காதலை தேடி – 11

0
294

ஹாய் நட்புக்களே!!!!! #காதலைதேடி அடுத்த பதிவு போட்டாச்சு… படிச்சுட்டு அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லுங்க தங்கங்களா …

காதலை தேடி – 11

“தனது அறையில் இருந்து வெளியே வந்த வினோத், “காவ்யா என்ன இது? இந்த நேரத்துல மாடிக்கு வந்துருக்க? அதுவும் தனியா. யாரவது பார்த்தா தப்பா பேசமாட்டாங்களா?”

“வினோத் வீட்ல சண்டையாமே? உங்க அப்பா உன்னை ரொம்ப பேசிட்டாங்கனு சுகுமார் சொன்னான்”.

“அதை கேட்க இதுவா நேரம்? நீ மொதல்ல கீழே போ”.

“நான் மெசேஜ் பண்ணா நீ பார்க்கல. கால் பண்ணாலும் எடுக்கல. அதுதான் மேலே வந்தேன்”.

“சரி எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். நீ கிளம்பு”.

“என்னை அனுப்பறதுலேயே குறியா இருக்க”.

“சொன்னா புரிஞ்சிக்கோ காவ்யா. யாரவது பார்த்தா தப்பாயிடும்”.

“பரவால்ல வினோத்”.

காவ்யா சொன்னா கேளு. நீயும் என்னை கஷ்டப்படுத்தாத என சொல்லும் போது அவனின் குரல் உடைய, “ஏய் வினோத். நீயா இப்படி வருத்தப்படுற? எப்போதுமே தைரியமா இருப்பியே. இன்னைக்கு என்னாச்சு?”

என்னால முடியல காவ்யா. நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்கறது? எனக்கு பிடிச்சதும் செய்யமுடியாம, எங்க அப்பாவுக்கு பிடிச்சதும் செய்யமுடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு.

இன்னைக்கு கூட எங்க அப்பாவ எதிர்த்து பேசணும்னு எனக்கு எண்ணமில்லை. ஆனால் நான் அவர் சொன்னது எதுவும் செய்யலன்னு சொன்னதும் அப்படியில்லைனு விளக்க போய், நான் எதிர்த்து பேசுறேன்னு சொல்லி என்னை அடிச்சுட்டாரு. அவர் அடிச்சது கூட வலிக்கல காவ்யா. ஆனால் அவர் சொல்ற பேச்சை கேட்டு தானே எனக்கு பிடிக்கலானாலும் ஐ.ஏ.ஸ் பரீட்சைக்கு படிச்சிட்டு இருக்கேன். நானும் எவ்ளோவோ கஷ்டப்பட்டு தான் படிக்குறேன். ஆனால் என்னால தேர்ச்சி ஆக முடியலையே.

எனக்கு பிடிச்ச மருத்துவம் படிக்காம அவருக்கு பிடிச்ச பொறியியல் படிச்சேன். சரி படிச்சிட்டு வேலைக்கு போகலாமன்னு பார்த்தா இந்த பரிட்சைக்கு படின்னு சொன்னாரு. நானும் அவரோட ஆசையை நிறைவேத்தணும்னு தான என்னோட கனவை கூட மறைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டிங்குறாரே.

சரி விடு வினோத். அங்கிளுக்கு சொல்லி புரியவச்சுடலாம். நீ வருத்தப்படாத. எல்லாம் சரியாகிடும்.

எனக்கு நம்பிக்கை இல்லை காவ்யா. இவரோட ஆசைக்காக நான் என்னோட வாழ்க்கையே தொலைச்சிடுவேனோனு பயமா இருக்கு.

ஏய் வினோத். நீ என்னை இவ்ளோ யோசிக்கிற? அதெல்லாம் ஒன்னும் நடக்காது.

உனக்கு தெரியாது காவ்யா. ஒரு வேலைக்கு போகாம, என்னோட காதலை கூட எனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட என்னால சொல்ல முடியல.

என்னது காதலா? என காவ்யா அதிர, மன உளைச்சலில் இருந்த வினோத் தான் பேசியதை அறியாமல் தொடர்ந்தான். அவனின் நிலைமை கண்டு காவ்யாவும் அமைதியாக அவன் புலம்புவதை கேட்டு கொண்டிருந்தான்.

