காதலை சொன்ன கணமே 5

0
270

‘மல்லிகை மொட்டு
மனசத் தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு
வயசத் தொட்டு
வளைக்குதடி மீனே’
பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் களிப்புடன் இருக்க சுபத்ரா மட்டும் கடுப்பில் இருந்தாள். ‘அடேய் காட்டான்! உனக்காக எனக்குப் பிடிக்காத புடவையைக் கூடக் கட்டிகிட்டு வந்திருக்கேன். நீ எப்படியும் லவ்லுக்கெல்லாம் விடமாட்டன்னு தெரியும், ஆனா எதுக்கு இப்படி முறைச்சுகிட்டு இருக்க?’ காரணம் தெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. அவனிடம் போய் கேட்கும் அளவு இன்னும் அவனிடம் நெருக்கம் வரவில்லையே. சொல்லப் போனால் இவர்களுக்குள் பேச்சுவார்த்தையே இல்லையே இன்னும்.

யாரிடம் கேட்பது என்று குழம்பி போய் இருக்கையில் சுமித்ரா இவளை இழுத்துக் கொண்டு அவளின் தோழிகளை அறிமுகப்படுத்தக் கூட்டிப் போனாள். இவர்கள் போவதையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த சூர்யாவை நெருங்கினான் சுதர்சன்.

“என்ன மாப்பிள்ளை? அக்காவை அப்படியே முறைச்சுப் பார்க்குறியே. என்ன விஷயம்?” என்றான் சுதர்சன். “இவளைப் புரிஞ்சுக்கவே முடியலடா மச்சான். சிலநேரம் இவளுக்கு இந்த கல்யாண்த்துல இஷ்டமில்லையோன்னு தோணும். சிலசமயம் இவளுக்கு இதில் இஷ்டம்தான்னு தோணுது. எது உண்மைன்னு தான் புரிஞ்சுக்க முடியலடா” என்றான் புலம்பலாய்.

“ரொம்ப கஷ்டப்படாதடா. உன்னால மட்டுமில்ல, யாராலயுமே இந்த பொம்பளைங்கள புரிஞ்சிக்க முடியாது. ஆனா இப்போ என் அக்காவைப் புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்ற அளவுக்கு நீ அவங்ககிட்ட எப்போ பேசி பழகின?” என்றான்.

“பேசிப் பழகினாத் தானா? சிலரைப் பார்த்தாலே புரிஞ்சுக்கலாமே மச்சான்.” என்றான் சூர்யா. “விளங்கும்!!!! பேசிப் பழகினாலே இங்கே ஓவியமா இருக்காம். இதுல பேசாம பார்த்ததுமே இவருக்கு புரிஞ்சு போச்சாம். தப்பு பண்ணாத மாப்பிள்ளை. எனக்கென்னமோ நீ அவசரப்படறியோன்னு தோணுது” என்றான் சுதர்சன்.

அவன் சொல்வதும் சரியாகப்படவே சூர்யா தான் இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். என்னதான் நானொரு ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் என்று முறுக்கிக் கொண்டு அலைந்தாலும் அவனால் அவன் பார்வை சுபத்ராவை நோக்கிச் செல்வதைத் தடுக்க இயலவில்லை. சேவைக் கட்டிய பூஞ்சோலையாகத் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

IMG_20190311_144904|327x500

சுமித்ரா தன் அண்ணியை எல்லோரிடமும் அறிமுகபடுத்துவதில் மும்முரமாக இருந்தாள். அவளுக்கு ஒரே பெருமையாக இருந்தது. சுபத்ராவைத் தன் வருங்கால அண்ணி என்று அறிமுகப்படுத்துவதில். வரிசையாக எல்லோரிடமும் கூட்டிக் கொண்டு போய் பெருமைப் பீற்றிக் கொண்டவள் ஒரு இடத்திற்கு வரும் போது மட்டும் அவசரமாக கடக்க முயன்றாள்.

