உன் மனதில் நானா காவலனே 8

0
1157

அத்தியாயம் 8:

மலர் எழுதி வைத்த கடிதத்தை கண்ட வசுந்திராவிற்கு அந்த கடிதத்தில் இருந்த செய்தி பேரிடியாக இருந்தது. வேகமாக அந்த கடிதத்தோடு தனது வீட்டிற்குள் நுழைந்தவர் தனது கணவனை எழுப்பி “என்னங்க இங்க பாருங்க அந்த மலர் என்ன பண்ணி வச்சிருக்கானு” என்று கேட்க அவரோ தூக்கக்கலக்கத்தில் “என்னம்மா என்ன ஆச்சு” என்று கேட்டார்.

” இந்த கடிதத்தை பாருங்க. அவள் இந்த வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா” என்று கூற அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தவர் “என்ன சொல்ற வசுந்திரா நிஜமாவா” என்று கேட்டு அந்த கடிதத்தை வாங்கி பார்த்தவருக்குகும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதில் “நான் போகிறேன் தேட வேண்டாம்” என்று இருந்தது.

வசுந்தரா “என்னங்க இப்படி ஆயிடுச்சு இப்ப நாம என்ன பண்றது. எனக்கு எதுவுமே புரியலையே கடவுளே” என்று புலம்ப ஆரம்பிக்க, அவரை சமாதானப்படுத்திய ராஜசேகர் “கொஞ்சம் அமைதியா இரு நம்ம யோசித்துப் பார்ப்போம்” என்று யோசித்தவர் வேகமாக தனது அன்னையிடம் வந்தார். பருவதமும் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில் இருக்க ராஜசேகர் அவரிடம் வந்து “அம்மா உங்களுக்கு மலர் எங்க போனான்னு தெரியுமா” என்று கேட்க அவரும் “எனக்கு தெரியாதப்பா அவ எங்கே போனான்னு. சின்ன பொண்ணு எங்க போனாளோ என்ன கஷ்டம் அனுபவிக்கிறாளோ தெரியலையே” என்று மேலும் சிலதை பேச ஆரம்பிக்க அவரை அதட்டி நிறுத்தியவர் “இந்த வீட்டு வேலைக்காரி அவ. எங்க இருக்கா என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா” என்று கறாராக கேட்க அவரோ “நான் நெஜமாத்தான் சொல்றேன் இதுல பொய் சொல்ல என்ன இருக்கு. நானும் பார்த்துகிட்டு தான் இருந்தேன். ஆனா ஒரு வாரமா அவ மூஞ்சியே சரியில்லை. ஏதோ மாதிரியே இருந்தா” என்று கூற, வசுந்தராவும் “ஆமா  நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன்.  ஒரு மாதிரியாக நடந்துகிட்டா யாரையாவது ஒருவரை காதலித்து ஓடிப்போய் விட்டாளோ என்று  எனக்கு இப்பதான் சந்தேகம் வருது” என்று கூற ராஜசேகருக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. அவரால் தன் தாய் மீதும் சந்தேகம் கொள்ள முடியவில்லை அதனால் இப்பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனையில் ஆழ்ந்தனர். வசுந்தரா ஏதோ கூற வர அவரை அடக்கியவர் தன் தாய் அங்கே இருப்பதை நினைவூட்ட வசுந்தராவும் அமைதியாகிவிட்டார்..

பின் தனது அலுவலக அறைக்கு வசுந்தராவை அழைத்துச் சென்றவர் “இந்த விஷயத்தைப் பற்றி நாம் அப்புறம் பேசலாம். முதல்ல நம்மளோட வக்கீல் பேசணும்” என்று கூறி தனது வக்கீலுக்கு அழைத்தார்.

