கல்லூரி காலம்

0
299

ம்மா.. மணியாச்சு உன் பொண்ணு என்ன, ஒரலு கணக்கா ஒரே எடத்துல உக்காந்துருக்கா??

எப்போ தான் கெளம்பபோறாளாம்?? அப்பா பூஜைக்கு போயாச்சு தெரிமா?

சமையல்கட்டில் அம்மாவிடம் போட்டு கொடுத்து கொண்டிருந்தான் ஹரி..

வேகமாக வெளியில் வந்த அம்மா சுவரோடு சுவராய் ஒட்டிக்கொண்டு அமர்ந்து எதையோ தீவிரமாய் யோசித்து கொண்டிருந்த ராதிகா தலையில் கையில் வைத்திருந்த கரண்டியால் நங்கென்று ஒன்று வைத்து

“எந்த கோட்டய புடிக்க இவ்ளோ யோசனை. நேரமாகறது தெரில. மொத நாளே ஆடி அசஞ்சி போவியா? போய் கெளம்பு போ” என்று ஏவினார்.

ஆம் இன்று முதல் நாள் கல்லூரிக்கு போகிறாள் ராதிகா.

வீட்டிலிருந்து 36 km தள்ளி உள்ள கல்லூரி. ஆசைப்பட்ட படிப்பை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றாலும், படிக்க போகிறோம் என்பதே அவளுக்கு போதுமாக இருந்தது.

சந்தோஷம் ஒருபுறம் கூடவே கல்லூரி வாழ்க்கை பற்றிய பயம் ஒருபுறமென ரெண்டும் கெட்டான் நிலை தான் அவளுக்கு.

தயாராகி சாமி முன்னின்ற போது என்ன வேண்டிக்கொள்வது என்றே புரியவில்லை ராதிகாவுக்கு.

எப்பவும் போல இல்லாம இதையாவது எனக்கு நிலைக்க விடு என்று மட்டும் வேண்டிக்கொண்டு கிளம்ப வலது பக்கம் அம்மாவும், இடது பக்கம் ஹரியுமாக அட்வைஸ் மழை என்ற பெயரில் அவளின் bp யை ஏற்றிவிட்டனர். அவர்கள் மாறி மாறி வெவ்வேறு கோணங்களில் சொன்னது எல்லாமே ஒன்று தான்.

காலேஜ் ல பசங்ககூட பழகுற வேல வெச்சிகிட்ட, அப்றம் அவ்ளோதான். மொத பிரண்ட்ஸ் னு சொல்வாங்க. அப்றம் லவ் னு சொல்வாங்க. கடைசில உன் வாழ்க்கையை கெடுத்துருவாங்க. நாங்கள சப்போர்ட்டுக்கு வருவோம் னு லா நினைக்காத. அந்த ஏரியா ரொம்ப மோசம். தலையை தூக்கி யாரையும் பாக்க கூட கூடாது சொல்லிட்டேன். காதல் கீதல்னு எவனையாவது இழுத்துட்டு வந்து நின்னா அப்டியே துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு போயிட்டே இருந்துருவோம். ஜாக்கிரதை.

இதை தான் இவள் கல்லூரி அட்மிஷன் போட்ட நாளிலிருந்தும், காலை முதலும் சொல்லி சொல்லி நச்சரித்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் அளப்பறையில் கல்லூரி வாழ்க்கை என்ற ஆசை போய் ராதிகா மனதில் பயமே வந்துவிட்டது.

அந்த பயமே கல்லூரி வரை வந்து விட்ட அப்பா திரும்புகையில் அவரோடு சேர்ந்து ஓடிவிட கால்கள் பரபரத்து கண்கள் கலங்கி போனது.