“என்ன சுமி! எல்லாருக்கும் இவங்களை அறிமுகப்படுத்தின, ஆனா எனக்கு மட்டும் அறிமுகப்படுத்தலியே? ஒருவேளை எனக்கு அறிமுகப்படுத்துற அளவுக்கு இவங்க ஒன்னும் முக்கியமானவங்க இல்லியோ?” குத்தலாக வந்தது கேள்வி.

கேள்வி வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப, சுமித்ரா சுபத்ராவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள். கேள்வி கேட்டவளுக்கும் கிட்டத்தட்ட இவர்கள் வயது தான் இருக்கும். நல்ல சிவந்த மேனி. சுருட்டை முடி. ஆள் கொஞ்சம் வளர்த்தி கம்மி. ஆளை அசர வைக்கும் கண்கள்.

அவளின் அருகில் சென்ற சுமித்ரா “இவங்கள அறிமுகப்படுத்தும் அளவுக்கு நீ ஒன்னும் அவ்வளவு முக்கியமானவ இல்லைனு தோணிச்சு. அதான். அண்ணி இவங்க தான் மஞ்சுளா. அண்ணா கூட ஸ்கூல்ல படிச்சாங்க. மத்தபடி பெருசா சொல்ற அளவுக்கு வேற ஒன்னுமில்லை” நக்கலாக கூறிவிட்டு தோளை உதறியபடி சுபத்ராவை இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

சுபத்ராவிற்கு குழப்பமாக இருந்தது. இதற்கு முன் அறிமுகப்படுத்திய எவரையும் பற்றி சுமித்ரா தரக்குறைவாக பேசவில்லை. இவளைப் பற்றி மட்டும் ஏன் இப்படி மட்டம் தட்டுவது போலப் பேசவேண்டும். சரி எதுவென்றாலும் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தாள் சுபத்ரா.

“அவ்வளவு தானா! ஒருவேளை உனக்கு மறதி அதிகமாகிப் போச்சோ? உங்க அண்ணனை நான் விரும்பினதை ஏன் இவங்ககிட்ட சொல்ல மாட்டேன்கிற. சொல்ல பயமா? என் அளவுக்கு இவ ஒன்னும் அவ்வளவு அழகில்லையே? ஒருவேளை இவங்க சொத்துக்காக இந்த கல்யாணத்துக்கு உங்க அண்ணன் சம்மதிச்சிட்டாரா?” என்றாள் குத்தலாக.

தூக்கிவாரிப் போட்டது சுபத்ராவிற்கு. ‘ஓ காட்டானுக்கு இப்படி ஒரு லவ் ஸ்டோரி வேற இருக்கா? ஆனா அவனை யாருக்குத் தான் பிடிக்காது? கல்யாணம் இப்போ வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்த நம்மளே இவனைப் பார்த்து முடிவை மாத்திக்கும் போது இவ காட்டான் மேல் ஆசைப்படாமல் இருந்தா தான் ஆச்சரியமே. ஆனா காட்டானுக்கு இவளைப் பிடிச்சிருந்ததா?’ கேள்வி மண்டையைக் குடைய சுமியைப் பார்த்தாள் சுபத்ரா.

“எங்கண்ணனை விரும்பினதுக்காக எல்லாம் உன்னைப் பற்றி நான் சொல்லனுமா? எங்க அண்ணன் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைனு சொல்லிட்டாங்கல்ல? அப்புறம் ஏன் அதையே பத்தி பேசிகிட்டிருக்க? நீ இப்படியே சொல்லிகிட்டு சுத்துனா உன்னை அப்புறம் எவன் கல்யாணம் பண்ணிப்பான்? போய் ஆகிற பொழப்பைப் பாரு மஞ்சு” கடுப்பேறிய குரலில் சொன்னாள் சுமி.

