என் கோடையில் மழையானவள்-10

0
303

பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. தன் மனைவியின் கைகளை ஆதரவாய் பற்றிக் கொண்டான் குரு. முகம் மலர அவளை நோக்க அவளோ குழப்பத்துடன் கலங்கிய விழிகளுடன் தலையுயர்த்தி பார்க்க, அவளது கண்ணீரை வேறு விதமாக எடுத்துக் கொண்டவன்,

“எதுக்கு இப்போ அழுற? சஏன் உனக்கு என்னை கல்யாணம் செஞ்சது பிடிக்கலையா?” என்று கேட்டான் எரிச்சலுடன்.

“ஐயோ இல்லை குரு. உன்னை பிடிக்காம தான் நீங்க திடுதிப்புனு இரண்டு நாள்ல கல்யாணம்னு சொன்னப்போ ஏன் எதுக்குனு கூட கேட்காம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ண ஒத்துக்கி..ட்டேனா?” என்று கூறும் கூறி முடிக்கையில் குரல் உடைந்தது.

அந்தக் குரல் அவனை தாக்கியதோ ? அவளை தோளோடு அணைத்து வந்து சுகீர்த்தனின் காரில் அமரச் செய்தவன், அவள் இரு கண்ணங்களையும் தாங்கி,
“உனக்கு உன் குரு மேல நம்பிக்கை இருக்குல?” என்று கேட்க அவள் தலை மேலும் கீழுமாக ஆட, புன்னகையுடன் ,
“கொஞ்ச நாள் வெயிட் பண்ணுமா.. அதுகப்புறம் உன் வீட்ல நானே வந்து பேசுறேன்..இந்த விஷயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்மா.. ப்ளீஸ் உன் குருவுக்காக. “ என்று கெஞ்சலாய் கேட்ட அவளால் அதை மறுக்க முடியவில்லை சரி என்று விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வெண்பா.

அங்கு நடப்பவை புரியாமல் பார்வையாளனாய் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுகீர்த்தன். முதல் நாள் கனடாவில் இருந்து வந்தவனிடம் ஒன்றையும் கூறாமல் கையோடு கூட்டிக் கொண்டு வந்து, “எனக்கும் வெண்பாவுக்கும் இன்னைக்கு கல்யாணம். நீ தான் சாட்சி கையெழுத்து போடனும்..” என்று அவன் தலையில் பெரிய பாறாங்கல்லையே தூக்கிப் போட்டான் குரு.

பின்னே, குருவின் தந்தைக்கும் அவன் தந்தைக்கும் இந்த விடயம் மட்டும் தெரிந்தால் நடுவில் மாட்டிக் கொள்வது இவன் தானே. ஆனால் நண்பனின் இந்த காரியத்திற்கு பின்னால் ஏதாவது ஓர் காரணம் இருக்கக் கூடும் இல்லையெனில் அவன் எடுத்தோம் கவுத்தோம் என்று எதையும் செய்யும் ஆளில்லை எனத் தோன்ற அவனும் ஒத்துக் கொண்டான்.

வெண்பாவின் நிலை குறித்து அவனுக்கும் கவலை தோன்ற அவளை தனியே அழைத்துப் பேசினான்.

அன்றிரவு விட்டத்தை வெறித்தபடி படுக்கையில் இருந்தவளை கலைத்தது அவளது கைப்பேசியின் ‘வைப்ரேட்’ ஒலி. படுக்கையில் படுத்திருந்தவாறே கைப்பேசியை எடுத்துக் பார்க்க அதில் குருவில் பெயர் விழவே, இத்தனை நேரம் சோகத்தில் மூழ்கியிருந்தவளது இதழ்கள் தானாக மலர அழைப்பை ஏற்றாள்.

“ஏய் மைடியர் பொண்டாட்டி..” என்றான் உற்சாகம் பொங்கும் குரலில்..

“குரு..என்ன இந்த நேர்த்துல?” என்றாள் கிசுகிசுக் குரலில். அவள் சத்தமாக பேசி யாருக்கும் கேட்டு விடக் கூடாதே அதனால் தான் இந்த ஹஸ்கி குரல்.

