காதலை சொன்ன கணமே 4

0
289

காதலை சொன்ன கணமே 4

“ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே! இரகசிய ஸ்நேகிதனே!” ப்ளேயரில் பாட்டு நம்ம சுபத்ராவோட மனநிலைக்கு ஏற்ப ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்டானைப் பற்றி நினைத்தாலே மனசு ஜிவ்வென்று பறந்தது. கிராமத்து மாப்பிள்ளை என்று அப்பா சொன்னதும் எவனோ எண்ணெய் வழியும் தலையும் பரக்க பரக்க தன்னைப் பார்த்து வெறிக்கும் ஒருவனையே எதிர்பார்த்திருந்தாள். இவனோ இவள் புறம் திரும்பவே இல்லை. ஆளும் பார்க்க கம்பீரம்.

மனம் “ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்று இருப்பானே” என்று ஜொள்ளியது. ‘சுபா நீயா இப்படி ஒருத்தரைப் பார்த்து கவுந்த?’ மனம் கேலி பேசியது. கல்லூரியில் பலர் இவளின் கவனத்தை தங்கள் புறம் திருப்ப முயன்றிருக்கின்றனர். சிலர் இவளிடம் வந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தும் இருக்கின்றனர். ஆனால் யாருமே இவளை இப்படி சாய்த்ததில்லை.

என்ன முயன்றும் இவனையே சுற்றி சுற்றி ஓடிய எண்ணத்தைப் பிடித்து ஒருநிலைப்படுத்த பெரும்பாடு பட்டாள். திருமணப் பத்திரிகை அடிக்கவேண்டும் என்னும் போது என்ன டிசைனில் அடிக்கலாம் என்று பலரும் பலவாறாக மண்டையை உடைத்துக் கொள்ள இவன் மட்டும் சர்வசாதாரணமாக வந்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஐந்தே நிமிடங்களில் தேர்வு செய்து எல்லாரும் பாராட்டையும் தட்டிச் சென்றான்.

மணமகனின் கரம் மணமகளின் கரத்தைப் பற்றியிருப்பது போலிருந்த டிசைனில் இருபுறமும் இவர்களின் பெயரைப் பதித்து நடுவில் இரு இதயம் ஒன்றாகும் நாள் என அச்சிடச் சொன்னான். அனைவரும் வாயடைத்துப் பார்த்தபடி நின்றனர். ‘பார்றா காட்டான் கொஞ்சம் ரொமான்டிக்கான ஆள் தான் போல’ என்று சுபத்ரா மனசுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டாள்.

IMG-20190303-WA0002|366x500

நாளும் கோளும் நிற்காதே! இறக்கை கட்டிக் கொண்டு பறக்கத்தான் செய்தது. சுபத்ராவிற்கு ஒருவிதமான சொல்லத் தெரியாத உணர்வு. இதுவரை படிப்புக்காக என்று எப்பொழுதும் விடுதி வாழ்க்கை. ஒரே பெண் என்பதால் அப்பாவும் அம்மாவும் எப்போதுமே செல்லம் தான். யாருக்காகவும் தன்னை இதுவரை மாற்றிக் கொண்டதோ அல்லது அனுசரித்துச் சென்றதோ இல்லை. இவளுக்காகத் தான் மற்றவர் அனுசரித்துச் சென்று பழக்கம்.

ஆனால் அங்கே சூர்யாவின் வீட்டில் உருப்படிகள் அதிகம். நிச்சயத்தன்று வந்தவர்களில் யார் பெயருமே இன்னும் மனதில் பதியாத நிலை. ஆனால் இவ்வளவு பேரும் ஒன்றாக ஒரே வீட்டிலா வாழ்கிறார்கள் என்று பிரமிப்பு ஒருபுறம், இவர்களுடன் தன்னால் ஒன்ற முடியுமா என்ற பயம் இன்னொரு புறம்.

மேனகா தனக்கு தெரிந்தவரை அத்தனை புத்திமதியும் சொல்லியபடி இருந்தார். “கண்ணு, பெரியவர்களை எல்லாம் அனுசரிச்சு நடந்துக்கனும். அங்கே வயசானவங்க இருக்காங்க. அவங்களை மதிச்சு நடக்கனும். கூட்டுக் குடும்பம் தான் பலம். எப்போதும் பெரியவங்ககிட்ட கேட்டு தான் எந்த முடிவும் எடுக்கனும். புரிஞ்சு சூதானமா இருந்துக்கோடா” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

சுபத்ராவிற்கு இதுவேறு ஒருபுறம் வயிற்றில் புளியைக் கரைத்தது. இதுவரை அவள் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவுமே அவள் விருப்பப்படி தான் நடந்திருக்கிறது. இந்த திருமணம் தான் முதல் முறையாக இவளிடம் சொல்லாமல் அப்பா ஏற்பாடு செய்தது. தன்னுடைய படிப்பிலிருந்து எல்லாமே தான் இஷ்டப்பட்டபடி தான் இன்று வரை நடந்திருக்க இனி எப்படியோ என்ற பயம் உருவானது. திரைப்படங்களில் எல்லாம் வருவது போல் கலகலவென்று இருக்குமா இல்லை சண்டையும் பூசலுமாக இருக்குமா.

