காதலை தேடி….. – 23

0
215

காதலை தேடி….. – 23

வணக்கம் வணக்கம் மக்களே!!!! இதோ காதலை தேடி அடுத்த பதிவு உங்களுக்காக…. சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போடு ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!! நன்றி!!!

தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அருளை திரும்பியும் பார்க்காமல் தன் கண்களில் வழிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் வேகமாக நடந்தாள் மதுரா. அங்கிருந்து நடக்க ஆரம்பித்தவள் கடற்கரை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள். ஒரு ஓரமாக இருக்கையில் அமர்ந்தவளால் அருளின் பேச்சை ஜீரணிக்க முடியவில்லை. அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்க, மெல்ல இருள் கவ்வ ஆரம்பித்தது. எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருப்பது? வீட்டிற்கு சென்று தானே ஆக வேண்டும்… ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தவள் தன்னை சிறிது சமன் படுத்தி கொண்டு அடுத்து வந்த பேருந்தில் ஏறினாள். வீட்டிற்கு வந்தவள் தலைவலி என தனது அறையில் முடங்கிவிட, தன் தாயின் வற்புறுத்தலால் இரவு உணவை கொறித்து விட்டு தன் கட்டிலில் படுத்தவளுக்கு கண்ணீர் தலையணையை நனைத்தது. இரவு முழுவதும் அழுதவள் பின்னிரவில் தூங்கினாள். காலை மணி ஏழாகியும் தூங்கி கொண்டிருந்தவள் அவள் அன்னை விஜி வந்து எழுப்ப உடல் அனலாய் கொதித்தது. இரண்டு நாட்கள் காய்ச்சலில் இருந்தவள் அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்றாள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப மனதின் கவலை முகத்தில் பிரதிபலித்தது. கூடவே காய்ச்சலும் வந்துவிட்டதால் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.

“மது, இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?” – கிருஷ்ணா

“ம்ம்ம்… பரவால்ல… காவ்யா அப்பா எப்படி இருக்காங்க?”

“இப்போ கொஞ்சம் நல்லாயிருக்காங்க.. அடுத்த வாரத்துல இருந்து பிசியோதெரபிய குடுக்கணும்… ஏன் உன் கண்ணு இப்படி சிவந்திருக்கு? இராத்திரி முழுக்க தூங்கலையா?” என அவள் கேட்டது தான் தாமதம்.. மதுராவின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட ஆரம்பிக்க, தோழிகள் இருவரும் பதறினர்.

“மது, என்னாச்சு? ஏன் இப்படி அழுற?” – கிருஷ்ணா

“இங்க பாரு.. எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க…முதல்ல அழுகறத நிறுத்து..” என கிருஷ்ணா கூறியும் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தவள், “கிருஷ்… நீ முதல்ல இவளை கீழே கூட்டிட்டு போ.. இங்கேயிருந்தா என்னாச்சுனு ஆளாளுக்கு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க…” என காவ்யா கூற கிருஷ்ணா, மதுராவுடன் கீழே சென்றாள்.

கீழே சென்றவர்கள் மதுராவிடம் என்னாச்சு என்று கேட்க எதற்கும் பதில் கூறாமல் தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள். அவளின் அழுகை கண்டு மற்ற இருவரும் செய்வதறியாமல் இருக்க, மதுராவின் அழுகை நிற்காமல் தொடர, காவ்யா அருகில் இருந்த தண்ணீர் குடுவையை நீட்டி குடிக்க சொன்னாள். தண்ணீர் அருந்தியவளின் அழுகை சற்று குறைய “இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா என்ன நடந்ததுன்னு எங்களுக்கு எப்படி தெரியும்? முதல்ல அழுகையை நிறுத்திட்டு என்னாச்சுன்னு சொல்லு…” என கிருஷ்ணா கேட்க, தேம்பலுடனே எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் “அருள், அவங்க வீட்ல எங்க காதலை பத்தி சொல்லிட்டானாம்… எங்க கல்யாணம் நடக்கணும்னா நூறு பவுன் நகை போடணுமாம்…” என கூறிக்கொண்டவளை இடையிட்ட காவ்யா, “இதுக்காகவா அழுற? நகை தானே…எங்க சம்பளத்தையும் கொடுக்குறோம்… உங்க வீட்ல போடறதையும் சேர்த்து போட்டுட்டா போச்சு…நீ என்ன சொல்ற கிருஷ்ணா?”