அந்தக் குரல் அவனுள் பல ஹார்மோன் மாற்றங்களை விளைவிக்க, அவன் மனதில் பற்பல எண்ணங்கள் தோன்றினாலும் சிரமப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டான்.

“உன்னை பார்க்கனும் வெளியே வா. உன் வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன்.” என்று அசால்ட்டாக அவன் கூற, மறு நொடி ஷாக் அடித்தது போல படுக்கையை விட்டும் படாரென்று எழுந்து அமர்ந்தாள்.

“குரு என்னடா சொல்ற? இங்கேயா இருக்க? என்னால இப்போ எப்படி வெளியே வர முடியும்? போ குரு நாம காலையிலே மீட் பண்ணலாம்..” என்று பதற்றத்துடன் கூற, அவனோ அதை கேட்கும் நிலையில் இல்லை.

“நான் நாளைக்கு காலையிலேயே வேலை விஷயமாக கலம்போ (Colombo) போறேன்.. எனக்கு இப்பவே உன்னை பார்க்கனும் வெளியே வா..” என்று பிடிவதமாக இருக்க, வேறு வழியில்லாமல் எழுந்தாள்.

பெரிய சால்வை ஒன்றை எடுத்து தன் தலையோடு போர்த்தியவள், நிலத்திற்கு வலித்து விடுமோ.. என்று தோன்றுமளவிற்கு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து திருட்டுப் பூனை போல் ஹாலை கடந்து வந்து பின்பக்க கதவை மெது மெதுவாக திறந்து வெளியே வந்தாள்.

அந்த இருட்டில் குரு எங்கே இருக்கக் கூடும் கண்களை கூர்மையாக்கி சுற்றிலும் தேட, திடீரென அவள் இடையோடு பற்றியிழுத்து சுவரோடு சாய்த்தது இரு கரங்கள். அது குரு தான் என்று தெரிந்தாலும் அவன் திடீரென்று இழுத்த வேகத்தில் இதயம் தூக்கி வாரிப்போட நெஞ்சின் மத்தியில் கைவைத்து,

“டேய் லூசு.. உனக்கு அறிவே இல்லையாடா? இந்த நேரத்துல வெளியே வா னு சொன்னது மட்டுமில்லாம.. இப்படி எருமை மாதிரி பின்னாடி இருந்து இழுக்குறியேடா.. எப்படி பயந்தேன் தெரியுமா?” என்று அவனது கைச்சந்தில் பலமாக அடிக்க, அவளது ஒவ்வொரு அடியையும் சிரித்தபடியே பெற்றுக் கொண்டான்.

“ஹேய் ஹேய் போதும்டி உங்கிட்ட இப்படி அடி வாங்குறதே என் பொழப்பா போச்சு.. உங்க ஊர்ல கட்டின புருஷனை இப்படி தான் அடிப்பாங்களா?” என்று புருவமுயர்த்தி கேலியாய் வினவியபடி சிரித்துக் கொண்டே அந்த சால்வைக்குள் தானும் புகுந்து கொண்டான்.

தான் கொழும்பு செல்லும் காரணத்தை கூறி , அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்க அவள் மனதில் ஏனோ ஓர் இனம் புரியாத ஓர் வலி, அதை என்னவென்று சொல்வது தெரியவில்லை அவளுக்கு.

மனம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது. அவனை பார்ப்பது இதுவே கடைசி தடவையாக இருக்கக்கூடும் என அப்போதே அவள் மனதிற்கு தெரிந்திருக்குமோ..? அவ்வாறு தெரிந்திருந்தால் போகத் தான் விட்டிருப்பாளா? அவள் சட்டையை இறுகப் பற்றியவள், அவனை நோக்கி,

“வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடு குரு.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. என்னை மறத்துட மாட்டேல்ல? ” என்று கலங்கிய குரலில் கூறியவளை பார்த்தவனுக்கு அவள் மேலான காதல் மேலும் பெருக, இறுக அணைத்தவன்,

“ஏய் லூசு பொண்டாட்டி.. நீ என் உசுருடி உன்னை மறந்து என்னால வாழ முடியுமா? நான் அமெரிக்காவா போறேன்.. இதோ இங்கேயிருந்து கலம்போக்கு மூனு மணி நேரம் தான். இதுக்கு போய் இப்படி மூக்க உறிஞ்சிட்டு இருக்க?