நடுக்காட்டில் விட்டது போலொரு பயம் நெஞ்சை அடைக்க, மூச்சு முட்டி மயங்கி விடுவோமோ என அஞ்சி படக்கென பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

முதல் வகுப்பு முழுக்க அறிமுக படலத்தில் முடிய, இயந்திரம் போல தன்னை அறிமுக படுத்திக்கொண்டவள், பக்கத்தில் இருந்த பெண்ணிடம் கூட முகம் குடுக்க பயந்து புத்தகத்தில் புதைத்து கொண்டாள். உணவு இடைவேளைக்குள்ளாகவே அந்த வகுப்பில் இருந்த 20 பேரில் 19 பேர் தங்களுக்கென்று ஒரு நண்பர் குழு அமைத்து கொள்ள தன்னந்தனியாய் அமர்ந்து சாப்பிட்டது ராதிகா மட்டும் தான்.

“ரொம்ப திமிர் புடிச்ச புள்ள போல” என்று அவர்களுக்குள் கிசுகிசுத்தது காதில் விழுந்த போதும், கண்டுகொள்ளவில்லை அவள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் அவளுக்கு புதிதில்லையே.

இத்தனைக்கும் ராதிகா அப்டி ஒன்றும் யாரோடும் ஒட்டாத பிறவியில்லை. உண்மையில் சொல்லப்போனால் அராத்து பேர்வழி தான். பள்ளி காலங்களில் அத்தனை பேரையும் கதறடிப்பாள் தன் குறும்புகளால். எந்த நேரமும் சிரிப்பும், கூத்தும் கும்மாளமும் தான் அவள் இயல்பு. தன்னை சுற்றி உள்ளவர்களை எப்போதும் இன்முகமாகவே வைத்திருப்பது அவளுக்கு மிக பிடித்த வேலை.

மாலை கல்லூரி முடிந்ததும் தாமாகவே வந்துவிடும்படி சொல்லி சென்றிருந்தார் அவள் அப்பா. அதற்காக கல்லூரி பேருந்து நிலையம் வந்து நின்றவளுக்குள் ஏக்கம் மிகுந்தே இருந்தது. குட்டி குட்டி நண்பர்கள் குழாம். அதில் சிரிப்பும் கலகலப்புமாக இருப்பவர்களை பார்த்து.

அப்படி சுற்றி பார்த்துக்கொண்டு இருந்த போது தான் கவனித்தாள் பத்தடி தூரத்தில் ஒருவன் அவளையே வெறிக்க வெறிக்க பார்ப்பதை.

அடுத்தநொடி பயம் கவ்விக்கொண்டது ராதிகாவுக்கு. காலையில் அம்மாவும் அண்ணனும் சொன்னவையெலாம் மனதுக்குள் வட்டம்போட, குப்பென வியர்க்க ஆரம்பித்தது.

மறுமுறை திரும்பி பார்க்க அவன் 8 அடியில் நின்றான். அடுத்த முறை 4 அடியென அருகில் அருகில் வர, அவன் தள்ளாட்டம் சொன்னது அவன் நிலையில் இல்லையென்பதை.

ராதிகா இதயம் தாறுமாறாக தடதடக்க 2 அடி தள்ளி நின்று கொண்டாள். சோதனையாக பேருந்தும் வரவில்லை. ராதிகாவுக்கு ஏதும் ரசாபாசம் ஆகாமல் தப்பிவிட்டால் போதுமென்று தோன்றியது.

ஏதேனும் பிரச்னையாகி அது வீட்டை எட்டிவிட்டால் அவளது கல்லூரியின் முதல்நாளே கடைசி நாளாகிவிடும் அபாயம் தான் அவளில் அதிகம் படபடக்க வைத்தது.

3 ஆம் முறை இவள் தள்ளி போகையில் மேலும் சோதனையாக…

யே, ராதி.. ஏய் உன்னைத்தான். 2 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துட்றேன்னு சொல்லிட்டு தானே போனேன். அதுக்குள்ள ஏன் வந்த. அதும் தப்பான பஸ் ஸ்டாப்ல நிக்கிற, லூசு. நம்ம பஸ் எதிர்த்த பக்கம்ல வரும் வா…..
என இடைவெளியின்றி பேசியவன் சற்றும் எதிர்பாராமல் ராதிகாவின் கையை பிடித்து இழுக்க மொத்தமாக அரண்டு போனவள் தன் கையை உருவி கொள்ள பார்க்க அவன் கண்களால் ஏதோ சேதி சொன்னான். புரியாத போதும் எதிர்வினையாற்றாமல் அடங்கி போனாள் ராதிகா.

