காதலை சொன்ன கணமே 1

0
346

காதலை சொன்ன கணமே 1

அது ஒரு அதிகாலை நேரம். ஆதவன் சோம்பல் முறித்துக் மெதுவாக மலைக்கு பின்னிருந்து எழுந்து வந்தான். அது ஒரு மலையோர கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட சொர்க்க லோகம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகளால் சூழப்பட்ட சொர்க்கம் அது. அந்த கிராமத்தில் பெரிய மணியக்காரரான பெரிய ஐயாவின் வீட்டில் அந்த அதிகாலை வேளையே பரபரப்பாக இருந்தது.

பெரிய வாசலை அடைத்து பெரிய பூக்கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டுப் பெண்கள் அந்த காலை வேளையிலேயே பட்டுச் சேலை சரசரக்க பரபரவென வேலை செய்து கொண்டிருந்தனர். வாண்டுகள் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பெரிசுகள் எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே திண்ணையிலும் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகளிலுமாக அமர்ந்து ஊர்க்கதைகளும் உள்ளூர் வெளியூர் அரசியலும் பேசிக் கொண்டிருந்தனர். வயசுப் பெண்கள் கலர் கலராக பட்டுப் பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சிகளாக சுற்றிவர அவர்களையே பார்வையால் சுற்றி வந்தனர் இளவட்டங்கள்.

இவை எதிலுமே ஒட்டாமல் ஒருவன் மட்டும் எதையோ பறிகொடுத்தது போல எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவன்தான் நம்ம கதையின் நாயகன் சூர்யமித்ரன். அவனுக்குத் தான் திருமண நிச்சயம் நடக்கப் போகிறது இன்று. அவனோ யாருக்கோ வந்த விருந்து போல அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். முகத்தில் சற்றும் சந்தோஷமில்லை. இவன் தான் கல்யாண‌ மாப்பிள்ளை என்று யாராவது சொன்னால் தான் தெரியும். ஆனால் ஏன் இப்படி?

“என்னடா மாப்பிள்ளை. அத்தை உன்னை அங்கே எல்லா இடத்திலயும் தேடிகிட்டிருக்கு. நீ என்னன்னா இங்கே வந்து யாருக்கும் தெரியாம தனியா உட்கார்ந்திருக்கே? என்ன விஷயம், கல்யாணக் கனவுகளா? சார் இப்போவே உங்க டார்லிங் கூட கனவில் டூயட் பாடிட்டிருக்கீங்களா?” என்றபடி அருகில் வந்து அமர்ந்தான் அவன் மாமன் மகன் சுதர்சனன். இருக்கிற எரிச்சலில் இவன் வேறா என்பதாய் அவனைப் பார்த்து முறைத்த சூர்யா “என் கடுப்பை கிளப்பாதே மச்சான். நானே இதிலேர்ந்து எப்படி தப்பிக்க என்று யோசிச்சிட்டிருக்கேன். இதுல கனவு ஒன்னு தான் கேடா? போவியா?” என்றான்.

“ஏன்டா மாப்பிள்ளை என்னாச்சு திடீர்னு? இந்த நிச்சயம் உன் சம்மதத்தோடு தானே நடக்குது? ” கேள்வியாகப் பார்த்தான் சுதர்சனன். “அடப்போடா இவனே. என்னை யாரு கேட்டா? ஊர்ல இல்லாத அழகியப் பார்த்து வச்சிட்டோம்னு எங்கய்யாவும் அம்மாவும் தலைகால் புரியாம ஆடறாங்க. இதுல நான் கனவுல டூயட் வேற ஆடறேனாக்கும்.” வெறுத்துப் போன குரலில் சொன்னான் சூர்யா.

“அண்ணா அம்மா உன்னை ரொம்ப நேரமா தேடிட்டிருக்காங்க. நீ என்னன்னா இங்கே வெட்டிக் கதைப் பேசிட்டிருக்கே? சீக்கிரமா வா அண்ணா” என்றபடி காதுகளில் கல்ஜிமிக்கி ஆட அவன் தங்கை சுமித்ரா வந்து அழைத்தாள் சுதர்சனனை முறைத்தபடி. சின்ன வயசிலிருந்தே இவர்கள் இருவரும் வடதுருவமும் தென்துருவமும் தான். அதில் அப்பத்தா வேற இவர்கள் இருவருக்கும் தான் முடிபோட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொன்று நடந்துவிட்டால் இவங்க ரெண்டு பேரும் போடற சண்டையில ஊரு ரெண்டு பட்டு போயிராது?

