என் கோடையில் மழையானவள்-8

0
488

“க்குரு.. நோ கி..கிட்ட வரா..தே.. ஹேய் நோ ப்ளீ..ஸ்..” வார்த்தைகள் தந்தியடிக்க மலங்க விழித்தபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள் வெண்பா.

அவள் வார்த்தையை சிறிதும் பொருட்படுத்தாதவன், அவளது மிரண்டு விழிக்கும் விழிகள் ரசித்த வண்ணம் அவளை நோக்கி முன்னேற, சுவரில் மோதி நின்றாள் அவள்.

கண்களில் குறும்பு மின்ன இருபுறமும் தன் கைகளால் அணை கட்டி மேலும் நெருங்க, இருவருக்குமிடையில் நூலளவு இடைவெளியே இருக்க, அவன் நெருக்கம் அவளுக்கு அவஸ்தையாகி போனது.

“வர வர ரொம்ப அமைதியாக இருக்கடி.. என்னை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்துறப்போ இருந்த அடாவடி துறுதுறு வெண்பா எங்கே போனா?

இப்போ நானும் உன்னை லவ் பண்றேன் ஆனா நீ முன்ன மாதிரி இல்லையே ஏன்? இது உனக்கு செட் ஆகலையே.. ஃபோன்ல மட்டும் வாய் ஓயாம பேசுற ஆனால் நேரில் கண்டா இப்படி பம்முற.. இதுக்கு உன்னை என்ன பண்ணலாம்?”

‘ஐயோ குரு.. நீ வேற நீ திடீர் திடீர்னு ஏன்டா இப்படி பண்ணுற? நீ பக்கத்துல வந்தாலே எனக்கு வார்த்தை வரலைடா..’ என்று மனதால் புலம்ப முடிந்ததே தவிர வார்த்தை வெளியே வரவில்லை.

இமைகள் இரண்டும் படபடக்க, இதயம் தடதடக்க அவனருகாமையில் பயமும் நாணமும் சூழ்ந்து கொள்ள தலை குனிந்து நின்றவளது முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்த இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொள்ள, உயிர் வரை ஊடுருவும் அவன் பார்வையில் இதயம் சில்லிட்டது அவளுக்கு.

அவள் கண்களில் தனக்கான காதலை கண்டு கொண்டவன்,
“இந்த உலகத்திலேயே என் அம்மாவுக்கு பிறகு உன்னை தான் உயிராக நேசிக்கிறேன் வெண்பா.. என் அம்மாவின் அதே ப்ரவுன் கண்கள், அதே கர்ள் ஹேர் உனக்கும் இருக்கு..” நெற்றியில் இதழ் ஒற்ற, விழி விரிய அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

இருவரும் காதலித்து ஒரு மாதம் கடந்திருந்தது. இது வரை பல தடவை அவனால் கூறப்பட்டது. அவன் அப்பாவை பற்றி பேச்செடுத்தாலே எரிந்து விழுபவன் ,அம்மா என்றால் போதும் கண்களில் கனிவுடன் அவரை பற்றியே நாள் முழுவதும் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் மறந்தும் கூட அம்மாவின் இறப்பை பற்றிய பேச்சை அவன் பேச விரும்பவில்லை. அது அவன் மனதை மிகவும் வருத்தும் ஆகையால் அவளும் அதை பற்றி ஒரு நாள் கூட கேட்க முனையவில்லை.

அந் நேரம் பாடலொன்றை ஹம் செய்து கொண்டே வீட்டுக்குள் நுழைய அவன் வந்தது கூட தெரியாமல் அக் காதல் கிளிகள் காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருக்க, அங்கு அவர்கள் இருவரது நெருக்கத்தை கண்டு வந்த வேகத்திலேயே அபளொட் டர்ன் செய்து நின்று கொண்டே,

“அடப்பாவி வயசு பையனை வச்சிக்கிட்டு என்ன காரியம் பண்ற? இதுக்கு தான் என்னை டவுன்ல இருக்க ரெஸ்டூரன்ட் போய் சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னியா?” என்ற சுகீர்த்தனின் குரலில் தூக்கி வாரிப் போட, அவனிலிருந்தும் துள்ளி பாய்ந்து விடுபட்டு ஓடி சமயலறைக்குள் புகுந்து கொள்ள, குரு அவனிடம் மாட்டிக் கொண்டான்.
“அது.. வந்து சுகீ..” என்று பின்னந்தலையை சொறிந்த வண்ணம் தரையை பார்த்து கொண்டே தடுமாற,

“ஐயோ போதும்டா சாமி.. நீ இப்படி பண்றது பார்க்க முடியலை.. சரி வா சாப்பிடலாம் மேகியை கூப்பிடு..”என்று சாப்பிட தயாராக அவளும் வந்து சேர்ந்தாள்.

இருவர் முகத்தையும் பார்க்கவே அவளுக்கு கூச்சமாக இருந்தது. இது போததென்று குரு வேறு அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். அவளுக்குத் தான் பெரும்பாடாய் ஆனது.

உணவின் போது, “ ஏன் மேகி.. நீ உன் அம்மா வயிற்றில் இருந்தப்போ உங்க அம்மா தினமும் மூனு வேளை மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இருப்பாங்களோ..?” என அவனது அரும்பெரும் சந்தேகத்தை கேட்டான் சுகீ.

