கல்யாண வீட்டிற்கே உண்டான உற்சாகக் குரல்கள் எங்கும் நிறைந்திருக்க சூர்யாவையும் சுபத்ராவையும் நல்ல நேரம் பார்த்தே வீட்டிற்கு அழைத்து வந்தனர். சூர்யாவிற்கு எப்போதடா தன்னவளுடன் தனித்திருப்போம் என்று இருந்தது. அவனுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டி இருந்தது. தன்னைப் பற்றி, தன் குடும்பத்திலுள்ளவர்களைப் பற்றி, தன் விருப்பு வெறுப்புகளை பற்றி, இப்படி நிறைய.
சுபத்ராவோ கொஞ்சம் குழப்பத்துடனே தான் காணப்பட்டாள். முதலில் இந்த மஞ்சுளா வந்து பீதியைக் கிளப்பினாள். அப்புறம் தீப்தி. இவன் என்ன பெரிய மன்மத ராஜனா. ஆளாளுக்கு இவன் பின் சுற்றுவதற்கு. ஒருவேளை இவன் ப்ளேபாயோ? குப்பென்று வேர்த்தது நினைக்கையிலே.
‘ச்சேச்சே! அப்பா தனக்கு அப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்த்திருக்க மாட்டார். அவருடைய சொந்த ஊர், சொந்தக்கார மனிதர்கள் என்று தானே தன்னை இங்கே கூட்டி வந்து திருமணம் செய்வித்திருக்கிறார். குடும்பமும் நல்லவிதமாகத் தானே தெரிகிறது. பார்க்கலாம். ஏதாவது ஏடாகூடம் செய்தால் அப்புறம் தெரியும் இவனுக்கு இந்த சுபத்ரா யாரென்று’ மனசுக்குள் எண்ணிக் கொண்டாள்.
சாப்பிட்டு விட்டு இவர்கள் வரும் போது வழியில் ஒரு வயதான பாட்டி இவள் கைகளைப் பிடித்து “என்னம்மா நல்லா சாப்பிட வேண்டாமா? இப்படி கொறிச்சிட்டு வரியே? நல்லா சாப்பிட்டாதானே தெம்பாக இருக்கலாம்? எங்க ராசாவுக்கு ஏத்தா மாறி ஆக வேணாமா?” என்றார். நேரம் காலம் தெரியாமல் இவளுடைய தோழி பவானியும் “இல்லையே இவ நல்லா சப்பியா தானே இருக்கா?” என்க அதற்கு அந்த பாட்டியோ “சப்பி தான் மா இருக்கா. அதான் நல்லா சாப்பிட சொன்னேன்” என்றார்.
அருகில் நின்றவன் சிரித்து விட்டான். சுபத்ராவிற்கோ ‘என்னடா நடக்குது இங்கே. நம்மளை வச்சு காமெடி பண்றாங்களோ?’ நிலை தான். பவானி எங்கே தானங்கு நின்றால் தனக்கு அடி விழுமோ என்ற பயத்தில் மெல்ல நகன்று விட்டாள். சுமித்ரா தான் வந்து நிலைமையை சீராக்கினாள். இருந்தும் சூர்யா இவள் புறம் திரும்பும் போதெல்லாம் தன் சிரிப்பை கட்டுப்படுத்த கஷ்டப்படுவதைப் பார்த்து ‘அடியேய் கெழவி! கையில் கிடைச்சே. இருக்கு உனக்கு. கையிலே சிக்குனா சின்னாபின்னம் தான்’ என்று பொருமினாள்.
சுபத்ராவின் முகமே சொன்னது அவள் கொலைவெறியில் இருந்தாள் என. ஒருபக்கம் ஊரில் என்னவோ இவன் மட்டுமே அழகன் என்பது போல் எல்லோரும் சூர்யாவையே வட்டமிடுவதும், இன்னொரு புறம் இந்த வயதான பாட்டி வந்து தன்னையே சப்பி போனவள் என்றதும்….. ‘ஷப்பா!!!! முடியலயே ஆண்டவா!’ காய்ந்து கொண்டாள்.
சுமித்ரா தான் சுபாவை மனமறிந்து நன்கு பார்த்துக் கொண்டாள். இவர்கள் இருந்த இடத்தில் இளவட்டங்கள் சூழ்ந்து கொள்ள பழையபடி கேலியும் கிண்டலுமாக கலகலப்பாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரின் பெயரும் தெரிந்து கொள்ள முடிந்தது. அறிமுகமும் கிடைக்க ஏதோ கல்லூரிக் காலத்தில் நட்புக்களோடு செலவழித்த தினங்கள் நினைவுக்கு வந்தது.
