களவு —-சிறுகதை

0
136

[இந்த கதையை படிக்க ஆரம்பிக்குறது முன்னாடி ஒரு சின்ன தகவல் .இது உண்மை சம்பவம் அல்ல.அதனால் யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல.சரிங்க இனி கதைக்குள் போகலாம் ]

அன்று ஒரு நாள் மழை தனது வேகம் குறைக்காமல் பெய்து வீதிகளில் வெள்ளமாய் உருவாகி வழிந்த தருணத்தில் மலையடிவார குடிசைவீட்டுக்குள் இருந்து மாரி தலையில் சாக்குபையுடன் வெளியே வந்து பக்கத்து குடிசையில் வந்து நிற்க அங்கிருந்து மாடசாமியும் தங்கராசுவும் வெளிய வந்தவுடன் மூவரும் நடந்து ஊருக்கு வெளியே இருள் சூழ காத்திருந்தனர் .மழை இருளை விரைவில் கொண்டு வர மூவரும் மூன்று திசையில் பிரிந்து சென்று ஊரு நடுவில் இருந்த அந்த காரை வீட்டின் பின்பு கூடினார்கள்.மாரி கைகளால் மேல் நோக்கி சைகை காட்ட மாடசாமி மின்னல் ஒளியில் வீட்டிற்கு மேல ஏறி நிற்க அடுத்து மாரி ஏறி கொண்டான் .அங்கிருந்த மரத்திற்கு பின்பு தங்கராசு மறைந்து கொள்ள உள்ளே சென்றவர்கள் மழை ஓய்வதற்குள் திரும்பினார்கள்.நள்ளிரவு வெட்டுண்ட கருப்பர் கோயிலுக்குள் உக்காந்தனர்.மாரி தனது பையில் கிடந்த பணம்,நகைகளை கொட்டினான்.தங்கராசு முகம் மலர்ந்து போனது .நான்கு பங்குகளாக பிரித்து ஒற்றை பங்கை கோயில் உண்டியலில் போட்டுவிட்டு மூவரும் கிளம்பி போனார்கள் .

மறுநாள் காலை செட்டியாரம்மா ஒப்பாரி கேட்டு ஊரே கூடியது .வீட்டில் இருந்த மரப்பெட்டி மட்டும் திறந்துகிடந்தது.செட்டியாரம்மா அலறியபடி”வீட்டுக்குள்ள இருக்கையிலே களவாண்டு போய்ட்டானுகளே.ஒத்த குண்டு மணியும் விடலையே என் சாமி.நீ தான் கேள்வி கேட்கனும் .கருப்பர் முன்னாடி காசு வெட்டி போட போறேன் “என்று கொந்தளித்தாள்.யாரும் இரக்கப்படவில்லை காரணம் ஊருக்குள் அதிக வட்டிக்கு விட்டு சேர்த்த பணம் அது.செட்டியாரம்மா பணம் கொடுத்த சனியன் தானாய் இழுத்த மாதிரின்னு சொல்வாங்க .கூட்டம் கலைந்து தங்களது தினசரி பணிக்கு திரும்பி போனது .

