கந்தகமாய் அவன் காதல் டீசர்

0
1405

கந்தகமாய் அவன் காதல் : என்னுடைய 3 பாக நாவலுக்கு இந்த தலைப்பு தான் வச்சு இருக்கேன் . ஒரு குட்டி டீசர் உங்களுக்காக.

ஹீரோ ஆதிசேஷன், ஹீரோயின் அபிநய வர்ஷினி. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க… எபி எப்போ வரும்னு மட்டும் கேட்கக்கூடாது.

ஆட்டோவில் இருந்து இறங்கியதும்  பதட்டத்துடன் ஒருமுறை சுற்றிலும் பார்த்துக் கொண்டாள் அவள். தன்னை பின் தொடர்ந்து யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவள் ஆட்டோக்காரருக்கு தேவைக்கு அதிகமான பணத்தைக் கொடுத்து விட்டு முதல் வேலையாக பஸ் ஸ்டாண்டில் இருந்த அந்த பெண்கள் கழிப்பறைக்குள் புகுந்து கொண்டாள்.

நாற்றம் குடலைப் பிரட்டியது. இதற்கு முன் இது போன்ற இடங்களுக்கு எல்லாம் அவள் வந்ததே இல்லை. கைப்பையில் இருந்த அந்த உயர்ரக சென்ட் பாட்டிலை எடுத்தவள் அந்த இடத்தை சுற்றிலும் சென்ட்டை அடித்தாள்.

கழிவறையை பயன்படுத்தி விட்டு வெளியே வந்த ஒரு வயதான பெண்மணி இவளின் செய்கையைப் பார்த்து திகைத்துப் போனார்.

‘என்ன இந்த புள்ள… கார்ப்பரேஷன் கக்கூசில் வந்து சென்ட் அடிச்சுக்கிட்டு இருக்கு…’ என்று எண்ணியவர் அவளை விநோதமாக பார்த்தபடி அங்கிருந்து வெளியேறினார்.

அது எதையும் கவனிக்காமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தாள் அவள். முழுவதுமாக நாற்றம் குறையாவிட்டாலும் ஓரளவிற்கு மட்டுப்பட… அதிலேயே அமைதி அடைந்தவள், வேகமாக ஒரு பாத்ரூமினுள் புகுந்து கொண்டாள்.

உள்ளே நுழையும்போது இருபது வயது யுவதியாக நுழைந்தவள் வெளியே வரும் பொழுது ஐம்பது வயது  கிழவியாக வெளிவந்தாள். சுடிதாரில் உள்ளே போனவள் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணைப் போல கவுனும், தலையில் பாப் போன்ற தோற்றத்தை தரக்கூடிய விக்கையும் பொருத்திக் கொண்டவள் மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டாள்.

புருவ முடிகளுக்கும் சேர்த்து லேசாக வெண்மை நிறத்தை தீட்டியவள் மெதுவாக தளர்நடை போட்டு அங்கிருந்து வெளியேறி தான் போய் சேர வேண்டிய ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கண்களில் இருந்து கண்ணீர் எப்பொழுதும் விழத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வதைப் போல கண்கள் உற்பத்தியை தொடங்க, ‘அழுதால் வேஷம் கலைந்து விடுமே’ என்று எண்ணி அஞ்சியவள் இதழ் கடித்து அழுகையை தனக்குள் மென்று முழுங்கினாள்.

கழுகை கண்டு அஞ்சிய கோழிக் குஞ்சைப் போலிருந்தது அவளது நிலைமை. சொல்லி அழக் கூட அவளுக்கு இப்பொழுது யாருமில்லை. மொத்த குடும்பத்தையும் அவன் தான் பறித்துக் கொண்டானே…

‘பாவி… படுபாவி… அவன் நல்லா இருப்பானா? மனுசனா அவன்? மிருகம்… வெறி பிடிச்ச மிருகம்… மதம் கொண்ட யானையை விட மோசமானவன் அவன்.’ என்று திட்டியவள் மனதால் அவனை ஆயிரம் முறை கொன்றாள். ஆத்திரம் தீருமட்டும் அவனை தன்னுடைய கற்பனையில் குத்திக் கொன்றாள் அவள்.

இப்படி அனாதையைப் போல யாருக்கும் தெரியாமல் சொந்த ஊரை விட்டு ஓடிப் போகும் நிலைமை தனக்கு ஏற்பட்டதற்கு காரணமும் அவன் தானே…

அவன் வேறு யாருமல்ல…

ஆதி… ஆதிசேஷன்…

சரியாகத் தான் பெயர் வைத்து இருக்கிறார்கள். கோபம் வந்தால் படமெடுத்து ஆடும் ஐந்து தலைப் பாம்பைப் போன்றவன் அவன் என்பதை பிறந்த பொழுதே சரியாக கணித்து வைத்து இருந்தார்கள் போல.

நள்ளிரவை நெருங்கும் பொழுது பஸ் புறப்படத் தயாரானது. பஸ்சில் சொற்ப கூட்டமே இருந்தது. யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்ற பயம் அவளது கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. அர்த்த ராத்திரியில் தன்னந்தனியாக இப்படி ஒரு பயணத்தை அவள் மேற்கொண்டதே இல்லை.

‘இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான்?’

ஐந்து தலை நாகமாக அவள் எண்ணியவனோ அந்நேரம் ஆயிரம் தலைகளை காவு வாங்கும் அளவுக்கு வன்மத்துடன் அலைந்து கொண்டிருந்தான்.

‘எப்படி அவள் என்னை விட்டு போனாள்? யார் கொடுத்தது அந்த தைரியத்தை…. வர்ஷினி உன்கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன். உன்னோட பிணம் கூட என்னை விட்டு தனியே போகக்கூடாதுனு… அப்படி இருந்தும் நீ ஓடி இருக்கேன்னா… அந்த அளவுக்கு உனக்கு தைரியமா? அடுத்த மாசம் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு இப்படி செஞ்சுட்டியே… விட மாட்டேன்டி… விடவே மாட்டேன்…’ என்று சினந்தவன் கைக்கு அகப்பட்ட பொருளை எல்லாம் உடைத்து நொறுக்கினான்.

அவனது வாயில் இருந்து உதிரும் முத்துக்காக காத்திருந்த அவனது ஆட்களிடம் செவ்வரியோடிய விழிகளுடன் கழுத்து நரம்புகள் புடைக்க ஆணையிட்டான்.

“அவ எனக்கு உயிரோட வேணும்… கொண்டு வாங்க… அவ உயிரை எடுக்கிறதை நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவர்களின் முன் கற்றை கற்றையாக பணத்தை கொட்டினான்.

“எல்லா பணத்தையும் எடுத்துட்டு போங்க… கல்யாணத்துக்கு அவளுக்கு கிப்ட் வாங்கிக் கொடுக்கிறதுக்காக இப்போ தான் பேங்கில் இருந்து எடுத்துட்டு வந்தேன்… அவளோட கருமாதிக்கு பயன்படட்டும். மறுபடியும் சொல்றேன். அவ வாழ்ந்தாலும் சரி… செத்தாலும் சரி.. அதுக்குக் காரணம் இந்த ஆதியா மட்டும் தான் இருக்கணும்”

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here