உஷ்…ரகசியம்

0
79

தினமும் ஒரு குட்டி கதை

நீண்ட நெடுங்காலத்துக்கு முன், பாக்தாத் என்ற நகரத்தில், சந்துரு என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான். பெரும் செல்வந்தனாகிய அவனிடம், ஏராளமான ஆடு, மாடுகள், எருமைகள், கன்றுகள், கோவேறு கழுதைகளும் இருந்தன.

அவனுக்கு, பிடிவாத குணம் கொண்ட மனைவி இருந்தாள். அவள் பெயர் வினிதா. அவள், விலங்குகளும், பறவைகளும் பேசிக் கொள்வதை அறியும் ஆற்றல் உடையவள். சந்துருவுக்கும் மிருக பாஷைசகள் தெரியும். ஆனால், சந்துருவுக்கு மிருகபாஷைகளை சொல்லிக்கொடுத்தவர், “”இந்த ரகசியங்களை நீ வெளியிட்டால் உன் தலை வெடித்து செத்துவிடுவாய்,” என்றார்.
கோவேறு கழுதை ஒன்று கட்டிப் போட்டிருந்த லாயத்திற்கு ஒரு எருது வந்தது. தன் வீட்டு முற்றத்தில் அமையப்பெற்ற லாயத்தில் இருந்த அந்தக் கோவேறு கழுதையின் மேல் தான், சந்துரு சவாரி செய்வது வழக்கம். அது மிகவும் கொழுகொழுவெனப் பருத்துக் கொட்டிலில் படுத்துக் கிடந்ததை அந்த எருது கவனித்தது.
“”நண்பா… நீ சொகுசாகப் படுத்து இருப்பதைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. நீ செய்யும் வேலையோ, உழவடிக்கப் பயன்படுத்தப் பெறும் என் வேலையை விட மிகவும் எளிது. சற்று நேரம் உன் மீது உன் எஜமானன் சவாரி செய்வார். மற்ற நெடும் பொழுதில் உனக்கு ஓய்வு அதிகம். ஆனால், என்னையோ, ஏரில் பூட்டிப் பகல் எல்லாம் நிலத்தில் உழ வைத்து வதைக்கின்றனர்!” என்றது.
“”என் அருமை எருது நண்பா… நீ நாளை முதல் நான் சொல்வதைப் போல் செய்தால் நீயும் ஒய்வு எடுக்கலாம். செய்வாயா?” என்றது.
“”என்ன செய்ய வேண்டும் நண்பா?”
“”உன்னை ஏரில் பூட்டியதும், நீ தரையில் “தடால்’ என்று படுத்துக்கொள். உன்னை அடித்தாலும், உதைத்தாலும் எழுந்திருக்காதே. இதனால், உன்னைத் திரும்பக் கொட்டிலுக்கு ஓட்டி வந்து உனக்குத் தீனி வைப்பர். அதையும் தின்னாதே. உனக்கு ஏதோ நோய் கண்டிருப்பதாக எண்ணி ஏரில் பூட்டாமல் விட்டு விடுவர். இதனால், நீ கஷ்டப்படாமல் வாழலாம்!” என்றது.
கோவேறு கழுதையின் உபதேசத்தை, எருது ஏற்றுக் கொண்டது. மறுநாள் எருதை உழவு செய்ய ஏர்க்காலில் உழவன் பூட்டியதும், நிலத்தில், “தடால்’ என விழுந்து படுத்துக் கொண்டது. பண்ணை ஆள் எருதை அடித்து, உதைத்துப் பார்த்தான். எருது எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. அதனால், ஏர்க்காலில் இருந்து அதை விடுவித்து, மாட்டுக் கொட்டிலுக்கு ஓட்டி வந்து தீனி வைத்தான். அத்தீனியையும் அது தின்னவில்லை.
எருது நோய்வாய்ப்பட்டிருக்கிறது. அதன் நோய் தீரும் வரை அதை ஏரில் பூட்ட வேண்டாம் என சந்துரு சொல்ல, உழவர்கள் அதை விட்டுவிட்டனர்.
