ஒப்பீடு 1

0
175

கூடத்தின் ஓரத்தில் சாய்வு நாற்காலியில் ஓய்வாக கண்களை மூடி அமர்ந்து இருந்தேன். வயதான காலத்தில் உடலுக்கு மட்டுமே ஓய்வு கிடைக்கிறது போலும் மனதில் எண்ணங்கள் கடல் அலையாய் ஆர்பரித்துகொண்டு இருந்தது.
என் எண்ண அலைகளை கலைக்கும் விதமாக ஒரு குருவி கூடத்தின் ஓரத்தில் இருந்த பொய்கூரையின்(falseroofing) ஒரு ஓரத்தை தட்டி சோதித்து கொண்டு இருந்தது. எழுந்து விரட்ட எண்ணி எழ முயற்சித்தேன் இதனை நேரம் அமர்ந்து இருந்ததால் கால்கள் மரத்துபோய் இருந்தது. எழ முடியாமல் ச்சூ ச்சூ என்று கத்தி பார்த்தேன். குருவியின் காதுகளில் விழவில்லை போலும். வேறு வழி இல்லாததால் அதனை செய்கைகளை கவனித்துகொண்டு அப்படியே அமர்ந்து இருந்தேன். அந்த குருவி கூடு கட்டுவதற்காக அந்த இடத்தை பரிசோதித்து கொண்டு இருந்தது. குருவி தன் அலகால் ஒரு ஒரு இடமாக கொத்தி பரிசோதித்து கொண்டு இருந்தது. அதை பார்த்ததும் என் எண்ண அலைகள் மீண்டும் பின்னோக்கி பயணித்தது.
அப்போது எனக்கு 30 வயதிருக்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழிந்து இருந்தது. நிறைவான திருமண வாழ்க்கையின் பலனாக எனக்கும் கலைசெல்விக்கும் பிறந்த மூத்த மகள் அபிநயா செல்வி இளையவன் அபிமன்யு இவர்களுடன் வாழ்ந்துகொண்டு இருந்த வேலையில் ஒரு சொந்த வீட்டின் அவசியத்தை காலம் உணர்த்தியது.
இதோ இந்த குருவி போலவே நானும் எனது குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி மிக பெரும் போராட்டத்திற்கு பிறகு இதோ இப்போது இருக்கும் இந்த இடத்தை தேர்வு செய்தேன். அப்போது நிச்சயமாக நான் சிந்தித்து இருக்கவில்லை இது போன்ற ஒரு தனிமையில் இந்த வீட்டில் நான் இருக்க நேரும் என்று.
மீண்டும் டொக் டொக் என்ற சப்தம் என் எண்ண ஓட்டத்தை தடை செய்தது. அந்த குருவி நான் அமர்ந்து இருந்த கூடத்தின் ஒரு மூலையை தேர்வு செய்து இருந்தது. நான் அசையாமல் அமர்ந்து இருந்ததால் அது என்னை சட்டை செய்யாமல் என் அருகில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே பறந்து சென்றுவிட்டது. மீண்டும் தனிமை பேய் என்னை பிடிக்க ஆரம்பித்தது. அந்த நொடி நான் “இவ்வளவு நேரம் இது போன்ற உணர்வு இல்லையே இப்போது ஏன் ஒரு தனிமை உணர்வு?” என்று என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த சிறு குருவி வந்து சென்றது இத்தனை மாற்றத்தை நம் மனதிற்குள் உண்டு செய்ததா? என்ற எண்ணம் தோன்றிய உடன் இனி அந்த குருவியை விரட்ட கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது நான் அறியவில்லை அந்த குருவி எனக்கு நடத்த போகும் பாடத்தை.
மீண்டும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து எண்ண அலைகளுக்குள் நீந்த முயற்சி செய்தேன். வயதான காலத்தில் உற்ற நண்பன் என்பது நம்முடைய இளமை நினைவுகளின் தொகுப்பே. நிகழ் காலங்களை மறக்கும் மூளை கடந்த காலங்களை மட்டும் அழகிய புத்தகங்களை போல சேமித்து வைத்திருக்கும். வாழ்வின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. கடந்த கால நினைவுகள் மட்டும் இல்லையென்றால் முதுமை என்பது மிகப்பெரும் சாபமாய் அமைந்திருக்கும் அனைவருக்கும்.