‘அப்பாடா! இந்த பொண்ணு தான் காட்டானை லவ் பண்ணியிருக்கு. நம்மாளு தான் ரோபோவாச்சே. இந்த லவ்வெல்லாம் அதுக்கு வராது போல. ஐயோ சுபா! இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இவனுக்கு ரோமேன்ஸ் வேற நீ கத்துக்குடுக்கனுமா? கிழிஞ்சுது போ’ மனசுக்குள் மானாவாரியாக அவனைப் பற்றி யோசித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

“நாங்க அழகாயில்லைனு தானே உங்கப்பா சீமைல போய் பொண்ணு புடிச்சிட்டு வந்திருக்காரு. எனக்கென்னவோ இந்தப் பொண்ணோட சொத்துக்காக தான் உங்க நொண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டிருப்பாருனு தோணுது. இல்லைனா அவரு என்னிக்கு கல்யாணம் பண்ண? எப்படியோ நல்லா இருந்தா சரி. நானும் பாக்கத்தானே போறேன் இவங்க எப்படி வாழப்போறாங்கன்னு” என்ற மஞ்சுளாவின் குரலில் இருந்தது வன்மமா வலியா????

“உளறாம போயிரு மஞ்சு. உன்னை யாரும் இங்கே விளக்கம் சொல்லக் கூப்பிடல. வந்துட்டா பெருசா பேசறதுக்கு. ஓடிரு. நீங்க வாங்கண்ணி போகலாம்.” என்று சுமித்ரா சுபத்ராவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

சற்று தூரம் சென்ற பின்பு சுபத்ராவிடம் திரும்பி “அவ பேசினத பெருசா எடுத்துக்காதீங்க அண்ணி! அவ ஒரு லூசு. ஸ்கூல்ல படிக்கும் போது அண்ணனைப்பிடிச்சு போய் அண்ணன்கிட்ட வந்து சொல்லியிருக்கா. எங்கண்ணன் நல்லா அட்வைஸ் பண்ணி அனுப்பிருச்சு. ஆனா இவ அதையே மனசுல வச்சுக்கிட்டு இப்படித்தான் லூசு மாதிரி பேசிகிட்டுத் திரியுறா. இவதான் எங்கண்ணனை விரும்பினாளே தவிர எங்கண்ணன் இவளை விரும்பல. நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணி” சுமியின் குரலில் இருந்த பதட்டம் எங்கே சுபத்ரா தன் அண்ணனைப் பற்றி தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற கவலையைத் தாங்கி இருந்தது.

தனக்கும் புரிந்தது என்பது போல ஒரு சிரிப்பைக் கொடுத்தாள் சுபத்ரா. அவளுக்கு இப்போது மனசெல்லாம் பெரும் குழப்பம். ‘இந்தக் காட்டானுக்கு உண்மையிலேயே இந்த கல்யாண்த்துல சம்மதமா இல்லை அவள் சொன்னது போல தன் சொத்துக்களுக்காகத் தான் இந்த கல்யாணமா? ஆனால் இவர்கள் ஒன்றும் வசதி வாய்ப்பில் குறைந்தவர்கள் இல்லையே தன் பங்கு சொத்து வந்துதான் இங்கு ஆகவேண்டிய கட்டாயம் இல்லையே’ மனம் இரண்டு பக்கமுமாக பட்டிமன்றம் வைத்தது.

இறுதியில் இந்தக் காட்டானைக் கல்யாணம் செஞ்சு தான் என்னவெல்லாம் கடந்து வர வேண்டுமோ என்ற களைப்பு மட்டுமே மிஞ்சியது சுபத்ராவிற்கு. ‘பேசினாலாவது தெரிந்து கொள்ளலாம் அவன் மனதில் என்ன இருக்கு என்பதை. அவன் தான் இவள் இருக்கும் திசைப் பக்கம் கூட திரும்புவதில்லையே. ஒருவேளை காட்டானுக்கு தன்னைப் பிடிக்கவில்லையோ?’