என்னதான் எல்லோரும் ஒன்றாக கூடி கிண்டல் செய்தபடி இருந்தாலும் சூர்யா மட்டும் வேண்டுமென்றே இவளையே பார்த்தபடி இருந்தான். முதலில் கள்ளப் பார்வை பார்த்தபடி இருந்தவன் பின்பு சற்று நேரம் சென்றபின் வெளிப்படையாகவே பார்க்கத் தொடங்கினான். சுதர்சன் என்னவோ வந்து சூர்யாவிடம் பேச அவனோ அதைப் பற்றி எல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
“மாப்பிள்ளை! டேய் மாப்பிள்ளை! இந்த உலகத்திலேயே இல்லையா நீ? என்னடா சுதர்சனா உனக்கு வந்த சோதனை இது!” புலம்பிய படி நகர்ந்தான். சுபத்ராவிற்கு தர்மசங்கடமாகப் போயிற்று. ஒருவேளை தன் முகத்தில் ஏதும் மை கசிந்தோ அல்லது மேக்கப் கலைந்தோ பார்க்க விநோதமாக இருக்கின்றோமோ அதனால் தான் இவன் இப்படி பார்க்கிறானோ என்ற எண்ணம் வரும் சுமித்ராவிடம் “சுமி! என்னோட ஃபேஸ்ல ஏதாவது வித்தியாசமா இருக்கா?” என்றாள்.
“ஏன் அண்ணி! நல்லா இருக்கீங்க. வேறெதுவும் இல்லையே! என்ன ப்ர்ச்சனை?” என்றாள். ‘இவளிடம் எப்படி சொல்ல உங்கண்ணன் அங்கேயிருந்து முழிச்சு முழிச்சு பார்த்திட்டு இருக்கார்னு’ என்று தோன்றியது. தன்னருகே நின்ற தன் அத்தை மகளைக் கூப்பிட்டு “சக்கு! கொஞ்சம் அண்ணிகூட இங்கே நிக்கறியா? நான் போய் அம்மாவைப் பார்த்திட்டு வரேன்” என்று கேட்டு சுபத்ராவிற்கு தனது அத்தையை மகளான சகுந்தலாவை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு சென்றாள் சுமித்ரா.
சுமித்ரா சென்று வெகு நேரத்திற்கு சகுந்தலா எதுவுமே பேசாமல் இருக்கவும் தானே அவளிடம் பேசி நட்பு வளர்க்க முடிவு செய்த சுபத்ரா “நீங்க படிக்கிறீங்களா?” என்றாள். “ஆமாம்கா. நான் இப்போ தான் காலேஜ் சேர்ந்திருக்கேன். எங்க ஊர்ல பொதுவா பொண்ணுங்களை மேல் படிக்க வைக்க மாட்டாங்க, ஆனா சூர்யா அத்தான் தான் எங்களை படிக்க வைச்சே ஆகனும்னு போராடி சேர்த்து விட்டார்” என்றாள்.
அவள் சொல்லும் போதே சுபத்ராவிற்கு ரொம்ப பெருமையாக இருந்தது. ‘பரவாயில்லையே நம்ம ஆள் இந்த மாதிரி முற்போக்கான எண்ணம் உள்ளவன் தானா? ஆனா இன்னுமா இந்த மாதிரி ஊர்களில் பெண்களை படிக்க வைக்காம இருக்காங்க?’ என்று தோன்ற அதை சகுந்தலாவிடம் கேட்டே விட்டாள் சுபா.
“பொதுவா படிப்புக்கு எதிரியெல்லாம் இல்லைக்கா. ஆனா ஊர்லேருந்து சரியா பஸ்வசதி இல்லை. மேலே படிக்கனும்னா பஸ்ஸேறி தான் போகனும். இல்லைனா நாலு கிலோமீட்டர் சுத்தி நடந்து போயிட்டு வரனும். பாதுகாப்பு அவ்வளவா இல்லை. அதான் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க யோசிப்பாங்க. கொஞ்சம் வசதியில்லாதவங்க உடனே கட்டிக் கொடுத்திருவாங்க. எங்கத்தான் தான் இந்த முறை வண்டி ஏற்பாடு பண்ணி எங்களை படிக்க அனுப்பி வைக்கிறார்” என்றார் பெருமை ஜொலிக்கும் முகத்துடன்.
‘என்னடா இது சுபத்ராவுக்கு வந்த சோதனை. ஒரு பக்கம் ஒரே லவ்வர்பாய் மாதிரி எல்லா பொண்ணுங்களும் மொய்க்கிறாங்க. இன்னொரு பக்கம் இந்த காட்டான் அப்படியே ஹீரோ மாதிரி நடந்துக்கிறான். சுபா! நீ அவனைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். தான் போ’ என்றே தோன்றியது.
