பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணியின் நறுமணம் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. தியாணத்தை முடித்துக் கொண்டு எழுந்த வெண்பா சூடம் ஏற்றி ஆரத்தி காட்டினாள். அம்மனின் திருவுருவப் படத்தை உற்று நோக்கி வணங்கிக் கொண்டிருந்த சித்தி இளமதியின் அருகில் வந்து நிற்க ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
ஹாலில் அமர்ந்திருந்த சித்ப்பாவிடமும் கவினிடமும் ஆரத்தியை காட்ட அதை தொட்டு ஒற்றிக் கொண்டே,
“அக்கா.. உங்களுக்கு என்னாச்சு.?” என கண்களை அகலத் திறந்து வியப்புடன் கேட்க, ஒற்றை கையுயர்த்தி கொஞ்சம் இரு என்பதை போல சைகை செய்தவள் ஆரத்தி தட்டை சித்தியின் கையில் கொடுத்து விட்டு கவினை நோக்கி,
“ஏன்டா..” என்று கேட்டுக் கொண்டே அவனருகில் வந்த நிற்க,
“இல்லைக்கா.. நீங்க சும்மாவே இங்கே குளிருதுனு குளிக்கவே மாட்டீங்க… இன்னைக்கு என்னடான்னா காலையிலே குளிச்சு.. சேலை எல்லாம் கட்டி, பூஜை எல்லாம் பண்ணிருக்கீங்களே… எனி ஸ்பெஷல் ..” என வெண்பாவின் காதருகில் கிசுகிசுத்தான் கவின்.
“எல்லாம் ஒரு வேண்டுதல் தான் என் அருமை தம்பியே…” என இழுவையாக கூறி அவன் காதருகே, “இதுக்கு மேல கேட்ட அடி வாங்குவ..” என மெல்லிய குரலில் கூறிவிட்டு இதற்கு மேல் அங்கிருந்து இவன் ஏதாவது கேட்டு வைத்து சித்தி சித்தப்பா இருவருக்கும் ஏதேனும் சந்தேகம் வந்து விடுமோ என்ற பயத்தில் அவனது தோளில் கையிட்டு அணைத்த வண்ணம் வெளியே அழைத்து வந்தாள்.
தன்னை வெளியே அழைத்து வந்த காரணம் புரியாமல் மீண்டும் அதே கேள்வியை கேட்க, அவனை முறைத்த வண்ணம்,
“யேன்டா இதையே கேட்குற நான் புடவை கட்டி பார்த்ததே இல்லையா? ஒரு நாள் காலையிலே குளிச்சேன்னு இவ்வளவு கேள்வி கேட்குற? ம்ம்..நீ சின்ன பையன் இந்த டிசம்பர் எக்ஸாம் இருக்குல்ல? போ போய் படி” என்று அவனை விரட்டியவள் நீண்ட பெரு மூச்சுடன் வீட்டினுள் நுழைந்தாள்.
காலை உணவை முடித்தவளுக்கு எப்படியாவது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம். இன்று வார இறுதி என்பதால் கல்லூரி விடுமுறை நாள் வேறு. சித்தியிடம் என்ன கூறி வெளியேறுவது என சித்தித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு மேசை மேல் இருந்த திவ்யாவின் புத்தகத்தை கண்டதும் ஓர் எண்ணம் உதிக்க நேரே தன் சித்தியிடம் சென்றாள்.
மடித்து வைத்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த சித்தியின் அருகில் சென்று,
“சித்தி…” என மெதுவாக அழைக்க,
“என்னம்மா..?” என திருமபாமேலே கேட்டார்.
“நம்ம திவி இருக்காள்ல..அவளோட புக் ஒன்னு என்கிட்ட இருக்கு.. அது அர்ஜன்ட்டா வேணும்னு கேட்டா நான் அவ வீடு வரை போய் கொடுத்துட்டு வரட்டுமா சித்தி?” என தட்டுத் தடுமாறி ஒருவாறு கேட்டு முடிக்க,
“நீ ஏன்மா அவ்வளவு தூரம் போகனும்? அதான் கவின் இருக்கானே அவன் கிட்ட சொன்னா கொடுத்துட்டு வந்துட போறான்..” என அவர் சாதாரணமாக கூற இவளுக்குத் தான் உள்ளே பக்பக்கென்றது.
“இல்லை சித்தி குரூப் அசைன்ட்மன்ட் இருக்கு.. அதான் அவ வீட்டுக்கு போனா செய்ய ஈஸியா இருக்கும்ல நானே போறேன் சித்தி..” என சமாளித்துக் கூறி முடித்தவளை வித்தியாசமாக நோக்கினார் இளமதி.