இந்த எண்ணம் தோன்றியதுமே கண்ணைக் கட்டியது சுபத்ராவிற்கு. ஐயோ பிடிக்காத திருமணம் என்றால் அது வாழ்நாள் முழுவதும் கழுத்தில் கட்டிய கல்தானே. இப்போது என்ன செய்வது. “சுமி உங்க அண்ணனுக்கு இந்த திருமணத்துல உண்மையிலேயே சம்மதம் தானே? இல்லைனா மாமா கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்தறாங்களா?” பயம் டண்கணக்கில் வழிந்தது அவள் குரலில்.

“ஐயோ அண்ணி! மஞ்சு சொன்னதைக் கேட்டு டென்ஷனாகிட்டீங்களா? அவ ஒரு லூசு அண்ணி. எங்கண்ணனுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா அதை யாருக்காகவும் செய்யாது. அதே சமயம் ஒரு விஷயம் பிடிச்சுப் போச்சுன்னா யார் தடுத்தாலும் என்ன தடைவந்தாலும் அதை செஞ்சே தீரும். பயப்படாம இருங்க. நல்ல பிள்ளையா போய் சாப்பிட்டுவிட்டு தூங்குவீங்களாம். நாளைக்கு கல்யாணத்துக்கு ஃப்ரெஷ்ஷாக ரெடியாவீங்களாம். சரியா?” என்றாள் சுபத்ராவைத் தேற்றும் விதமாக.

“சுமி! எதுக்கும் உங்கண்ணன்கிட்ட ஒருதரம் இதைப்பத்தி கேட்டுட்டா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும். ப்ளீஸ்பா” சுமித்ராவின் கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சினாள் சுபத்ரா. அவளையே ஒருமுறை ஊன்றிப் பார்த்த சுமித்ரா பின் அவளின் தோள்களைப் பற்றி “சரி அண்ணி நான் போய் அண்ணனை அனுப்பறேன். நீங்க கவலைப்படாமல் இருங்க” என்றுவிட்டு சென்றாள்.

அவள் போய் பத்து நிமிடங்களுக்குள்ளாக வேகவேகமாக வந்து சேர்ந்தான் சூர்யா. வந்தவன் இவளை ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு “என்ன இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திட வேணும்னு நினைப்பா? என் தங்கச்சிகிட்ட உங்கண்ணனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு நீ சொன்னியாமே? நான் அப்படி உங்கிட்ட சொன்னேனா? உன் பின்னாடியே சுத்திகிட்டிருந்தா மட்டும் தான் எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு அர்த்தமா இல்லை, இந்த திருமணத்துல இஷ்டம்னு அர்த்தமா? நீ என்ன முயற்சி பண்ணாலும் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது. போய் நல்லா சாப்பிட்டுத் தூங்கு. காலையில் மணவறைல மீட் பண்ணலாம். பை” என்று கடகடவென்று பேசிவிட்டு திரும்பி நடக்கலானான்.

‘அடேய் நான் எங்கடா இந்த திருமணத்தை நிறுத்தறதைப் பத்தி பேசினேன்? எனக்குமே இந்த திருமணம் நல்லபடியா நடக்கனும்னு தானேடா ஆசை. ஆனா ஒன்னு நிச்சயமாகப் புரிஞ்சிருச்சு. அவனுக்கு இந்த திருமணத்துல சம்மதம் தான். என்ன! காட்டான் கொஞ்சம் ஸ்லோ பிக்கப். பரவாயில்லை பாத்துக்கலாம் சுபா’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். உள்ளம் குதியாட்டம் போட்டது.

மனம் என்னென்னவோ கற்பனைகளில் மூழ்கியபடி துள்ளாட்டம் போட கனவுகளுடனேயே உறங்கச் சென்றாள் சுபத்ரா. நாளை திருமணம். என்னென்ன காத்திருக்கிறதோ இருவரின் வாழ்விலும். பொறுத்திருந்து பார்ப்போமா!!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here