காதலை தேடி… – 24

0
355

வணக்கம் தோழமைகளே!!! காதலை தேடி… அடுத்த பதிவோட வந்துட்டேன்… படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க…

இதுவரைக்கும் கமெண்ட்ஸ் போட்டு என்னை ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி!! நன்றி!! நன்றி!!

காதலை தேடி… – 24

பெருமாளுக்கு பிஸியோதெரபிய ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அவரது உடலில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கறது. முதலில் அசைக்கமுடியாமல் இருந்த உறுப்புக்களில் இப்போது சிறிது முன்னேற்றம். பெருமாள் வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரே யோசனையாகவே இருந்தனர். ஒரு நாள் இரவு அனைவரையும் அழைத்தார்.

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என நாக்கு குழறி சிரமப்பட்டு பேச தொடங்கினார்.

அவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் “அப்பா உங்களுக்கு முதல்ல உடம்பு சரியாகட்டும். அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீங்க கஷ்டப்படாதிங்க”.

“இல்ல பாலா… இது ரொம்ப முக்கியமான விஷயம். இப்போவே பேசியாகணும்…”

“சரிப்பா சொல்லுங்க…”

“மா காவ்யா… உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்…”

“எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம் பா..”

“முதல்ல நான் பேசி முடிச்சிடுறேன். அப்புறம் நீங்க பேசுங்க என தொடர்ந்தார் பெருமாள். எனக்கு உடம்பு முன் போல இல்ல… அதனால உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நான் கொஞ்சம் நல்லா இருக்கும்போதே முடிச்சுடலாம்னு பார்க்குறேன்.. ஆனா உனக்கு விருப்பமில்லைனா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்…”

“அப்பா உங்களுக்கு சீக்கிரம் உடம்பு குணமாகிடும் பா.. அதுவுமில்லாம உங்களுக்கு இப்படி இருக்கும் போது நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?”

“நீ சொல்றது சரிதான்மா.. ஆனா எனக்கு சீக்கிரமே உன்னோட கல்யாணத்தை பாக்கணும்னு தோணுது.. எனக்கு அந்த பாக்யத்தை தருவியா?” என அவர் கண்கலங்க “அப்பா.. பிளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க.. எனக்கு யோசிக்க ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க..”

“சரிம்மா.. நீ யோசிச்சு நல்ல பதிலா சொல்லு”

பெருமாள் பேசிமுடித்தவுடன் என்ன செய்வதென தெரியாமல் காவ்யா, வினோத்தின் கைபேசிக்கு அழைத்தாள்.

மூன்று முறை அழைத்தும் எடுக்காததால் அவனிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள். இரவு பன்னிரண்டு மணி வரை விழித்திருந்தவள் பின் நாளை பேசிக்கொள்ளலாம் என தூங்கிவிட்டாள். அடுத்த நாள் காலை வினோத்திடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. காலை எழுந்து சீக்கிரம் கிளம்பியவள் தன் அலுவலகத்தின் அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு கூறினாள்.

“மா.. நான் கிளம்புறேன்…”

“என்ன காவ்யா மணி ஏழு தான் ஆகுது. அதுக்குள்ளே கிளம்புற?”

“கொஞ்சம் முக்கியமான வேலை இருக்குமா…”

“சரி சாப்பிட்டுட்டு போ…”

“வேண்டாம் மா.. மணியாகிடுச்சு…”

வினோத்தின் வருகைக்காக கோயிலில் காத்திருந்தவள் அவன் வருவதற்குள் சாமி கும்பிட்டு பிராகாரத்தை சுற்றி முடித்து அமர்ந்தாள்.

சரியாக வினோத்தும் வந்து சேர, “என்ன காவ்யா, எதுக்கு அவசரமா வர சொன்ன? என்ன விஷயம்?”

“அது வினோத்… அப்பா எனக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க…”

“ஏன் திடிர்னு கல்யாணம் பண்ணனும்? கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்?”