கைபிடித்து இழுத்து போனவன் எதிர்பக்கம் போனதும் தானாக கைபிடித்தது போலவே விட்டுவிட்டான்..

சாரி…. சாரிங்க…. ராதிகா ல???? அதானே உங்க பேரு. கிளாஸ்ல சொன்ன ஞாபகம். நா உங்களையும் அவனையும் கவனிச்சிட்டு தான் இருந்தேன். அவன்ட போய் ஏன்டா கிட்ட கிட்ட போற னு கேட்ட அது ரகலையாகிரும் னு தான் உங்கள தெரிஞ்ச ஆளு போல காட்டிக்க கைய புடிக்க வேண்டிதாகிருச்சு. சாரி… என்றான் உண்மையாகவே வருந்தி….

ஐயோ பரவால்ல.. சமயத்துல ஹெல்ப் பண்ணீங்க அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. இங்க வேற பஸ் ஸ்டாப் எங்க இருக்கு தெரியுமா??

எதுக்கு??

இல்லை மெயின் பஸ் ஸ்டாண்ட் போக பஸ்ஸு அந்த ஸ்டாப்ல தான் வரும் னு அப்பா சொன்னாரு.. அதான்..

மெயின் பஸ் ஸ்டாண்ட் தானே. இங்கயும் நிக்குமே. ஊருக்குலேந்து வர பஸ் ல ஏற தான் அங்க நிக்கணும். இங்க எல்லா பஸ்ஸும் நிக்கும்… கவலை படாதீங்க என்றான்…

இருவருக்கும் இடையில் சிறிது நேரம் அமைதியே அளவளாவியது. என்ன பேச?? இருவருக்குமே தெரியவில்லை.
அவனே தொடங்கினான்..

என்னங்க இப்டி பயப்படறீங்க. கொஞ்சம் மொறச்சு பாத்தாலே அவன் கிட்ட வந்துருக்க மாட்டான் தெரியுமா??

இல்ல, புது இடம். அதோட இங்க உள்ளவங்களாம் ஒரு மாதிரி. ஏதும் பேச்சு வெச்சிக்க கூடாதுனு… என்று அவள் இழுக்கவும் அவன் முகம் சுண்டி போக,

ஐயோ உங்கள சொல்ல வரலைங்க. காலைல கிளம்பும்போது வீட்ல சொல்லி விட்டாங்க.. என்றவளை மலர்ந்த முகத்தோடு பார்த்தவன்

அப்டிலா இல்லைங்க.. உங்களுக்கு சங்கடம்னா பிள்ளைங்களோட வாங்க. பிரச்சனை இருக்காது.

என்று சொன்னதோடு இல்லாமல் நின்று ராதிகாவை பஸ் ஏற்றி விட்டுவிட்டு, பழைய ஸ்டாப்பில் நின்ற ஊருக்குள் போகும் பஸ்ஸில் ஓடி போய் ஏறிக்கொண்டான்.

அவன் செந்தில்…

ராதிகாவுக்கு கல்லூரியில் கிடைத்த முதல் நண்பனாகி போனவன்.

பசங்க எல்லாருமே ஒரே மாதிரி தான் என்ற ராதிகாவின் எண்ணத்தில் மாற்றத்திற்கான முதல் விதை விதைத்தவன்.

கல்லூரி சேர்ந்து 5 மாதங்கள் ஓடிவிட, ராதிகா மனதில் இருந்த பயம் ஓரளவு குறைந்தே இருந்தது.
ஆனாலும், பசங்களோடு பழகுவதில் இருந்த தயக்கம் மிச்சமிருந்தது.

நாள்போக்கில் ராதிகாவுக்கு புவனா, சந்திரலேகா, கஸ்தூரி, ஷாலு, நந்தினி, தமயந்தி என்று தோழிகள் கிடைத்தது போலவே செந்தில் மூலமாக தினேஷ், கார்த்திக், தானேஸ்வரன், பிரசாத், சரண் என்று தோழர்களும் கிடைத்தார்கள்.