எதுவாக இருந்தாலும் தான் நிறைய கற்றுக் கொள்ள போகிறோம் என்று மட்டும் தோன்றியது சுபத்ராவிற்கு. ஒரு புது அனுபவத்தை எதிர்நோக்கியிருந்தாள். சூர்யாவின் பெற்றோர் இதற்குள் திருமண ஏற்பாட்டை சாக்கு வைத்து நாலைந்து முறை வந்து இவளைப் பார்த்து விட்டுச் சென்றனர். இருவரும் ‘சுபாம்மா’ என்று பாசமாகவே இருந்தனர். சூர்யாவின் தங்கை சுமித்ராவும் இதற்குள் இவளின் அலைபேசி எண்ணை வாங்கி இவளுடன் நட்பு வளர்த்துக் கொண்டாயிற்று.

ஆனால் யாரை மிகவும் எதிர்பார்த்தாளோ அவன் மட்டும் அசரவேயில்லை. ‘எதிலுமே ஒரு நிதானம், அலட்டிக் கொள்ளாத இயல்பு, நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்ற கெத்து, ஆளை ஒரு பார்வையிலேயே எடைபோட்டு விடும் ஒரு சாமர்த்தியம், பார்வையாலேயே காரியங்களை சாதித்துக் கொள்ளும் நேர்த்தி, யப்பா! இவனைப் பற்றி நினைக்கத் தொடங்கினால் வேறு சிந்தனையற்றுப் போகிறதப்பா’ மனசுக்குள் பேசியபடியே தைத்து வந்த துணி அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சென்றாள் சுபத்ரா.

கல்யாண ஏற்பாடுகள் மளமளவென நடந்தபடி இருக்க, திருமணநாளும் நெருங்கிவிட்டது. “ஆண்டவா! எல்லாம் நல்லபடியா நடந்தா மலையேறி வந்து இந்த மனுஷக்கு மொட்டை போடறேன் முருகா” என்று குண்டைத் தூக்கிப்போட்டார் மேனகா. “ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம். கல்யாணம் நல்லபடியாத்தான் நடக்கும். அதுக்கு ஏன்டீ என் தலையை மொட்டை போட போற?” என்றலறினார் முத்துராமன்.

“சும்மா இருங்க! ஊருபட்ட திருஷ்டி இருக்கு என்பொண்ணு மேல. நானே நல்லபடியா ஒரு குறையுமில்லாம எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். இப்போ முடிகொடுத்தா தான் என்ன? என்னவோ இவர் கல்யாண மாப்பிள்ளை மாதிரி முறுக்கிக்கிறாரு” அலுப்புடன் மேனகா சொல்ல சற்று நேரம் கலகலத்தது அந்த இடம்.

திருமணம் அவர்கள் கிராமத்தில் நடப்பதாக முடிவெடுத்தபடியால் இருதினங்களுக்கு முன்பே அங்கு சென்றனர். பட்டினத்தில் வளர்ந்தபடியால் சுபத்ரா கிராமத்திற்கு அடிக்கடி வந்ததில்லை. முத்துராமனும் பிஸினெஸ் என்று பரபரப்பாக சுற்றியதால் அவளை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. சாலையின் இருபுறமும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறித்தது.

இடதுபுறம் முழுவதும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்தது. மாந்தோப்பின் குயிலின் ஓசை இவளை ஊருக்குள் வரவேற்பதைப் போலிருந்தது சுபத்ராவிற்கு. முத்துராமன் இவளுக்கு ஒவ்வொரு இடமாக காட்டிக் கொடுத்தபடி வண்டியை மெதுவாக ஓட்டி வந்தார். பட்டினத்துப் பரபரப்பிற்கும் இங்குள்ள இயற்கையின் அமைதிக்கும் எவ்வளவு வித்தியாசம். பட்டினத்தைப் போல எங்கும் குப்பைக் கூளமில்லை. அண்டை அயலார் யாரென்று தெரியாத சூழ்நிலையுமில்லை. சுத்தமான காற்று தன்னை அரவணைத்ததை ரசித்து வந்தாள் சுபத்ரா.