“அப்பாக்கு உடம்பு சரியில்லாமா போனதுலயிருந்து ஒரே யோசனை பண்ணிட்டு இருந்தாரு… நேத்து இரவு தான் எங்க எல்லாரையும் கூப்பிட்டு சொன்னாங்க…” என இரவு நடந்ததை கூறினாள்.

“சரி.. நீ என்ன சொன்ன?”

“நான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்… ஆனா அப்பா அவரோட முடிவுல ரொம்ப உறுதியா இருக்காரு… அவருக்கு ஏதாவது ஆகிடுமோனு பயப்படறாரு.. அதனால ஒரு ரெண்டு நாள்ல யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்…”

“இப்போ என்ன பண்ணலாம் காவ்யா?”

“நீ தான் சொல்லணும் வினோத்.. எங்க வீட்ல நம்ம காதலை சொல்ல நான் தயாராயிருக்கேன்…”

“அய்யயோ… இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்…கொஞ்ச நாள் போகட்டும்.”

“கொஞ்ச நாள்னா எவ்ளோ நாள்?”

“ஒரு ஆறு மாசம் போகட்டும்”

“சரி.. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்?”

“அப்புறம் யோசிக்கலாம் காவ்யா”

“என்ன வினோத்.. நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன்.. நீ இவ்ளோ சாதாரணமா பேசிட்டு இருக்க?”

“இப்போ என்ன பண்ண சொல்ற காவ்யா?”

“நான் எங்க வீட்ல நம்ம காதலை சொல்லிடுறேன்… நீயும் உங்க வீட்ல சொல்லிடு.. நீ ஐ.ஏ.ஸ் பாஸ் பண்ணதும் கல்யாணம் பண்ணிக்கலாம்…”

“என்னது? எங்க வீட்ல சொல்லனுமா? காவ்யா, உனக்கே எங்க அப்பாவை பத்தி தெரியும்ல.. இப்போ போய் நான் நம்ம காதலை வீட்ல சொன்னா எங்க அப்பா என்னை எப்படில்லாம் பேசுவார்.. அதுமட்டுமில்ல.. உங்க வீட்லயும் நான் எந்த தைரியத்துல பொண்ணு கேட்பேன் சொல்லு? நான் எந்த வேலையும் பாக்கலைனு உங்க வீட்லயும் பொண்ணு தரமாட்டாங்க..அதனால தான் சொல்றேன் ஒரு ஆறு மாசம் போகட்டும்னு…”

“நீ சொல்றது சரிதான் வினோத்…நான் நம்ம காதலை மட்டும் தான் வீட்ல சொல்ல சொல்றேன்… கல்யாணம் நீ சொல்ற மாதிரியே ஆறு மாசம் இல்ல.. ஒரு வருஷம் கூட உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்.. எங்க வீட்ல எங்க அப்பா புரிஞ்சுப்பாரு…”

“காவ்யா, நீ உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிற… என்னை பத்தி கொஞ்சம் யோசி..”

“என்னது என்னை பத்தி மட்டும் யோசிக்கறனா? உன்னை பத்தியும், நம்ம காதலை பத்தியும் தான் யோசிச்சிட்டு இருக்கேன் வினோத்.. என்னை பத்தி மட்டும் நான் யோசிச்சு இருந்தா எங்க அப்பாகிட்ட கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருப்பேன்… நம்ம காதலை வீட்ல சொல்லி கல்யாணத்தை உறுதிப்படுத்திட்டா அப்பா கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க… பழைய மாதிரி அப்பா நல்லாயிருந்தா நானே இன்னும் கொஞ்சம் நாள் நம்ம கல்யாணத்தை தள்ளி போட்டு இருப்பேன்.. இந்த பிரச்சனையை நானே சமாளிச்சிருப்பேன்… ஆனா எங்க அப்பா நேத்து என்கிட்ட என்ன கேட்டாரு தெரியுமா? நான் கண்ண மூடறதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்படுறேன் மா.. எனக்கு அந்த பாக்யத்தை கொடுப்பியான்னு கேக்குறாரு.. நீ என்னடானா உங்க அப்பாக்கு பயந்துகிட்டு இருக்க.. என்னைக்கு இருந்தாலும் நம்ம காதலை சொல்லி தானே ஆகணும்?”