நினைவலையில் நான் அபினயாவை துறத்தி செல்கின்றேன் அபி அபி என்று விழித்துக்கொண்டு. காரணம் அவள் அபிமன்யுவை அடித்து விட்டு ஓடுகிறாள். துறத்தி பிடித்ததும் அவளுடைய செல்ல சிணுங்கல் அவளை கண்டிக்க விடாமல் என் மனதை அடக்குகிறது. பெண்களுக்கு பொதுவான குணமாக பொறுமை அமைவதற்கு காரணம் அவர்கள் தந்தைகளின் மன்னிப்பாக இருக்கலாம் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. இப்பொழுதும் அவளின் சிணுங்கள் என்னை தண்டிக்க விடவில்லை. சிரித்துகொண்டே தம்பியை இனி அடிக்க கூடாது என்று மட்டும் கூறி விட்டுவிட்டேன். அபிமன்யுவின் அழுகையை சமாளிக்க அக்காவை அடித்துவிட்டேன் என்று நான் கூற.. அவன் பார்வையே பறைசாற்றுகிறது நான் கூறிய பொய்யை அவன் நம்பவில்லை என்று. உடனே கலையிடம் சென்று புகார் பத்திரம் வாசிக்கிறான் அபிமன்யு “ அம்மா, அக்கா என்னைய அடிச்சிட்டா ஆனா அதுக்கு அப்பா ஒண்ணுமே சொல்லலமா”. ஏங்க நீங்க வர வர அவளுக்கு செல்லம் அதிகம் கொடுக்குறீங்க இது நல்லதுக்கில்ல என்று என்னை சாடுகிறாள். ஆண் பிள்ளைகள் ஏன் எப்போதும் யாரையேனும் சார்ந்தே இருக்க நினைகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு அப்போது வந்தது. ஒருவேளை தாய்களின் இந்த பரிந்துறையே ஆண் பிள்ளைகளை இப்படி சார்ந்து இருக்கும்படி செய்கிறதோ? என் எண்ண அலைகளை மீண்டும் தடை செய்கிறது அந்த டொக் டொக் சப்தம்.
இப்போது அந்த குருவி வேறு ஒரு குருவியை அழைத்துவந்து தான் தேர்வு செய்த இடத்தை காட்டிகொண்டு இருக்கிறது. அதுவே இந்த சப்தம் மீண்டும் எழ காரணம். இதில் எது ஆண் குருவியாய் இருக்கும்? இடத்தை தேர்வு செய்த குருவியா இல்லையென்றால் இப்போது பரிசோதிக்கும் குருவியா? என்ற கேள்வி என்னுள். கேள்விகளும் பதில்களுமாய் நானிறுக்க அதற்குள் அந்த குருவிகள் பரிசோதனைகளை முடித்து பறந்து சென்று இருந்தது. மீண்டும் என்னுள் கேள்விகள் இந்த இடத்தை தேர்வு செய்திருக்குமா? இந்த எண்ணம் தோன்றியவுடன், தேர்வு செய்திருக்க வேண்டும் கடவுளே என்ற வேண்டுதலும் உடனே.
இந்த சிந்தனைகளோடு நேரமும் மதியம் வந்திருந்தது. உண்டுவிட்டு சிறிது உறங்கலாம் என்ற எண்ணம் எழ. சமையல்கட்டு சென்று சமையல் வேலை செய்யும் கனியின் கைவண்ணத்தில் காலையிலேயே சமைத்து வைக்கப்பட்டு இருந்த சாதத்தில் சாம்பாரை ஊற்றி உண்டு விட்டு உறங்க எத்தனித்தேன். கண்களை உறக்கம் தழுவும் நேரம் அவிரு குருவிகளும் வீட்டினுள் ஏதோ சண்டையிட்டு கொண்டு இருந்தது. அந்த சப்தத்தால் உறக்கம் வர மறுத்தாலும் ஏனோ கோவம் வரவில்லை.