“ஐயா கவர்னரே! கிளம்புங்க உங்க மாண்புமிகு தொங்கச்சி நாங்க உங்க நேரத்தை வீணடிக்கறேன்னு வருத்தப்படறாங்க. போங்க போய் எல்லா அரசாணைகள்ளயும் கையெழுத்துப் போடுங்க. நீங்க கூட்டிட்டு போங்க இளவரசியாரே” நக்கல் தூக்கலாக வம்பிழுத்தான் சுதர்சன். “வெவ்வவ்வெ” அவனைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டு தன் இரட்டை ஜடைகளையும் பின்னுக்குத் தள்ளியபடி துள்ளி ஓடினாள்.

“காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களாடா?” தலையிலடித்தபடி உள்ளே சென்றான் சூர்யா. ஐயாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனைக் கண்டவுடன் பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தனர். “ஏய்யா சூர்யா இன்னும் குளிக்கலியா? நேரமாச்சே ராசா! சீக்கிரமா குளிச்சிட்டு வாய்யா. ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு ராகு காலம் வர்றதுக்குள்ள கிளம்பனும். அத்தை வீட்லேர்ந்தெல்லாம் வந்திட்டாங்க. இன்னும் சித்தப்பா வீட்டிலயும் பெரிய மாமா வீட்டிலயும் மட்டும் தான் வரனும். அவங்களும் வர்ற நேரம் தான்.” என்றாள் அம்மா.

“சரசு நீ பாட்டுக்கு இப்படி அடுக்கிட்டே போனா அவன் எப்போ குளிச்சு எப்போ கிளம்ப? தம்பி நீ போய் குளிச்சுட்டு கிளம்புப்பா” என்றார் ஐயா. “சரிங்கய்யா.” என்றபடி தலைகுனிந்தபடி பின்கட்டிற்குச் சென்றான். ‘வேற‌வழியே இல்லையா? இந்த கல்யாணம் நடந்தே ஆகனுமா? யாராவது ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்களா?’ ஏக்கமாக இருந்தது சூர்யாவுக்கு. ‘ஊர் உலகத்தில் வேறு பெண்ணே இல்லையா? எனக்கும் அவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்தப் பட்டிக்காட்டு ஊர்ல வளர்ந்த நாம எங்கே, சென்னையில் படிச்ச அந்த பெண் எங்கே. நான் பார்க்க ரொம்ப சுமாராத்தானே இருக்கேன். அந்தப் பொண்ணு ஃபோட்டோவிலேயே அம்புட்டு அழகா இருந்துச்சு. எப்படி நம்மளைக் கட்டிக்க சம்மதச்சிருக்கும்? ஒருவேளை அவங்க வீட்டிலேயும் அந்த பொண்ணு கிட்ட யாரும் சம்மதம் கேட்டிருக்க மாட்டாங்களோ?’ சிந்தனையோடே குளித்து கிளம்பினான்.

இப்படியெல்லாம் தன்னைப் பற்றி தாழ்வாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு சூர்யா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. விவசாயத்தில் முதுநிலைப் பட்டதாரி. ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் கருகரு மீசையும் அலைஅலையாய் படரும் அடர்த்தியான கேசமும் ஆளை மயக்கும் சிரிப்புமாக ஆளை அசரடிக்கும் அழகனே.

அப்பத்தா கொல்லைப் புறத்தில் மாட்டுக்குத் தண்ணி காட்டிவிட்டு வந்து கொண்டிருந்தார். தன் அருமைப் பேரன் சூர்யாவைக் கண்டவுடன் “கிளம்பிட்டியா ராசா! சாப்பிட்டியாய்யா? தாத்தாகிட்ட திருநீறு பூசிக்கிட்டு கிளம்புய்யா.” என்றாள் அவன் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தபடி. “அப்பத்தா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். போதும் திருஷ்டி கழிச்சது. நான் வரேன்.” என்றபடி தாத்தாவைத் தேடிச் சென்றான் அவர் அவருடைய வழக்கமான பெரிய ஈஸி சேரில் அமர்ந்து கொண்டு பின்கட்டையே பார்த்தபடி இருந்தார்.