“இந்த லூசு இதுக்கு தான் இப்படி அழுகுதுனு தெரிஞ்சிருந்தா நான் என்னோட ஏடிஎம் கார்டை கையோட எடுத்துட்டு வந்திருப்பேன்..” இருவரும் கூற, தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாதா சமயத்திலும் தனக்கு உதவ நினைக்கும் தோழிகள் கிடைத்தது தனக்கு கிடைத்த பொக்கிஷம் என எண்ணியவன் இருவரையும் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். அவளின் கண்ணீரில் மற்ற இருவரும் அழுகை வர, “மது, போதும் அழுதது… இப்போ எதுக்கு மறுபடியும் அழுற?” என கிருஷ்ணா கேட்க நேற்று அருளுடன் நடந்த அனைத்தையும் அழுகையுடன் கூறி முடித்தாள்.

கூறி முடித்தவளின் கன்னத்தில் “பளாரென” ஓங்கி அறைந்தாள் கிருஷ்ணா. “அறிவில்லடி உனக்கு? காதலிச்சா எந்த எல்லைக்கும் போவியா? ஒருவேளை உன்கூட ஒண்ணா இருந்துட்டு அவன் ஏமாத்தியிருந்தா என்ன பண்ணிருப்ப? சரி… உங்க அப்பா, அம்மாவை பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?? காதலிக்கறது தப்புனு சொல்லல மது… ஆனா எல்லை மீறாமா இருக்கணும்…உன்னோட கண்மூடித்தனமான காதல்னால ஏதாவது தவறு நடந்திருந்தா என்ன செய்திருப்ப?”

கிருஷ்ணா, கற்புங்கறது என்ன? கன்னித்தன்மை இழக்கறது தான் கற்பா? பெண்ணுக்கு மட்டும் தான் கற்புன்னு ஒன்னு இருக்கா? ஆண்களுக்கு அப்படி எதுவும் இல்லையா? உடலவுல ஒரு பெண் கன்னித்தன்மை இழந்தா அவ கெட்டுப் போனவளா? என கேள்வி கேட்க கிருஷ்ணா பதில் கூறும் முன் காவ்யா, “சரி விடு கிருஷ்… அவளே நொந்து போய் இருக்கா… நாம தானே அவளுக்கு ஆறுதலா இருக்கணும்… அதைவிட்டுட்டு நாமளே அவளை திட்டினா அவ என்ன பண்ணுவா?”

“சரி, இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கே?

“எனக்கு தெரியல கிருஷ்ணா…”

“நாம வேணும்னா அருள்கிட்ட பேசிப்பார்கலாமா?” – காவ்யா

“என்ன பேச போற? மதுராவை ஏமாத்திடாதீங்க… அவளை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சபோறீயா?” – கிருஷ்ணா

“இல்ல… அவங்க வீட்ல பேச சொல்லி சொல்லலாம்…” – காவ்யா

“வேண்டாம் காவ்யா… அதைவிட என்னோட காதலுக்கு அசிங்கம் வேறேதுமில்லை… மறுபடியும் அவன் கிட்ட என்னோட காதலுக்காக நான் போய் நிக்க மாட்டேன்… என்னோட காதல் உண்மையானது… ஆனா அத ஒரு தப்பான ஆள் மீது வச்சுட்டேன்… அவனே என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னாலும் எனக்கு அவன் வேண்டாம்…. ஒருவேளை கல்யாணம் ஆனா கூட வாழ்க்கை முழுக்க “நீதானே என்னை காதலிக்குறேன்னு சொன்னவனு” என்னோட காதலை அசிங்கப்படுத்துவான்… அவன் மேல இருந்த காதல்னால தான் நானே அவனை காதலிக்குறேன்னு சொன்னேன்…. ஆனா அதை புரிஞ்சுக்காம பேசுறவன்கிட்ட மறுபடியும் நான் கெஞ்ச தயாராயில்லை….”