அப்படி கிடைத்த ஒருவன் தான் சிலம்பு எனும் சிலம்பரசன்.

ராதிகா போலவே அராத்து ஜாதி தான் அவனும். அதனாலேயே சீக்கிரம் நண்பர்களாகி விட்டார்கள் இருவரும்.

ராதிகா படிப்பது காமமெர்ஸ், சிலம்பு அரசியல் மேலாண்மை. இருவரும் வெல்வேறு வகுப்பு என்றாலும் முதல் வருடம் எல்லாருக்கும் ஒரே பாடம் தான்.

நல்லவிதமாக போய் கொண்டிருந்த ராதிகா கல்லூரி வாழ்க்கையில் மீண்டும் வந்து விழுந்தது ஒரு தடைக்கல் சிலம்புவின் நண்பன் ரகு மூலமாக.

ராதிகாவுக்கு சிலம்புவுக்கும் அடிக்கடி வாய் தகராறு வரும். அது சில நேரம் உண்மையான வாக்குவாதமாக இருக்கும் பல நேரம் விளையாட்டாக இருக்கும்.

அப்டி ஒரு முறை விளையாட்டாய் ஆரம்பித்த வாக்குவாதம் சூடானவாதமாகி,
இனி என்னோட நீ பேசாதே உன்னோட நான் பேசமாட்டேன் என்று முறுக்கிக்கொண்டு வந்து விட்டாள் ராதிகா. 5 நாட்கள் ஒருவர் முகத்தை ஒருவர்
அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல உக்ர பார்வை பார்த்துக்கொண்டே அலைய, 6 ஆம் நாள் ராதிகா வெளியூர் கல்யாணமென்று விடுப்பில் போனவள், 4 நாட்கள் கழித்தே வந்தாள்.

இதற்கிடையில் தன் தவறை உணர்ந்து விட்ட சிலம்பு ராதிகாவோடு சமரசம் செய்து கொள்ள தவித்த சமயம் ராதிகா இல்லாமல் போக சோர்ந்து போனான். கல்யாணம் முடிந்து தன் நண்பர்களுக்கு கொடுக்க பலகாரங்களோடு அன்று கல்லூரி வந்தாள்.

பலகாரங்களை கொடுத்து சிலம்புவோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தனியாக பார்சல் கொண்டு வர அவளை வாசலிலேயே மடக்கிய சிலம்புவின் நண்பர் கூட்டம். இவர்கள் நட்பை தவறாக புரிந்து கொண்டதோடு அல்லாமல், நண்பனுக்கு உதவி செய்கிறோமென்ற போர்வையில் ராதிகாவை சமாதான படுத்த, ஏக்க சக்க பிட்டுகள் போட உக்ர காளியாகிவிட்டால் ராதிகா.

அம்மாவும் அண்ணனும் சொன்னது போல நண்பனானவன் காதல் என்று மாற கூடுமென அதுவும் சிலம்பு மாற கூடுமென கற்பனை கூட செய்திராத ராதிகாவுக்கு அது உண்மை தானாவென கேட்பதற்காக கூட சிலம்புவிடம் பேசக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

ஆண் பெண் நண்பர்களாக இருக்க முடியாது என்று எப்போதோ ஒருவன் அடித்து சொன்னது அவள் காதுகளில் ஓங்கி ஓங்கி ஒலிக்க, தோற்றுவிட்டது போல உணர்ந்தாள்.

பசங்களோட பழகிட்டு வந்து நின்ன ??? என்று அண்ணன் சொன்னது வேறு மண்டையில் சங்கொலியாய் அதிர கல்லூரிக்கு வந்த புதிதில் இருந்தது போல யாரோடும் இனி பழக கூடாது என்று முடிவெடுத்து, பெண் பிள்ளைகளை கூட தவிர்த்து கொண்டாள். 3 நாட்கள் இப்படி போக, மன அழுத்தம் தாளாமல், இல்லாத தலைவலியும், ஜுரத்தையும் காரணம் காட்டி கல்லூரிக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே முடங்கி போனாள்.