வண்டியை ஒரு பெரிய வீட்டின் முன் கொண்டு நிறுத்தினார் முத்துராமன். அது இவர்களின் மூதாதையர் வீடுதானாம். பிஸினெஸ், வேலை என்று தான் பட்டினத்தில் செட்டிலானதால் இந்த வீட்டை பெரிய மணியக்காரருக்கு விற்றுவிட்டு சென்று விட்டாராம்.

இப்போது பெண் வீட்டார் தங்க அந்த வீட்டைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். நல்ல பெரிய திண்ணைகள் இருபுறமும் இருக்க உள்ளே பெரிய தாழ்வாரத்தைக் கொண்டிருந்தது. தாழ்வாரத்தை அடுத்து இருந்த பெரிய முற்றத்தின் இருபுறமும் அறைகள் வரிசையாக இருந்தது. தாழ்வாரத்தின் நடுவில் பெரிய ஊஞ்சல் ஒன்றும் இருந்தது. அறைகள் ஒவ்வொன்றும் நன்கு பெரியதாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

சுபத்ரா கிராமத்து வீடு என்றால் எப்படி இருக்குமோ என்று பயந்து இருந்தாள். ஆனால் இப்போதோ துள்ளிக் குதித்தபடி ஒவ்வொரு அறையாக சென்று வியந்து பார்த்து வந்தாள். வீட்டின் பின்கட்டில் பெரிய தோட்டம் இருந்தது. வாழையும் தென்னையும் வேம்புமாக கண்ணுக்கும் கருத்துக்கும் குளுமையாக இருந்தது. வெண்டையும் கத்திரியும் கீரைப்பாத்திகளும் கண்களைப் பறித்தது.

“அப்பா இதெல்லாம் எப்படிப்பா விட்டுட்டு நீங்க சிட்டியில் போய் செட்டில் ஆனீங்க? பாக்கவே ஆசையா இருக்கே!” சிறுகுழந்தையாக குதூகலித்த மகளைக் கண்ட முத்துராமனுக்கு பெரிய பயம் விலகியது. தன் மகள் எங்கே கிராமத்தைக் கண்டால் தனக்கு வேண்டாம் என்று விடுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தவர் இப்போது தான் நிம்மதியானார்.

அன்று மாலை கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்வதாக இருந்ததால் எல்லோரும் அதற்கான ஏற்பாட்டில் மும்முரமானார்கள். சுபத்ராவோ ஊஞ்சலில் ஆடுவதும், தோட்டத்தில் உலவுவதுமாக பொழுது போவதே தெரியாமல் சந்தோஷமாக இருந்தாள். மாலை நேரமும் வந்தது. எல்லோரும் கிளம்பிய பின்னும் புடவையுடன் போராடிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. உதவப் போன மேனகாவிடம் “இந்த புடவையை யார்தான் கண்டுபிடிச்சாங்களோ? ச்சே! எவ்வளவு சுத்த வேண்டியிருக்கு? ஈஸியா ஒரு த்ரீ ஃபோர்த் போட்டோமா காத்தோட்டமா இருந்தோமான்னு இல்லாம, இது என்னம்மா பெரிய தொல்லை.” புலம்பித் தள்ளினாள்.

“உஷ்ஷ்ஷ் சுபா! யார் காதுலயாவது விழுந்திரப் போகுது. இங்கல்லாம் அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணக் கூடாது. இன்னிக்கு உன்னை மாப்பிள்ளை வீட்டுப் பெரியவங்க பார்ப்பாங்க. அதனால வம்பு பண்ணாம புடவையை கட்டிக்கோ. இனி நீயே தான் தினமும் புடவை கட்ட கத்துக்கணும்.” என்றார் மேனகா.

“இதென்னமா பெரிய குண்டா தூக்கிப் போடற. தினமும் புடவைக் கட்டனுமா? யாரால முடியும்? ஆளை விடுங்கப்பா!” பதறினாள் சுபத்ரா. “அதெல்லாம் பழகிடும். சும்மா ஆடாத. ஒழுங்கா நில்லு சுபா” என்று அவளை நிறுத்தி புடவையை அரைமணி நேரப்போராட்டத்திற்குப் பின் அவளுக்கு கட்டிவிட்டு கிளப்பினார். என்னதான் முரண்டு பிடிக்கும் குழுந்தையாக இருந்தாலும் புடவையில் தேவதையாகவே தோன்றினாள் சுபத்ரா.