தன்னைத் தான் எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் என்பது புரிந்தது. “தாத்தா சாப்பிட்டீங்களா?” என்றபடி அவர் அருகில் சென்று கீழே அமர்ந்தான். “ஆச்சுப்பா ராசா. நீ கிளம்பலையா? நல்ல நேரத்துல கிளம்புய்யா. மகராசனா போய்ட்டு வா” என்றார் தழுதழுத்த குரலில். அவரிடம் திருநீறு பூசிக்கொண்டு கிளம்பினான் சூர்யா. வெளியே அனைவரும் காருக்கு அருகில் தயாராய் நின்றிருந்தனர். சூர்யா வருவதைப் பார்த்தவுடன் அவன் அப்பா “சரசு, கவிதா எல்லாரும் வண்டியில் ஏறுங்க. தம்பி இங்கே வந்து நில்லு. சரசு நம்ம சின்னாத்தாளக் கூப்பிட்டு எதுத்தால வரச் சொல்லு. சீக்கிரம்.” பரபரத்தார்.

என்னதான் ஊருக்குப் பெரியவர் மணியக்காரர் என்றாலும் அவருக்கு இதிலெல்லாம் நிறைய நம்பிக்கை. சூர்யா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தன் ஐயாவிடம் போராடிப் பார்த்து களைத்துவிட்டான். ஒன்றும் மாற்றமில்லை. அவர் இனி இந்த விஷயத்தில் மாறுவார் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் போய் விட்டது.

நான்கு இன்னோவா வண்டிகளில் ஆட்களுடன் கிளம்பினார்கள். சூர்யாவுக்கு உள்ளுக்குள் கவலை அணிந்தபடி இருந்தது. அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது அந்தப் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கப் போவதில்லை. அவர்கள் வீட்டிலும் யாராவது அந்தப் பெண்ணை மிரட்டி இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள் என்று தான் அவனுக்குத் தோன்றியது.

தனக்கு கல்யாணம் வீட்டில் பேசத் தொடங்கிய போது ரொம்ப பெருந்தன்மையாக ‘ஐயாவும் நீங்களுமாக பார்த்து முடிவு பண்ணினா சரிதான்மா’ என்று சொன்னது தப்போ என்று இப்போது தோன்றுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் தென்னந்தோப்பில் காய்பறிப்பு மேற்பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த போது அம்மா மெதுவாக சூர்யாவிடம் வந்து “ராசா ஐயாவோட சிநேகிதக்காரங்க ஒருத்தங்க இருக்காங்களாம். அவங்க பொண்ணை ஐயா உங்களுக்குப் பார்த்திருக்காங்க. பொண்ணு ஏதோ காலேஜ் படிச்சிட்டு இருக்குதாம். பார்க்கலாமா” மெல்ல உணவு பரிமாறியபடியே கேட்டாள். ஏற்கெனவே காய்பறிப்புக்கு ஆள்குறைவாக இருக்கிறதே என்ற யோசனையில் இருந்த சூர்யா “அம்மா! நீங்களும் ஐயாவும் எதைச் செஞ்சாலும் எனக்குச் சம்மதம் தான்மா.” என்றுவிட்டு சாப்பிட்டதாக பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பினான். அன்று மட்டும் அவன் கொஞ்சம் நிதானமாக பெண்ணைப் பற்றி விசாரித்திருக்க வேண்டுமோ என்று இப்போது தன்னைத் தானே திட்டிக்கொண்டிருக்கிறான்.

