காதலை சொன்ன கணமே 7

0
253

காதலை சொன்ன கணமே 7

திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக வந்து அன்பளிப்பு கொடுக்கத் தொடங்கினர். சுபத்ராவின் தந்தை முத்துராமனின் சொந்த ஊரும் அதுவே என்பதால் உறவுவட்டம் அனைத்தும் அந்த ஊரிலேயே பெரும்பாலும் இருந்தனர். அவருடைய தொழில்முறை நட்புக்களில் மிக நெருங்கிய சிலர் வந்திருந்தனர். சுபத்ரா வின் தோழிகள் பவானியும் சுமதியும் மட்டுமே வந்திருந்தனர். மற்றதெல்லாம் சூர்யாவின் வீட்டு கூட்டம் தான்.

யார் யாரோ வந்தார்கள். இவர்களுக்கு திருநீறு பூசி அன்பளிப்பு கொடுத்து சூர்யாவிடம் கைகுலுக்கி சென்றார்கள். சூர்யாவும் இவர்கள் யார் என்ன உறவு என்றெல்லாம் இவளிடம் சொன்னான் தான். ஆனால் பாவம் சுபத்ராவிற்கு தான் யாரையும் நினைவில் வைக்கவே முடியவில்லை. சுமித்ரா தான் “கவலையே படாதீங்கண்ணி! எல்லாம் உள்ளூர் தானே. அடிக்கடி பார்ப்போம். அதனால் நிதானமா தெரிஞ்சுக்கலாம்” என்று இவளின் டென்ஷனைக் குறைத்தாள்.

கால்கடுக்க நின்றது வேறு வியர்த்துக் கொட்டி, கால் வலியெடுத்து எப்போதடா ரூமுக்குப் போவோம் என்றிருந்தது. ரூமுக்குப் போய் நல்ல வெந்நீரில் ஒரு குளியல் போட்டால் தான் இந்த அலுப்பு தீரும் என்று தோன்றியது. அதிகாலையே எழுந்து தயாராக வேண்டியிருந்ததால் அது வேறு இப்போது களைப்பாக இருந்தது. இத்தனை இருந்தும் தன்னவனருகில் நிற்பது ஒரு தனி சுகமாகத்தான் இருந்தது அவளுக்கு.

Sav-Lavinia_1961-1|333x500

வந்தவர்களில் நிறைய பேர் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளினர். அவர்கள் பேசும் போது சுபத்ராவிற்கு முகம் சிவப்பதை தடுக்க இயலவில்லை. ஒரு மூதாட்டி வந்து திருநீறு பூசியபின் இவளை அருகே அழைத்து “எங்க ராசாவக் கல்யாணங்கட்டிருக்க. நல்லாருப்ப. எங்க ராசாவுக்கு சீக்கிரமே அவனை மாதிரியே குட்டி ராசா பெத்துக் குடுக்கனும். உம்புருசன் பொறந்ததே என் கையில தான். அதே மாதிரி சத்திருக்கும் போதே உன் பிரசவத்தையும் நானே பார்க்கனும்” என்றார்.

முகம் செவ்வானமாகிப் போனது சுபத்ராவிற்கு. தலைகுனிந்து ஓரக் கண்ணால் சூர்யாவின் முகத்தைப் பார்க்க முயன்றாள். அவனோ கணகாரியமாக யாரையோ எதிர்பார்ப்பது போல் திரும்பிக் கொண்டான். ‘கள்ளன்டா நீ.” மனதுக்குள் கொஞ்சிக் கொண்டாள்.

அதே நேரம் சூர்யா இவள் புறம் திரும்பி லேசாக கண்ணடித்துவிட்டு திரும்பிக் கொண்டான். மனசு ஜிவ்வென்று மேலே மேலே பறந்தது. தான் பார்த்தது நிஜம் தானா? அல்லது தன்னுடைய கற்பனையா? சுபத்ரா குழம்பிப் போனாள். அவனை மறுபடியும் பார்த்தால், அவன் வாசலையே பார்த்தபடி யாரையோ மிகவும் எதிர்பார்ப்பது போல் கர்மசிரத்தையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் இளவயது கும்பல் ஒன்று இவர்களை நெருங்கியது. ஆண் பெண் என இருபாலரும் இருந்தனர். சத்தம் போட்டு ஒருத்தரை ஒருத்தர் கிண்டலடித்துக் கொண்டனர். இவர்களின் அருகில் வந்ததும் சூர்யாவை கட்டிக் கொண்டனர். “வாழ்த்துக்கள் டா மச்சி. எங்கே நீ சாமியாரா போயிருவியோன்னு நினைச்சேன். நல்லவேளையா கல்யாணம் பண்ணிட்ட. வாழ்த்துக்கள் சிஸ்டர்.” என்றான் ஒரு வளர்ந்து கெட்டவன்.