ஒரு வாரம் இப்படியே போக அடுத்த குண்டாக வந்து விழுந்தது இவளை கல்லூரி விட்டு நிறுத்தி விடலாம் என்ற வீட்டில் நடந்த வாதம்.

காலேஜ் போக புடிக்காம, படிப்பு வராம தானே லீவ் போட்டுட்டு வீட்ல உக்காந்து கெடக்கா.. இதுக்கு எதுக்கு வீணா பணத்த கொண்டு கொட்டணும். பேசாம வீட்ல இருந்து வேலைகளை கத்துக்கிட்டு போற வீட்ல ஒழுங்கா பொழப்பு ஒட்டு போதும் என்று என்றுவிட மறுநாளே கல்லூரி வாசல் வந்துநின்றாள் ராதிகா.

கால்கள் உள்ளே போக தயங்க, ஏன் பேசமாட்ர என்று கேட்டால் என்ன சொல்வது என்ற குழப்பம் வண்டாய் குடைய வகுப்புக்கு போகாமல் கல்லூரி NCC கிளாஸ் ஆடிட்டோரியம் பக்கமாக அமர்ந்திருக்க, அவள் செல் சிணுங்கியது.

திரையில் தெரிந்தது சிலம்பு நம்பர். எடுக்கவா வேண்டாமா என்ற குழப்பத்தில் ராதி இருக்க, ஒருமுறை அடித்து ஓய்ந்து, மறுமுறை பாட ஆரம்பித்திருந்தது.

ரகுவும் அவன் நண்பர்களும் பேசியது எல்லாம் காதில் ஒலிக்க சிலிர்த்தெழுந்த கோபத்தில்
இந்த முறை திடமாக அழைப்பை துண்டித்தாள், மீண்டும் அவன் அழைத்தான். இவள் மறுத்தாள். இப்படியே 4 முறை நடக்க 5ஆவது அழைப்போடு சேர்த்து அழைத்தவனும் எதிரில் வந்து நிற்க தடுமாறி போனாள் ராதிகா..

என்ன பிரச்னை உனக்கு???

…..

உன்ன தான் கேக்கறேன். காதுல விழுதா இல்லையா???

…..

அவள் மௌனத்தை பழைய சண்டையின் விளைவாக வந்த கோபமென்று நினைத்தான் சிலம்பு.

சாரி ராதி… ப்ளீஸ்

இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்???

உங்கிட்ட பேச விரும்பல னு அர்த்தம்.. என்றாள் சில நொடி தயக்கத்தின் பின்.

இதுக்கு மட்டும் வாய் ஒடனே திறக்கும் என்று வாய்க்குள்ளே முனகி கொண்டான் சிலம்பு.

ஏன்??? அம்பாக சீறி வந்தது கேள்வி…

ஏன்னு உனக்கு தெரியத்துல??? எதிர்கேள்வி பாய்ந்தது அதே வேகத்தில்

அதுக்கு தான் சாரி சொல்லிட்டேன் ல. லேட்டா சொல்றேன்னு கோவப்படாத. நான் அப்போவே சொல்லணும் னு நெனச்சேன் நீ தான் மொத கல்யாணம் னு லீவு போட்டு போன. அப்றம் ஒடம்பு சரில னு லீவு போட்ட.

உண்மைல நான் தான் உங்கிட்ட கோவப்படணும். கல்யாண பலகாரம் னு எல்லாருக்கும் எடுத்துட்டு வந்து குடுத்தியே, எனக்கு குடுத்தியா??? அப்டி என்ன ராதி தப்பு பண்ணினேன்?? சொல்லு???

மீண்டும் நீண்ட மௌனம் ராதிகாவிடம்..

பேசு ராதி.. இப்டி இருக்காத. பாக்க கஷ்டமா இருக்கு. என்கிட்ட நீ பேசாம போறது எனக்கு என்னவோ போல இருக்கு. கெஞ்சுறேன் ல, ப்ளீஸ் ராதி, பேசு..

நம்ம காலேஜ் ல வேற எந்த பொண்ணுக்கிட்டயாவது நான் இப்டி கெஞ்சி பாத்திருக்கியா??? என்றது தான் தாமதம் புயலாய் எழுந்து நின்று

அதையே தாண்டா நானும் கேக்கறேன். எத்தனை பொண்ணுங்க இருக்காங்க, ஏன் என்கிட்ட மட்டும்?? என்றாள் ஆவேசமாக.