இதழோரம் எழும் புன்னகையுடன் என்னுடைய என்ன அலைகள் விழித்தன. நான் வீடு கட்டும் சமயத்திலும் இதுபோல எனக்கும் கலைக்கும் வாக்குவாதங்கள் வந்தன. சிறிய வீடும் சுற்றிலும் மரங்கள் என்னுடைய தேர்வாகவும் அனைத்து வசதிகளுடன் பெரிய வீடும் சிறிது கொல்லைபுறம் அவளுடைய தேர்வாகவும் இருந்தது. எத்தனை பெரிய வாக்குவாதத்திலும் பொதுவாக பெண்கள் கணவனுக்காக சிறிது இறங்க தான் செய்கிறார்கள் ஆனால் மனம் தான் அதை ஒத்துகொள்வதில்லை. கடைசியில் என்னுடய தேர்வு அனைவரது சம்மதத்துடன் ஏற்றுகொள்ளபட்டது. இந்த குருவிகள் இப்போது அதற்காகவா சண்டையிட்டன? அதற்காக தான் என்றால் அதன் கூடிற்கும் வடிவங்கள் வேறுபடுமோ? இந்த காலத்தை போல அப்போதே கையடக்க கணினி இருந்து இருந்தால் இதை குறித்து அறிந்திருக்கலாம். இப்போது கணினி தொலைபேசி என்றாலே மனம் ஒரு வெறுமையை உணர்கிறது. என்ன ஆனாலும் சரி குருவிகளை பற்றி முழுமையாக அறிந்துவிட்டு ரசிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இனி மாலை முதல் அவைகளின் நடவடிக்கைகளை கவனித்து அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று முடிவுசெய்தேன். அந்த குருவிகளின் சப்தம்( சண்டை) இதுவரை ஓயவில்லை. ஒருவேளை பெண் குருவி கலையை போல விட்டுகொடுக்க வில்லையோ?
தூக்கம் தொலைந்தாலும் ஏனோ இன்று அசதி என்னை ஆட்கொள்ளவில்லை. வயதான காலத்தில் ஏதேனும் ஒரு துணை எத்தனை அவசியமாகிறது என்று புரிந்தது. அந்த குருவிக்கும் எனக்கும் சம்பாசனைகள் கண்டிப்பாக நடைபெற போவதில்லை என்றாலும் அவைகளின் வரவு என்னை ஏதோ ஒரு ஆர்வ கோளாரில் அடியெடுத்து வைக்க உந்துகிறது. சும்மாவே நேரம் கழிவதை விட இது கொஞ்சம் மனதிருக்கு ஆறுதலாக தோன்றியது. சிந்தனையின் பிடியில் எப்படி உறங்கினேன் என்றே தெரியாமல் உறங்கி இருந்தேன். மிக அருகில் படபடக்கும் இறகோசை கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். அந்த சிறு குருவி நான் உறங்கும் அறையின் உள்ளே தனது இறகுகளை வழக்கத்திற்கு மாறாக அடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தது. சிறிது நேரம் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எதுவாகினும் கூடத்திற்கு சென்று பாப்போம் என்றெண்ணி மின் விசிறியை அணைத்துவிட்டு கூடதிற்கு வந்து மீண்டும் அதே சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.
இப்போது அந்த குருவி தான் தேர்வு செய்த இடத்தில் அமைதியாக அமர்ந்து என்னை பார்த்துகொண்டு இருந்தது. அதன் செய்கை என்னை தேநீர் குடிக்க அழைத்து வந்தது போல தோன்றியது. காரணம் அறியாது மனம் குழம்பியது. பதட்டத்தின் விளைவாக ரத்த அழுத்தம் கூடியது போலும் அதனால் வியர்க்க ஆரம்பித்தது. வயதான காலத்தில் விரும்பாத விருந்தாளிகள் இந்த சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டுவலி இப்படி பல. அழைப்பில்லை என்றாலும் வந்தே தீருவேன் என்று வருபவர்களும் இவர்களே. வியர்வை கூடிய உடன் மின்விசிறியை போட எழுந்து சென்றேன். அப்போது மீண்டும் அந்த குருவி தனது இறகுகளை அடித்து உள்ளுக்குளே பறந்தது. அதனை நேரம் கழித்து எனக்கு குருவின் செயலுக்கு காரணம் புரிந்தது. சரி சரி நான் போடவில்லை என்று அதற்கு புரியாத மொழியில் அதனிடம் சொல்லிவிட்டு மீண்டும் நாற்காலியில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம் குருவியின் படபடப்பின் காரணம் அறிந்த நிம்மதியில் எனது இரத்த அழுத்தம் குறைந்திருந்தது போன்ற ஒரு உணர்வு. அந்த காலத்து மனிதர்களுக்கு ஏன் இந்த நோய்கள் வராதிருந்தன என்று கொஞ்சம் புரிந்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here