வெண்பா இதுவரை எந்தத் தோழியையும் சந்திக்க அனுமதி கோரியதேயில்லை. அவளது தோழி திவ்யாவை மாத்திரம் தான் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள். இவரே கூறினால் கூட “அவ்வளவு தூரம் எல்லாம் என்னால நடக்க முடியாது..” என்று விடுவாள். பொதுவாக வெளியே எங்கேயும் போவதை அவள் அவ்வளவாக விரும்புவதில்லை. இன்று காலை முதல் அவளது செயல்கள் யாவும் சற்று வித்தியாசமாய் தான் அவருக்குத் தோன்றியது. இருந்தாலும் மறுப்பேதும் கூறாது சம்மதமாக தலையாட்டினார்.
தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறியவளை அழைத்த இளமதி,
“அன்னைக்கு சமன்குமாரி அக்கா வெலித்தலப்பை கொண்டு வந்து கொடுத்தாங்க.. நம்ம திவிக்கு ரொம்ப பிடிக்கும்ல போய் இதை அவளுக்கு கொடுத்துடு..” என்று ஒரு டப்பாவை அவள் கைகளில் கொடுக்க அதையும் தன் பையினுள் போட்டுக் கொண்டு கிளம்பினாள்.
வெலித்தலப்பை என்பது அரசி மா மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படும் ஒருவித இனிப்புப் பண்டம். இது இலங்கை சிங்கள மக்களின் பிரசித்தமான உணவு வகைகளில் ஒன்று.
“ஐயையோ இவ எதுக்கு இப்போ கோல் பண்ணிக்கிட்டு இருக்கா? இவன் பார்த்தா என்னை தானே வச்சு செய்வான்..” என எண்ணியவன் வைப்ரேட் மோட்டில் இருந்த செல்லை எடுத்துப் பார்த்தவன் அழைப்பை ஏற்காமல் தன் பேண்ட் பாக்கெட்டினுள் போட்டு விட்டு அமைதியாக நின்றான் சுகீர்த்தன்.
மீண்டும் மீண்டும் அவனது செல்போன் அதிர ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவன் குருவின் காதருகே,
“குரு… நீ சாமி கும்பிட்டு வெயிட் பண்ணு. ஒரு அர்ஜன்ட் கோல் பேசிட்டு வந்துட்றேன்..” எனக் கூற அவனது தலையசைப்பை பதிலாக பெற்றவன் கோயிலை விட்டும் வெளியே வந்தான்.
“இவ வேற..” என அழைப்பை ஏற்றவன், “எதுக்கு இப்போ கோல் பண்ணிக்கிட்டே இருக்க? எடுக்கலைனா பிசியா இருக்கேனு தெரியலையா..? நீ தான் கோல் பண்றனு தெரிஞ்சா என்னை தான் திட்டுவான் நிலமை புரியாம நீ வேற.. யேன்மா???”என ஆரம்பத்தில் கத்தியவன் இறுதியில் அமைதியாகவே வினவினான்.
“சுக்குண்ணா இன்னைக்கு குருவோட பிறந்த நாள்ல?” என்று கேட்டவளது குரலில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
அவளது குரலில் தெரிந்த மகிழ்ச்சியை தானும் உள்வாங்கிக் கொண்டவன், “ஆமா அவன் பர்த் டே தான்.. ஏன் ஏதும் கிஃப்ட் வச்சிருக்கியா மா? நீ கிஃப்ட் கொடுக்கலைனா தான் ஆச்சர்யம். ஹூம்…” என புன்னகையுடனே கூறினான்.
“ஆமாண்ணா.. சரி நான் இப்போ குருவை பார்த்தாகனுமே.. எங்கேண்ணா இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..?எனக் கேட்டதும் அவனுக்குப் புரிந்து விட்டது இன்று குருவிடம் தனக்கு அடி வாங்கித் தராமல் விடப்போவதில்லை என்று.
அவர்கள் இருக்கும் இடத்தை சொல்ல மறுத்தவன் அவர்களை தேடி வர வேண்டாம் என எச்சரிக்க அதற்கெல்லாம் அசருபவளா வெண்பா? அவனை இன்று சந்தித்தேயாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஒரு கட்டத்தில் கெஞ்சியவளை மறுக்க மனமின்றி வேறு வழியில்லாமல் அவர்கள் கோயிலில் கோயிலில் இருப்பதை தெரிவிக்க உடனே புறப்பட்டு வந்தாள்.
கண்கள் மூடி தன் மனதில் இத்தனை நாட்கள் அரித்துக் கொண்டிருந்ததை கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் குரு. வேண்தலை முடித்தவன் கை கூப்பிய வண்ணம் தன் கண்களை திறக்க இதழ்களில் புன்னகை பூசிய வண்ணம் அவன் முன்னே நின்றிருந்தாள் வெண்பா.