உதடு துடிக்க, தாடைகள் இறுக, கண்கள் கலங்க இத்தனை கோவம், ஆவேசம் கொண்டு இதுவரை ராதிகாவை இப்டி பார்த்தே இராதவன் சற்று குழம்பி தான் போனான்.

அவன் பார்த்த ராதிகாவுக்கு கோவமென்றால் என்னவென்றே தெரியாது. எந்த நேரமும் சிரிக்கும் உதடுகளும், கண்களும் அவள் சிறப்பு. தவறு செய்தால் கூட அதை எடுத்து சொல்லி புரிய வைப்பவள். குறும்பு இருக்கும் அதே அளவு, பொறுப்பும், கட்டுப்படும் உள்ளவள். என்ன தான் சிரித்து பேசினாலும், எல்லை மீறலை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டாள். அதையும் கூட நாசூக்காக உணர்த்துபவள். அப்படி பட்டவளிடம் இந்த ஆவேசமும் நிதானமின்மையும் முற்றிலும் புதிது.

“கேக்கறேன் ல” என்ற அவள் குரலில் யோசனையிலிருந்து விடுபட்டவன்

ஏன்னா நீ என் பிரண்டு டி…. என்றான் இயல்பாக..

பிரண்ட் மட்டும் தானா?? என்ற சந்தேக கேள்வி ராதிகா கேட்க

பின்ன வேறென்ன? என்றான் சர்வ சாதாரணமாக.

அவன் பதிலில் குழம்பி போவது ராதிகா முறையானது இப்போது.

அவள் நெற்றி சுருங்க, அவனை கலக்கமான பார்வை பார்ப்பதை கொண்டு ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவன் அவளை உட்கார வைத்து விசாரிக்க தொடங்கினான்.

என்ன நடந்துச்சு, யாரு என்ன சொன்னா? என்று அவன் நேரடியாக கேட்க, அதற்கு மேல் பொறுக்காமல் ரகு தன்னிடம் சொன்னதையெல்லாம் கொட்டி தீர்த்துவிட்டாள்.

பொறுமையாக கேட்டுக்கொண்டவன் கேட்ட முதல் கேள்வி

“சரி சொல்லு, எனக்கு ஏன் பலகாரம் குடுக்கல??? ” என்பதே…

இதை சற்றும் எதிர்பார்க்காததால் கொதித்து போன ராதிகா பையிலிருந்து ஒரு நொறுங்கி போன பலகார கவரை எடுத்து அவன் மீது விசிறியடித்து

தீனி பண்டாரம், இதுக்கு தானே அலையிற இந்தா தின்னு தொலை.

நான் என்ன பேசிட்டு இருக்கேன். அதைவிட்டுட்டு….

சரியான சோத்து மாடு சோத்து மாடு என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்தி கொண்டிருந்தாள்.

அவனோ எதையுமே காதில் வாங்காமல் அவள் தூக்கி அடித்ததை லாவகமாக கேட்ச் பிடித்ததோடு அவள் கோபத்தை ரசித்து கொண்டிருந்தான்.

உன்கிட்ட நான் அப்டியா பழகுனேன். எப்டி டா என்ன போய்??? என்று அவள் பொறுமி கொண்டிருக்க அவனோ சாவகாசமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கவரில் உள்ளதை ஆராய்ந்து கொண்டே….

“இதையே நானும் உங்கிட்ட கேக்கலாம் ல ராதி.. நான் உங்கிட்ட எப்போவாச்சும் அப்டி பழகிற்கேனா? எவனோ என்னவோ சொன்னான்னு என்ன எப்டி நீ சந்தேக பட்ட?? என்று நிறுத்தி நிதானகமாக கேட்க… “

சில்லென்ற நீரை முகத்தில் வீசியடித்தது போல உறைந்து போனாள் ராதிகா..