அது புரியாதவள், “இல்லையே.. ஏன் அண்ணா?”

“இல்லை உன் தலை மேகி நூடுல்ஸ் மாதிரியே இருக்கே..” என்று அவளை கலாய்க்க, குருவும் அவனுடன் இனைந்து அவளை கலாய்க்க, சளைக்காமல் அவர்களை இருவருடனும் வாயாடிய வண்ணம் உண்டு முடித்தனர்.

அன்று பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக ஸ்டடி லீவு வழங்கப்பட்டது. வழக்கம் போல வெண்பாவை அழைத்துக் கொண்டு கிளம்ப அன்று அவள் எதையோ பறி கொடுத்தது போல் அமைதியாகவே வர தன் பைக்கை ஓரமாக நிறுத்தினான்.

“ஹேய் பேபி.. உனக்கு என்னாச்சு ஏன் அமைதியா இருக்க..?’ என்றவன் அவள் முகத்தை பார்க்க அவள் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருக்க பதறித் தான் போனான் குரு.

“என்னாச்சுடா ஏன் அழுற ?”
“இனி ரெண்டு வாரத்துக்கு உன்னை பாக்கவே முடியாதே குரு..” உதடுகள் பிதுங்க மீண்டும் அழுதாள்.

அவளது அழுகைக்கான காரணத்தை கேட்டதும் முன்னைய பதற்றம் மறைந்து உதடுகள் மலர்ந்தன. சிறு குழந்தையை ஒத்த அவளது செய்கை அவனை ரசிக்கவே செய்தது. தரையை பார்த்த வண்ணம் நின்றிருந்தவள் முன்னே வந்து இடும்பில் கை வைத்து குனிந்து அவள் முகம் நோக்கி,

“உன்னால் என்னை பார்க்காம இருக்க முடியாதா?’ என்று ஹஸ்கி குரலில் கேட்க, மிக அருகாமையில் அவன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு தலையுயர்த்த அவன் முகமோ அவள் முகத்திற்கு வெகு அருகில் காணப்பட விழி விரிய நின்றவளின் கையை பற்றி அவன் கை வளைவுக்குள் கொண்டு நிறுத்தி மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

அவன் அருகாமை அவளை அவஸ்த்தை கொள்ளச் செய்யும் அதே நேரம் தன்னை தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயமே மேலோங்கியது.

“குரு விடு டா.. யாராவது பார்த்துட போறாங்க..” அவன் பிடியிலிருந்து விடுபட முயல அவன் விடுவதாய் இல்லை.

“ஏன் பார்த்தா என்ன நாம லவ்வர்ஸ் தானே..? இதுல என்ன இருக்கு.. வா அப்படியே நாம காஃபி ஷாப் போகலாம்..” என்றான் சாதாரணமாக.

அவளிருந்த மனநிலையில் அவளுக்கு எங்கும் செல்லத் தோன்றவில்லை. எனவே, அவன் விழிகளில் நோக்காமல் தரையை நோக்கி குனிந்தபடியே, “இப்போ என்னால் எங்கேயும் வர முடியாது. ஏற்கனவே லேட்.. நான் வீட்டுக்கு போகனும் குரு..” என்று அவள் உறுதியான குரலில் கூற,

அதற்கு மேலும் அவளை வற்புறுத்த மனமற்று, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வண்டியில் ஏறினான். அவளின் மறுப்பு அவனில் ஓர் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

அவனுடைய முகத்தில் தெரிந்த ஒதுக்கம் வலித்தாலும், ஏனோ இதமாகவும் இருந்தது. தாயிடம் கோபப்பட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் குழந்தை போல அவன் இருந்த விதம் அவள் மனதில் இதம் பரப்பவே செய்தது.

வண்டி அவளுடைய இல்லம் நோக்கி விரைய, கண்ணாடி வழியே தன்னவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

வழமையாக அவள் இறங்கும் இடத்தில் இறங்கி, “குரூஊஊஊ.. நான் போகட்டா?”என்று இழுவையாக கேட்க, அவனோ எந்த பதிலும் கூறாமல் நேர் பாரவை பார்த்தபடியே எக்ஸலேட்டரை முறுக்க அதிலேயே அவனது கோபத்தை உணர்ந்தாள்.

அவன் முன்னே போய் நின்று , வலுக்கட்டாயமாக முகத்தை தன் பக்கம் திருப்பி, “டேய் குரு .. என்னை பாருடா.. நீ சிரிச்சா தான்டா என்னால நிம்மதியா போக முடியும்..கோபமாடா?” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள் அவள் .

இப்படி கேட்டால் அவனால் மறுப்பாக தலையசைக்க முடியுமா என்ன? ஆசைக்கமழ தன்னவளை நோக்கியவன், “உன் மேல கோபப்பட்டா அது என்னையே நான் வெறுக்குற மாதிரிமா..” என்று உதடுகள் விரிய பதிலளித்து விட்டு சிறு தலையசைப்புடன் விடைபெற்றுச் செல்ல அவளும் சந்தோஷமாகவே வீடு நோக்கி நடந்தாள்.

இரு விழிகள் குரோதத்துடன் அவர்களையே நோக்கிக் கொண்டிருந்தது. அதை அறியாமல் போனது தான் விதி செய்த சதியோ?

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here