அவளது அலை அலையான நீண்ட கூந்தலின் ஒரு பகுதியை தன் ஒரு பக்க மார்புக்கு மேலே போட்டப்பட்டிருக்க, முன் நெற்றியில் விழுந்த சிறு சுருள் கூந்தல் காற்றில் அசைந்தாடிய வண்ணம் இருக்க ,முதல் முறை புடவையில் அன்னப் பதுமை போல் நின்றவளை பார்த்தவன் ஒரு கணம் சித்தம் தடுமாறித் தான் போனான்.
அவன் இமைக்க மறந்து நிற்க, அவளோ மாறாத மென்னகையுடன் தன் மன்னவனையே பார்த்து நின்றாள். குரு தன்னை மறந்து நிற்கும் நிலையை கண்டு கள்ளச் சிரிப்பை சிந்திய சுகீ தன் நண்பனின் காதருகில் கிசுகிசுத்து உணர்வு பெற வைத்தான்.
தன் மனம் சென்ற போக்கை எண்ணி தன்னையே கடிந்தவன், முடிந்தவளவு தன் முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டான்.
“ஹேப்பி பர்த்டே குரூ..” என வாழ்த்தி தன் சித்தி திவ்யாவிற்காக கொடுத்தனுப்பிய இனிப்பு அடங்கிய டப்பாவை நீட்ட, இன்று ஏனோ அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை. சிறு புன்னகையுடனே நன்றி கூறியவன் அதை வாங்கிக் கொண்டான். முதல் முறையாக எந்த வாக்குவாதமுமின்றி தான் கொடுத்ததை வாங்கியது மட்டுமன்றி அவன் சிரித்ததையும் எண்ணி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள் வெண்பா.
தன் நண்பனின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்து கொண்ட சுகீர்த்தனது முகத்தில் தானாக புன்னகை அரும்பியது.
“என்னம்மா வெண்பா என்னென்னவோ கிஃப்ட் கொடுத்துட்டு அவன் பர்த்டேக்கு இப்படி சில்வர் டப்பாவை கொடுக்குறியே?” என கேலி செய்ய,
“என்னண்ணா இப்படி சொல்லிட்டீங்க? இது ஸ்பெஷல் ஸ்வீட் சூப்பரா இருக்கும்..” என்றவாறு சுகீயுடன் பேசியபடியே கோயிலை விட்டும் வெளியே வந்தனர். குருவின் பார்வை அடிக்கொருதரம் அவளை பார்த்து மீண்டது. இதை சரியாக கண்டு கொண்டது சுகீர்த்தனே.
எப்போதும் சிடுசிடுவென இருக்கும் விறைப்புப் பேர்வழி குரு இன்று அமைதியாக இருப்பது வெண்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. அவளை கண்டாலே துரத்துபவன் இன்று மட்டும் இப்படி மௌனம் சாதிக்க காரணம் புரியவில்லை அவளுக்கு.
“ஆமாண்ணா நீங்களும் குருவும் அடிக்கடி இப்படி தான் கோயிலுக்கு வருவீங்களா?” என்று குருவின் முகத்தில் பார்வையை பதித்த வண்ணம் சுகீர்த்தனிடம் வினவினாள்.
“அப்படியெல்லாம் இல்லை.. குருவோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கோயில் வருவது வழக்கம்.. எங்கிருந்தாலும் அவனோட பிறந்த நாளைக்கு கோயிலுக்கு போகாம மட்டும் இருக்க மாட்டான்..” என்று கோயில் வந்ததற்கான காரணத்தை விளக்கினான் சுகீ.
அவளும் குருவிடம், “அப்படியா..?” எனக் கேட்க ஆமாம் என்பதை போல் தலையசைத்தவன்,
“இது என் அம்மாவுடைய ஆசை. எல்லா பிறந்த நாளைக்கும் கண்டிப்பா கோயில் போகனும்னு சொல்லுவாங்க.அவங்க இருந்த வரைக்கும் என்னோட ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவங்க கூட தான் கோயிலுக்கு போவேன்..” என்றவனது குரலில் இழையோடியிருந்த வருத்தமும் கண்களில் தெரிந்த சோகமும் அவளை தாக்கியது.
குருவின் மனநிலையை மாற்ற எண்ணி,
“அப்புறம் குரு… நம்ம எப்போ லவ்வர்ஸ் ஆக போறோம்? ஆல்ரெடி நீ என் லவ்வர் தான்..” என தரையை பார்த்து குனிந்த வண்ணம் கூற இத்தனை நேரம் அமைதியாக இருந்த குரு அவளது பேச்சில் கடுப்பானான்.
