அன்றைய பொழுது ரம்மியமாய் விடிந்தது. அதிகாலைப் பொழுதே சுபத்ராவை எழுப்பி அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால் எழுந்து கொள்ள ஆயிரம் போராட்டம் நடத்தி இருப்பாள். ஆனால் இன்று அப்படி முடியாதல்லவா. இவளைத் தயார் செய்யவென்று சுமித்ராவின் உறவு முறையில் இரு பெண்கள் வந்திருந்தனர். சுமித்ராவும் இதற்குள் இருமுறை வந்து தன் அண்ணியாகப் போகிறவளை பார்த்துச் சென்றாள்.
சுபத்ராவிற்கு ஒரே படபடப்பு. பயமெல்லாம் இல்லை. ஆனால் இதுவரை இருந்த வாழ்க்கை முறை மாறி இனி அவள் எல்லாவற்றிலும் இன்னொருவனைத் தன்னவனாக ஏற்று இன்பத்திலும் துன்பத்திலும் அவன் கைப்பிடித்து எல்லாவற்றிலும் உடனிருக்க வேண்டும். அவன் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து தன் விருப்பு வெறுப்புகளை அவனுக்கு தெரியப்படுத்தி இரண்டையும் இணைத்து சமாளித்து எப்படித்தான் கொண்டு செல்லப் போகிறோமோ என்று மலைப்பாக இருந்தது.
சாதாரணமாக அவள் எதையும் நினைத்து இதுவரை மலைத்ததில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்பவள் தான். ஆனால் இப்போது ஏனோ கொஞ்சம் பதட்டமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் எனக்குப் பொறுமையையும் அனுசரித்துப் போகும் குணத்தையும் கொடு இறைவா என்று காலையிலிருந்து வேண்டியபடி இருந்தாள்.
ஒரே பெண்ணாக செல்லமாக வளர்க்கப்பட்ட தான் எப்படி ஒரு கூட்டுக் குடும்பத்தில் இணைந்து அனுசரித்து வாழப்போகிறோம் என்று அவளுக்கே முதலில் குழப்பமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன் யாராவது அவளிடம் நீ போய் ஒரு கிராமத்தில் போய் தான் செட்டிலாவன்னு சொல்லியிருந்தா சுபத்ரா சிரித்திருப்பாள்.
ஆனால் இப்போதோ மற்ற எவரையும் விட அவள் சூர்யாவுடனான தன் வாழ்க்கையை மிகவும் எதிர்பார்த்தாள். முரட்டுத்தனமான அந்த தோற்றத்துக்குள் இருக்கும் இரசனையான மனதும், பெரியவர்களிடம் அவன் காட்டும் பணிவும், சிறியவர்களின் காட்டும் பாசமிகு ஹீரோத்தனமும், ஆளை மயக்கும் சிரிப்பும், தன்னை மட்டும் பார்க்காமல் அவன் காட்டும் கெத்துமே அவளை அவனிடம் ஈர்த்தது.
இவளை அலங்கரிக்க வந்த பெண்கள் தொணதொணவென்று பேசியபடியே இருந்தனர். அவர்கள் பேச்சில் இந்த ஊரில் சூர்யாவின் குடும்பத்தின் மேலிருந்த மரியாதைப் புரிந்தது. அவர்களில் ஒல்லியாக இருந்த அந்தப் பெண் மல்லிகா விட்டால் காட்டானுக்கு கோவிலே கட்டிவிடுவாள் போல. எடுத்ததுக்கெல்லாம் சூர்யாண்ணா அப்படி எங்க சூர்யாண்ணா இப்படி என்று புகழ்பாடித் தள்ளினாள்.
ஒரு கட்டத்தில் சுபத்ரா அவளிடம் “அம்மா தாயே மல்லிகா! நீங்க உங்க அண்ணாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற நோக்கத்தில் இருக்கீங்கன்னு புரியுது, நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறதுக்கு முன்னாடி நீங்க உங்க அண்ணாவுக்காக மார்கெட்டிங் பண்ணாலும் பரவாயில்லை. ஆனா நான் தான் இப்போ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு மணமேடையில் ஏறப்போறேனே இன்னும் ஏன்?” என்க பாவம் அந்தப் பெண் திருதிருவென விழித்தாள்.