“பரவாயில்லை மாப்பிள்ளை சிரிக்கலாம். இப்படி உம்முனு வந்தா அந்த பிள்ளைக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இன்னிக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம்பிடிக்கப் போறா” என்று சூர்யாவை வரம்பிற்கு இழுத்தான் சுதர்சன். “அண்ணா அண்ணிகிட்டே எங்களைப் பத்தியெல்லாம் பேசிட்டீங்களா?” என்றது சூர்யாவின் சித்தப்பா மகன் விஷ்ணு. “ஹ்க்கும் இங்கே நான் என்ன பத்தியே பேசலையாம். இதுல எங்கே உங்களைப் பத்தியெல்லாம் பேச” மனசுக்குள் புலம்பிய படியே வெளியே வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்தான். இல்லையென்றால் இவனுங்க எல்லாம் தன்னை ஓட்டியே கொன்னுருவாங்க என்ற பயம் தான்.
அங்கே புறநகர் பகுதியில் அமைந்த பெரிய வீட்டையும் பரபரப்பு தொற்றியிருந்தது. வாசலில் மாவிலைத் தோரணம் தொங்க, பெரிய மாக்கோலம் வாசலை அடைத்தது. வீடு முழுக்க சாம்பிராணியும் ஊதுபத்தியுமாக ஒரு கலவையான மனம் ஒருபுறம் என்றால் இன்னொரு நெய்யில் வறுத்த முந்திரியும் ஏதேதோ நெய்யில் செய்த இனிப்பு பலகாரங்களின் மணமும் போட்டி போட்டது.

வீட்டில் ஸிடியில் காருகுறிச்சி அருணாச்சலம் மங்கள இசையைப் பரப்பிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு கல்யாணக் களை வந்துவிட்டது. வீட்டின் எஜமானர் திருவாளர் முத்துராமன் அவரே ஓடி ஓடி அத்தனை வேலைகளையும் செய்து வந்தார். சும்மாவா அவரது ஒரே மகளான சுபத்ராவின் நிச்சயதார்த்தமாச்சே. அவரது மனைவி மேனகா ஒருபுறம் வேளையாட்களை விரட்டியடிக்க வேலை வாங்கிக் கொண்டிருந்தார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இத்தனைக்கும் நடுவில் தன்னறையில் எந்தவித பாதிப்பும் இன்றி விட்டத்தையே வெறித்தபடி இருந்தாள் சுபத்ரா. ஆம் இவளைத் தான் நம் சூர்யாவிற்கு நிச்சயம் செய்யப் போகிறார்கள். கருகருவென அடர்த்தியான நீண்ட கூந்தலுக்கும் பாலைப் போன்ற பரிசுத்தமான தேசத்துக்கும் சொந்தக்காரி. எலுமிச்சை நிறம். திராட்சை பழம் போன்ற கண்கள். மாங்கனிகளைப் போன்ற கன்னக்கதுப்புகள். கருநீல நிறப்பட்டில் ரோஸ் நிற பார்டர் போட்ட புடவை உடுத்தி இருந்தாள். சாட்டையென நீண்டிருந்த அவளது பின்னலில் மல்லிகைச் சரம் மணமணத்தது. மொத்தத்தில் பெண்ணே போற்றும் பேரழகி தான் நம்ம ஹீரோயின் சுபத்ரா. பருவத்தின் பழமுதிர்ச்சோலை அவள்.

வீட்டில் மற்றவரிடம் தென்படும் பரபரப்பு சிறுதுமின்றி நடப்பது எதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதாய் இருந்தாள் சுபத்ரா. அவளுக்கு அலங்காரம் செய்ய வந்த தோழிகளோ இவள் ஏன் இப்படி வாழ்க்கையே வெறுத்தது போலிருக்கிறாள் என்பதாய் பார்த்தனர். அவளுக்கு தான் மேலே படிக்கிறேன் என்று சொல்லியும் கேளாமல் இப்படி அப்பா அவசரமாக இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்துவிட்டாரே என்ற கோபம் இருந்தது. கூடவே பயமும். இருக்காதா பின்னே? இத்துனை நாட்களாய் தனிக்காட்டு ராணியாய் இருந்துவிட்டு இப்போது பெரிய கூட்டுக் குடும்பத்தில் போய் வாழ்வதென்றால் பயமாக இருந்தது. அதுமட்டுமா அந்த மாப்பிள்ளை பையனின் ஃபோட்டோவைப் பார்த்தாலே ஏதோ மிலிட்ட்ரி ஆஃபிஸர் போல இருந்தது. அவருக்கும் தனக்கும் ஒத்துப் போகுமோ என்ற பயம்தான்.

இந்த ஹீரோக்கும் நம்ம ஹீரோயினுக்குமான கல்யாணமும் அவங்க வாழ்க்கை எப்படி அமையப் போகுதுங்கிறதும் தான். நாம இனி பார்க்கப் போறோம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here