“டேய் நம்மெல்லாம் யாருன்னே சொல்லாம சும்மா வாழ்த்துக்கள் மட்டும் சொன்னா போதுமா? சிஸ்டர் நாங்களெல்லாம் உங்க சூர்யா கூட ஒன்னா படிச்சோம்” குள்ளமாக இருந்த ஒருவன் சொன்னான். “தாங்க்ஸ்” சிநேகமாக சிரித்தபடி சொன்னாள் சுபத்ரா.

சூர்யா இவள் புறம் திரும்பி “இவங்களெல்லாம் என்னுடன் பிஜி படிச்சவங்க. இது அஷோக், சிவா, தனுஷ், விநாயகம், சக்கிரவர்த்தி, பாலா, ஷோபா, கீதா, மனிஷா, அனு” வரிசையாக எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். “தீப்தி மட்டும் மிஸ்ஸிங். நாங்க எவ்வளவோ கூப்பிட்டு பார்த்திட்டோம். வரமாட்டேன்னு சொல்லிட்டா” என்றாள் அனு.

“அவ எப்படி வருவா? ரெண்டு வருஷமா லவ் பண்ணவளுக்கு வலி இருக்கத் தானே செய்யும்” என்ற கீதாவின் வாயைப் பொத்தியபடி அவளை அந்த பக்கம் தள்ளிக் கொண்டு போனாள் மனிஷா. “சாரிபா. அவ ஏதோ உளர்றா. நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க. எங்க ஃப்ரெண்ட் சூர்யா ரொம்ப லக்கி. அவன் ரொம்ப பேச மாட்டான். ஆனா பாசக்காரன். ரொம்ப கோவக்காரனும் கூட. நீங்க தான் பார்த்து அவனை சமாளிக்கனும. ஆல் தி பெஸ்ட். ” என்றாள் ஷோபா.

சிரித்த முகத்துடன் நின்றாலும், உள்ளுக்குள் அணுவுலை கொதிக்க ஆரம்பித்தது. ‘யாரந்த தீப்தி? ரெண்டு வருஷக் காதலாமே? இவனும் லவ் பண்ணியிருப்பானோ?’ மனசுக்குள் வண்டு குடைய ஆரம்பித்தது. ‘அடியேய்! தாலி கட்டி முழுசா ரெண்டு மணிநேரம் கூட ஆகல. அதுக்குள்ள சந்தேகமா? இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல? இந்த காட்டானாவது காதலிப்பதாவது?’ மனசாட்சி டூயல் ரோல் போட்டு அந்த பக்கமும் பேசியது.

இருந்தாலும் மனசை அரித்துக் கொண்டே இருக்க ‘ சரி எங்க போகப் போறான்? அவன்கிட்டயே அப்புறமா கேட்டுக்கலாம். அப்படியே லவ் பண்ணியிருந்தா தான் என்ன? இப்போ அவளைக் கல்யாணம் பண்ணலையே? உன்னைத் தானே பண்ணியிருக்கான். இவனெல்லாம் ரொமேன்ஸ் பண்ணியிருப்பான்? ம்ஹும் சந்தேகம் தான்’ அவனைப் போட்டு மனசுக்குள்ளே தாளித்து எடுத்தாள். இருந்தாலும் அவனைப் பார்க்க ஒரே பெருமிதமாக இருந்தது. இவன் என்னவன் இனி!!!!!!!