இதுவரை விளையாட்டுப் பிள்ளையாய் ஜீன்ஸிலும் அரைநிஜாரிலுமாகப் பார்த்த தன் மகளை சேலைகட்டிப் பார்த்த கணம் முத்துராமன் தம்பதியருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மகள் மணமுடித்து போகப் போகிறாள். இனி அவள் வேறொரு வீட்டின் குலமகள் என்பது அந்த கணமே இருவருக்கும் தோன்ற இருவரின் கண்களும் குளமாகின. ‘கடவுளே எங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளுடன் சந்தோஷமான வாழ்வு கொடு’ என ஒருசேர வேண்டியது அந்த பெத்த மனமிரண்டும்.

அந்த மாலை நேரத்து அந்திவானச் சிவப்பில் சுபத்ரா வெண்பட்டுச் சேலையில் அன்னநடை பயில கோயிலுக்கு அழைத்துவரப்பட்டாள். ‘காட்டான் கோயிலுக்கு வந்திருப்பானா? நம்மைப் பார்த்தா என்ன நினைப்பான். இப்பவாவது ஏதாவது பேசுவானா? அந்தக் காட்டானவது நம்மகிட்ட வந்து பேசறதாவது. உலகம் அழிஞ்சிறாது?’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

அந்தக் காலத்து கல்கட்டிடம் தான் கோயில். திரிபுரசுந்தரி அம்மை கருணை பொங்கும் விழிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தாள். மாப்பிள்ளை வீட்டிற்கும் வந்து சேர மேனகாவும் சரசுவும் சேர்ந்து பரபரவென செயல்பட்டனர். பொங்கலிட்டு பூஜை முடித்தனர். சூர்யா அவனுடைய தாத்தாவையும் பாட்டியையும் அழைத்து வந்தான். பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகவே தோன்றினான்.

சூர்யா அந்தப்பக்கம் வேறு வேலையாக நகர, பெரிய மணியக்காரரும் அவர் மனைவியும் சுபத்ராவையே பார்ததிருக்க சுபத்ரா மெதுவாக அவர்களை. நெருங்கி அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். யாரும் சொல்லாமல் அவளே வந்து வணங்கியதைப் பார்த்த அந்த இரண்டு வயதான உள்ளங்களும் தங்கள் பேரனுக்கு தங்கள் மகன் நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறான் என்று நிம்மதி கொண்டனர்.

சற்றுத் தள்ளி இளவட்டங்கள் அனைவரும் ஒன்று கூடி கிண்டலடித்தபடி நின்றனர். முத்துராமன் மற்றும் மேனகா தங்கள் சம்பந்திகளோடு பேசியபடி அகல, ஆங்காங்கே அவரவர் சமவயதினரோடு பேசிக் கொண்டிருக்க தான் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து படி நின்றாள் சுபத்ரா. “இப்படி உட்காரு கண்ணு. எவ்வளவு நேரம் நிப்ப? கால்கடுத்துப் போகும் வா” வாஞ்சையுடன் அழைத்து தங்கள் அருகில் அமர்த்திக் கொண்டனர்.

“ஏங்கண்ணு உனக்கு புடவை கட்டி பழக்கமிருக்கா?” என்றார் அந்த மூதாட்டி. “இல்லை பாட்டி. ஆனா கத்துக்கறேன்.” என்றாள் சுபத்ரா. “உனக்கு கஷ்டமாயிருந்தா வேண்டாம் கண்ணு. இப்போ சுமி பாப்பால்லாம் என்ன புடவையா கட்டிக்கறா? உனக்குப் பிடிக்காத எதையும் எங்களுக்காக பண்ண வேண்டாம் கண்ணு சரியா?” என்றார்.

கண்கள் கலங்கியது சுபத்ராவிற்கு. இந்த மனிதர்களிடம் தான் எவ்வளவு புரிதல். நமக்கு இந்த வாழ்க்கை அமைய நாம் ரொம்ப கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம் போல என்று தோன்றியது. சுமித்ரா வந்து சுபாவை அழைத்துக் கொண்டு கோயிலைச் சுற்றிக் காட்டினாள். பிரகாரம் சுற்றி வந்தபின் அங்கிருந்த மேடையருகில் வந்து அமர்ந்த போது ருத்ரமூர்த்தியாக கண்களில் பொறிபறக்க தன்னையே முறைத்துப் பார்த்தபடி நின்ற சூர்யாவைப் பார்த்த சுபத்ரா பயந்தே போனாள்.

‘ஏன்டா காட்டான்? என்னாச்சுன்னு இப்படி என்னை முறைச்சுப் பார்க்கிற?’ மனசுக்குள் தாளித்தபடி மருண்ட பார்வை பார்த்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here