தனது வக்கீலிடம் சற்று நேரம் பேசியவர் சில கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டு தனக்கு தேவையான பதில் கிடைத்தவுடன் தனது மனைவியைப் பார்த்து “இப்ப நாம எதுக்கும் கவலை பட தேவையில்ல. எதுவும் நம்மை கை மீறி போய்விடாது. முதல்ல அவளுக்கு நம்ம விஷயம் தெரியாத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என வக்கீல் சொல்லியிருக்கிறார். அப்படியே தெரிந்தாலும் இதை எப்படி சமாளிக்கணும் என்று  நமக்குத் தெரியாதா. நம்ம அதெல்லாம் முடிவு பண்ணி தானே இந்த விஷயத்தை செஞ்சோம். நீ கவலைப்படாத அவளுக்கு என்ன நடந்தாலும் அது நமக்கு சாதகமான விஷயம் தான்” என்று கூற வசுந்தராவிற்கு அப்பொழுதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அவருக்கு மலரை பிடிக்காது தான் அவள் ஒழிந்தது அவருக்கு நல்லதாக தான் பட்டது. அதனாலேயே பர்வதத்தை தவிர அந்த வீட்டில் உள்ள யாருமே மலர் வீட்டை விட்டு சென்றதில் எந்த வருத்தமும் கொள்ளவில்லை.

இங்கு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் தீரன் வஜ்ரவேலின் முன்னிலையில் மலர்மதியின் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு அவளைத் தனது சரிபாதியாக ஏற்றுக்கொண்டான். என்னதான் அவன் தைரியமாக இந்த முடிவை எடுத்து விட்டாலும் மலரின் கழுத்தில் தாலிகட்டும் நேரம் அவன் சற்று தயங்கவே செய்தான். பின் தன்னையே திடப்படுத்திக் கொண்டவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட மலரும் அவனது தயக்கத்தை உணர்ந்தாள். அவள் மனமும் தான் செய்வது சரியா தவறா என்று கூட புரியாத நிலையில் இருந்தது. ஆனால் இந்த கல்யாணம் ஒரு நல்ல விஷயத்திற்காக என்று புரிய அவளும் தன்னை  தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

திருமணத்திற்குப் பின் இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வஜ்ரவேல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இருவரையும் மனநிறைவோடு ஆசீர்வாதம் செய்த வஜ்ரவேல் “நீங்க இனி வாழ்க்கை முழுவதற்கும் சந்தோஷமாக இருக்கனும். எந்த பிரச்சனையும் எந்த தீங்கும் உங்களை தீண்டாது.  நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா பலகாலம் குழந்தை குட்டியோட வாழனும்” என்று கூற அப்பொழுதுதான் மலருக்கு ஒரு நிறைவான திருமண நடந்தது போல ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.

 தீரன் “நம்ம இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னையை விட்டு கிளம்பி ஊருக்கு போகலாம். ட்ரெயின் ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் என்பதால் ஏதாவது வாங்கணும்னா வாங்கிட்டு கிளம்பலாம்” என்று கூற அவளும் அவனுடன் தனது புகுந்த ஊருக்கு செல்ல ஆயத்தமானாள்.

பின் தான் ஞாபகம் வந்தவளாய் “ஆமா நாம் இப்போ எங்கே போறோம்” என்று கேட்க, அவனோ “நாம இங்கிருந்து ஈரோடு போய் அங்கிருந்த என்னோட சொந்த ஊருக்கு போகப் போகிறோம்” என்று கூறினான். அவளும் சரி என்று தலையசைத்தவள், அவனுடன் அவனது சொந்த ஊருக்கான பயணத்தை பற்றி நினைக்க அது அவளை சற்று அச்சுறுத்தியது.

 அவளும் சென்னையை விட்டு இதுவரை வெளியில் எங்கும் சென்றதில்லை. ஆனாலும் அவன் ஏற்கனவே அவளிடம் தனது குடும்பத்தைப் பற்றி சொல்லி இருப்பதால் அனைவரும் நல்லவராகவே இருப்பார்கள் என்று எண்ணத்தில் அவர்களது வாழ்க்கை பயணத்தில் முதல் அடியை அவனோடு சேர்ந்து எடுத்து வைத்தாள். அதன் பின்னர்  வேகமாக ரயில்வே நிலையம் வந்தவர்கள் டிரெயின் ஏற்கனவே அங்கு வந்திருக்க மூவரும் தாங்கள் புக் செய்திருந்த முதல் வகுப்பு ஏசி பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு இரண்டு சீட்டு கூபேயிலும் ஒரு சீட்டு கேபினிலும் இருக்க வஜ்ரவேல் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணியவராய் “நீங்க ரெண்டு பேரும் கூபேல இருந்துக்குங்க. நான் மற்றவர்களோடு தங்கி இருக்கிறேன்” என்று கூற அவர்களும் உணவருந்தும் வரையாவது எங்களோடு இருங்கள் என்று அவரை கேட்டிருந்தனர்.