மாரியும் அவன் சகாக்களும் டவுனுக்கு போய் தங்களது வழக்கமான பரந்தாமன் கடையில் நகைகளை விற்று காசாக்கி கொண்டு நேராக முனியன் கடையில் கறி சோறு முடிச்சு அன்னக்கிளி படத்த பத்தாவது தடவையா ரசிச்சு பாத்துட்டு குடிசைக்கு திரும்பினார்கள் .வரும்போது மாரி அம்மாவுக்கு சாப்பாட்டு பொட்டலத்துடன் வந்தான் .அவன் அம்மா மங்களம் அதை சாப்புட்டுகிட்டே”அய்யா இது பரம்பரை தொழில் தான் எனக்கும் தெரியும் .உங்க அப்பன் காலத்துலயே பாதி சனம் தொழில் வேணாம்னு மேக்கால போயிடுச்சு.மிஞ்சி கெடக்குறது இந்த பக்கம் பத்தோ பதினோன்னோ தெரியல .போலிஸ் தொல்லை அதிகமாயிடுச்சு.நமக்கு இது வேண்டாம்யா.நம்மளும் முகம் தெரியா ஊர பக்கம் போயிரலாம்ப்பா”என்றதும் மாரி அம்மாட்ட வந்து “கண்டிப்பா போயிரலாம்.ஆனா போறதுக்கு முன்னாடி வீரலூர்ல களவு செஞ்சே ஆகணும் .என் தாத்தா,என் அப்பன்னு இரண்டு பேர கழுத்த அறுத்து விட்ருகாய்ங்க.அந்த ஊர்ல களவு போனதில்ல.களவானிகளும் வீடு திரும்பறது இல்ல .அங்க தான் களவாங்கனும் கடைசியா.நம்ம வம்சத்துல கடைசி களவாணி நானா தான் இருக்கணும் “என்றதும் மங்களம் அமைதியானாள் .

மறுநாள் போலிஸ் வந்து விசாரித்தும் மாரி திருடியதற்கான எந்த ஆதாரமும் இன்றி திரும்பி போனார்கள் .அப்போ மாடசாமி “மாப்ள போதும்டா இந்த தொழில்லு.முனியன் கூட்டமும் கருப்பர் முன்னாடி நிறை குடத்துல சத்தியம் பண்ணிட்டு ஊர விட்டு கிளம்பிருச்சு.இனி எங்க எவன் களவாண்டாலும் நம்மகிட்ட தான் வருவாய்ங்க.வயசு முப்பத தாண்டுது எந்த பயலும் பொண்ணு தரல.நாமளும் விட்றலாம்”என்றதும் தங்கராசுவும் தலையசைத்து ஆமோதித்தான்.மாரி “சரி மாமா கடைசியா ஒரே களவு.பெருசா பண்ணுவோம்.களவே போகாத ஊர்ன்னு காசு கொட்டிகிடக்கு வீரலூர்ல அங்க தான் களவாங்கறோம்”என்றதும் தங்கராசு ஆவேசமாய் “சாகடிக்க பாக்கியோ பரதேசி.முண்டம் கழண்டு போயிரும் .நான் வரல”என்று கிளம்ப மாடசாமியும் பின்னாடி கிளம்பினான் .இரண்டு நாள் கழிச்சு திரும்ப வந்த தங்கராசு “நீ எவ்ளோவோ எங்களுக்கு செஞ்சிருக்க.தங்கச்சிக்கு சீர் செய்யவும் பணம் கொடுத்து காப்பாத்தி இருக்க.சொல்லு என்ன திட்டம் வச்சிருக்க”என்றதும் சிரிச்சுகிட்டே வந்த மாரி”முதல்ல அந்த ஊருக்குள்ள போகணும் .ஊரோட சந்து பொந்து பூராவும் அலசணும்.ஒத்த வீட்ட குறிவச்சு நோட்டம் போட்டு தெளிவா இறங்கனும்.எடுக்குற பணத்த வச்சு எங்கயாவது போய் நிலத்த வாங்கி உழுது பொழச்சுக்கலாம்.இன்னும் பத்து நாள்ல திருவிழா சாட்ட போறாங்க .அப்ப தான் போகணும் .மூணு பேரும் தனித்தனியா திருவிழா கூட்டத்துல இளநி கடை,பலூன் விக்குறவன்,முட்டாய் விக்குறவன்னு சந்தேகம் வராம புகுந்திரணும்”என்றதும் மூவரும் கிளம்பி பிரிந்தனர்.