SAVE_20190324_192251|690x460

இது எதுவுமே தெரியாத சூர்யா அங்கே நண்பர்களின் கிண்டலில் சிரித்துக் கொண்டிருந்தான். அவனின் நண்பன் சிவா அவனிடம் ஏதோ சொல்ல அவன் சட்டென்று பார்வையை சுபத்ராவின் புறம் திரும்ப அவளும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய சிரித்துக் கொண்டே திரும்பினான். ‘இவ என்னடா இப்படி நம்மளையே வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறா? இப்படி எல்லாம் பார்க்காதடி. முட்டக்கண்ண வச்சு முழிச்சுப் பார்க்கிறதப் பாரு.’ சிந்தனை தாறுமாறாக ஓடியது.

பேசிக்கொண்டே இருந்த நண்பன் திடிரென மௌனம் காக்கவும் என்னவென்று பார்த்த சிவா இவன் பார்வை சென்ற திசையைக் கண்டதும் “டேய் இங்க பாருங்கடா. மாப்பிள்ளை எப்படி சைட் அடிக்கறான்னு.” என்று மற்றவர்களையும் துணைக்கழைக்க எல்லோருமாகச் சேர்ந்து அங்கு அவனைக் கிண்டல் செய்து ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.

இதற்குள் சுதர்சன் வந்து இவர்கள் கும்பலை சாப்பிடுவதற்கு தள்ளிப் சென்றான். சுமித்ரா வந்து இருவருக்கும் பழரசம் கொடுத்து “எப்படியும் யாராவது வந்துகிட்டே தான் இருப்பாங்க. நீங்க சாப்பிட போக இன்னும் டைமாகும். அதனால இதைக் குடிச்சிட்டு தெம்பா நில்லுங்க ரெண்டு பேரும்.” என்றாள். ‘தெய்வமே!’ என்று அவளைக் கட்டியணைத்துக் கொள்ளத் தோன்றியது சுபத்ராவிற்கு.

அவள் போனதும் இவளருகில் நெருங்கி வந்த சூர்யா “ஏய் ஜில்லு! என்னதுக்கு என்னை அப்படி முறைச்சுப் பார்த்த?” என்றான். ‘அடப்பாவி! நான் எங்கடா உன்னைப் பார்த்து முறைச்சேன். சைட்டுக்கும் முறைக்கிறதுக்குமே வித்தியாசம் தெரியாத பச்சப்புள்ளையா இருக்கானே!’ மனசுக்குள் நொந்து நூடுல்ஸாகிப் போனாள் சுபத்ரா. “நானு? உங்களை முறைச்சுப் பார்த்தேன்? சுத்தம்!!!!! ஆமா அதென்ன ஜில்லு?!” என்றாள் அவள்.

“என்ன! என்ன ரொம்ப சலிச்சுக்கற?” என்றான். “இல்லை, நான் உங்களைப் பார்த்தது முறைக்கிற மாதிரியா இருந்துச்சு?” என்றாள். ‘டேய் சூர்யா! உஷார் டா. இவ அந்த லூசு கீதா உளறினதால கோபமா முறைச்சாளோன்னு நினைச்சது தப்பு போலயே. எதுவும் தெரியாம நீ ஏதாவது சொல்லி வைக்காத.’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “சரி அதென்ன ஜில்லுனு?” என்று திரும்பவும் கேட்க சூர்யா தற்காலிக செவிடானான்.

பதிலுக்காக அவனையேப் பார்த்து நின்ற சுபத்ராவிடம் மேனகா வந்து “சுபாம்மா சாப்பிட போகலாம் வாங்க” என்று இருவரையும் அழைத்துச் சென்றார். இவர்கள் மேடையிலிருந்து இறங்கும் போது எதிர்த்தாற் போல் இவளையே எரித்து விடுவது போல முறைத்துக் கொண்டே வந்தாள் மஞ்சு. திடீரென சூர்யாவுடன் நெருங்கி நடக்க தொடங்கினாள் சுபத்ரா.