 அவரும் சரி என்று அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர் அப்பொழுது ஒரு விஷயம் ஞாபகம் வந்தவராய் “மலர் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அங்க தீரன் வீட்டைப் பொறுத்தவரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம். அது மட்டும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மலர்” என்று கூற அவளோ அதிர்ந்து ஏன் என்பது போல் பார்த்தாள்.

“தீரனின் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய குடும்பம் இந்த மாதிரி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நிக்கிற விஷயம் தெரிஞ்சா எல்லோரும் ஒரு மாதிரி பேசுவாங்க. அது மட்டும் இல்லாமல் அது கிராமம் வேற உன்ன பத்தி கூட தப்பா பேசவும் வாய்ப்பு இருக்கு. அதனால கொஞ்ச நாளைக்கு மட்டும் இதை மறைச்சு வச்சிருந்து,  இந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்து உடனே அங்க ஊரிலேயே அவங்க சொந்தக்காரங்க முன்னாடி உங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம்” என்று கூற அவளும் “அப்ப இப்ப கட்டின தாலிய கழட்டிவிட சொல்றிங்களா” என்று வெடுக்கென கேட்டாள்.

திடீரென அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்ட தீரன் “என்ன சொல்ற மலர்” என்று கேட்க, அவளோ “நீங்க  சொல்றது அப்படி தான் இருக்கு. ஏற்கனவே கல்யாணமான ரெண்டு பேருக்கு எதுக்கு புதுசா கல்யாணம் பண்ணனும்” என்று கேட்க வஜ்ரவேலு “கொஞ்சம் புரிஞ்சுக்கோ மலர். நான் உனக்கு  அப்பா மாதிரிதானே” என்று சொல்ல அவளும் ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்

“அவங்க குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய பண்ணைக்கார குடும்பம். அதனால ஊர் முழுக்க அவங்க மேல ரொம்ப மரியாதையும் மதிப்பும் வச்சிருக்காங்க. திடீர்னு அவங்க வீட்டுப் பையன் ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணியிருக்கேன்னு சொன்னா அந்த இடத்துல அந்த குடும்பத்துக்கு கொஞ்சம் தலைகுனிவு ஏற்படாதா. சென்னை மாதிரி  சிட்டில பரவால்ல ஆனா அவங்க கிராமத்துல இதெல்லாம் கொஞ்சம் பெரிய விஷயமா பேசுவாங்க. கொஞ்ச நாள் மட்டும் தான் அதுக்கப்புறம் நானே அவங்க கிட்ட எல்லாம் விளக்கி சொல்லி அவங்க சொந்தங்கள் முன்னாடி குலதெய்வம் கோயில்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி செய்து வைக்கிறேன்” என்று கூற அவளும் சற்று நேர யோசனைக்கு பின் “அதுவும் சரிதான் யாருமே இல்லாம இந்த கல்யாணம் நடந்திருக்கு. எனக்கு கல்யாணம் பண்ண  யாரும் இல்லேன்னாலும் ஒரு குடும்பமா கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும்னு நான் நெனச்சு பார்த்திருக்கேன் எனக்கு அந்த மாதிரி நடந்தா நல்லா இருக்கும்னு எத்தனையோ தடவை யோசிச்சிட்டு இருக்கேன். சரி எப்படியோ எல்லாருக்கும் எங்க  கல்யாணம் பற்றி தெரிஞ்சா சரி” என்று கூறியவள் வஜ்ரவேலிடம்  ” இவர் கண்டிப்பா என்ன திரும்பவும் கல்யாணம் பண்ணிப்பாருல்ல” என்று கேட்க அவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.