நான் ஒன்னும் அங்கேயே செட்டலாகிட போகலை நம்ம ஃபியூச்சருக்கான வேலைகளை முடிச்சிட்டு என் பொண்டாட்டிய எங்கூடவே அழைச்சிட்டு போய் 24 மணிநேரமும் கூடவே வச்சிக்குறேன் போதுமா?..இப்போ சிரிமா அப்படியே ஒன்னு கொடு அதே எனர்ஜியோடு மாமா சீக்கிரமே வேலையை முடிச்சிட்டு வந்துட்றேன்..” என்று குறும்புடன் கூற இத்தனை நேரம் மனதில் இருந்த சுணக்கம் மறைந்து, அவள் கன்னமிரண்டும் சிவக்க தலை நிமிராமல் நின்றிருந்தாள்.

ஆசையுடன் அவள் இதழ் நோக்கி குனிந்தவன் நீண்ட இதழ் முத்தத்தை வழங்க, அதில் புதையுண்டு போனாள் அவள்.

அன்றைய அழகிய காட்சி அவள் கண்முன்னே தத்ரூபமாய் தோன்ற, அவன் இல்லாத இன்றைய தனிமையில் அந்த நினைவுகள் அவளை உயிருடன் கொன்றது.

அந்த இரவில் இதழ் முத்தத்துடன் சென்றவன் தான் அதன் பிறகு அவன் திரும்பி வரவேயில்லை. பல முறை முயன்றும் அவனை தொடர்பு கொள்ள முடியவே முடியவில்லை. சுகீர்த்தனது அலைப்பேசி இலக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் என்னவாயிற்றோ.. என்று பதறினாள். அவனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என கடவுளிடம் மன்றாடினாள். குரு வருவான் என நம்பினாள்.

இப்படியே மூன்று மாதங்கள் கடந்தன. அவள் பாட்டிற்கு கல்லூரி சென்று வந்தாள். அங்கும் குருவின் நினைவுகளே. கல்லூரி விடுமுறையில் வழங்கப்பட்டது. வெண்பாவுடன் கூடவே இந்துமதியும் கவினும் ஊருக்குச் சென்றனர்.

அவனை பற்றி யாரிடம் கேட்பது அவனை எப்படி அணுகுவதென்றே தெரியவில்லை.

ஒரு வேளை குருவின் தந்தை ஏதாவது செய்திருக்க கூடுமோ? அன்று வேதநாயகம் அவளை பார்த்த பார்வை நினைவில் வந்து அவளை கிலி கொள்ளச் செய்தது.

எப்படியோ வேதநாயகத்தின் வீட்டு தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்றுக் கொண்டாள். அவர் ஓர் முக்கிய புள்ளி என்பதால் அதை கண்டு பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

முயன்று வர வழைத்த தைரியத்துடன் வேதநாயகத்தின் வீட்டு தொலைபேசி எண்களை அழுத்தினாள். அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப்பட பேசியது குருவோ வேதநாயகமோ இல்லை அந்த வீட்டு வேலைக்காரி.

“ஹலோ யாரு..?”

“ஹ..ஹலோ அமைச்சர் வேநாயகம் வீடா?”

“ஆமாங்க நீங்க யாரு.? ஐயா இப்போ வீட்ல இல்லையே..”

“வீட்ல யாருமே இல்லையா? எல்லாரும் …” என்று அவள் கேட்க வந்ததை கேட்கும் பொறுமையற்ற அந்த பெண்மனி,

“குரு தம்பிக்கும் நிஷா மேடமுக்கும் நிச்சயதார்த்தம்.. எல்லோரும் அங்கே போயிருக்காங்களே.. “ மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் விழுந்தது பேரிடி.

அவள் கையிலிருந்து தானாக நழுவி விழுந்தது கைப்பேசி. குருவுக்கும் நிஷாவுக்கும் நிச்சயதார்த்தமா? அவன் மனைவி நான் இங்கே இருக்க அங்கே இன்னோருத்தியை மணப்பானா அவள் கணவன்? இல்லை இல்லை குருவால் என்னை ஏமாற்ற முடியாது என அவள் மனம் அடித்துக் கூறினாலும் பின்னே ஏன் அவன் இத்தனை காலம் தன்னுடன் பேசவில்லை?