சூர்யாவுக்கு பயங்கர ஆச்சர்யம். என்னடா திடிரென இவ்வளவு பாசம் இந்த மேடத்துக்கு. இவ இப்படியெல்லாம் பண்ற ஆளில்லையே என்பதாய் தன் பார்வையை நாலா பக்கமும் சுழற்ற அவனெதிரே நின்ற மஞ்சுவைக் கண்டவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் இவள் புறம் திரும்பி “இவ தான் இப்போ நீ என்கிட்ட ஒட்டி நடக்க காரணமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

‘அடப்பாவி! கரெக்டா கண்டுபிடிச்சிட்டானே’ என்று தோன்றினாலும் விலகாமல் அவனுடன் இணைந்தே நடந்தாள். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஓரிரு முறை இவனைப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒருமுறை அப்படி நடக்கும் போது சூர்யா இவளிடம் “அந்த மஞ்சு இங்கேயே இப்படியே சுத்திக்கிட்டிருந்தா நல்லா தான் இருக்கும்” என்றான் விஷமமாக.

‘இருக்குமே நல்ல்ல்ல்லா இருக்கும்’ பொருமியபடி அவன் கையில் சந்தடிச் சாக்கில் நன்கு அழுத்திக் கிள்ளினாள். பின்பு ஒன்றுமே தெரியாதது போல் திரும்பிக் கொண்டாள். வலி தாளாது சூர்யா “அம்மா” என்று துள்ள சற்று தள்ளி நடந்து கொண்டிருந்த மேனகா “என்னாச்சு மாப்பிள்ளை” என்று பதற “ஹிஹி ஒன்னுமில்லை அத்தை. கூட்டத்துல யாரோ காலை மிதிச்சிட்டாங்க” என்று கேவலமாக சமாளிக்கும் நிலைமை சூர்யாவுக்கு.

சுபத்ரா வேறு புறம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். இவர்களை அழைத்துச் சென்று காலியாக இவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமர வைத்தார். சுபத்ராவிற்கு நேரெதிரே வந்து நின்றாள் மஞ்சுளா. எரிக்கும் பார்வை பார்த்தபடி இவளையே முறைக்க இவளோ வேண்டுமென்றே சூர்யாவை நெருங்கினாற் போல் அமர்ந்து அவனிடம் ஏதோ சிரித்தபடி பேசினாள்.

இவளின் திடீர் அக்கறையின் காரணம் புரியாவிட்டாலும் சூர்யாவுக்கு உள்ளுக்குள் ஒரே குதூகலம் தான். மேடம் எங்கே பேசறதுக்கே மூனு மாசம் ஆக்குவாளோன்னு பயந்தவனுக்கு சுபத்ராவின் இப்போதைய நடப்பு சந்தோஷச் சாரலானது. இதற்குள் இவர்கள் அருகில் வந்த நண்பர்கள் கூட்டம் இவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய சுபத்ரா வெட்கத்தில் சிவந்தே போனாள்.

உண்டு முடித்து கைகழுவ போகும் அங்கே இவளுக்கென்றே காத்திருந்தாற் போல் நின்ற மஞ்சு இவளை வழிமறித்து “என்னுடைய வயிறெரிச்சலில் உன் வாழ்க்கையை தொடங்குகிறாய் சுபத்ரா. நீ எப்படி சந்தோஷமாக வாழ்கிறாய்னு நானும் பார்க்கத் தானே போறேன். கூடிய சீக்கிரம் நீ அழப் போற. நான் சிரிக்க போறேன். பார்க்கலாம்” என்று கண்களில் வெறி மின்ன கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன்னே அவள் கடந்து சென்று விட சுபத்ரா அதுவரை இருந்த சந்தோஷம் அத்தனையும் வடிந்து போயிற்று. முதலில் தோன்றியதென்னவோ ‘இவ என்ன லூசா?’ என்று தான். ஆனால் மெதுவாக யோசித்துப் பார்த்தால் ‘இவளுக்கு இந்த காட்டான் மேல் அவ்வளவு லவ்வா? அதுக்கு நான் பலியா?’ என்று ஆயாசமாக வந்தது.

கைகழுவச் சென்றவள் திரும்பி வரும்போது முகம் ஆயிரம் குழப்பங்களை ஏந்தி வர ‘அதுக்குள்ள என்னடா நடந்துச்சு? நல்லா தானே இருந்தா? இப்போ ஏன் முகத்தை மூனு முழத்துக்கு தொங்கப் போட்டுருக்கா?’ ஒன்றும் புரியாம
முழித்து நின்றான் சூர்யா.

இனி தான்டி மாப்பிள்ளை இருக்கு உனக்கு…… விதி வலியது!!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here