சிறிது நேரம் முன் அழுதவளா இவள் என நினைக்கும்படி மதுராவின் எண்ணங்கள் தெளிவாக இருப்பதை பார்த்த கிருஷ்ணா, “இப்போவாது தெளிவா பேசுறீயே… அதே தெளிவோட இருப்பன்னு நாங்க நம்புறோம்… அப்படி இல்லை.. நான் அவனை தான் கல்யாணம் செய்துபன்னு நீ சொன்ன கூட உன்னோட தோழிகளா உனக்கு நாங்க எப்பவும் பக்கபலமா இருப்போம்…”

“வேண்டாம் கிருஷ்ணா…. அருள் என்னைவிட்டு போனது எனக்கு பெரிய வலி தான்… ஆனா மறுபடியும் அவன்கிட்ட போய் என்னை நானே தாழ்த்திக்க விரும்பல…” என ஒரு முடிவிற்கு வந்தவளாக மதுரா கூற, ஆனால் அவளின் இந்த வலியில் இருந்து வெளிவருவாளா??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… காலம் ஒரு மிகச்சிறந்த மருந்து… அந்த மருந்து மதுராவின் வாழ்வையும் ஒரு நாள் மாற்றும்…

காதலிப்பது ஒரு சுகம்.. காதலிக்கப்படுவது ஒரு வரம்… காதலிக்கும் சுகத்தை அனுபவித்தவளுக்கு காதலிக்கப்படும் வரம் கிடைக்கவில்லை…. அவளின் அனைத்து வலிகளுக்கும் அவளே காரணம்… ஆதலால் அந்த வலிகளை அவள் கடந்து வரத் தான் வேண்டும் … வலிகள் இல்லா வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை… அந்த வலிகளையும் கடந்து வாழ வாழக்கை நமக்கு புகட்டும் பாடம் தான் இது போன்ற இழப்புகள், துரோகங்கள்….

அருளின் பார்வையில் அவன் செய்தது சரியே… பெற்றோரை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது… அதற்காகத் தான் அவன் மதுராவின் காதலையும் உதற துணிந்தது… ஆனால் அவன் செய்த பெரும் தவறு அவன் மதுராவிற்கு செய்த துரோகம்….தன்னை நம்பியவளை ஏமாற்றியது… அதற்காக பெற்றோரை எதிர்க்க வேண்டும் என்பதல்ல…. எப்பாடு பட்டாலும் தங்களது காதலுக்காக போராடுவது தானே நியாயம்… போராடாமல் வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை… போராடாமலே நாம் தோற்று விடுவோம் என நினைப்பது கோழைத்தனம் அல்லவா??

அவனின் பெற்றோரின் பேச்சை மீற முடியாது என்று அவனிற்கு அன்றே தெரிந்திருக்கும் போது மதுராவின் காதலை அவன் நிராகரித்திருக்கலாம்… ஆனால் அதையும் மீறி அவனும் தன்னை காதலிப்பதாக சொல்லி அவளிற்கு நம்பிக்கை அளித்தான்….

நாம் மற்றவருக்கு என்ன செய்கிறோமோ அது தான் பிற்காலத்தில் நமக்கு நடக்கும் என்பது கர்மா…. அருள், மதுராவிற்கு செய்த வினை விரைவில் அவனை சேரும் ….

தேடல் தொடரும்….

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here