“நீ சொல்றது எல்லாமே சரி தான் காவ்யா.. ஆனா என்னால இப்போ வீட்ல சொல்ல முடியாது…”

“இப்படி சொன்னா எப்படி வினோத்? நான் இப்போ என்ன பண்ணட்டும்?”

“எங்க வீட்ல நான் அசிங்க படமுடியாது காவ்யா..”

“என்னது அசிங்கமா? வீட்ல அப்பா, அம்மா திட்றது அசிங்கமா? சரி அப்படியே இருந்தாலும் என்ன திட்டினாலும் உங்க அப்பா தானே சொல்றாரு.. அவருகிட்டயா நீ கௌரவம் பார்ப்பியா?”

இங்க பாரு… நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… என்னோட முடிவு இதுதான்… சரி… இதுலாம் தெரிஞ்சு தானே நீ என்னை காதலிச்ச?”

“நிச்சயமா வினோத்… ஆனா எங்க அப்பா இப்போ இருக்குற நிலைமைல என்னை என்ன பண்ண சொல்ற? உன்கிட்ட நம்ம காதலை வீட்ல சொன்னா சொன்னதுக்கே இப்படி பயப்படுறியே… நீ எப்படி நம்ம காதலுக்காக போராடுவ? காதலை வீட்ல சொல்ல தைரியம் இல்லைனா காதல் எதுக்கு உனக்கு?”

“காவ்யா, நீ ரொம்ப பேசுற… பார்த்து பேசு…”

“ஓ!! உனக்கு உண்மையை சொன்னா கோபம் வருதா? உன்னோட தேவையை கூட சொல்றதுக்கு பயப்படுற உன்னை கோழைனு சொல்றத தவிர வேற என்ன சொல்வது?”

“ஆமாடீ!!! நான் கோழைதான்.. அப்புறம் எதுக்குடீ என்னை காதலிச்ச?”

“சரி வினோத்.. நான் பேசினது தப்பு தான்.. என்னை மன்னிச்சுடு” என காவ்யா இறங்கி வந்தாள் தன் காதலுக்காக…

ஆனாலும் வினோத் கோபமாக இருக்க காவ்யா, “இப்போ என்னதான் பண்ணலாம்னு நீயே சொல்லு வினோத்…”

“என்னை எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஒன்னுதான்… இப்போதைக்கு என்னால வீட்ல பேச முடியாது…” என சொல்லியவன் கோபமாக எழுந்து சென்றான்.

சோர்வுடன் அலுவலகத்திற்கு வந்த காவ்யா, தன் இருக்கையில் சென்று அமர்ந்து தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். அவளின் முகவாட்டத்தை கவனித்த கிருஷ்ணா, மதுராவிடம் கூற இருவரும் காவ்யாவை கூட்டி கொண்டு கீழே சென்றனர்.

“காவ்யா, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” – மதுரா

நேற்று இரவில் இருந்து இன்று காலை வினோத்தை சந்தித்து பேசியதை அனைத்தையும் கூறியவள் “எனக்கு என்ன பண்றதுனே தெரியல மதுரா… அப்பாகிட்ட சொன்னா அப்பா புரிஞ்சுக்குவாங்க… ஆனா அவரை எப்படி இந்த நிலைமைல கஷ்ட்டப்படுத்துறதுனு தெரியல…”

“சரி… நீ என்ன முடிவு பண்ணிருக்க?”