இதற்குள் அங்கே வந்த மேனகா ” வாயைக்குறை சுபா. அவ அப்படித்தான்மா. நீங்க தலையலங்காரம் எல்லாம் செஞ்சு முடிச்சிட்டீங்க போல. அருமையா பண்ணியிருக்கீங்க அலங்காரம். தாங்க்ஸ் மா” என்றார். அந்த பெண்களுக்கு சந்தோஷம் என்பது அவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.
தன்னவன் தேர்ந்தெடுத்த மாம்பழ நிறப்பட்டில் அரக்கு பார்டர் போட்ட புடவையை தழைய தழையக் கட்டி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தேர் போல ஜொலித்தாள் நம் சுபத்ரா. கண்களுக்கு அஞ்சனமெழுதி தலைநிறைய பூவைத்து கரங்களில் பொண்ணும் வைரமுமாய் வளைகள் அலங்கரிக்க ஏதோ தேவதையைப் பார்த்த உணர்வு தான் சுபத்ராவைப் பார்த்தால்.
மேனகாவிற்கும் முத்துராமனுக்கும் தங்கள் மகளை மணக்கோலத்தில் பார்த்ததும் வார்த்தை வரவில்லை. கண்கள் பெருமிதத்தில் குளமாகின. ஆசிகள் வாங்க சுபத்ரா அவர்கள் பாதம் பணிய முத்துராமன் ஆதூரத்துடன் அவளது தலையை நடுங்கும் கரங்களுடன் தடவினார். மேனகா தான் சுதாரித்து சைகை செய்ய முத்துராமன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு பெண்ணை எழுப்பி அணைத்துக் கொண்டார்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து திருமணம் நடக்கவிருந்த மண்டபம் ஐந்து நிமிட நடைதான். அதே தெருவின் முனையில் தான் மண்டபம். இவளை மட்டும் மணப்பெண்ணின் அறையை விட்டுவிட்டு நகரக்கூட விடவில்லை சுபத்ரா. மேனகாவும் சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்த காரணத்தால் மகளைவிட்டு எங்கும் நகரவில்லை.
சற்று நேரத்திற்கெல்லாம் மண்டபம் பரப்பரப்பானது. அதுவே சொல்லியது மாப்பிள்ளை வீட்டார் வந்தாயிற்றென. சுபத்ராவிற்கு இனம்புரியாத ஒரு உணர்வு எழுந்தது. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு பயம் தொற்றிக் கொண்டது. தன்னைப் போலவே காட்டானுக்கும் பதட்டம் பயம் எல்லாம் இருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது.
முகூர்த்த நேரம் நெருங்க இவளை அழைத்து வர சுமித்ராவும் அவளது சித்தி மகளும் வந்தனர். சுமித்ராவிற்கு பார்த்த விழிதட்டவில்லை. விழிவிரித்து இவளையே சந்தோஷமாகப் பார்த்து “அண்ணி எவ்வளவு அழகாயிருக்கீங்க. என் கண்ணே பட்டுரும் போலிருக்கே” என்றபடி தன் கண்ணின் மைதொட்டு இவளுக்கு திருஷ்டி பொட்டு வைத்தாள்.
அவளுடன் வந்தவளோ கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்றாள். சுபத்ராவிற்கு ஒரே கூச்சமாக இருந்தது. இவளை அவர்களிருவரும் பெண்ணழைத்துச் செல்லும் போது மாடியிலிருந்து கீழே மணமேடையில் யாருக்கும் தெரியாமல் தன்னவனைத் தேடினாள் சுபத்ரா.
மணமகனாய் தன் வழக்கமான மிடுக்கோடு வெண்பட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் சூர்யா. “அண்ணி எங்கண்ணா உங்களைப் பார்த்தா கண்டிப்பா ஃப்ளாட்டாகிடுவான்.” என்றாள் சுமித்ரா. இவளல்லவா சுமியின் அண்ணனைப் பார்த்து மொத்தமாக ஃப்ளாட்டாகி இருந்தாள்.
மெல்லிடையாள் அன்னநடை பயின்று நிலம் பார்த்து நாணத்துடன் நடந்து வர அவளைப் பார்த்த அத்துனைப் பேருக்கும் “என்ன அழுகு” என்று தான் தோன்றியது. சூர்யா வெகு நேரம் திரும்பி அவள்புறம் பாராமல் தான் இருந்தான். ஆனால் அவளை அழைத்து வந்து அவனருகில் இருத்தியபின் அவனால் அவள்புறம் பாராமல் இருக்க முடியவில்லை.