“அன்பு நண்பன் கோவேறு கழுதை சொன்ன யுக்தி பலித்தது’ என்று எருதுக்கு மிகவும் மகிழ்ச்சி. எனவே அந்த எருது, கழுதைக்கு நன்றி கூறியது. அந்தச் சமயம் பார்த்து, சந்துரு மனைவி அங்கு வந்தாள். அவள், அவை பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுவிட்டாள்.
“ஓஹோ! எல்லாம் இந்தக் கோவேறு கழுதை சொல்லிக் கொடுத்தது தானா? அந்தக் கோவேறு கழுதைக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்’ என முடிவு செய்தாள்.
மறுநாள் காலையில் பண்ணைக்குச் சென்றாள். தன் உழவர்களைப் பார்த்துச் சொன்னாள், “”கொட்டிலில் நோயுற்றுக் கிடக்கும் எருது உடல் தேறும் வரை, இந்தக் கோவேறு கழுதையை ஏரில் பூட்டி நிலத்தை உழுங்கள்!” என்றாள்.
மறுநாள் முதல், எருதிற்குப் பதில், கோவேறு கழுதை ஏரில் பூட்டப்பட்டது. உழவு வேலை நடந்தது. இதுநாள் வரை சொகுசாகப் படுத்திருந்த கோவேறு கழுதை சோர்ந்து போயிற்று. கொட்டிலில் விடப்பட்ட எருதோ, சொகுசாக ஓய்வு எடுத்துத் தின்று கொழுத்து வந்தது.
நடந்த விவரங்களைத் தன் கணவரிடம் விவரமாக எடுத்துக் கூறினாள்.
களைத்துச் சோர்ந்து போன கழுதை, ஒரு மாலைப் பொழுதில், எருது படுத்துக்கிடந்த மாட்டுக் கொட்டடிக்கு வந்தது. “”நண்பனே… அருமை எருதே… நான் எப்படிச் சொல்வேன்? நம் எஜமானர், ஒன்றுக்கும் பயன்படாத அந்த எருதைக் கொன்று, அதன் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இட்டிருக்கிறார். இதை நான் என் காதாரக் கேட்டேன்!” என்றது.
எருது நடுநடுங்கிப் போய், “”அன்பரே! நான் நாளை முதல் ஒழுங்காக ஏர் உழப் போகிறேன்,” என்று கூறி, வைத்த தீனியை வயிறார உண்டது.
இவை இரண்டும் உரையாடிக் கொண்டிருந்ததை, மனைவி மூலம் தெரிந்து கொண்டான் சந்துரு. அக்கோவேறு கழுதையின் யுக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.
மறுநாள், சந்துரு, அவன் மனைவியுடன் மாட்டுக் கொட்டில் பக்கம் வந்தனர். பாசாங்கு செய்த எருது, தன் எஜமானரைக் கண்டதும், தனக்கு நோய் ஒன்றும் இல்லை என்பதை துள்ளிக் குதித்து உணர்த்தியது. இதைக்கண்ட வணிகன் சிரித்தான். தன் கணவன் திடீர் என வாய்விட்டுச் சிரித்ததைக் கண்ட அவன் மனைவி, சிரிக்கும் காரணத்தைக் கேட்டாள்.
“”வினிதா, என் கண்ணே! நான் இந்த ரகசியத்தைச் சொன்னால், என் மண்டை வெடித்து இறந்து போவேன்.”
“”இதெல்லாம் சுத்தப் பொய். என்னை ஏமாற்றுகிறீர்கள். நான் இதை நம்ப மாட்டேன்!” என்றாள்.
“”நான் மரணம் அடைவதில் உனக்கு எந்த வருத்தமும் கிடையாதா!”
“”அதெல்லாம் வெறும் பொய். நான் நம்பவில்லை. இப்படி ரகசியத்தை வெளியிட்டு யாராவது தலை வெடித்துச் சிதறிச் செத்ததாக நான் இதுவரை கேள்விப்பபட்டதே இல்லை. ஏன், இந்த உலகமே கேள்விப்பட்டிருக்க முடியாது. ஆகவே, நீங்கள் இந்த ரகசியத்தை எனக்குச் சொல்லியே ஆக வேண்டும்.”