மனச்சாட்சியோ இத ஏண்டி யோசிக்காம விட்ட என்று திடீர் அப்ரூவராகிவிட, குற்ற உணர்வில் குறுகி விட்டாள் பெண்.

சாதாரணமாக எழுந்து அவளருகில் வந்தவன், அவள் வெளிறி போய் நிற்பது பொறுக்காமல்

ஏண்டி 10 நாள் கழிச்சு இந்த நாறிப்போனத குடுத்து என்ன கொல்ல பாக்குறியே நான் வீட்டுக்கு ஒரே பையன் தெரிமா? என்று கேட்க கட்டுப்படுத்தியும் அடங்காமல் தானாக சிரித்துவிட்டாள் ராதிகா….

அவன் முதுகில் ஓர் மொத்துவைத்து, பக்கி, என்ன நேரத்துல இது என்னத்த பேசுது பாரு… என்றாள்.

அவளோடு சேர்ந்து சிரித்து கொண்டிருந்த சிலம்பு சீரியசான பாவத்தோடு,

ராதி நான் மஹாத்மா லா கெடயாது. ஒரு உண்மை சொன்னா அடிக்க வருவ தெரிமா? என்று அவன் நிறுத்த

என்ன என்ற ஆவலோடு அவள் பார்க்க…

மொத மொத உன் அப்பாவோட காலேஜ் வந்த அன்னிக்கே உன்ன நான் பாத்தேன். உன் அப்பா கிளம்பும்போது அந்த செல பக்கத்துல நின்னுட்டு உன்னைத்தான் பாத்துட்டு இருந்தேன்.
உன் ரியாக்ஷன் அப்டியே ஃபஸ்ட் டே ஸ்கூலுக்கு வரும் சின்ன பிள்ளை போல இருந்துச்சு.

அவ்ளோ க்யூட். அவ்ளோ ச்சாம். எனக்கு அப்போவே உன்ன ரொம்ப புடிச்சிட்டு என்று சொல்ல, அவள் முகபாவனை மாற தொடங்குவதை பார்த்து.

ஹே.. அவசர கொடுக்கே, இரு சொல்லி முடிச்சிடறேன். அப்புறமா அந்த முட்ட கண்ண உருட்டி முழிக்கலாம்.

மொத பார்வைல நீ ஒரு க்யூட் பேபி போல தெரிஞ்ச. சோ ரொம்ப பிடிச்சிட்டு னு சொன்னேன் அவ்ளோ தான்.

பொண்ணுங்கள்ள நெறைய விதம் இருக்கு ராதி, பாத்ததும் லவ் பண்ணனும் னு தோணுற ரகம், நல்லா பேசும் நல்லா பொழுது போக்கலாம் னு நெனைக்க வெக்கிற ரகம், இது டேஞ்சர் பார்ட்டி டா சாமி னு ஒதுங்கி ஒட வெக்கிற ரகம், நல்ல பொண்ணு தான், சும்மா பழகலாம் னு தோணுற ரகம், இவ நமக்கு நல்ல பிரெண்டா இருப்பா னு தோணுற ரகம். நீ கடைசி ரகம் னு உன் கூட பழகுனா கொஞ்ச நாள்லயே புரிஞ்சிக்கிட்டேன்.

நான் பேசாததால நீ பைத்தியம் புடிக்கிறபோல இருக்கு னு சொன்னதா ரகு சொன்னானே??? என்று அவள் கேட்க

ஹே மெண்டலு, லவ் பண்ற பொண்ணு பேசலான தான் பைத்தியம் புடிக்கும் னு எவன் சொன்னான். இது வர எனக்கு ஒரு பொண்ணு கிட்ட இவ நல்ல பிரண்ட் டா னு தோணுனதே இல்லை. நீ தான் மொத ஆளு.

நீ எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி குடுப்ப, புரியவெப்ப, நாம வெட்டியா பேசுனாலும் ஏதாச்சும் ஒரு சின்ன விஷயம் எனக்கு அதுல புதுசா இருக்கும். உங்கிட்ட போய் அனாவசியமா சண்டைபோட்டுடனே னு கஷ்டமா இருந்துச்சு. அத தான் அந்த நாயி வேற மாதிரி புரிஞ்சிட்டு உங்கிட்ட வேற வந்து ஒளறிட்டேன் என்று முடிக்க

“அப்போ ரகு சொன்ன போலலா இல்லை தானே”
என்றும் இன்னும் துளி மிச்சமான சந்தேகத்தோடே அவள் இழுக்க….