குரு, சுகீர்த்தன் இருவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது நினைவில் வந்தது. அப்படியானால் இத்தனை காலம் ஏமாற்றப்பட்டிருக்கிறோமா? குருவின் மீதான நம்பிக்கை சுக்குநூறாக உடைந்தது போல அவள் மனமும் உடைந்து போனது. இலவு காத்த கிளியை போன்ற தன் நிலையை அறவே வெறுத்தாள். இதயத்தில் யாரோ சூட்டுக் கோலால் இழுத்தது போல் பச்சை ரணமாய் ஓர் வலி உண்டானது.

வாழ்க்கையில் சில தருணங்களை கடந்து செல்வது கடினம் தான். இருந்தாலும் சில காரணங்களுக்காக கடந்து சென்றேயாக வேண்டும். இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது. சில நேரத்தில் நம் பார்வைகள் சிலதை தவறாக எடை போட்டு விடுகிறது. அந்த சில உண்மையில் நமக்குரியனவல்ல. அதை புரிந்துகொள்ள முயலும் போது வெகுவாக காலம் கடந்திருக்கும். ஏன் இப்படி நடந்தது? எதற்காக இப்படி நடந்தது? எதனால் இப்படி நடந்தது? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தலையை இரு கைகளாலும் தாங்கிய வண்ணம் “ஐயோ..!” எனக் கத்தி விட்டாள் வெண்பா.

அவள் கத்திய சத்தம் கேட்டு பதறி அவளறைக்குள் ஓடி வந்தார் வெண்பாவின் அம்மா. தலையை அழித்துப் பிடித்த வண்ணம், கண்கள் அமரந்திருந்த கோலத்தை கண்டு திகைத்தவர் அவளருகில் வந்து,

“என்னச்சுமா? ஏன் கத்தின? சொல்லுமா? காலேஜ் லீவ் விட்டதிலிருந்து நீ ஒரு மாதிரி தான் இருக்க? உனக்கு என்னச்சுடா? ஏன் இப்படி இருக்க? ” என்று அவர் கேட்க கேள்விகளுக்கு, “தலை வலிக்குதுமா” என்ற பதிலோடு நிறுத்திக் கொண்டாள்.

“டாக்டர் கிட்ட போகலாமா?” என்று கேட்டவர் அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து, “லேசா சுடுது.காய்ச்சல் மாதிரி இருக்கே வெண்பாமா.. கிளம்பு டாக்டரை பார்த்துட்டு வரலாம்..” என்று அழைத்தார்.

அதை பொருட்படுத்தாதவள் வேண்டாம் தலை வலி மாத்திரை போட்டு தூங்கினால் சரியாகி விடும். என்று கூறி விட்டு ஒரு மாத்திரையை விழுங்கியவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

வெண்பா கொஞ்ச நாட்களாக ஆளே மாறிப் போயிருந்தாள். அழுதழுது சிவந்து போன கண்கள், காய்ந்து வரண்டு போன இதழ்கள், சோகம் இழையோடும் முகம் என கழையிழந்து போயிருந்தாள் வெண்பா.

அவளது தாய்க்கும், சித்தி மாருக்கும் கூட தம் செல்ல மகளின் தோற்றம் கண்டு உள்ளே கவலை தோன்றவாரம்பித்தது. அவளிடம் போய் ஒவ்வொருவராய் போய் “என்ன தான் உன் பிரச்சினை வெண்பா?”என்று அன்பாய் கேட்டாலும், அதட்டிக் கேட்டாலும் அவளது பதில் ஒன்று தான். மௌனமாய் இல்லையென்று தலையாட்டி விட்டு, வெறித்தப் பார்வையுடன் மீண்டும் தன் துக்க இரங்கலை துவங்கி விடுவாள்.

அவளது நிலை கண்டு இளமதி வெகுவாக கலங்கிப் போயிருந்தார். முப்பொழுதும் சோகமாய் கடத்துமளவுக்கு இவளுக்கு நேர்ந்தது என்ன? கல்லூரியில் ஏதேனும் நடந்திருக்கக் கூடுமோ? ஒரு வேளை காதல்… “ச்சேச்சே..நம்ம குட்டிம்மா இதெல்லாம் பண்ண மாட்டா? அப்படியே இருந்தாலும் அதை மறைக்கிற அளவுக்கு தைரியமில்லாத பொண்ணு இல்லையே.. என்ற ஓர் சந்தேகம் கூட எட்டிப் பார்த்த மறு கணம் காணாமல் போனது.