அவளோ அவனது பார்வையில் அலட்சியம் செய்து “சார் நீங்க சொல்லுங்க உங்கள நான் நம்புறேன்” என்று கூற அவரும் அவளை திருத்தி “சார் இல்லை அப்பா என்று கூப்பிடு. உங்க வீட்டை பொறுத்தவரை நீ என் மகள்” என்றார். கொஞ்சம் தயங்கியவாறே “சரிப்பா நான் உங்களை நம்புகிறேன்” என்று கூறியவள், “நீங்க சொல்லுங்க” என்று கேட்க தீரனோ “அப்ப நீ என்ன நம்பலையா” என்று கோபமாக கேட்டான்.

“அன்னைக்கு ஏதோ என் மேல நம்பிக்கை இருக்கு மண்ணாங்கட்டி இருக்குன்னு டயலாக் விட்ட. இப்ப என்ன இப்படி மாத்தி பேசுற” என்று கேட்க, அவளோ “அன்னைக்கு உங்க வீட்ல எல்லாத்தையும் சொல்லியிருவீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க தான் இப்படி எல்லாத்தையும் கொஞ்சநாள் மறைச்சு வைக்க சொல்றீங்க. அதனாலதான் உங்க மேல சந்தேகமா இருக்கு. ஆனா அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று மிடுக்காக கூறினாள்.

“அவர் உனக்கு அப்பாவாகிய ரெண்டு நிமிஷம் தான் ஆகுது அதுக்குள்ள அவரை நம்புற” என்று கேட்க, “நீங்க கூட எனக்கு புருஷன் ஆகி மூணு மணிநேரம் தான் ஆகுது உங்கள நான் நம்பல அது மாதிரிதான்” என்று கூற அவனோ “அம்மா தாயே உன் கிட்ட பேசி என்னால முடியாது. என்ன மன்னிச்சிடு சரி அடுத்து என்ன பண்ணலாம்னு நான் சொல்றேன் அதை மட்டும் கேட்டுகிட்டு செய்” என்று கூற அவளும் அவர்களது திட்டத்தை நன்றாக கவனிக்க ஆரம்பித்தாள்.

அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டவள் “ஆமா என்னோட வேலை என்ன” என்று கேட்க அவனோ “உனக்கு எந்த வேலையும் இல்ல. நீ நம்ம வீட்ல நல்ல ஜாலியா சுத்திட்டு, வீட்டுக்கு பின்னாடி இருக்க நம்ம தோட்டத்துல  போய் நேரத்தை கடத்திக் கொண்டு இருக்கலாம். மத்த வேலையெல்லாம் நாங்களே பாத்துக்குறோம். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா மட்டும் இருந்தா போதும். வீட்டைவிட்டு நீ யார் கண்ணுலயும் வெளியில் வந்து பட்டுவிடக்கூடாது. அதுல மட்டும் கவனமா இரு” என்று கூற அவளும் சரி என்றாள். ஆனால் மனதிற்குள்ளேயே எவ்வளவு நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறது என்று எண்ணி வருந்தியும் போனாள்.

பின் வஜ்ரவேலு தனக்கு தூக்கம் வருவதாக கூறி விட்டு தூங்கச் செல்ல, தீரன் “நீ மேல படுத்துக்கிறியா இல்ல கீழே படுத்துக்கிறியா” என்று கேட்டான்.

 அவளோ “நான் கீழே படுத்துக்கிறேன்” என்று கூற “சரி படுத்துக்கோ” என்று கூறியவன், கீழிருந்த சீட்டு ஓரமாக அமர்ந்து தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆமா எப்ப பார்த்தாலும் இதுல ஏதோ ஒன்னு நோண்டிக்கிட்டே இருக்கீங்களே அப்படி அதுல என்னதான் இருக்கு” என்று கேட்க, அவனோ “இதுல நிறைய இருக்கு ஆனா இப்போ அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் படுத்து தூங்கு” என்று என்று கூறினான். அவளும் சரி என்று சற்று நேரம் படுத்துக் கொண்டிருக்க அவளுக்கு தூக்கம் தான் வந்தபாடில்லை பயம் தான் வந்து சேர்ந்தது.