“”அப்படியானால், நான் செத்தாலும் பரவாயில்லை என்கிறாயா?”
“”ஆம்! அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்.”
அந்தச் சமயம், சந்துரு அன்புடன் வாஞ்சையாய் வளர்த்த நாய் அங்கு திரிந்து கொண்டிருந்தது. பின்பு, வாசல் பக்கம் ஒரு சேவல் தன் பேடைகளுடன் இரை பொறுக்கிக் கொண்டிருக்க, அதன் அருகே சென்று அந்த நாய் படுத்துக் கொண்டது.
நாயோ, இந்தச் சேதியை சேவலுக்குத் குறைத்த வண்ணம் தெரிவித்தது. “”அட நன்றி கெட்ட சேவலே! நம் எஜமானர் தன் மண்டை வெடித்துச் சிறிது நேரத்தில் சாகப் போகிறார். நீயோ, கொஞ்சமும் கவலையின்றி, உன் பேடைகளை இழுத்துக்கொண்டு வாசல் முற்றத்தில் உல்லாசமாகத் திரிகிறாயே!” என்று கூறிற்று.
“”அட புத்தி கெட்ட நாயே! எனக்கு எத்தனை பேடைகள் இருக்கின்றன பார்த்தாயா? அவற்றில் ஏதாவது ஒன்று என்னை விட்டுச் சற்றே விலகினால் போதும், நான் அதன் மண்டையில் ஒரு கொத்து கொத்துவேன். அப்பேடைகளோ, மிகவும் பயந்து என்னையே சுற்றித் சுற்றி வரும். இதை நீ அறிவாய் அல்லவா?”
“”அறிவேன்… அதுக்கு என்ன இப்போ?” என்றது நாய்.
சேவல் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தது.
“”நான் எப்படி என் பேடைகளை என் கட்டுக்குள் வைத்துக் கொள்கிறேனோ, அதுபோல, நம் எஜமானர், தன் மனைவிக்கு மிருக பாஷை தெரியும் என அறிந்தும், அவர் ஏன் புத்திசாலித்தனமாக நடக்கக்கூடாது?”
“”நீ என்ன சொல்கிறாய்?”
“”அட நாயே! உன் மூளை மழுங்கி விட்டதா என்ன? கணவன் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நச்சரிக்கும் அந்த அம்மாவை, ஒரு சாட்டையை எடுத்து, அவள் மயங்கிக் கீழே விழும் வரையும் நையப் புடைக்க வேண்டும். அப்படி இல்லாமல், நம் எஜமானர் தம் மனைவிக்குப் பயந்து கோழை போல சாகத் துணிந்து விட்டாரே!” என்றது.
சேவலும், நாயும் இவ்வாறு உரையாடிக் கொண்டு இருந்ததை, வாசல் முற்றத்தில் நின்றபடி கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு. அதைக் கேட்டதும் அவனுக்கு ரோஷம் பொங்கி எழுந்தது. நேரே வீட்டுக்குள் சென்றான்.
அங்கு உள்ள ஒரு பெரிய சவுக்கைக் கொண்டு வந்தான். அனைவர் முன்னிலையிலும், தன் மனைவியின் தலைமயிரைப் பிடித்து இழுத்து வந்து முற்றத்தில் போட்டான். சவுக்கால் விளாசித் தள்ளினான். அவளோ, “ஓ’வெனக் கதறினாள். மனம் போனபடி மேலும் மேலும் பிதற்ற, அவள் உடம்பு தோல் உரிய, ரத்தம் சொட்டச் சொட்ட நையப் புடைத்தான் சந்துரு.
“”ஐயோ! நீங்கள் ரகசியத்தைச் சொல்லத் தேவையில்லை. என்னை மேலும் மேலும் அடிக்காதீர்கள்… அடிக்காதீர்கள்!” என வினிதா கத்தினாள். சிறிது நேரத்தில் அவள், ஈனஸ்வரத்தில் ஏதோ பிதற்றிய வண்ணம், மயக்கமடைந்து தரையில் சாய்ந்தாள்.
அன்று முதல், அந்தப் பெரு வணிகனுடைய மனைவியின் முரட்டுப் பிடிவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here