அன்றும் இரவு தூங்காமல் தன் அறையின் ஜன்னல் வழியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவனை காணாத பொழுதுகள் சிரமமாக கழிந்தன.

அவள் மனதில் அப்படி என்ன சோகம்? அதை இன்று எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் அவளறைக்குள் நுழைந்தார் இளமதி. வானத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்த வெண்பாவின் நிலை அவரை கவலை கொள்ளச் செய்ய அவளருகில் போய் அமர, அதை கூட உணராமல் இருப்பவளை என்ன செய்தால் தகும்?

“குட்டிம்மா…” என்று தோள் தொட்டு அழைக்க ,

“என்ன சித்தி?”

“உனக்கு என்னமா கவலை? ஏன் இப்படி இருக்க? உன் மனசுல அப்படி என்ன கவலை இருக்குனு தெரியலை. ஆனால் உன்னை பார்த்தாலே தெரியுது ஏதோ மனக்குழப்பத்துல இருக்கனு… காலேஜ்ல ஏதும் பிரச்சினையா? எதுவா இருந்தாலும் சித்தி கிட்ட சொல்லுமா? என்று வருத்தத்துடன் கேட்க,

“ஒன்னுமில்லை சித்தி..”

“இந்த ஒன்றுமில்லை எத்தனை தடவை சொல்லிட்ட ஆனா உன் மனசுல ஏதோ ஒன்னு இருக்குனு தெரியும். அதை சொல்றதால உனக்கு கஷ்டம்னா நீ சொல்லவே வேணாம். ஆனால் எந்த கவலையும் கஷ்டமும் நிரந்தரம் இல்லை. நம்மை விடாம துரத்துர அந்த கஷ்டத்தில் இருந்து நாம தான் வெளியே வர முயற்சிக்கனும். அதிலேயே இருந்தோம்னா அந்த கவலையே நம்மை கொன்னுடும்.

எங்க கிட்ட மறைக்கிற அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டனு எனக்கு தெரியும். அந்த விதத்தில் உன் மேல நம்பிக்கை இருக்கு. அதனால் நீ எதுக்கும் கவலை படாதேமா.. என்ன நடந்தாலும் உங்கூட உன் குடும்பம் இருக்கு. உன்னை வருத்திக்கிட்டு இருக்கிற அந்த விஷயத்தில இருந்து வெளியே வா.. நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் எந்த கஷ்டத்தையும் கடந்து போகலாம்.. பழைய குட்டிம்மாவா நீ இருக்கனும்…” என்று வெண்பாவின் கைகளை ஆதரவாய் பற்ற, விழியகல நோக்கியவள்,

“ஒன்றுமில்லை சித்தி. நான் நல்லா தான் இருக்கேன்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. நான் எப்பவும் உங்க குட்டிம்மாவா தான் இருப்பேன்” என்று முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கூற, அவளது புன்னகை தந்த மகிழ்ச்சியில் அவளை கட்டியணைத்து அவளை உறங்குமாறு கூறி விட்டுச் சென்றார்.

விழித்திரை இரண்டும் கலங்க அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. அவள் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருக்கும் தன் உறவுகளை ஏமாற்றி விட்டேனே.. என்ன செய்வேன்? எங்கே பிழை நேர்ந்தது? ஏன் ஏன்? என்று தன்னையே கேட்டுக் கொண்டவளுக்கு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஓர் வலி தோன்ற இத்தனை நாட்களாக ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டு , அவள் நெஞ்சோடு உறவாடிக் கொண்டிருந்த தாலியை தொட்டுப் பார்த்தாள்.

அவள் நெஞ்சைப் போல அவள் விழிகளின் கீழிமைகள் துடித்தன. விழிகள் இரத்தமென சிவக்க, கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன் நினைவுகள் நிழலாய் துரத்த ஆற்றாமை தாங்காமல் அழுது கரைவதே அவளது தொழிலாய் ஆனது.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here