போர்வையை இறுகப் பற்றியபடி அவள் ஏதோ சிந்தனையில் இருக்க எதேச்சையாக அவளை திரும்ப பார்த்தவன் அவளிடம் “என்ன மலர் ஏதோ யோசனையிலேயே இருக்க மாதிரி இருக்கு. என்ன விஷயம்” என்று கேட்க அவளோ “நான் யோசனையா இல்லை. பயமா இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள என் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிடுச்சு.  நான் நினைச்சு இதை கனவுல கூட நினச்சு பாக்கல அதுதான் அதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்” என்று கூற, அவனோ “இன்னும் உன்னோட வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டியது இருக்கு. அதனால நீ கவலைப்படாதே நிம்மதியா இரு. நான் உன் கூட எப்பவும் இருப்பேன்” என்று ஆறுதலாக கூறினான்.

பின்பு மலர் “ஆமா உங்க வீட்ல யார் யார் இருக்காங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன் நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்று கூற, அவனோ தனது லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவள் புறம் திரும்பி “நம் குடும்பம் கொஞ்சம் ஊரில் பெரிய குடும்பம் தான். என்னுடைய தாத்தா சண்முகசுந்தரம் பாட்டி சகுந்தலா அவங்களுக்கு ஒரு பையன்  ஒரு பொண்ணு. என் அப்பா வேலுச்சாமி என் அம்மா பெயர் சுகந்தி. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் பேரு ரத்னவேல். ஒரு தம்பி இருக்கான் அவன் பெயர் கதிரவன். அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என் அண்ணி பெயர் சுகாசினி.

என்னோட அத்தை வீடு பக்கத்து ஊர்ல இருக்க அவங்களோட பொண்ணுதான் என்னோட அண்ணி சுகாசினி. அவங்களுக்கு இன்னொரு பொண்ணும் இருக்காங்க அவ பேரு ராதா. அத்தையோட பெயர்லக்ஷ்மி மாமா கந்தசாமி. அப்புறம் நமக்கு ஊரை சுற்றி நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. அதெல்லாம் போகப் போக தெரிந்து கொண்டால் போதும். இப்பவே தெரிஞ்சுக்கிட்டா மறந்து போயிடும் நான் எவ்வளவு சொன்னாலும்” என்று கூற அவளும் சரி என்றாள். “ஆமா உங்க ஊர் பேர் சொல்லவே இல்லையே” என்று கேட்க அவனும் சிரித்தவாறு “நம்ம ஊர் வேலன் கோட்டை” என்றான்.

“ஓஓ” என்றவள் “ஆமா உங்க ஊர் கிராமம் தானே” என்று கேட்க அவன் ஆமாம் என்றான். “காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமம்” என்று கூற அவளுக்கு குதூகலமாக இருந்தது. “நான் இதுவரைக்கும் கிராமத்துக்கு போனதே இல்ல. முதல்ல இருந்தே சென்னையில இருந்ததால நான் டிவியில் மட்டும்தான் கிராமத்தை பார்த்து இருக்கேன். டிவில காமிச்ச மாதிரியே உங்க கிராமம் இருக்குமா” என்று கேட்க அவன் “அதைவிட நல்லாவே இருக்கும்” என்றான்.

“அப்போ வயல்ல சுத்தி வரலாமா” என்று கேட்க, அவனோ “நம்மளோட வயலே அங்க நிறைய இருக்கு அதனால நீ தாராளமா சுத்தி பார்க்கலாம். ஆனால் யார் கண்ணிலும் படாமல்” என்று கூற அவளும் சரி என்று கூறினாள்.

அவன் நம்மளோட வீடு நம் தோட்டம் நம் ஊர் என்று கூறியதையும் கவனித்தவள் அவன் தன்னை தனது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். அவனது குடும்பம் தன்னை அவர்களுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவளது மனம் ஏங்கியது.