எங்கே அவளைப் பார்த்தால் தன்னை எப்போதடா கிண்டல் செய்யலாம் என்று காத்திருக்கும் தன் மச்சான்மார்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்களோ என்று வேறு ஒரே சிந்தனையாக இருந்தது. இருந்தாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் நல்ல நேரமோ என்னவோ அவன் அம்மா அவனருகில் வந்து கழுத்து மாலையை சரிசெய்வது போல குனிந்து “ஏய்யா தம்பி ஏன் இப்படி விறைப்பா உட்கார்ந்திருக்க? என்னாச்சு? எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்கப்பா.” கவலையுடன் கேட்டார்.
அம்மா சொன்னது அவனுக்கு சங்கடத்தைக் கொடுக்க யாரும் எதுவும் சொல்லி அது தன் ஐயாவிடம் காதுக்கு போய் விடக்கூடாதே என்ற பயம் தான். அவனுக்கு அவன் ஐயா தான் எல்லாம். தன் தந்தை சொல் தட்டாத தனயனவன். லேசாக சிரித்தபடியே நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தவன் “ஒன்னுமில்லை மா. கவலைப்படாம போங்க” என்பதாய் சிரித்தபடி சொல்லி அவரை அனுப்பி வைத்தான்.
மெதுவாகத் தலையைத் திருப்பி வெறெங்கோ பார்ப்பது போல மெதுவாக தன்னருகில் அமர்ந்திருந்த சுபத்ராவை பார்த்தான் சூர்யா. விழியகற்ற முடியவில்லை அவனால். அவள் நிறத்திற்கு பொருந்தும் என்று யோசித்து தான் இந்த நிறத்தில் முகூர்த்தப் பட்டு எடுக்க வேண்டும் என்றிருந்தான் அவன். ஆனால் இவளுக்கு இவ்வளவு அம்சமாகப் பொருந்தும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் இப்படி தன்னை ஒரேயடியாக அவளழகில் வீழ்த்துவாள் என்று எண்ணவில்லை அவன்.
கண்களை அவளிடமிருந்து திருப்புவதே அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஆனாலும் சூர்யா உன் கெத்து என்னாகிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு கவனத்தை திருமண மந்திரங்கள் சொல்லும் ஐயர் புறம் திருப்பினான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் அவனுடையவளாகப் போகிறாள். இந்த திருமணத்தை எங்கே அவள் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது.
அதனாலேயே அவளிடம் பேசும் வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தான். எங்கே அவளைப் பார்த்தால் அவளிடம் பேசி விடுவோமோ என்ற பயமே அவள் புறம் திரும்பாமல் செய்தது. அப்படியும் அவள் பார்க்காத வேளையில் அவளை அப்படியே தன் கண்களில் நிரப்பிக் கொள்வான். சூர்யாவைப் பொறுத்தவரை எப்போது முதலில் அவளைப் பார்த்தானோ அப்போதே அவன் மனம் அவள்புறம் சாய்ந்து விட்டது.
அதனால் தான் அவள் எக்காரணம் கொண்டும் இந்த திருமணத்தை நிறுத்த விடக்கூடாது என்ற முடிவில் இருந்தான். அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனம் ஊலல்லா பாடியதை அவனால் தடுக்கவே முடியவில்லை. ‘எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான் சூர்யா, அதன்பிறகு அவள் உனக்கானவள். உன்னவள்’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ‘இவர் இன்னும் எவ்வளவு நேரமா புரியாத பாஷையில் மந்திரங்கள் சொல்லுவார். சீக்கிரமா தாலியைக் கட்ட குடுங்கையா’ மனம் எரிச்சலுடன் கேட்டது.

ஒருவழியாக அத்தனை சாங்கியங்களும் முடிய ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்க சூர்யாவின் கையில் திருமாங்கல்யம் இருந்த தட்டு நீட்டப்பட்டது. சூர்யா திருமாங்கல்யத்தை எடுத்து ‘கடவுளே ஊரறிய உலகறிய இவளை என் துணையாக ஏற்றுக் கொள்கிறேன். இவளுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இவளை நல்லமுறையில் என்னுடைய இறுதிமூச்சு வரைப் பார்த்துக் கொள்வேன்’ என்று உறுதி கொடுத்து அந்த மாங்கல்யத்தை அவள் சங்குகழுத்தில் கட்டினான்.
