வணக்கம் நட்பூக்களே!!! காதலை தேடி…. நான்காம் அத்தியாயம் போட்டுட்டேன் . படிச்சுட்டு உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க…
காதலை தேடி… – 4
ஒரு வாரம் கழித்து புராஜெக்ட் ஆரம்பித்தது. தினமும் காலையில் வந்தவுடன் சிவநேசனை பார்த்துவிட்டு அன்றைய நாளுக்கான வேலையை அவரிடம் கேட்டு ஆரம்பிப்பது வழக்கம்.
இந்த ஒருவாரம் எந்த வித பிரச்சனையுமின்றி சுமூகமாக சென்றது. சிவநேசனது அறை லேபில் இருந்து சிறிது தொலைவில் இருந்தது. இவர்கள் லேபின் பக்கத்து லேபில் இவர்களது டிபார்ட்மெண்ட் மாணவிகள் நால்வரும் இருந்தனர்.
ஒரு சில கருவிகள் பக்கத்து லேபில் இருப்பதால் அங்கே செல்லும் போது அங்கிருக்கும் மாணவர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருப்பர்.
அன்றும் வழக்கம் போல் பக்கத்து லேபிற்கு மதுராவும், கிருஷ்ணாவும் செல்ல அங்கே அருள் மற்றவர்களுக்கு எதையோ சொல்லி கொடுத்து கொண்டுருந்தான். அந்த நால்வரும் அருளின் மேற்பார்வையில் வேலை செய்து கொண்டுருந்தனர்.
கிருஷ்ணாவிற்கு அருளை பார்த்தவுடன் அன்று நடந்தது நினைவுவரை மதுராவை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.
இருவரும் அறையின் வாயிலில் நிற்பதை பார்த்த அருள் புருவத்தை சுருக்கினான். பக்கத்தில் நின்றருந்த அவனின் நண்பன் சதீஸ், சிவநேசன் சாரோட ஸ்டூடெண்ட்ஸ் டா என கூற, உள்ளே வருமாறு தலையசைத்தான்.
இவரு பெரிய அப்பாடக்கர். இவர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு தான் உள்ள வரணும் போல என மதுரா பொரிந்து கொண்டிருக்க அவளது கையை நறுக்கென கிருஷ்ணா கிள்ளினாள்.
இப்படி ஒவ்வொரு நாளும் அருளை திட்டிக் கொண்டும், கிண்டலடித்து கொண்டும் தங்கள் புரொஜெக்ட் வேலையை பார்க்க தொடங்கி இரண்டு மாதம் நிறைவடைந்தது.
திங்களன்று தங்களின் வேலையை கல்லூரியில் எச்.ஓ.டி முன்னிலையில் விளக்க வேண்டும். அதற்கான வேளையில் அனைவரும் ஈடுபட்டிருக்க, இரண்டு நாட்களுக்கு மதுராவின் அர்ச்சனையிலருந்து அருளிற்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்கள் உடன் படிக்கும் நண்பர்களை பார்க்காததால் அவர்கள் வகுப்பில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருந்தது. அன்றைய தினம் மாணவர்கள் தாங்கள் இதுவரை செய்த வேலையை ஆசிரியர்களிடம் விளக்கி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியென ஒருவழியாக மாலை மூன்று மணிக்கு நிறைவடைந்தது.
மறுநாள் வழக்கம் போல் தங்கள் வேலையை தொடங்கினர். காவ்யாவும், கிருஷ்ணாவும் சிவநேசனை பார்க்க சென்றிருக்க மதுரா மட்டுமே லேபில் இருந்தாள். பக்கத்து லேபில் இருந்த சிந்து இவர்களை பார்க்க வர, என்னடி ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்துருக்க?
அட நாங்களே இன்னைக்கு தான் கொஞ்சம் வேலை இல்லாம இருக்கோம். அது உனக்கு பொறுக்கலையா?
அதுக்கில்ல உங்க அருள் சார் இருந்தா நீங்க இந்த பக்கம் வர மாட்டிங்களே அதான் கேட்டேன்.
ஓ அதுவா, சார் இன்னைக்கும் நாளைக்கும் வரல. அவரு இருந்தா ஏதாவது வேலை கொடுத்துட்டே இருப்பாரு. அதான் இப்படி வந்து பேசிட்டு இருக்கோம். சிவநேசனை பார்த்துவிட்டு வந்த காவ்யாவும், கிருஷ்ணாவும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள தோழிகளின் அரட்டை தொடர்ந்தது.
இந்த ஒரு வாரம் முழுக்க அருளை பார்க்கவில்லை. யாரேனும் அவர்களின் அறையை கடந்து சென்றால் அருள் தானோவென்று எதிர்பார்புடன் பார்ப்பவள் பின் அவனில்லை என்றவுடன் தன் வேலையை தொடருவாள்.
கிருஷ்ணா, பக்கத்து லேபிற்கு வரியா? என காவ்யா கேட்டு கொண்டிருக்க நான் வரேன் காவ்யா என தானாக முன் வந்தாள் மதுரா. தோழிகள் இருவரும் தன்னை ஆச்சரியத்துடன் நோக்க, கிருஷ்ணா ஏதோ எழுதிட்டு இருக்கா. அதான் நா வரேன்னு சொன்னேன்.
நீ தான் அந்த பக்கம் வந்தா அந்த பனைமரம் இருப்பான். அவனலா பாக்க முடியாதுன்னு சொல்லுவ. இப்போ என்ன திடிர்னு நீயா வரேன்னு சொல்ற?
ஏதோ தனியா போறியே. துணைக்கு வரலாம்னு பார்த்த ரொம்ப கேள்வி கேக்குற. நீ மட்டுமே போ என மதுரா முறுக்கி கொள்ள, சரி வா என காவ்யா கூட்டி சென்றாள்.
கடந்த ஒரு வாரமாய் அருளை பார்க்காதது மதுராவிற்கு எதையோ தொலைத்தது போல் இருந்தது. காவ்யாவுடன் சென்ற மதுராவின் கண்கள் ஒரு நொடிக்குள் அறையை சுற்றி வந்தது. ஆனால் அவள் கண்களின் தேடலுக்கு உரியவன் மட்டும் கிடைக்கவில்லை.
இந்த ஒரு வாரத்தில் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை ஆராய்ந்தவளுக்கு எப்போது எப்படி அருள் தன் மனதுக்குள் நுழைந்தான் என தெரியவில்லை.
காதல் வந்தால் முதலில் அதை பகிர்ந்து கொள்வது நண்பர்களுடன் தான். ஆனால் இதை அவர்களிடம் எப்படி கூறுவாள்?
அப்படியே தோழிகளிடம் கூறினாலும், நீ பேசி பழகாத ஒருத்தர் மேல எப்படி காதல்? அதுவும் கடந்த வாரம் வரை பார்த்தாலே பிடிக்காதவர் மேல் எப்படி காதல் வந்தது என அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவளுக்கே விடை தெரியாத போது மற்றவர்களுக்கு எப்படி அதை புரியவைப்பாள்?
தேடல் தொடரும்….