கடுப்பாகி போனவன்… போடி.. நீயும் உன் பலகாரமும் என்று கவரை அவள் கையிலேயே திணித்து விட்டு போக..

ஐயோ சாரிடா, சும்மா தான் டா கேட்டேன் டேய் சிம்பு நில்லு டா, டேய் லூசு பக்கி, எரும மாடே சாரி டா…. என்று கெஞ்சிக்கொண்டே பின்னால் போக…
அவனோ வேண்டுமென்றே நிற்காமல் போவதை கண்டு

டேய்…. டேய் சிப்ஸ்சு… என்று காலேஜே அதிர அவள் கத்த,
பிரேக் அடித்தது போல நின்று திரும்பியவன்

அடிங்….. என்ன அப்டி கூப்பிடாத னு எத்தனை தடவ டி சொல்றது னு என்று கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அடிக்க போக, அந்த NCC ஆடிட்டோரியம் முழுக்க சுற்றி சுற்றி ஓடி அவனுக்கு போக்கு காட்ட ஆரம்பித்தாள்.

இது போல இன்னும் பல பல சம்பவங்கள், அத்தனையிலும் ராதிகா அவள் நண்பர்களின் வெவ்வேறு பரிமாணங்களை பார்த்தாள்.

ஆண்கள் எப்போதுமே ஒரு பெண் சிரித்து 2 வார்த்தை பேசினால் காதல், கத்தரிக்காய் என்று தான் முடிவெடுப்பார்கள் அல்லது கெட்ட எண்ணங்களோடு பழகுதல், அத்துமீற முயற்சிப்பர் என்று அவளுக்கு ஏற்றிவிடப்பட்ட போதனைகளிலேயே உழன்று ஒதுங்கியே வாழ்ந்தவள் உலகில் நல்ல மனிதர்கள் உள்ளதையும், மனிதர்களோடு பழகும் விதத்தையும் புரிந்து கொண்டாள்.

தோழிகளை போல தோழர்களும் நட்பு பாராட்டுவதில் ஆக சிறந்தவர்கள் என்பதையும். கண்ணாடி தன் முன் காட்டப்படும் பிம்பத்தை எதிரொலிப்பது போலவே தான் சில ஆண்கள் மனதும் என்றும்,
கொடுப்பவே திரும்ப கிடைக்கிறது என்றும் புரிந்து கொண்டாள்.

3 வருடம் ஓடி போனதே தெரியாமல், காற்றிலிட்ட கற்பூரமாய் கரைய, கடைசி நாளில் பிரிவை எண்ணி அழுததென்னவோ ராதிகாவின் தோழிகளும், தோழர்களும் தான்.

ராதிகாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. தன் வாழ்வில் எதிர்பார்த்திரா நாட்கள், நண்பர்கள்.

அவை தந்ததென்னவோ மறக்க முடியா பசுமையான இனிய நினைவுகள்.

மனதில் வரைந்த வண்ண ஓவியமாக உள்ள தன் நண்பர்களின் நினைவுகளை, கண்ணீர் சிந்தி வண்ணமிழக்க வைக்க விரும்பவில்லை அவள்.. ராதிகாவை பொறுத்தவரை அது அவள் வாழ்வின் மாறாத, மறையாத ஒரு சுக கனவு…

கல்லூரி என்ற மரத்தில் மட்டுமே ஒரே கிளையில் பலவகை பூக்கள் பூக்கும்.

வாழ்வின் லட்சியங்களை அடையும் பயணத்தின் அத்தனை வழிகளும் கல்லூரி சாலைகளிலிருந்து தான் தொடங்குகிறது.

எத்தனை முறை நினைத்தாலும் அத்தனை முறையும் மனதில் ஒரு சுகந்தம் வீச வைப்பது தான் கல்லூரி காலம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here