சுபத்ரா திருமாங்கல்யத்தை வாங்கிக் கொள்ளும் போது ‘ஆண்டவா ஊர் சாட்சியாக உன் சாட்சியாக இவரை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறேன். இவருடைய நன்மை தீமைகளில் பங்கெடுத்து என் இறுதிமூச்சு வரை இணைபிரியாமல் இருப்பேன். இதற்கு நீதான் துணையிருக்க வேண்டுமப்பா’ என்று வேண்டிக் கொண்டாள். சூர்யா சுபத்ராவின் நெற்றியில் திலகமிடுகையில் சிலிர்த்தது இருவருக்கும்.

தன் ஒரே மகளின் திருமண கோலம் கண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் குளமாக மனமார வாழ்த்தினர் முத்துராமன் தம்பதியினர். சூர்யாவின் தந்தையோ முத்துராமனைக் கட்டிக் கொண்டு தன் சந்தோஷத்தைத் தெரிவித்தார். சுமித்ரா சூர்யாவிடம் “அண்ணா ரெண்டு முடிச்சு தான் நீ போடனும். மூணாவது நாந்தான் போடனும். குடுண்ணா. விட்டால் நீயே என் வேலையையும் சேர்த்து பண்ணிடுவியே” என்று வம்புக்கிழுத்தாள்.
“மாப்பிள்ளை இப்படிக் கவுந்திட்டியே! மூணு முடிச்சுதானாம்பா. முப்பது இல்லியாம். இந்த வழியுது. தொடச்சுக்கோ” என்று சுதர்சன் தன் துண்டை எடுத்து நீட்டினான். “அடேய் நல்ல நேரம் பார்த்தீங்கடா என் புள்ளையை கிண்டல் பண்ண. தம்பி! கண்ணு! வாங்க பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றார் சரஸ்வதி.
தனது பெரியய்யா அப்பத்தாவின் கால்களில் விழுந்து ஆசிகள் வாங்கினர் இருவரும். பின்பு இருவரது பெற்றோர்களின் கால்களிலும் விழுந்து வணங்கினர். பின்பு பாக்கியிருந்த மெட்டி அணிவித்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வைபவம் எல்லாம் நடக்க அதன்பின் நேரம் இறக்கைக்கட்டிக் கொண்டு பறந்தது.
சுற்றியிருந்த இளவட்டங்களுக்கெல்லாம் இவர்கள் இருவரையும் கிண்டல் செய்வதில் பொழுது ஒடியது. ஏற்கனவே ரோஜா நிறமாக இருந்தவள் இப்போது இன்னும் இதற்கு மேலும் சிவக்க முடியாதென்பது போல சிவந்து போனாள் வெட்கத்தில். ஒவ்வொரு முறையும் சூர்யாவின் கைகள் உரசும் போதும் அவளுள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
இவன் என்னவன் என்ற எண்ணம் ஒருபுறம் பூரிப்பைக் கொடுக்க, அவனை வைத்த கண்வாங்காமல் பார்த்து சிறுசுகளின் கிண்டல்களுக்கும் கால்வாரல்களுக்கும் ஆளானாள் சுபத்ரா. ‘அடேய் காட்டான் கல்யாணத்துக்கு முன்னாடி தான் என் பக்கம் திரும்பாமல் இருந்த, இனி எப்படி இருக்கன்னு நானும் பார்க்கறேன்’ என்று மனதுக்குள் அவன் காதுகளைப் பிடித்து திருகினாள்.
“சரி சரி ரொம்ப தாளிக்காத என்னை. இன்னிக்கு நைட்டுக்கு கொஞ்சம் மிச்சம் வைக்கலாம்” என்றான் இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில். ‘அடப்பாவி என் மனசுல நினைச்சது இவனுக்கு எப்படிடா கேட்டுச்சு” என்று யோசிக்கும் போதே ‘ஐயோ இன்னிக்கி நைட்டு அதுல்ல?’ என்றும் தோன்ற அவனைப் பார்க்க முடியாத வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.
கல்யாணமான ரெண்டும் கொஞ்சம் லவ்வாங்கீஸா இருக்கட்டும் மக்களே! நாம இவங்க ரெண்டு பேரையும் இப்போ தனியா விட்டுறலாம். அப்புறமா வந்து பார்த்துக்கலாம் சரியா?????????