அந்த பெண் சகுந்தலாவிடம் பொதுவான விஷயங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த மற்றொரு பெண் சுபத்ராவையே முறையோ முறையென்று முறைத்தாள். ‘வாங்க அடுத்து நீங்களா? உங்களுக்கு நான் என்ன செஞ்சேன்? அடேய் நல்லவரே! இத்தனை பேராடா உன்னை சைட் அடிப்பாங்க? நான் என்னவோ உன்னை தூக்கிட்டு வந்து தாலி கட்டினா மாதிரி ஆளாளுக்கு வந்தது முறைக்கிறாளுக. ஓவர் சீன்டா இதெல்லாம்’ சூர்யாவை நன்கு துவைத்து காயப்போட்டு இஸ்திரி செய்து வைத்தாள் சுபா.
“சக்கு! என்னா வெட்டிப் பேச்சிங்கே? அதான் சொந்தத்துல பொண்ணெடுத்தா என்னவோ பெரிய குறை வரும்னு ஊரில் இல்லாத அழகியாக பார்த்து கட்டிக் கொண்டு வந்திருக்காங்கன்னு நீ இங்கே வந்து இவங்களை வாய் பார்க்க உட்கார்ந்துட்டியா? நம்ம சொந்தமெல்லாம் இவங்களுக்கு எதுக்கு இனி. வா போகலாம்” என்றபடி முரட்டுத்தனமாக அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தாள் மற்றவள்.
“ஐயே பொறாமைல வேகாதே. போ போ நான் வரல. இந்தக்கா கூட பேசிகிட்டிருந்திட்டு வரேன். நீ போ.” என்று அவள் கையைத் தட்டிவிட்டு விட்டு சுபத்ரா வின் பக்கம் திரும்பி “நீங்க ஒன்னும் கண்டுக்காதீங்க. அவ எங்க பெரிய்ப்பா பொண்ணு லெட்சுமி. சூர்யாத்தான்னா இஷ்டம் அதுக்கு. இப்போ சூர்யாத்தான் உங்களைக் கட்டிக்கிச்சா, அதான் இது வேகுது.” என்றாள் சிரித்தபடி.
“ஆமாம். ஊர்ல இல்லாத மாப்பிள்ளை உங்க நொத்தான் பொத்தான் தான் போடி. அவங்க தான் சொந்தமே வேண்டாங்கறாங்க. இவ என்னவோ போய் இழையறா. வராட்டி போ. உனக்கெல்லாம் அசிங்கப்பட்டா தான் தெரியும். வேகுதாம்ல. எனக்கு ஏன் வேகுது” பொரிந்து தள்ளிவிட்டு கடந்து சென்றாள் அந்தப் பெண்.
‘அடப்போங்கடா! இதே வேலையாப் போச்சு! இன்னும் எத்தனை பேரு வந்து எம்புருஷன் அவங்களைக் கட்டிக்கலைன்னு வம்பிழுத்திட்டு போகப் போறீங்களோ. அடேய் மன்மதா! போ போ இதுக்கெல்லாம் நான் ஆளில்லை. இதுவரைக்கும் எப்படியோ இருந்திட்டு போ, மகனே இனி எவளாவது வந்து உரிமை கொண்டாடினா, அப்போ இருக்கு உனக்கு” கருவத்தான் முடிந்தது சுபத்ராவால்.
இவளது முகமாற்றத்தைக் கொண்டே இவளின் கோபத்தைப் புரிந்து கொண்ட சூர்யா அந்தப் பக்கத்தில் இருந்து வேண்டுமென்றே கண்ணடித்து இவளை இன்னும் கடுப்பேற்றிக் கொண்டு இருந்தான். ‘இவன் எப்பவாவது இப்படியா, இல்லை எப்போவுமே இப்படித்தானா?’ சந்தேகமாய் சுபா முழிக்க அந்த சகுந்தலாவோ இவளிடம் “அக்கா எங்க சூர்யாத்தான் பொதுவாக எந்த பொண்ணுங்ககிட்டயும் பேசாது. வாலு தான், ஆனா அது பசங்ககிட்ட மட்டும் விளையாடும் பேசும். இது எப்படி கல்யாணம் கட்டிகிட்டா இதோட பொண்டாட்டிகிட்ட பேசும்னு நாங்கெல்லாம் கிண்டல் பண்ணுவோம். உங்க கிட்ட இப்போ வரைக்கும் பேசிச்சா?” என்றாள் அப்பாவியாக.