“என்னால எந்த முடிவுக்கும் வரமுடியால கிருஷ்ணா”

“காவ்யா, அப்பாக்கு குணமாகிடும்ல?” – மதுரா

“குணமாகிடும் மது. ஆனா கொஞ்சம் காலம் ஆகும்…”

“சரி.. நான் வேணும்னா ஒரு யோசனை சொல்லட்டுமா?” – கிருஷ்ணா

“என்ன யோசனை?” – மதுரா

“காவ்யா, நீ உங்க அப்பா கிட்ட உன்னோட காதலை சொல்லி கொஞ்சம் டைம் கேளு.. ஒரு ஆறு மாசம்… அதுக்குள்ள வினோத்துக்கு பரீட்சை முடிஞ்சுரும்… இதுல தேர்ச்சியாகிட்டா அப்புறம் நேர் காணல் மட்டும் தான… அதனால நீ ஒரு ஆறு மாசம் டைம் கேளு.. அதுக்கப்புறம் வினோத் அவங்க வீட்ல பேச எந்த தடையும் இருக்காதுல?”

“ம்ம்ம்.. நீ சொல்றதும் சரியான யோசனையா தான் இருக்கு.. அப்பாகிட்ட இன்னைக்கு பேசிப்பார்க்குறேன்…”

தோழிகளின் யோசனைப்படி இரவு உணவுக்குப்பின் தன் தந்தை தனியாக இருக்கும் சமயம் பார்த்து அவரிடம் பேசச் சென்றாள்.

“அப்பா…”

“வா மா… என்ன விஷயம்? அப்பா சொன்னதை யோசிச்சியா?? மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கட்டுமா??”

“அப்பா… அதுவந்து… நான் ஒருத்தரை காதலிக்கிறேன் பா… அவருக்கு இப்போதைக்கு வேலை இல்லை… கண்டிப்பா வேலை கிடைச்சுடும் … ஒரு ஆறு மாசம் மட்டும் டைம் கொடுங்கப்பா…”

“ஆறு மாசாத்துக்குள்ள நீ காதலிக்கிற பையன் பரீட்சைல பாஸ் பண்ணிடுவானா மா?”

“அப்பா… உங்களுக்கு எப்படி?”

“நீ ஒரு நாள் இராத்திரி மாடியில அவன் கூட பேசிட்டு இருக்கும் போது பார்த்தேன்… அன்னைக்கே உன்னை கூப்பிட்டு கேட்கணும்னு நினைச்சேன்… மத்த அப்பா மாதிரி நான் காதலுக்கு எதிரி இல்ல.. ஏன் பொண்ணு மனசுக்கு பிடிச்சவன தான் கல்யாணாம் பண்ணி வைப்பேன்.. ஆனா இப்போ என்னோட நிலைமை பத்தி உனக்கே தெரியுமே..”

“உங்களுக்கு சீக்கிரம் குணமாகிடும் பா..”

“உனக்கு புரியாது காவ்யா…. மகளை பெத்த அப்பாக்கு தான் என்னோட நிலைமை என்னனு புரியும்… நான் ஒருவேளை சீக்கிரமா இறந்துபோய்ட்டா உங்களை யாரு பார்த்துப்பா? உங்க அம்மா வீடு, குடும்பம்னு இருந்துட்டா… இவ்ளோ பெரிய பொறுப்பை நான் யாரை நம்பி விட்டுட்டு போறது? எனக்கு குணமாக்கிடலாம்.. ஆனா ஒரு தகப்பனா என்னோட பயம் நியமானது தானே?”

“நீங்க சொல்றது எல்லாமே சரிதான் பா… ஆனா கொஞ்ச நாள் டைம் கொடுங்கப்பா…எனக்காக.. பீளிஸ்ப்பா…”

“சரிம்மா.. என்னோட நிலைமையை காரணம்காட்டி உன்னை கட்டாயப்படுத்த நான் விரும்பலை… ஆனா ஆறு மாசம் தான் உனக்கு டைம்… அதுக்கப்புறம் என்னால காத்துட்டு இருக்கமுடியாது…”

“சரிப்பா..”

“காவ்யா.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.. உங்க அம்மாக்கு கூட”

“சரிப்பா…” என்றவள் தற்போதைக்கு பிரச்சனைக்கு தீர்வு கண்டாள். ஆனால் இவர்கள் காதல் கைகூடுமா? என்பது காலத்தின் கையில்…..

தேடல் தொடரும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here