அதை அவனிடமே கூறியவள் “சீக்கிரம் உங்க வீட்ல என்ன உங்கள் மனைவியா ஏற்றுக்கொண்டா நானும் அந்த வீட்டில் ஒரு நபர் ஆயிடுவேனில்ல” என்று கேட்க அவனோ “நீ கவலப்படாத அங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அதனால கண்டிப்பா உன்ன பிடிக்கும்.  உன்னோட சுபாவத்திற்கு நீயும் எல்லார் கூடவும் நன்றாக தான் பழகுவ. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு நீ கவலைப்பட வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை” என்று ஆறுதலாக கூறினான்.

“எனக்கு அவங்க மனசுல கொஞ்சமே கொஞ்சம் இடம் கிடைச்சா மட்டும் போதும் வேற எதுவும் தேவையில்லை. எனக்கென ஒரு குடும்பம் இருக்கிற சந்தோஷம் இருக்கே, ம்ச்சு அதுவே எனக்கெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்” என்று கூற, அவனும் “உனக்கு குடும்பத்தோட இருக்கணும்னு ரொம்ப ஆசையா” என்று கேட்டான்.

 அவள் கண்களில் கண்ணீர் பெருக ஆமாம் என்றாள். அவளது கையைப் பிடித்துக் கொண்டவன் “உனக்கு கண்டிப்பா அந்த மாதிரி ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையை நான் கொடுப்பேன்” என்று கூற அவளோ “நிஜமான இப்ப கூட எனக்கு இவ்வளவு கொடுப்பினை இருக்கான்னு ஒரு பயம் வந்துகிட்டே இருக்கு. உண்மைய சொல்லுங்க நீங்க என்ன விட்டுட்டு போயிட மாட்டீங்கல்ல” என்று கூற அவனும் கண்டிப்பாக மாட்டேன் என்று கூறினான்.

” அப்போ உங்களுக்கு நான்னா ரொம்ப பிடிக்குமா. நீங்க என்ன காதலிக்கிறீர்களா” என்று கேட்க அவனும் உதட்டைப் பிதுக்கி இல்லை என்பது போல் தலையசைத்தான்.

“அப்போ நீங்க என்ன காதலிக்கலனா.. ஒருவேளை பின்னாடி என்ன பிடிக்காம போயி இனி என் வாழ்க்கையில் நீ வேண்டாம்னு என்ன சொல்லிட்டிங்கனா” என்று கேட்க அவனோ அவளை அருகில் வருமாறு அழைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து “கண்டிப்பா என்னைக்கும் அப்படி நான் சொல்ல மாட்டேன் நீ என்னை நம்பி தைரியமாக வரலாம்” என்று கூற அவள் கலங்கிய கண்களோடு தனது கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளது அந்தப் பார்வை அவனுக்கு என்ன ஒரே உணர்த்தியதோ, அவளை இழுத்து மடியில் அமரவைத்தியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு “உன் மனசுல ஒன்னு மட்டும் நீ நியாபகம் வச்சுக்கோ. என்னைக்குமே நீதான் என்னோட மனைவி. அந்த இடத்தை உன்கிட்ட இருந்து யாராலும் பறிக்க முடியாது. அதை மட்டும் நீ ஞாபகம் வெச்சுகிட்டா போதும்” என்று கூறியவன் “ஆனா அது காதலா என்று கேட்டால் எனக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியல.  ஒரு கணவனா ஒரு மனைவிக்கு நான் செய்ய வேண்டிய கடமையை நான் கண்டிப்பா செய்வேன். அதுக்கு காதல் என்று  பேர் வைக்க முடியாது  இப்போதைக்கு காதல்  இல்லை.  ஆனா வந்தா கண்டிப்பாக சொல்கிறேன்” என்று கூறியவன் அவள் இதழ்களில் முத்தமிட அவளோ அதிர்ச்சியில் மின்சாரம் தாக்கியது போல் உறைந்து நின்றாள்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here