள் நுழைய அங்கே யாரும் இல்லை. கோபம் அதிகமாக கத்திக்கொண்டே “இவளுக்கு வரவர கொழுப்பு அதிகமாயிடுச்சு. ரொம்ப தான் இடம் கொடுத்தாச்சு” என்றவர் அவள் அறைக்கு சென்று பார்க்க, அவள் அறை சாவி கதவின் முன் வைக்கப்பட்டு இருந்தது .

வேகமாக சாவியை எடுத்தவருக்கு கிடைத்தது ஒரு கடிதம். உடனே அந்த கடிதத்தை எடுத்து என்னவென்று பார்த்தவர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார். அதே நேரம் சென்னையில் உள்ள வடபழனி  முருகன் கோவிலில் வஜ்ரவேல் முன்னிலையில் மலர்மதிக்கு மாங்கல்யத்தை அணிவித்து கொண்டிருந்தான் தீரன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here