வீரலூர் திருவிழா ஊர் முழுக்க சாட்டி கோலகலமாய் ஆரம்பம் ஆனது .மாரியின் கூட்டமும் கோயில் முன்பு கடை போட இடம் பிடித்தனர்.ஊர்ல முழுக்க மைக் செட் சத்தம் காதை பிளந்தது .எல்லா வீடுகளும் சுண்ணாம்பு பூச்சில் மிளிர்ந்தது.எல்லா வீட்டிலும் நேந்துவிட்ட ஆடு,கோழிகள் தங்களது வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தன .அன்று ஒரு நாள் இரவு தங்கராசு வந்து”மச்சான் ஊர் பண்ணாடி வீட்ல யாரும் இல்ல.மாடு கட்டி அவசரமா குடும்பமா போறத பாத்தேன் .காவக்காரன் ஊர் அடங்குனதும் சோறு திங்க போனா வர ஒரு மணி நேரம் ஆகும்.இன்னைக்கு இறங்குனா செம வேட்டை தான்”என்றதும் மாரியும் ,மாடசாமியும் சம்மதித்தார்கள்.

ஊர் அடங்குனதும் காவக்காரன் நடந்து வெளியேறியதும் மாரியும் தங்கராசுவும் வீட்டுக்குள்ள இறங்கி பெட்டியை தேடிட்டு இருக்கும் போது மாரிக்கு அந்த வாசனை தனியா தெரிஞ்சது.சட்டுனு திரும்பி பாத்தவன் தலையில் ஒரு கட்டை பலமாய் வந்து விழ முன்னாடி நின்ன உருவத்த குரல்வளைய புடுச்சு பின்னுக்கு தள்ளிட்டு போனான் .ஜன்னல் அருகே போனதும் நிலா வெளிச்சம் அவள் மீது விழுந்ததும் மாரி அவளுடைய முகத்த உத்து பாத்தான் .பாவாடை தாவணியில அம்சமா சாமி கணக்கா இருந்தா.ஒரு பொண்ணு இம்புட்டு நெருக்கமாக பாத்தது இது தான் முதல் தடவை.தலையில் இருந்து இரத்தம் வழிந்து கன்னத்தில் வழிவதை கூட பாக்காமல் முகத்தில் இருந்த துண்டை விலக்கி அவன் முகத்த அவளுக்கு காட்டி “நான் களவாட வந்தவன் தான்.ஆனா களவு போய் கிடக்கேன்.இத்தனை சீக்கிரத்தில் உசுருக்குள்ள போயிட்ட புள்ள .நெஞ்சு கிடந்து அல்லாடுது.வார்த்தை எல்லாம் செத்து கிடக்கு .திருவிழா முடியவரைக்கும் இங்க தான் இருப்பேன் .திரும்பி போகலையில இந்த பொக்கிஷத்த அள்ளிட்டு தான் போவேன் “என்றவன் கிளம்பி போனான் .அப்போது வெளியில படுத்திருந்த கிழவி “அடியே முத்து உள்ள என்னடி சத்தம்?”என்றதும் அவள் “இல்ல கிழவி இது திருட்டு பூணை”என்றவள் போய் ஈச்சம் பாயில் படுத்தாள் .