சுபத்ரா அவளிடம் “இல்லையேமா! என்கிட்ட உங்கத்தான் இன்னும் பேசலியே” என்றாள். “அதெப்படி பேசாம இருக்கமுடியும்கா. எப்படியும் உங்ககிட்ட பேசித்தானே ஆகணும். நல்லா மாட்டிக்கிச்சு எங்கத்தான். நீங்க தான் நல்லா பார்த்துக்கணும் எங்கத்தானை” என்றாள் பெரிய மனுஷி தோரணையில். மிஞ்சிப் போனால் பத்தொன்பது வயதிருக்கும் இவளுக்கு. எவ்வளவு வெள்ளந்தியாக பேசுகிறாள் இந்தப் பெண் என்றே தோன்றியது சுபாவுக்கு.
என்ன தான் ஒரு ஓரத்தில் மஞ்சுளா, தீப்தி, லெட்சுமி என்று வரிசையாக வலம் வந்தாலும் “இனி அவன் என்னவன். எனக்கு மட்டுமே சொந்தமானவன். எங்களுக்கான வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடமில்லை. நான் என்னவனுடன் இணைந்து இந்த குடும்பத்தில் ஒரு அங்கமாகி வாழ்ந்து என்னைப் பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவேன்” என்று நினைத்து உறுதி எடுத்துக் கொண்டாள்.
இதற்குள் இவளுடைய அம்மாவின் உறவு வழியில் இருந்து சிலர் வந்திருந்தனர். இவளது அம்மாவின் அண்ணன் மகனும் தங்கை மகள்களும் சூர்யாவையே சுற்றிச் சுற்றி வந்து தங்கள் மகிழ்ச்சியை காட்டினர். ஆனால் இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் என்னவோ சூர்யாவின் கண்களில் இல்லை இப்போது.
சுபத்ராவிற்கு காரணம் புரியவில்லை. அவனைப் பார்த்தால் எதிலோ தோற்றுவிட்டவன் போல் முகத்தை தொங்கப் போட்டபடி அலைந்தான். வீட்டிற்கு சென்று பின் தனிமை கிடைக்கும் போது முதல் வேலையாக இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள் சுபத்ரா. இதற்குள் சூர்யாவின் அம்மாவும் மேனகாவும் எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து நல்ல நேரத்தில் இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சுபத்ராவை வீட்டினுள் அழைக்கும் முன் சுமித்ராவும் சகுந்தலாவுமாகச் சேர்ந்து ஆலம் சுற்றியெடுத்து சூர்யாவிடம் பைசாவுக்குச் சண்டை போட்டு கலகலத்து உள்ளே நுழைந்தனர். சுபத்ராவை சூர்யாவின் அப்பம்மா சாமியறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தார். ‘கடவுளே! நான் இந்த வீட்டில் இருக்கும் அனைவருடனும் எனது இன்ப துன்பங்களைப் பகிர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று மனமுருக வேண்டிக் கொண்டாள் சுபா.
சுபத்ராவை சுமி தன்னறைக்கு அழைத்துச் சென்று அமர்ந்து வைத்தாள். இனி இரவு நேரச் சாப்பாட்டிற்குப் பின்னே தான் இவர்களை சூர்யாவின் அறைக்கு அனுப்பி வேண்டும் என்பதால் “அண்ணி நீங்க நல்லா ரிலாக்ஸாக இருங்க. காலையிலிருந்து அலுப்பு அதிகமா இருக்கும். நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்றபடி வெளியே செல்லவும் இதற்கென்றே காத்திருந்தாற் போல் சூர்யா அந்த அறைக்குள் நுழைந்தான்.
அவனிடம் காலையிலிருந்து காணப்பட்ட சிரிப்பு மிஸ்ஸிங். ஏனோ முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வந்தவன் “இங்க பாரு ஜில்லு! என்னாலெல்லாம் இந்த ஊரைவிட்டு என் சொந்தங்களை விட்டு வரமுடியாது. ஒரு வேளை என்னைப் பிரிச்சு கொண்டு போகனும்னு நினைச்சா அதை நீ மறந்திரு. நீயும் என்னை விட்டு இங்கிருந்து போக முடியாது. தெரிஞ்சுக்கோ. உனக்கு இனி வாழ்வோ சாவோ அது என்னோட தான். என்னை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. ஞாபகம் வச்சுக்கோ.” என்று கடகடவென்று சிறுபிள்ளை போல் ஒப்பித்து விட்டு ஓடியே போய்விட்டான்.
அடித்து வைத்துள்ள சிலையாய் சமைந்து போனாள் சுபத்ரா…..