காவ்யாவிடம் பேசியவுடன் தன் மனம் சற்று லேசாகியிருப்பது போல் வினோத் உணர்ந்தான். “என்னை மன்னிச்சுடு காவ்யா. உன்னை வேற இந்த நேரத்துல நிக்க வச்சு பேசிட்டியிருக்கேன்”.

நல்ல வேளை. இப்போவாது என்னை பார்த்தா உனக்கு பாவமா தெரிஞ்சுதே. எனக்கு காதுல இருந்து இரத்தம் வராத குறைதான் உன் புலம்பலை கேட்டு என அவனின் மனதை திசை திருப்ப எண்ணி கேலி பேச அதை உணர்ந்த வினோத்தும் “நான் உன்னை அப்போவே போக சொல்லிட்டேன். நீ தான் அடம்பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்கே. இவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டதுக்கே எனக்கு நீ நன்றி சொல்லணும்”.

“அது சரி. பாவம் பையன். வருத்தப்படுவானேன்னு ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன் பாரு என்னை சொல்லணும்”.

“ஆனா காவ்யா,எங்க அப்பாவுக்கு தான் நான் நன்றி சொல்லணும்”.

“எதுக்கு? உன்னை ஒரு அடியோடு விட்டதுக்கா?”

“அவரு அடிச்சதால தானே நீ இப்போ என்கூட பேசிட்டு இருக்க”. மேடம்க்கு எத்தனை மெசேஜ், கால்… ஒண்ணுக்கு கூட பதில் இல்லை….

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் “அது இருக்கட்டும். நீ யாரையோ காதலிக்கறியே. அது யாரு?”

“நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. உனக்கு எப்படி தெரியும்?”

“அடப்பாவி!! இப்போ தானே சொன்ன. இந்த உலகத்துல தானே இருக்க?”

“வினோத் சற்று பதட்டத்துடன் “அந்த பொண்ணு யாருன்னு சொன்னேனா?”

“எங்க அதுக்குள்ளே தானே பழைய பல்லவி பாட ஆரம்பிச்சுட்டியே. உங்க அப்பாவ பத்தி. சரி இப்போ சொல்லு யாரு அந்த பொண்ணுனு”.

“வினோத் ஒன்னு சொல்றேன். தப்பா நினைக்காத. இனியும் உனக்கு பிடிக்காத இந்த படிப்பை படிக்காம உனக்கு பிடிச்ச வேலைய பாரு. கொஞ்ச நாள் உங்க அப்பா உன் மேல கோபமா இருப்பாரு. அப்புறம் அது சரியாகிடும். அவருக்காக உன்னோட எதிர்காலத்தை பாழாக்கிடாத”.

“நீ என்ன பேசுற காவ்யா? எந்த பெத்தவங்களாவது தன் பசங்களோட எதிர்காலத்தை பாழாக்கணும்னு நினைப்பாங்களா?”

“அவரோட வாழ்க்கையில அவரு பட்ட அவமானத்தை என் மூலமா பதில் சொல்லணும்னு நினைக்குறாரு”.

எங்க அம்மாவோட இரண்டு அண்ணகளும் அவரை நிறையவே அவமான படுத்திருக்காங்க. எங்க மாமா இரண்டு பேரும் அரசாங்க வேலையில இருந்தவங்க. அம்மாக்கும் அரசாங்கத்துல வேலை செய்யுற மாப்பிளையா தான் தேடியிருக்காங்க. ஆனா அம்மாவோட ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்கவே கல்யாணம் தள்ளிப்போயிட்டே இருந்திருக்கு.

அதனால எங்க தாத்தா மாப்பிளை எந்த வேலை பார்த்தாலும் பரவாயில்லை. குணம் நல்லாயிருந்த போதும்னு சொல்லி எங்க அப்பாவ பொண்ணு பார்க்க வர சொல்லிட்டாரு. இது தெரிஞ்ச எங்க மாமா ரெண்டு பேரும் அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமில்லைனு சொல்லி சண்டை போட்ருக்காங்க.