மறுநாள் மாலை தனது குடும்பத்துடன் கோயில் சென்றவளுக்கு அவளை யாரோ கவனித்து கொண்டே இருப்பது போன்று தோன்ற அங்கே பலூன் வித்து கொண்டு இருந்த மாரி அவளையே கண் இமைக்காமல் பாத்து கொண்டு இருந்தான் .அவளாலும் அவனை அடையாளம் காண முடிந்தது .அவனிடம் இருந்து விலக நினைத்தாள் .திரும்பிய திசை எல்லாம் நின்றிருந்தான்.அவனிடம் இருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தவள்.தனது தாவணியின் முனையில் ஏதோ முடிந்து இருப்பதை பாத்து அவிழ்ந்தாள்.குங்கும சிமிழ் குங்குமத்தால் நிறைந்து இருந்தது .அதை முகம் பார்க்கும் கண்ணாடி அருகே வைத்தாள் .மறுநாள் அவள் போகும்போது வளையல்,அடுத்த நாள் பூ என ஒவ்வொன்றாக கொடுத்து கொண்டே இருந்தான் .அன்று இரவு ஊரில் உள்ள கன்னி பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மி அடித்தனர்.சாமியின் பெருமைகளை சொல்லி கும்மி அடிக்கும் போது முத்து விலகி கோயில் பின்புறம் வர மாரி பின்தொடர்ந்தான்.இருட்டில் மறைந்த அவள் மாரியிடம்”எதுக்கு என் பின்னாடியே வர்ற?பயமா கிடக்கு போயிரு ?”என்றதும் மாரி “திருட்டு சிறுக்கி உனக்கா பயம்.களவாணி பையன் முன்னாடி குரல்வளைய புடுச்சு நிக்கேன் கண்ணுல ஒரு துளி பயம் இல்ல.நீ நினைச்சிருந்தா இன்னும் இந்த உசிரு இருந்திருக்காது.நான் கொடுத்த பொட்டு,வளையல்,பூ வச்சுகிட்டு திரியுற மனசுல இல்லாமலா?நான் களவாணி தான்.இனி களவாங்க மாட்டேன் .கருப்பர் மேல சத்தியம் .கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன் நம்பி வா புள்ள “என்றதும் அவன்ட்ட வந்து”பாத்தவுடனே தோணுச்சு நீ தான் எனக்குனு .பொட்டச்சி மனசு பொதைச்சாலும் மாறாது .திருவிழா முடிஞ்சு நானும் வர்றேன் .கருப்பர் மேல சத்தியம்”என்றவள் கிளம்பினாள் .மாரி சந்தோசத்தில் துள்ளி குடித்தான்.

அன்று இரவு மாடசாமி “நாளைக்கு திருவிழா முடியுது .ராத்திரி வள்ளி திருமணம் .ஊர் கூடி கிடக்கும் மந்தையில.மயில் காத்தான்,சோனைகருப்பு இரண்டு வீட்ல இறங்குனா போதும் .நாலு தலைமுறைக்கு பஞ்சமில்ல.”என்றதும் மாரி “இல்ல மாமா நான் வரல .திரும்ப போயிரலாம் “என்றதும் தங்கராசு “அப்படி சொல்லு சிங்கக்குட்டி.பொட்டச்சி சகவாசம் பேசுதோ?உசுர மதிக்காம வந்திருக்கோம் .இறங்கி ஆகணும் .நீங்க வாழ நாங்க சாகணுமோ?”என்றதும் மாரி கோபமாய் “வாய்க்கு வந்த மாதிரி பேசுற.சரிடா இறங்குறோம்.எனக்கு பங்கு வேணாம் .ஒத்த குண்டு மணி கொடு போதும்”என்று சம்மதித்தான்.காலையில கோயிலுக்கு வந்த முத்துகிட்ட”இன்னைக்கு ராத்திரி கிளம்பிலாம் புள்ள.வள்ளி திருமணம் பாக்கையில நடுசாமம் அய்யனார் கோயிலுக்கு வந்திரு”என்று கூறிவிட்டு களவுக்கு தயார் ஆனான்.

ஊர் மந்தையில கூடியதும் மாரி ஊருக்குள் கிளம்பினான் .காவக்காரன் கிளம்பும் வரை காத்திருந்தவன் வீட்டிற்குள் இறங்கி கிடைத்தவரை எடுத்துக்கொண்டான்.அதே போல மாடசாமியும் தங்கராசுவும் பொருளோடு திரும்பினர் .மூவரும் மறுபடியும் கோயில் பின்னாடி வந்து பேசி கொண்டு இருக்கும் போது தங்கராசு கடையில் இருந்து இளநீருடன் வந்தான் .மூவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மாரிக்கு கண்கள் இருள தொடங்கியது அப்போது தங்கராசு “என்ன மாப்ள கண்ணு கட்டுதோ.மருந்து கலந்திருக்கேன்.கிளம்பும் போதே திட்டம் போட்டோம்.இங்க இருந்து உசுரோட போகணும்னா உன்ன சிக்க வைச்சுட்டு நாங்க தப்பிக்கறதுன்னு.அப்ப தான் எங்கள தேடி வர தாமசம் ஆகும் .நாங்களும் தப்பிச்சு ஓட முடியும் “என்றவன் மாரியின் கையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சிறிதளவு நகையை அவன் பையில் விட்டுவைத்தான்.அப்போ மாரி “களவுல்ல துரோகம் தப்பு மாப்ள.சீக்கிரமா போய்டுங்க.நான் செத்தாலும் உன் பேர சொல்ல மாட்டேன் “என்றான் .இருவரும் வேகமாய் கிளம்பி போனார்கள் .