“ உன்னை திருத்தவே முடியாதுடி..”என்று சிடுசிடுத்துக் கொண்டே தனது பைக்கை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடக்க அவளும் அவன் பின்னாலேயே வேகவேகமாக நடந்தாள்.
“ஐயோ மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே.. இவனை..”என மனதால் குருவை அர்ச்சித்தபடியே அவனும் சென்றான்.
“சுகீ பைக்ல ஏறு..” என்றவன் தானும் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான். சுகீர்த்தனும் ஒன்றும் பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்தான்.
அவன் எதிர்பாராத நேரம் சட்டென பைக் சாவியை இழுத்தெடுத்தாள் வெண்பா. தன் கைகளை பின்னால் கட்டிய வண்ணம் புன்னகைக்க அவளை முறைத்தவன்,
“விளையாடாம கீயை கொடு..” எனச் சீற சுகீர்த்தனோ தலையில் கைவைத்த வண்ணம் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கலானான்.
அவன் கேட்டதும் கொடுத்தாள் அது வெண்பாவே இல்லையே.. “முடியாது” என தலையை ஆட்டி வைக்க, அவனது கோபம் எல்லையை கடந்தது.
“டோன்ட் ப்ளே வித் மீ… கீயை கொடு..” எனக் கத்த சுற்றி இருந்தவர்கள் ஒரு நிமிடம் நின்று அவர்களையே திரும்பிப் பாரப்பதை உணர்ந்தவன், சற்று குரலை தாழ்த்தி,
“ உன் கிறுக்குத் தனத்துக்கு அளவேயில்லையா? காலேஜ்ல தான் என் மானத்தை வாங்குறன்னு பார்த்தா இப்போ வெளியிலேயும் ஆரம்பிச்சிட்டியா? நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யாரு சொன்னது?” என அடிக்குரலில் சீற, அவளது அமைதியே இது சுகீயின் வேலை என காட்டிக் கொடுத்தது.
திரு திருவென விழித்துக் கொண்டிருந்த தன் நண்பனை திரும்பி பார்த்தவன் அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான். “எப்போ பாரு இந்த பொண்ணு என்னையே கோர்த்து விட்றாளே…” என்று எண்ணியவன் தன் நண்பனின் தாறுமாறான திட்டுக்களை வாங்கிக் கொண்டு அமைதியாய் இருந்தான்.
“ஏன் குரு சுக்குண்ணாவை திட்டுற? நான் தான் அண்ணாவை தொல்லை செஞ்சு கேட்டேன். நீ உன் நம்பர் கொடுத்திருந்தா நான் ஏன் அவரை தொந்தரவு பண்ண போறேன்?தான் உன் நம்பர் தர மாட்டேங்குற.. ஹூம்” என ஓர் நெடிய பெருமூச்செறிய அவளது செய்கை அவனது பொறுமையை ரொம்பவே சோதித்தது.
“நீ உன் லிமிட்டை க்ராஸ் பண்ணிக்கிட்டு இருக்க.. மரியாதையா கீயை கொடுத்துடு இல்லைனா நடக்குறதே வேற..” என மீண்டும் கடுப்புடன் மொழிய அவனை நோக்கி அழகான புன்னகையை சிந்தியவள் அவனருகில் வந்து,
“அப்படீன்னா… நீ..”
“நான்..?”
“நீ என்னை”
“நான் உன்னை?”
“நீ என்னை ஒரே ஒரு தடவை என் பேரை சொல்லி கூப்பிடு பார்க்கலாம்..” என்று அவள் சொன்ன தோரணையில் சுகீ சத்தமாகவே சிரித்து விட்டான். திரும்பி அவனை முறைக்க கடினப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றான்.
“முடியாது..” என்று அவன் கோபமாய் மறுக்க,
“அப்போ கீயை கொடுக்க மாட்டேனே..”என கூலாக சொன்னவளை நோக்கி,
“வெண்பா..போதுமா இப்போ கீயை கொடு..” என்றவன் அவள் கையில் இருந்த சாவியை பறித்து எடுத்து வண்டியை கிளப்பினான். கல்லூரி சென்று ஒன்பது மாதங்களாகியும் இது வரை ஒரு நாள் கூட குரு அவளது பெயரை கூறியதே இல்லை. தன் மனம் கவர்ந்தவன் முதல் முறையாக தன் பெயரை உச்சரித்த நொடி முதல் சிறகின்றி ஆகாயத்தில் பறப்பதை போல் உணர்ந்தாள் வெண்பா.
தொடரும்…