ஆனா தாத்தா அதெல்லாம் கேட்காம கல்யாணம் செய்து கொடுத்துட்டாரு. அம்மாவுக்கு கல்யாணம் ஆனா ஆறு மாசத்துல தாத்தாவும் தவறி போய்ட்டாரு. அதுல இருந்து மாமாவும், அப்பாவ மதிக்கமா மளிகை கடை வச்சிருக்கவருனு எல்லா விஷயத்துலயும் அவமான படுத்தியிருக்காங்க. இதெல்லாம் தெரியாத அம்மா, எப்பவும் போல மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டு இருக்காங்க.

மாமாவோட பசங்க காதுகுத்துக்கு போயிருந்த போது அத்தை முறை சீர் செய்றதுக்கு ஒரு அரை பவுன்ல தங்க சங்கிலி எடுத்துட்டு போயிருக்காங்க. அதை பார்த்துட்டு மாமா ஒரு சீர் செய்ய கூட வக்கில்லாதவன்னு சொல்லி அப்பாவ எல்லார் முன்னாடியும் அவமான படுத்திட்டாங்க. அதை பார்த்த அம்மா ஏன் இப்படி பண்றிங்கனு கேட்டதுக்கு அம்மாவையும் சேர்த்து பேசிட்டாங்க.

அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும்னு வைராக்கியதோடு உழைக்க ஆரம்பிச்சவரு தான். இன்னமும் உழைச்சிட்டு இருக்காரு.

“நீ சொல்றதெல்லாம் சரி தான் வினோத். ஆனா உன்னோட எதிர்காலத்தை பத்தி யோசிச்சியா?”

“ம்ம் தெரியல காவ்யா. இன்னும் இருபது நாள்ல பரீட்சை. எப்படியும் இந்த பரிட்சைல தேர்வாகிடனும்”.

“கண்டிப்பா நீ நல்ல எழுதுவ. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவேயில்லையே?”

“என்ன கேள்வி கேட்ட?”

“நீ காதலிக்கிற பொண்ணு யாருன்னு கேட்டேன்.”

“ம்ம் கண்டிப்பா. உன்கிட்டே சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுவேன். ஆனா இப்போ கிடையாது”.

சந்திரன் வினோத்தை அடித்துவிட்டு உள்ளே சென்றவுடன் வினோத்தை பார்க்க வந்த சரோஜா, இவர்களின் உரையாடலை கேட்டுவிட்டு வந்த சுவடே இல்லாமல் திரும்பி சென்றார். தன் மகனின் மனதில் இவ்வளவு கவலைகள் இருக்குமென்று அவர் சிறிதும் நினைத்ததில்லை. அவனின் பக்குவட்ட பேச்சை நினைத்து பெருமைப்படுவதா இல்லை தன் மகனின் எதிர்காலத்தை நினைத்து வருத்தப்படுவதா என இருதலைக் கொல்லி எறும்பாய் துடிதுடித்து கொண்டிருந்தார்.

வினோத்திடம் பேசிவிட்டு வந்த காவ்யாவின் எண்ணங்களோ அவனை சுற்றியே வட்டமிட்டு கொண்டிருந்தது. என்னதான் சந்திரன் தன் ஆசையை மகனின் மேல் திணித்தாலும் வினோத் தன் தந்தையின் மேல் உள்ள பாசம் அவளை பிரமிக்க வைத்தது. அவன் காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வினோத் யாரை காதலிப்பான் என்றெல்லாம் அவளிற்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. அவன் காவ்யாவை பார்க்கும் பார்வையிலிருந்தே அது அவள் தான் என்பது அவளுக்கு சர்வ நிச்சயம். தான் காதலிப்பவர் தன்னை காதலிக்கிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது. வினோத் தன் காதலை சொல்லும் வரை தானும் சொல்லக்கூடாது என நினைத்து இருந்தாள்.

மதுரா கண்ணீரில் அந்த இரவை கழித்திட, அதற்கு நேரெதிராக காவ்யா மகிழ்ச்சியில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

தேடல் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here