மறுநாள் காலையில் ஊர் மந்தையில அரை நிர்வாணமாய் மாரி கட்டி வைக்கப்பட்டிருந்தான்.சூரிய வெளிச்சத்தில் மயக்கம் தெளிந்த மாரி உடல் வேதனை உணர்ந்தான் .உடம்பு முழுவதும் காயம்.இரத்தம் வெள்ளமாய் வழிந்தது .நகைகளை பறி கொடுத்தவர்கள்”எலேய் உனக்கு கொஞ்ச நேரம் தான் அவகாசம் .கூட்டாளிகள காட்டி கொடுத்துரு.இல்ல சங்க அறுத்துருவேன்”என்றவர் வேகமாய் வந்து காலால் எட்டி மிதித்தார்.அவன் கண்ணில் விழுந்த இரத்த துளிகளை மீறி பாக்கும் போது எதிரே முத்து நின்று கொண்டு இருந்தாள்.அவள் முன்பு தலை தவிழ்ந்து போனான் .கருப்பர் மீது செய்த சத்தியத்தின் நினைவு வந்தது .மரணம் விழியில் தோன்றி மறைந்தது .கொஞ்ச நேரத்துல சோனைகருப்பு “என்னடா பாக்குறீங்க?ஈன பய சொல்ல மாட்டான் .அறுத்து புதைச்சா தான் அடுத்து பயம் இருக்கும் “என்றதும் ஒரு ஆள் கத்தியோடு முன்னேற பெண்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.முத்துவின் அம்மாவும் அவள் கையை பிடித்து இழுத்தாள்.அப்போது முத்து ஓடி போய் கோயிலில் இருந்த அரிவாளை எடுத்து கத்தியுடன் வந்த ஆளை நோக்கி வீச அவன் கையில் வெட்டுப்பட்டு இரத்தம் வடிந்தது.பயந்து பின் வாங்கினான்.ஊரே அதிர்ந்து நின்றது .அப்போது மாரியை கட்டிபிடித்த முத்து அவன் கட்டுகளை அவிழ்ந்து அவனை அவளுடைய தோளில் சாய்த்து கொண்டு”பொட்டச்சி தானன்னு எவனாச்சு வந்தீங்க தலைய துண்டா எடுத்திருவேன்.அவன் களவாணி தான்டா .ஆனா நல்லவன்.அவன சாக விடமாட்டேன்.செத்தாலும் சேந்து தான் சாகணும்.ஒத்த நொடி வாழ்ந்தாலும் மனசுக்கு புடிச்சவன் கூட வாழணும் இல்ல சாகணும் .”என்றவள் இடுப்பில் இருந்த தாலியை அவன் கையில் கொடுத்து கட்ட சொன்னாள் .அவனும் கட்டி முடித்தான்.அவனை அவள் மடியில் சாய்த்து கொண்டு அங்கேயே உக்காந்து கொண்டு சாவுக்காய் காத்திருந்தாள் .கொஞ்ச நேரத்துல மேகம் கூடி மழை ஆவேசமாய் வீசியது .ஊர் மக்கள் கலைந்து சென்றனர் .மயக்கம் தெளிந்த மாரி அவளை அழைத்து கொண்டு கிளம்பினான் .வரும் வழியில் வெட்டுண்ட கருப்பர் கோயிலில் நின்னு தனது இடுப்பில் இருந்த குண்டுமணி தங்கத்தை எடுத்து உண்டியலில் போட்டுட்டு கிளம்பினான் .

[களவும் கற்று மற]

[முற்றும் ]

நன்றிகள் !வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன்!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here